Saturday, August 25, 2007

விழிகளில் வழியும் ஏக்கம் !
உனது உயிர்
போகும் பாதையைப்
பார்த்த படியே
விழிகள் திறந்தபடி
உயிர்விட்டிருந்தாய் !

ஏழு வானங்களையுமது
எந்தத் தடைகளுமின்றித்
தாண்டிச்சென்றதுவா...?

திறந்திருந்த வாய்வழியே
இறுதியாக என்ன வார்த்தையை - நீ
உச்சரிக்க நினைத்திருந்தாய்...?

நீ
நிரபராதியோ...
தவறிழைத்தவனோ...
உயிர்விடும் கணம்வரை
எப்படித் தாங்கிக் கொண்டாய்
அவ்வலிகளை ?

உன் நகங்கள்
ஒவ்வொன்றாக பிடுங்கப்பட்டிருந்தன .
நீ பிறந்தவேளையில்
ஒரு மெல்லிய பூவிதழ்போல்
அவை இருந்திருக்கக்கூடும் !

உன் உடம்பு முழுக்க
வரி வரியாய்
காயங்கள்...வீக்கங்கள்...
சிறுவயதில் நீயும்
சிறு சிராய்ப்புக்கு அழுதபடியே
எச்சில் தடவியிருப்பாய் !

என்றபோதிலும்
எதுவுமே சொல்லாமல்
உயிர் விட்டிருந்த உனது
விழிகளில் மட்டும்
எஞ்சியிருக்கிறது இன்னும்
ஏதோ ஒரு ஏக்கம்...
ஏதோ ஒரு தாகம்...


- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Thursday, August 9, 2007

இன்னும் எழுதப்படாத என் கவிதை

பொய்யைக் கனவைக் கற்பனையைக்
கவிதையாய்க் கிறுக்கிடினும்
பிரமிப்புகள் நீங்கலாக
என்னவெல்லாமோ
எஞ்சியிருக்கின்றன இன்னும்
எழுதப்படாமலே இங்கு...!

வானவில்லின் வசீகரம்,
வண்ணத்துப்பூச்சி அழகு,
இதழ் விரிக்கும் பூக்களின் மென்மை,
காதலியின் பொய்க்கோபம்-எல்லாமே
எழுதப்பட்டிருப்பினும்...

எந்த மொழியில்,
எந்தச் சொற்களைக் கொண்டு,
எப்படி எழுதி முடிப்பேன்
என் தாயின் புன்னகையை
ஒரு சில வரிகளில்.....?

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Saturday, August 4, 2007

வெறுக்கப்படும் மழைப்பொழுதுகள்...!


மழை
பிடித்திருந்தது !

வேர்த்துப் புழுங்கிச் செத்து,
மேற்சட்டை வெதும்பி
முதுகோடு ஒட்டும் கணங்களில்
நிலா மறைத்து,
வானிலிருந்து துளித்துளியாய்க்
கீழிறங்கும்
நீர்த்துளிகளைப் பிடித்திருந்தது!

நெஞ்சைக் குளிர்விக்கும்
ஈரச்சாரலோடு,
நாசியை வருடும்
தூசு மணத்தில்
வினாடி நேரம் - நான்
என்னை மறந்ததுமுண்டு!

வாய்திறந்து நா காட்டி,
மழைத்துளியை உள்வாங்க
மனம் விரும்பிச் சிறுபிள்ளையாய்ச்
செய்து பார்த்ததுமுண்டு!

முகாம் கூரை விரிந்து
மழைத்துளிமுக்காடு நனைத்த கதைகளை,
சுவர் இடிந்து விழுந்துயிர்கள்
நசுங்கிச் சக்காகிச் சாறாகிப்
பிரிந்த கதைகளை,
வெள்ளம்
அழையா விருந்தாளியாய்
வீட்டினுள் புகுந்து
குடியிருந்தவர்களையெல்லாம்
கூரையிலேற்றிக் குடித்தனம் செய்யச்
சொன்ன கதைகளையெல்லாம்
பேசப்பார்க்கக்
கேட்கும் கணங்களிலெல்லாம்
ஏனோ - மழையையும்
மழை சார்ந்த எதையுமே
பிடிக்காமல் போகிறது !

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Friday, August 3, 2007

எலும்புக்கூட்டு ராஜ்ஜியங்கள்காற்றினைப் போல்
எங்கள் வாழ்க்கை,
ஓரிலக்கில்லாமலும்...
அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டும்...!

ஓடும் நதியினைப் போல்
எங்கள் பயணம்,
ஓரிடத்தில் தரித்திருக்க முடியாமலும்...
திக்குதிசையின்றி பாய்ந்தோடிக்கொண்டும்...!

வானவில்லினைப் போல்
எங்கள் சந்தோஷம்,
நிலைத்து நிற்காமலும்...
உடனே கலைந்து போவதாயும்...!

மயானபூமியைப் போல்
எங்கள் கனவுகள்,
பயமுறுத்தும் அமைதியோடும்...
எலும்புக்கூடுகளின் ராஜ்ஜியங்களோடும்...!

பாழடைந்த வீட்டினைப் போல்
எங்கள் எதிர்காலம்,
எப்பொழுதும் பயமுறுத்திக்கொண்டும்...
எவராலும் கவனிக்கப்படாமலும்...!

மீஸான்கட்டைகளைப் போல்
எங்கள் சமூகம்,
அழிந்துகொண்டே இருப்பதாயும்...
அடையாளத்துக்காக வேண்டி மட்டுமாயும்...!

மணல்மேட்டினைப் போல்
எங்கள் தேசம்,
சரிந்துகொண்டே இருப்பதாயும்...
விலங்குகளின் எச்சங்களைச் சுமந்துகொண்டும்...!

ஊசலாடும் ஒட்டடைகளைப்போல்
எங்கள் உயிர்கள்,
எவராலும் வேண்டப்படாத குப்பையாயும்...
எப்பொழுதிலும் அறுந்துவிழக்கூடியதாயும்...!

எங்களது உயிர்கள்
எடுக்கப்படும் கணப்பொழுதுகளில்
என்ன செய்துகொண்டிருப்பீர் தோழரே..?
ஓர் அழகிய பாடலின்
ஆரம்ப வரிகளை
முணுமுணுத்துக் கொண்டிருப்பீரோ...?

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Thursday, August 2, 2007

வாழ்க்கையின் மௌன ஓவியம்...!
எதனாலும் நிற்காமலும்
எதுவாகவும் ஆகாமலும்
எப்படிப் போகிறது வாழ்க்கை...?

சடுதியாய்ச் சந்திப்புகள் - குருதிச்
சகதியாய் விபத்துகள்,
எவராலும் தடுக்க முடியாதவையாக
அன்றாடம் நிகழ்கின்றன.

விரும்பியபடியே வாழ்க்கையெனினும்,
வாழ்க்கையின் மௌன ஓவியத்தை
விரும்பிய நிறங்களைக் கொண்டு
வரைய முடிவதேயில்லை !

வாழ்க்கை போகிறது
அதனுடனே நானும்...
சிலவற்றைப் பெற்றுக் கொண்டும்...
நிறைய இழந்து கொண்டும்...

- எம்.ரிஷான் ஷெரீப் ,
மாவனல்லை,
இலங்கை.