சிலவேளை
வீழ்வதாய்ப் போக்குக் காட்டும்
ஊணுண்ணிப் பட்சியென மீன்கொத்தி நிலா
மேற்கிலிருந்து கிழக்காய் நகர்ந்து நகர்ந்து கொத்திட
காலையில் செவ்வாகாயம் வெறிச்சோடிக் கிடக்கும்
இடித்திடித்துக் கொட்டிய
நேற்றின் இரவை நனைத்த மழை
உனதும் எனதுமான ஏகாந்தப் பொழுதொன்றை
நினைவுறுத்திக் கொண்டேயிருந்ததில்
அச்சமுற்றிருந்தேன் நான்
மின்சாரம் தடைப்பட்டெங்கும்
அந்தகாரம் மேவிய பொழுதில் கண்மூடி
விழித் திரைக்குள் உனையிறக்கியிருந்தேன்
உதறப்பட்ட காலத்தின் துளிகளோடு
உன் மீதான எனது சினங்களும்
ஆற்றாமைகளும் வெறுப்பும்
விலகியோடிப் போயிருக்கவேண்டும்
நினைத்துக் கொண்டேயிருந்தேன் உன்னையே
அப் பாடலைப் பாடியபடி
அச் செல்லப் பெயரால் எனை விளித்தபடி
பிரகாசத்தையள்ளி வீசுமுன் குரலையும் கேட்டேன்
அங்குமிங்குமசையும் ஊஞ்சல்
அந்தரத்தில் சரணடையும் ஆவல்
அக் கணத்து மனநிலையை என்சொல்வேன்
அகழ்வுகளுக்குள் தேடினால் அர்த்தமற்ற நம்
சச்சரவுகளின் நூலாம்படை திரண்டுகிடக்கும்
எமக்கெதிரான
எல்லாப் புழுதிகளுமெழும்பிக் கட்டிய மதிலதன்
அத்திவாரத்தில் இருவரில்
எவரது அன்பைப் போட்டு மூடினோம்
இனித் தவறியும் ஒருவரையொருவர்
நினைத்தலோ பார்த்தலோ கதைத்தலோ
ஆகாதெனும் விதியை நிறுவிச் சலனங்களை
விழுங்கிச் செறிக்க முடியாது
விழி பிதுங்கி நிற்கும் நம் துயர் பொழுதுகள்
யுகங்களாகத் தொடர
வேண்டியிருந்தோமா
பிரிவின் அன்றை
இருவரும் எப்படியோ வாழ்ந்து கடந்தோம்
சர்வமும் நிகழ்ந்து முடிந்தது பூமியில் அன்றும்
பின்வாசல் சமதரைப் புல்வெளி
நிலவின் பால் குடித்தரும்பிய
பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயிலில்
இரவின் சாயல் துளியேதுமில்லை
- எம்.ரிஷான் ஷெரீப்
- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி
# அம்ருதா இதழ் - பெப்ரவரி, 2012
# எதுவரை இதழ் - 02, ஜூன்,2012
# நவீன விருட்சம்
# திண்ணை