Sunday, December 20, 2009

பாவப்பட்ட அது


கடவுள் தந்த பொழுதிலிருந்து
காயங்களெதுவும் கண்டிரா
பரிபூரணத் தூய்மையோடு துடித்திட்ட அது
மழலை வாடையை எங்கும் பரப்பும்
பூக்களை இறுக்கமாகப் பொத்திவைத்திருக்கும்
ஒருநாள் குழந்தையின்
உள்ளங்கையினைப்போலவும்
மொட்டவிழக் காத்திருக்கும்
தாமரையொன்றின் உட்புற இதழைப்போலவும்
மிகவும் மென்மையானது
சில சலனங்களை
பின்விளைவறியாது ஏற்றுப்பின்
கலங்கியது துவண்டது
வாடிச் சோர்ந்தது
ஞாபக அடுக்குகளில்
சேமித்துக் கோர்த்திருந்த
எனதினிய பாடல்களின் மென்பரப்பில்
உன் கால்தடங்களை மிகுந்த
அதிர்வோடு ஆழமாய்ப் பதித்தவேளையில்
ஏமாளியாய் நின்றதைத்தவிர்த்து
வேறென்ன பாவம்தான் செய்தது
வதைக்கவென நீ தேர்ந்தெடுத்த
என் ஒற்றை மனது

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


நன்றி
# வடக்கு வாசல் - செப்டம்பர், 2009 இதழ்
# வல்லினம் - மலேசிய கலை இலக்கிய இதழ் -10, அக்டோபர் 2009


Thursday, December 10, 2009

நிச்சயமாக உனதென்றே சொல்
உன் வரண்ட தொண்டைக்குழிக்கு
தண்ணீரை எடுத்துச் செல்கையில்
ஈரலித்துக்கொள்கிறது
பின்னும்
இரையும் வயிற்றுக்கென நீ
உள்ளே தள்ளிடும்
எல்லாவற்றையும் சுவைத்துப்பார்க்கிறது
எதையும் தனக்கென வைத்துக்கொள்ளாமல்
தானும் உபயோகித்துக்கொண்டு
முழுதாக உனக்கே தருவதென்பது
ஆச்சரியம் தானென்ன

எல்லோரையும் தூற்றியபடியும்
எச்சிலில் குளித்தபடியும்
தினமொரு ஆளைத்தேடி
உன் கண்களால் செவிகளால் வார்த்தைகளால்
அலையுமது
ரோசா வண்ணத்திலல்லது இளஞ்சிவப்பில்
மிகவும் திமிர்பிடித்துக்
கொழுத்துப் போய்க்கிடக்கிறது
அதற்கு மெல்லவென நான் சிக்கியபொழுதில்
மேலண்ணத்துக்கும் கீழண்ணத்துக்குமிடையிலதனைத்
துடிதுடிக்கவைத்து
கட்டற்ற பொய்களை
அவதூறுகளை வசைமொழிகளை
வெளியெங்கும் இறைத்தது
தேளுக்கில்லை
அரவத்துடையது மிகவும்
மெல்லியது, பிளந்தது, கூரியது
இரண்டெனவும் கூறலாமெனினும்
அதனைப் போன்றதல்ல

உன்னுடையது
தீண்டப்பட்ட எல்லா மனங்களையும்
கொல்லும்
கொடிய விஷத்தினைக் கக்கியபடி
வழியெங்கும் தொடரும்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# வல்லினம் - மலேசிய கலை இலக்கிய இதழ் -10, அக்டோபர் 2009
# தமிழ் எழுத்தாளர்கள்
# தினகரன் வாரமஞ்சரி (27.12.2009)
Tuesday, December 1, 2009

பேரன்பின் தேவதை வருகை


பிரபஞ்ச வெளியெங்கும்
சுகந்தம் நிறைக்கும்
அழகிய பூவொன்றை
வசந்தநாளொன்றில் எதிர்கொள்ள
தன்
பரப்பெங்கிலும் பாசம் நிரப்பி
நெடுநாளாகக் காத்திருந்ததோர்
பச்சை இல்லம்

மெதுவாக நகர்கையில்
பெருஞ்சலனத்தில்
சிதறச் செய்த கரும்பாறைகள்
மேலிருந்த சினமோர் யுகமாய்த் தொடர்ந்தும்
தன் பழஞ்சுவடுகளில் நலம் விசாரிக்கும்
எளிய நாணல்களை
மீளவும் காணவந்தது
நீர்த்தாமரை

விரிசல்கள் கண்ட மண்சுவர்
மழையின் சாரலை
தரையெங்கும் விசிறும்
ஓட்டுக் கூரை சிறிய வீடு
தொடரும்
புராதன இருளின் ஆட்சி மறைக்க
தன் கீற்றுக்களைப் பரப்பி
பரிபூரணத்தை எடுத்துவந்தது
பேரன்பின் தேவதை

மெல்லிய வண்ணத்துப் பூச்சியென
பொக்கிஷங்களைச் சுமந்து வந்த தன்
சிறகுகளைச் சிறிதேனும்
இளைப்பாறவிடாமல்
வந்தது என்றுமழியாப் புன்னகையோடு
யாவர்க்கும் மகிழ்வைத் தரும்
மந்திரங்களை உதிர்த்தது
பின்னர்
தவறவிட்ட விலைமதிக்கமுடியாதவொன்றை
தேடிச் செல்வது போல
மிகத் துரிதமாகத் தன் நிலம் நாடி
தொன்ம பயிர்நிலங்கள் தாண்டி
மீண்டும் பறந்தது

ஆத்மாக்களனைத்திற்கும்
இனி வாழப்போதுமான
சுவாசத்தை விட்டுச் சென்ற
அத் தூய காற்றினூடே
அந்தகாரத்தைப் பரப்பி
தைத்திருந்த கருங்குடையை திரும்பவும்
விரித்தது மழை இரவு

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


@ அன்புச் சகோதரி ஃபஹீமா ஜஹானின் வருகை ( 03-11-2009)

நன்றி
# சொல்வனம் இதழ் 13 (27-11-2009)