Monday, March 13, 2017

நீர்ப் பூக்குழிநிர்பயா, சேயா, வித்யா, ஜிஷா, ஸ்வாதி, நந்தினி, ஹாஷினி, ரித்திகா, மிஷெல் மற்றும் பாலியல் வன்முறையில் படுகொலை செய்யப்பட்ட அனைத்து குழந்தைகள், சிறுமிகள், பெண்களுக்காக…

நீர்ப் பூக்குழி


தொலைவிலெங்கோ
புகையிரதம் நகர்ந்தபடி ஊளையிடும் ஓசை
ஒரு பட்சியெனச் சிறகடித்துப் பறக்கும்
மலைமுகடுகளிடையே அமைந்திருந்தது
அந்த ஆதி மனிதர்களின்
நதிப்புறத்துக் குச்சு வீடு


ஊற்று
ஓடையாகிப் பின்
நீர்த்தாரையாய் வீழ்ந்து
பெருகிப் பாய்ந்து
பரந்து விரிந்த பள்ளங்களில்
தரித்திராது ஓடும் ஆறு
கற்பாறைகளைத் தேய்த்துத் தேய்த்து
உண்டாக்கும் பூக்குழிகள்
நதியின் புராண தடங்களை
நினைவுறுத்தி வரலாறாக்கும்


தண்ணீரில் தம் இரைக்கென
காத்திருந்த பட்சிகளை
அலறிப் பறக்கச் செய்த
சிறுமியின் ஓலம்
அவளது குடிசையின்
மூங்கில் கதவு, களிமண் சுவர்களை
எட்டவிடாது துரத்தியது
அக் கணத்தில் தடதடத்துக் கூச்சலிட்ட ரயில்


குரூர வேட்டைக்காரனொருவனின்
கரம் தீண்டி சுவாசம் நின்றதிர்ந்த
பட்டு வண்ணத்துப் பூச்சியின் உடல்
ஒரு பூக்குழியில் மிதந்த நாளில்
கொக்குகளும், மீன்கொத்திகளும், நீர்க்காகங்களும்
அச் சின்னஞ்சிறிய பெண்ணின்
சடலத்துக்குக் காவலிருந்ததைக் கண்டன
சின்னவளைக் காணாது
வனமெங்கும் தேடிய விழிகள்


ஆந்தைக் குரல்
அபாயத்தின் ஒலி
பறவைச் சிறகின் உஷ்ணம்
பாதுகாப்பைக் குறிக்கிறதென
சொன்னாயெனினும்
சிறுமியின் கூரிய பற்களும் நகங்களும்
வேட்டைக்கானவை என அவளுக்கு
ஏலவே அறிவுறுத்த
மறந்து விட்டாய் அம்மா

- எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com
நன்றி - அம்ருதா, ஊடறு, வார்ப்பு, பதிவுகள், மிழ் எழுத்தாளர்கள், னியொரு, வல்மை
Painting - Vijendra Sharma

Wednesday, March 1, 2017

மீன் மழை
மூங்கில் கூடைகளின் மீன்கள்
கூவி விற்கும் சிறுவனின் குரலில்
இறந்தகாலத்தைப் பாடித் திமிறும்  மீனவத் தெருவின் வாடையை
விருப்பத்தோடு நுகரும் காற்று
பனங்குருத்து வலைத் தொப்பிகளைக் காவும் காலை நேரம்
சூளைத் தொழிலாளியின் செங்கற்களைச் சுமந்த
கைவண்டியில் அவ்வப்போது
அம் மீன்கள் பயணிக்கும்


தொலைவுக்குச் செல்லும் பாதையில் நகர்ந்த
அந்தி மழைக்குத்தான் எவ்வளவு தயாளம்
தகித்த கோடைக்குப் பின்னரான
இக் குளிரும் ஈரமும்
மழை தந்தது


நேற்றைய வானவில்
குளிக்க இறங்கிய நதியல்ல இது
எங்கும் பாய்கிறது நுரை வெள்ளம்
சூரியன் மறையவிழைந்த
ஆகாயமஞ்சளைத் தேய்த்துக் குளித்தபடி


துளிகளோடு துள்ளத் துடிக்க விழுகின்றன
யாரும் தீண்டாது வியப்போடு நோக்கும்
பிறப்பின் இரகசியமறியா
மழை மீன்கள்


ஆழ்கடலினுள்ளும்
வற்றாநதியினுள்ளும் நீந்தித் தேய்ந்த
ஆதி மீன்களின் வழித் தடங்கள்
ஆகாயத்துக்கும் பூமிக்குமாக
மேலிருந்து கீழாக மாறிய
அதிசயமாய்த் திகழ்கிறது
மழை மீன்களின் நவீன வரலாறு

- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி - அம்ருதா மாத இதழ், மிழ் எழுத்தாளர்கள் இணைத்ளம், திவுகள்