Tuesday, April 15, 2008

காதலென்றும் தலைப்பிடலாமிதற்கு !


நெருப்பு விழுங்கும் பறவையொன்றென்
நிழலிலேயே
உட்கார்ந்திருக்கிறது !

உங்கள் கனல்களை
அதன்மேல் கொட்டலாம்,
சாபங்களை அள்ளியெறியலாம் ;
அத்தனையையும் விழுங்கியது - நிலம்
அதிர அதிரச் சிரிக்கும் !

அதன் அருகாமை
வெப்பம் பரவியென் உடலசையுமெனில்
ஒருகணம் உற்றுப்பார்க்கும்,
விழிகளிரண்டும் எரிகற்களென எச்சரிக்கும்
நொடியில் நான் பொசுங்கிப்போவேன் !

சீண்டிப்பார்க்கலாம் - அதனை
சிரிக்கவைக்கவும் முயற்சிக்கலாம்,
தலைகோதித் தடவலாம்,
செல்லமாய்ச் சிறிது தட்டக்கூடச் செய்யலாம்;
அத்தனையையும்
மெதுவாய்ப் பார்த்து வாய்திறந்து
உங்களை முழுதாக உள்வாங்கிக் கொள்ளும் !

நுனிவிரல் தீண்டி
உடல்முழுதும் பொசுங்கிக் கருகும்
வேதனையை சிரிப்பால் உதறுவீர்களாயின்...

இதுவரையில் காதலிக்காதவர் பட்டியலில்
நீங்கள் இருப்பதாக
உறுதிபட உரக்கச் சொல்வேன் !

நெருப்பு விழுங்கும் பறவையது
தொடர்ந்தும் தன் சிறகினை உதறும் !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Tuesday, April 1, 2008

பால்யம் நகரும் பொழுதை மிதி !


ஆலயங்களின் பெரும்பரப்பில்
அமைதி தேடிப் பாதங்கள் பதியும்
நாட்கள் நினைவில் இடற
ஒரு மலை போன்ற வேதனை,
ஒரு வனாந்தரப்பசுமை
அத்தனையும்
ஒருங்கே கொண்ட நெஞ்சுடன்
கனவாய்க் காற்றாய்
வாழ்க்கை தொலைத்தேன் ;
யாதுமாகி நின்ற உன்னையும்தான் !

பால்யத்துப் பள்ளிக்கூடங்களில்
ஒன்றாய்த் திரிந்தோம் ;
கூழாங்கற்கள்,ஓட்டுத் துண்டுகளைக்
கையால்,காலால் விளையாடிச் சோர்ந்துபின்
காட்டு இலைகளையும்,மணலையும்
சிரட்டையில் அள்ளிச் சோறாயெண்ணி உண்டோம் !

என் முழங்கால்ச் சிராய்ப்புக்கு
உன் எச்சில் தடவினாய்,
எவனோ உன் பட்டப்பெயர் சொல்லிக்கூவ
அவன் சட்டை கிழித்துச் சண்டை பிடித்தேன்
காதலில்லை,காமமில்லை
அறுவெறுக்கும் எந்த அசிங்கங்களும்
அதிலிருக்கவில்லை !

புது வயதுகள் பிறக்க,
பால்யம் பாதி கரைய,
வசந்தங்கள் உன் வாழ்வில் வர
நான் தனித்து வரண்டுபோனேன் ;
என் இரகசியச் சினங்களைத்
தூறலாய்ப்பொறுத்து
முக்காட்டுக்குள் நீ புகுந்தாய்,
நான் யாதாகித் திரிகிறேன்...?

நாடுதாண்டிக் கண்டம் தாண்டி,
செவியேற்க யாருமற்ற
பாழ்வீதியொன்றில்- நானின்று
நின்றுகொண்டேயிருக்கிறேன்
என் துயரங்களைப் பாடியபடி;
சாபங்கள் துரத்தித் துரத்தி விழுங்கி
பூமிக்குள் புதையுண்டிருக்குமெனது
பாதங்களை மீளப்பெறும் நாளில்
நாடேகுவேன் !

அன்று
வீதியில் உன் மழலைகள்
செம்மண் தூசு உடல் அப்ப
பால்யத்தில் திளைத்து விளையாடுவதைக்
காண நேரிடலாமெனக்கு..!

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.