Thursday, May 20, 2010

தொலைவானில் சஞ்சரிக்கும் ஒற்றைப் பறவை

வளைதலும்
வளைந்து கொடுத்தலுமான
நாணல்களின் துயர்களை
நதிகள் ஒருபோதும்
கண்டுகொள்வதில்லை

கூடு திரும்பும் ஆவல்
தன் காலூன்றிப் பறந்த
மலையளவு மிகைத்திருக்கிறது
நாடோடிப் பறவைக்கு

அது நதி நீரை நோக்கும் கணம்
காண நேரிடலாம்
நாணல்களின் துயரையும்

சிறகடித்து அவற்றைத் தடவிக்கொடுத்து
தான் கண்டுவந்த
இரயில்பாதையோர நாணல்களின் துயர்
இதைவிட அதிகமென
அது சொல்லும் ஆறுதல்களை
நாணல்களோடு நதியும் கேட்கும்
பின் வழமைபோலவே
சலசலத்தோடும்

எல்லாத்துயர்களையும்
சேகரித்த பறவை
தன் துயரிறக்கிவர
தொலைவானம் ஏகும்
அப்படியே தன் கூடிருந்த மரத்தினையும்
கண்டுவரக் கூடும்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# மறுபாதி - கவிதைகளுக்கான காலாண்டிதழ் - 02
# சிக்கிமுக்கி இதழ் - 4 பெப்ரவரி, 2010
# உயிர்மை
# நவீன விருட்சம்

Saturday, May 1, 2010

மின்னல்களில் கைவிடப்பட்டவர்கள்

இருப்புக்கருகே
மூர்க்கத்தனத்தோடு
பெரும் நதி நகரும்
ஓசையைக் கொண்டுவருகிறது
கூரையோடுகளில் பெய்யும்
ஒவ்வோர் அடர்மழையும்

வீரியமிக்க
மின்னலடிக்கும்போதெல்லாம்
திரள்முகில் வானில்
இராநிலாத் தேடி யன்னலின்
இரும்புக் கம்பிகளைப் பற்றியிருக்கும்
பிஞ்சு விரல்களை அழுது கதற
விடுவித்துக் கொண்டோடுகிறாள்
குழந்தையின் தாய்

தொடர்ந்து விழும் இடி
ஏதோ ஒரு
நெடிய மரத்தை எரித்து அணைய
நீயோ
இடி மின்னலை விடவும் கொடிய
காதலைப்  பற்றியிருந்தாய்
துயருற்றவரைக் காப்பாற்றக் கூடும்
கருணை மிகுந்த ஓர் கரம்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# சொல்வனம் இதழ் - 19
# உயிர்மை
# நவீன விருட்சம்
# தமிழ் எழுத்தாளர்கள் 
# திண்ணை