Wednesday, December 26, 2007

சுனாமியழித்த சினேகிதனுக்கு...!


எங்கிருக்கிறாய்
எனதினிய நண்ப?

கறுப்பு,வெள்ளை ஓவியங்களாய்க்
காட்சிகள் மறைய
நிலவின் சாட்சியாக
நீ வாழ்ந்த ஊருக்கு
நிவாரணப் பொருட்களோடு
நாமனைவரும்
நள்ளிரவில் வந்தடைந்தோம் !

உனது சுவடு பதித்த
கடற்கரை,
உனது சுவடு அழித்த
கடல்
அனைத்தையும் பார்த்து
விக்கித்து நின்றோம் !

என்றாவதொருநாளில்
என்னையும் - உனதூருக்கு
அழைத்துச் சென்று,
கடல் அழகு காட்டி,
நடுநிசியில் - சுடச்சுட
மீன் வறுத்த
நிலாச்சோறுண்ணும் ஆசையை
இறுதியாக என்னிடம்
சொல்லிச் சென்றிருந்தாய் !

புன்னகை தவறிய முகங்களையும்,
விரக்தி தேங்கிய கண்களையும்
பார்க்க நேரிட்டபோதெல்லாம்
உன்னையும் உயிருடன்
சந்திக்க வேண்டுமென
இதயம் - ஏங்கித் தவித்திற்று !

உனது இறுதி மூச்சை
ஏந்திய காற்று,
உனது சுவாசப்பைகளை
நிரப்பிய சமுத்திரம்,
உனது தேகத்தை
விழுங்கியிருக்கும் பூமி
அனைத்தும்,
உனது ஞாபகங்களைத் திரட்டி
என்னிடம் தந்தன !

கொடிய கனவொன்றினால்
திடுக்கிட்டெழுதல் போல
கொடியில் உலரும்
உனதாடைகளைக் காண
நேரிடும் கணங்களிலெல்லாம்
நெஞ்சு நடுங்கி,
விம்மித் தடுமாறுகின்றேன்
உனது வெறுமையுணர்ந்து
திகைத்து நிற்கின்றேன் !

உனது தொழுகைகளும்,
நோற்ற நோன்புகளும்,
வாய்மொழிந்த திக்ருகளும்
ஓதிய ஒவ்வொரு ஆயத்களும்
நீ பற்றிக்கொள்ள
பெரும் தூணாக அமைந்திருக்குமென
உறுதியாக நம்புகிறேன் !

எனது அறையில்
என்னுடன் வசித்த
என்னினிய நண்பனே;
மஹ்ஷரில்
மறுபடியும் கரம் கோர்ப்போம்,
நீண்ட நடை பயில்வோம் - அங்கே
சுனாமி வராது !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Saturday, December 22, 2007

எனதூருக்கு வருவாயா...?


அன்புடன் சினேகிதனுக்கு ...,
பனை மரங்களையும்
பவளப் பாறைகளையும்
பார்த்திடும் ஆவலில் நீ
எனதூர் வரப்போவதாக
மூன்று வாரங்களுக்கு
முன் அனுப்பிய
அஞ்சலட்டை
இன்றென் கரம் சேர்ந்தது !

என்ன செய்ய ?
உள்நாடு தானெனினும் - அதுவும்
பல சாவடிகளில் தரித்தே
வரவேண்டியிருக்கிறது !

யுத்தம் தின்று துப்பி
எச்சிலான எனதூரில்,
சமுத்திரம் உறிஞ்சிக் குடித்து,
வாந்தியெடுத்துயிர் பிழைத்த
மக்களுடன் முகாமினில்
எனது இருப்பு !

நண்பா ,
பனை மரங்களை விட
மீஸான் கட்டைகளே
தற்போது '
எனதூரெங்கும் நடப்பட்டுள்ளன.

ஆழிப்பேரலை
தாண்டவமாடிப் போன
பவளப் பாறைகளினிடையில்
மனித எலும்புகளே -
மக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன !

எனதூரைத் தாண்டிச் செல்லும்
நிலவும்
தவித்து அழும்;
நட்சத்திரங்களும் நடுநடுங்கித்
திசைமாறித் துடிக்கும் !


நடுநிசி இருளில்
வெடியோசைகளோடு
அப்பாவி ஆன்மாக்களின்
அலறல் கேட்டு
ஒரு பொழுதேனும் -இதயம்
அதிர்ந்த அனுபவம்
உண்டா உன்னிடத்தில் ...?

பௌர்ணமி நிலவெரிந்து ,
உறக்கம் தொலைத்த
கறுப்பு இரவுகளில் ,
தொலைதூர சப்பாத்துக்
காலடிச் சத்தங்கள்
நெஞ்சினில் மிதித்துப் போகும்
வலியை என்றேனும்
உணர்ந்ததுண்டா நீ?


நீ பாதம் பதிக்குமிடமெல்லாம்
கண்ணிவெடி புதைக்கப்பட்டிருக்கும் ;
கவனமாக வா !
உன் மூச்சுக் காற்றோடு
விஷவாயு சங்கமிக்கும் ;
சுவாசிக்க முன் யோசி !

நீ வந்து சேர வசதியாக
எனதூரின் அடையாளம்
கேட்டிருந்தாய் ;
துப்பாக்கி சல்லடையாக்கிய
சுவர்களுடையதும் ,
நிலையுடன் சேர்த்து
கதவுகளும் , யன்னல்களும்
களவாடப்பட்டதுமான
பாழடைந்த வீடுகள் ,
இரத்தக் கறை படிந்து
கறுத்துப் போன வேலிகள்
பாதையோரத்திலிருந்து
மயானத்தை ஞாபகப்படுத்துமெனில்,
அது எனதூர் !

இன்னும் ஒரு புராதனகால
இரும்புத் தகடு
" இந்த அழகிய கிராமம்
இனிதே உங்களை வரவேற்கிறது !"
என்ற வாசகங்களுடன்
எஞ்சியிருக்கும்
ஒன்றை ஆணியில் சரிந்து தொங்கும் !


- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Monday, December 17, 2007

ஒரு கணப் பொழுதில்...!


இக்கணம்
எங்கேனும் ஒரு மூலையில்
ஏதேனுமொரு எரிநட்சத்திரம்
சமுத்திரத்தில் வீழ்ந்து
சங்கமமாகியிருக்கலாம் !

இக்கணம்
ஒரு பூ உதிர்ந்திருக்கலாம் ,
ஒரு பூ மலர்ந்திருக்கலாம் ,
எறும்பூரக் கற்குழிந்த கணம்
இதுவாகக் கூட இருக்கலாம் !

இக்கணம்
ஏதோவோர் எல்லையில்
மலையொன்று மண்மேடாகியிருக்கலாம்,
மரமொன்று வேருடன்
வீழ்ந்திருக்கலாம் !

இக்கணம்
இதழ் விரிக்கும் - எனதிந்தக்
கவிதையைப் போல
யாரேனும் ஒரு தாய்க்கு
ஒரு அழகிய இளங் கவிதை பிறந்து
'அம்மா' என்றழுதிருக்கலாம் !

இக்கணம்
எங்கேனுமொரு மூச்சு
நின்று போயிருக்கலாம் ,
எங்கேனுமொரு மூக்கு
புதுக் காற்றை சுவாசித்திருக்கலாம் !

புயலடித்து ஓய்ந்த கணம்,
பூகம்பம் வெடித்த கணம்,
முதல் தூறல் விழுந்த கணம்,
மழை நின்று போன கணமென
ஒரு கணத்தில்
எல்லாமும் நிகழ்ந்திருக்கலாம் !

அந்நியனின் ஆக்கிரமிப்பில்
வதைப்பட்டு,
வாழ்விழந்து,
அனாதையாகி , அகதியாகி,
தாயொருத்தி பிள்ளையிழந்து,
தாரமொருத்தி விதவையாகி
விம்மியழும் ஒரு சொட்டுக்
கண்ணீர்த்துளி நிலத்தில் வீழ்ந்த
கணமாகவும் இது இருக்கலாம் !

ஏழு வானங்களையும்
தடைகளெதுவுமின்றி தாண்டிப்போன
ஒரு ஷஹீதின் உயிருக்கு
வானவர்களும் அழகிய தேவதைகளும்
மணம் நிறைந்த
மரணமின்றிய வாழ்வுக்கு
கதவு திறந்த கணம்
இதுவாகக் கூட இருக்கலாம் !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

* ஷஹீத் - யுத்த களத்தில் மரணமடையும் வீரன்.

Sunday, December 2, 2007

எனக்கு பத்து விழிகள் !



















எனக்குப் பத்து விழிகள் 
ஒவ்வொன்றும்
என் விரல் நுனிகளில்
இமைக்கின்றன

தொடுதல் எனது பார்வை 
தடவுதல் எனது
கண்மணிச் சுழற்சி 

எனதான உலகத்தில்,
இறந்த காலங்கள் எவையும்
காட்சிகளால் ஆனவையல்ல;
நினைவுகள் எவையும்
நிறங்களால் சூழ்ந்தவையல்ல

எனக்குரிய தேசம் - பல
வர்ணங்கள் பூசப்பட்டதல்ல.
வசந்தம் செறிந்த காலத்தில்
வாசனை பல வீசும்
பூஞ்சோலையுமல்ல - அது
இருளினால் மட்டுமேயான
தனியொரு உலகம் 

வானவில் என்ற ஒன்று
ஏழு வர்ணங்களினாலாகி
மேகத்தினிடை எட்டிப் பார்க்குமென
நீங்கள் சொன்ன கணத்தினில்
எனது வானிலுமொரு
வானவில் தோன்றியது,
இருளை மட்டும் உடுததுக் கொண்டு 

இருள் எனக்கு
அச்சமூட்டுவதில்லையெனினும்
இருண்டு, கல்லாகிப் போன
இதயததுடனுலவும்
விழிப்புலனுள்ளவர்களிடம்தான்
எனது அச்சங்களெல்லாம் 

-எம்.ரிஷான் ஷெரீப் ,
மாவனல்லை ,
இலங்கை.

Tuesday, November 27, 2007

திமிர் களைந்தெழு...!













எழும்பு!
கனவுகளேதுமற்றவுன்
நெடுந் தூக்கத்தை விட்டும்!

பார்!
உன்னால் துடி துடிக்கப் பிடுங்கப்பட்ட
சிட்டுக் குருவிகளின்
சிறகுகளின் முனையில்
குருதி கறுப்பாய்க்
காய்ந்து கிடப்பதை!

கேள்!
இறக்கைகளனைத்தையும்
விலங்கான உன்னிடத்தில் இழந்து
பறக்க முடியாமல்
குருவிகள் பாடும்
ஒப்பாரியின் ராகத்தை!

புரிந்து கொண்டாயா
இருந்தும் என்ன திமிருனக்கு ?

உன் பாதத்தை
விளிம்பாய்க் கொண்டு,
உன் ரேகையை
நூலாய் எடுத்து,
ஓர் அந்தகாரக் காரிருளில்
ஒரு விஷச் சிலந்தி
தனக்கான வலையைப் பின்னும் வரை
உனக்கேதும் புரியாதுதான்!

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Thursday, November 22, 2007

பேய் மழை ...!














சட்டென்று வந்த மழை
சடசடத்துப் பெய்த மழை !

வற்றிவாடி வதங்கி
வசந்தமிழந்த காலங்களில்
வாராதிருந்த மழை
வரவேற்றும் தூறாதிருந்த மழை !

இப்போது வந்திங்கு
இடைவிடாது பெய்யும் மழை ;
இடிமின்னலைக் கூட்டி வந்து - பல
இதயங்களை நிறுத்தும் மழை !

கோழிகுஞ்சையெல்லாம்
கொத்தோடு நனைத்த மழை ;
கொட்ட வந்த தேளைக்கூட
கொல்லாமல் விட்ட மழை !

மின்சாரக்கம்பியையெல்லாம் நிலத்தில்
மிதக்க விட்ட மழை - அதனை
மிதித்த உயிர்களையெல்லாம்
மேலோகம் சேர்த்த மழை !

தொற்று நோயையெல்லாம் - தன்
தோளில் தூக்கி வந்த மழை
வற்றிய உடலோடு போய்
வைத்தியரை வாழவிட்ட மழை !

மரங்களை முறித்துப்போட்டு
மண்சரித்து வந்த மழை - பெரு
விருட்சங்களை விழவைத்து
வீடழித்துப் பெருத்த மழை !

அகதியென்ற காரணத்தால்
சொந்தமிழந்து சொத்திழந்து
சுகமிழந்து சுவடிழந்து
சுயமிழந்து வந்த இடத்தில்

கட்டிய கூடாரத்தினுள்ளும் வெள்ளமாய்க்
கைவீசி வந்த மழை
காற்றனுப்பிக் காற்றனுப்பிக் கூரை
களவாடிப்போன மழை !

பாதையோரங்களில்
படுத்துக் குமுறியவரை
பதறவைத்த மழை ;
விதியை நொந்தவாறே
விம்மிக்கிடந்தவரை
விரட்டியடித்த மழை !

சட்டென்று வந்துள்ள மழை
சடசடத்துப் பெய்யும் இப்பேய் மழை...!

-எம்.ரிஷான் ஷெரீப்
மாவனல்லை
இலங்கை.

Monday, November 19, 2007

இதயங்கள் தேவை !













பூத்திருந்த பூவொன்று
செடிவிட்டுக் கழன்று
புல் மீது விழுந்தென்னெஞ்சில்
தீப்பற்ற வைத்தது !

கூட்டிலிருந்து
காகம் கொத்திச்
சொண்டகன்று
நிலம் வீழ்ந்தென்
கரண்டிப் பால் நக்கிப்
பின்னிறந்த அணில்குஞ்சு
என்னிதயத்தில்
அமிலமள்ளிப் பூசியது !

பாதை கடக்கமுயன்று
கண்முன்னே கணப்பொழுதில்
மோதுண்டு மரணித்த தாயும்

குருதிக்கோடுகளைச்
சிரசில் ஏந்தி,
லேசான புன்னகையை
முகத்தில் கொண்டு
பெற்றவளின்
கரத்திலிருந்திறந்த
கைக்குழந்தையும்
என்னுள்ளத்தைச்
சிலுவையிலறைந்தனர் !

நம்பவைத்து நயவஞ்சகனாகிய
நண்பனும்,
உரிமையெடுத்து உருக்குலைத்த
உறவினரும்
என்மனதைக் கழற்றியெடுத்துக்
கூர்ஈட்டி குத்திக்
கொடூரவதை செய்தனர் !

புராணக்கதைகளில் போல
படைத்தவன் முன் தோன்றி
வரம் தரக்கேட்பானெனின்,
செத்துப்பிழைக்க-எனக்குப் பல
இதயங்கள் வேண்டுமென்பேன்...
இல்லையெனில்-உடம்புக்குப்
பாரமெனினும்,
எதையும் தாங்கும்
பாறாங்கல் இதயங்கேட்பேன்...!


- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Wednesday, November 14, 2007

செல்வி.ஸ்ரீஜான்சி செந்தில்குமார், இறப்பு : 12/11/2007













முள்ளில் உறைந்த
விடிகாலைப் பனித்தூய்மை நீ ;
ஆவியாகும் கணம் வரையில்
எந்த தேவதையும் தலைகோதிடாப்
பெருவலி சுமந்தாய் !

கருணை நிறைந்த உலகிலொரு
தேவதையாய் வலம்வந்தாய்,
இறப்பின் வலியதனை
அனுதினமும் அனுபவித்தாய்,
விழிகளிரண்டின் மூலமிரு
உயிர்க்கு ஒளியூட்டி
விண்நோக்கியுன் பயணம்
இன்று நீ ஆரம்பித்தாய் !

நீ காட்டிய பேரன்பு
நெஞ்சம் முழுதும் அலைமோத
பத்திரமாய்ப் போய்வரும்படி
சொல்லிச்சொல்லியனுப்பினேன் - அதனை
எந்தக்காதில் வாங்கி - உன்
உயிரோடு விட்டுவிட்டாய் ?

இத்தனை துயரங்களையும்
எனை மட்டும் தாங்கச்செய்து,
எவராலும் மீட்சி வழங்கமுடியாப்
பெருவெள்ளத்தில் எனை மட்டும்
நீந்தச்செய்து நீங்கிச்செல்ல
உன்னால் எப்படி முடிந்தது தோழி ?

மௌனமாய் வலிபொறுக்கும்,
விழிநீர் அத்தனையையும்
நெஞ்சுக்குள் விழுங்கி விழுங்கி
ஆழப்பெருமூச்சு விடுமொரு
அப்பாவி ஜீவனென்பதாலா
அத்தனை தூரமெனை நேசித்தாய் ?

எந்த வனாந்தரங்களுக்குள்ளும்
வசப்படாத இயற்கையை,
எந்தப் பனிமலையும்
தந்திடாத குளிர்மையை,
எந்தச் சோலைகளும்
கண்டிராத எழிற்பொலிவை,
எந்தப் பட்சிகளும்
இசைத்திடாத இனிய கீதமதை
உன்னில் கொண்டிருந்த நீ
எந்த மேகத்தின்
துளிகளுக்குள்ளூடுருவி
மழையாய்ப் பொழியக்காத்திருக்கிறாய் ?

கருவிழியிரண்டையும் - ஒளியற்ற
இருவர் வதனங்களில்
விதைத்துச்சென்றாய் ;
அவர்கள் வெளிச்சம் பார்த்துத்
திளைக்கும் கணந்தோறும்
அப்பூஞ்சிரிப்பில் நீயிருப்பாய் - என்
நிரந்தரப் பிரார்த்தனைகளிலும்
நீ வந்து தங்கிவிட்டாய் !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Monday, November 12, 2007

கண்ணாடியின் வேர்கள் !















வானத்தினழகும் ,
வசந்தகால
வனாந்தரங்களின்
பசுமையும்,
வானவில் வர்ணங்களும்,
வண்ணத்துப் பூச்சிச்
செட்டையின்
மென்மையும் ;
இந்தக் கண்ணாடி விம்பத்திடம்
தோற்றுத்தான் போகுமென
சொல்லிக் கொண்டிருந்தேன் !

எங்கிருந்து வந்தாய்...?
என் கனவுகளில்
தீப்பிடிக்கச் செய்தாய் ;
எனது பாடல்களை
ஒப்பாரியாக்கி,
எனது தேடல்களை
விழிநீரில் கரைத்து
வழியனுப்பச் செய்யுமுன்
சந்தர்ப்பவாதத்தை
எந்தக் கரங்களில்
ஏந்தி வந்தாய்...?

என் தோழனா நீ...?
நட்பென்ற கண்ணாடியை
உடைத்துப் பார்த்ததன்
வேரைத் தேடினாய் ; - இன்று
கீறல்களையொட்டி
புதுமெருகு
பூசமுடியாதென்பதை
புரிந்துகொண்டாயா...?

என் எதிரியா நீ...?
எங்கிருந்து வந்தாய்...?
என் தலை கோதிக் கோதி
ஓங்கிக் குட்டுமுன்
சூட்சுமக் கரங்களோடு
எங்கிருந்து வந்தாய் நீ...?

போதுமுன் சுயநலத்தை
இத்தோடு
நிறுத்திக்கொள் ;
தலைகோதுமுன்
துரோகத்தை
கொத்தோடு
தூக்கியெறி !

ஓர்
அந்தகாரக் காரிருளில்
என் நிழல்தேடி
நான் சோர்ந்த வேளை,
உன் விரல் தீண்டித்
திரை அகன்று,
புதுவெளிச்சம்
பாய்ந்தென்
பூஞ்சோலை
பூத்ததென்பேனோ
இனிமேலும்...?


-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Thursday, November 1, 2007

எனது துயரங்களை எழுதவிடு...!



















பொன்மஞ்சளின் தீற்றலோடு
இளஞ்சிவப்பு மலருரசிச்செல்லும்
மெல்லிய வாடை சுமந்த காற்று
உன் தேநீர்க்கோப்பையின்
ஆவிகலைத்துச் செல்லும்
இக்கணப்பொழுதில்
எனது கவிதைகளில்
சோகம் அழித்து,
காதலையும்,கனவுகளையும்
அழகாய்ப் பதித்திட
அன்பாய்க் கட்டளையிடுகின்றாய் !

ஐரோப்பாவின் குளிர்ந்த தெருக்களில்
உலாவி நடக்கவும்,
சோம்பிப்போய்ப் படுக்கையில்
குலாவிக்கிடக்கவும்,
தேவதைகளின் தாலாட்டில்
உலகம் மறக்கவும்
உனக்கு வாய்த்திருக்கிறது !

நாளைக்கே
நானும் கொல்லப்படலாம் ;
சோகம் தவித்துக்கனக்குமெனது
மெல்லிய மேனியில்
மரணம் தன் குரூரத்தை - மிக
ஆழமாக வரையவும் கூடுமான
அக்கணத்திலும்...
உனது கோப்பைகளில் திரவங்கள்
ஊற்றி வழிந்திட,
தேவதைகள் இதழ்ரேகை
தீர்க்கமாய்ப் பதிந்திட,
மாலை வேளைகளுனக்குச்
சொர்க்கத்தை நினைவுறுத்தும் !

வாழ்க்கை
வளர்ப்பு நாய்க்குட்டி போல்
வசப்பட்டிருக்கிறதுனக்கு !

உலகச்சோகங்களனைத்தும்
கரைத்தூற்றப்பட்டு
நான் மட்டும் வளர்ந்தேனோ...?
ஒரு கோடித்துயரங்கள்
தீப்பாறைக் குழம்புகளாயென்
உள்ளே கிடக்கையில்
எனது விரல்களிலிருந்து மட்டுமென்ன
செந்தேனா வடியும் ?


-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Friday, October 26, 2007

எங்கள் தேசம்










அந்த மலைகளைத் தாண்டிப்
பெரும் சமுத்திரத்துக்கப்பால்,
எங்களுக்கென்றொரு
அழகிய தேசம் இருந்தது ;
அது எங்கள்
அழகிய தேசம் !
பூலோகத்தின் சொர்க்காபுரி !!

சலசலத்தோடும்
நதிக்கரைகளில்
பட்டாம் பூச்சி துரத்தியும்,
வசந்தகால மரங்களில்
பூக்கள் பறித்தும்,
பாடப் புத்தகங்களுக்கிடையில்
மயிலிறகைப்
பொத்தி வளர்த்தும் - என்
தங்கை தோழிகளுடன்
விளையாடினாள் !

சூரியக் கதிர்கள்
பயிர்களைத் தொடமுன்பு,
எம் மக்கள் - அவர்களது
விவசாய நிலங்களைப்
பார்வையிடப் புறப்படுவர் !

அன்பையும்,
ஆரோக்கியத்தையும்,
ஒற்றுமையையும் ,
உயர் குணத்தையும்
மழலைகளுக்கு - எம் மாந்தர்
உணவுடன் ஊட்டி வளர்த்தனர் !

மழை பொய்க்கவில்லை ,
வெயில் வாட்டவில்லை ;
பஞ்சம்,பிணி,பட்டினியென
எம் மக்கள் வாடவில்லை !
எனினும் - ஓர்
இருண்ட அமாவாசை இரவு
எங்களுக்கு மட்டும் விடியவேயில்லை !

அன்றுதான்
அந்த அந்நியதேசத்து
ஆக்கிரமிப்பாளர்கள் வந்தனர் ;
எனது அழகிய தேசம்
ஆயிரம் துண்டங்களாக ,
நாமெல்லாம் ஒரே இரவில்
அடிமைகளாக மாறிப் போனோம் !

அதன் பிறகு வந்த
பௌர்ணமி நிலவும்
தீப்பிடித்தெரிந்தது ;
அழகிய தேசம்,
அழுகிய தேசமாகவும்,
அழவைத்த தேசமாகவும்
மாறிவிட்டதைக் கண்டு !


-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Tuesday, October 16, 2007

ஒரு வண்ணத்துப் பூச்சியின் பாடல்














ஒரு அழகிய தேசத்துக்
குருதி வண்ணக்
கதவு திறந்து - பெரும் சோகத்துடன்
கொட்டும் மழைதனிலே
இத் தேசத்தின்
இறுதி மனிதனாக நீ
கதிகலங்கப் போவதைப்
பார்த்திருந்தேன் !

இது
பசும் மலைகள் போர்த்திய
வனாந்தரமல்ல
முன்னொரு காலத்தில்
குடிமக்கள் கூடிக்
குதூகலித்ததோர் அழகிய தேசம் !

எவ்வாறெனினுமின்றிங்கு
புலியின் வேட்டைக்கும்,
சிங்கத்தினுறுமலுக்கும் - நரிகளின்
ஊளைகளுக்கும் தடையேதுமில்லை ;
கட்டுப்பாடு, தடைகளெல்லாம்
மனிதத்தோடு வாழும்
மனிதர்களுக்கே...!

என்ன தேசமிது
சீரழிந்து போய்...!
என்னழகில் மயங்கிச்
செட்டை பிடிக்கத் துரத்தியலையும்
சிறார் எவருமில்லாமல்
என்ன வாழ்க்கையிது
சீரழிந்து போய்...!

எனக்கே கேட்காமல்
சத்தமின்றி
மெல்லப் பாடுகின்றேன்
எனதான பாடலை !

காற்று - என் பாடலை
அதன் காதுகளுக்கு
மெல்லக் கொண்டு போகுமெனின்,
நாளையென்
செட்டைக்கண்களில்
குத்தப்பட்டு,
என்னுடலும் உலரக்கூடும்
இம் முட்கம்பிகளில் !


-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Friday, October 12, 2007

மழை











மழை!
ஒரு வரி
ஹைக்கூ கவிதை!

பெருவிருட்சங் கொண்ட
வனாந்தரங்கள்
ஜீவராசிக்கனுப்பும்
வான்வெளிக் கடிதம்!

நீலக்கடல்,
நீர் வீழ்ச்சி,
நீர் நிலைகளனைத்தினதும்
உதடுகள் முணுமுணுக்கும்
தாய் மொழி!

மேகத் துணி மூட்டையை
யாரோ இறுக்கிப் பிழிந்து விட்டு
சூரியனின் மேலே
காயப் போட்டார்களோ;
இப்படி இருண்டு கிடக்கிறதே!

மழைச் சாரல்
சற்று அதிகரித்துவிடின் - நம்
மானிடர் விழிகளில்
தொடர்ச்சியாய் தூறல்;
ஒன்று காய்ச்சலால்,
மற்றது வெள்ளப் பாய்ச்சலால்!

ஒரு நாழிப் பொழுதில்
ஒரு கோடிப் பிரசவங்கள்
ஆகாயத்திற்கு;
ஒரு ஊழிப் பொழுதின்
வேதனைகளை வெளிப்படுத்தும்
இடி மின்னல் வார்த்தைகள்
புரிகிறதா உனக்கு....?

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Friday, September 28, 2007

நடுநிசியிலெனது தேசம்...!



















பகல் மறையும் பொழுதுகளில்
ஆரம்பிக்கும்
எம்மக்கள் பதற்றம்...
மெல்ல இருட்ட ஆரம்பிக்கும்-எங்கள்
உவகையெல்லாவற்றையும்
உள்வாங்கி...!

குண்டு விழும்,
விழுந்த இடத்தைச் சிதறடிக்கும்,
இடி போலச் சத்தங்கேட்கும்,
தூரத்து அவலக்குரல்கள்
குண்டு போடப்படுவதை
உறுதிப்படுத்தி-தொடர்ந்து
எதிரொலிக்கும் !

துப்பாக்கிகள்
வீட்டுக்கதவு தட்டும்,
சகல குடும்பத்தினரதும்
கதறலுக்கப்பாற்பட்டு-இளைஞர்கள்
கடத்தப்படுவர் !

பௌர்ணமியும்
பார்த்து அழும்
வதைப்படுதல் கண்டு !

தினந்தோறும்
கடற்கரை,வயற்காடு,
வீதியோரம், களத்துமேடு,
பொதுமயானம், புளியந்தோப்பு,
எங்கும் கண்டிடலாம்...

எவர்க்கேனும் மகனாக,
கணவனாக,தந்தையாக,
சகோதரனாக,சினேகிதனாக
வாழ்ந்து வந்தவர்களின்
சடலங்களை...!

'இன்றைக்கெவர்க்குச் சாவோ..?"
பதுங்கு குழியிலிருந்தவாறே
உறவினரை எண்ணிப்பார்த்து
உயிர்துடிக்கும்.
மூச்சடக்கி, மூச்சடக்கி
உள்நெஞ்சுக்கேவல் எழும் !

அனைத்தும் முடிந்தநேரம்
வீட்டுச்சுவர் மேல் - சத்தமின்றி
வெயில் ஏறும் !

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை

Tuesday, September 18, 2007

நான்கு மூலைகளிலும் சபிக்கப்பட்ட வாழ்க்கை...!


















கருணை வழிந்தோடும்
இடுங்கிய விழிகளினூடு
எதுவும் இயலாதவளாக
என்னைப் பார்க்கிறாய்!

காலம் சுழற்றியடித்துச்
சுருங்கிய உடலோடு,
விபத்துக்குள்ளான - உன்
பேரனைப் பார்த்துப்போக
கடன்வாங்கித் துரிதகதியில்
தலைநகர் வந்ததாக
காவல்துறையிடம் கெஞ்சுகிறாய்!

அழகாயிருந்த வாழ்க்கையின்
நான்கு மூலைகளும் சபிக்கப்பட்டு
நாறடிக்கப்பட்டிருக்கும் போது
மன்றாடியென்ன பயன்...?
மன்னித்துக்கொள் தாயே...!

உன் பனையோலைப்பையின்
ஒவ்வொரு இடுக்காய்த் தேடியும்
கைக்குட்டைச் சில்லறைகளையும்
பனங்கிழங்குகளையும் தவிர
வேறெந்த ஆயுதத்தையும்
இவர்களால் கண்டுபிடிக்கமுடியவில்லை...!

காவல்துறை வாகனத்தில்
கைப்பிடித்து ஏற்றப்படுகின்றாய்...
என்ன செய்ய...?
நீ மூதாட்டிதானெனினும்
அடையாளஅட்டையில்லையெனில்
உன்னை வதைப்படுத்தி விசாரிக்காமல்
விடமாட்டார்கள் - உன்
நெற்றியில் பொட்டிருக்கும் காரணத்தால்...!

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை

Thursday, September 13, 2007

வசந்தங்கள் வர வழி விடு











உனதிருண்ட வாழ்வில்
ஒரு பொழுதிலேனும்
ஒளிக் கீற்றொன்று
உட்பிரவேசிக்குமென்ற
நம்பிக்கையுடனாவது-கொஞ்சம்
நிம்மதியாய்
உறங்கக் கூடாதா தோழி?

விழிநீர் வற்றும் வரை
கதறியழுதுன்
காலத்தைப் போக்குவதாக
வாதம் புரிகிறாய்;
இருட்டு மட்டுமேயுன் எதிர்காலத்தைச்
சூழ்ந்துள்ளதென்று
ஏங்கித் தவிக்கிறாய்!

வசந்தம் - உன்
வாசலுக்கு மட்டும்
வரக்கூடாதென்கிறாய்.
வைகறை விடியலும் - உன்
வாழ்விலொருபோதும்
இல்லையென்கிறாய்!

உன்னிதயத்தைச் சிலுவையிலேற்றிச்
சித்திரவதை செய்யும்-அவன்
சம்பந்தப்பட்ட நினைவுகளை
மறக்க முடியாதென்கிறாய்.
மருந்து போடக்கூடாதென்கிறாய்!

உன்னால் உயிர் பிரிந்த-அவன்
உனக்கான நிம்மதியையும்
உருவிக்கொண்டு போனதாக
உள்ளம் குமுறுகிறாய்.
உச்சந்தலை மேல்
இடி வீழ்ந்துன் இதயம் நொருங்கியதாய்
எண்ணித்தவிக்கிறாய்!

உன் சுற்றமேயிப்போது
உனைச் சீறுகிறது.
வார்த்தை அம்புகளால்
வதைக்கிறது.-அவன்
காதலை ஏற்க மறுத்த
கர்வம் மிகுந்த அந் நாட்களில்
கணப் பொழுதிலேனும்
இப்படி நேருமென நீ
எண்ணிப் பார்த்ததுண்டா?

அவன் உறங்கும் கல்லறையில்
வீழ்ந்து கதறியழுதாவது
நீ செய்த பாவத்துக்கு
பரிகாரம் தேட முயற்சிக்கிறாய்!

உன்னிடம் அன்பை யாசித்து
அபயம் தேடிய அவனுக்குன்னால்
ஆறுதல்தான் கூற முடியவில்லை.
வார்த்தைகளால் காயப்படுத்தாமலாவது
இருந்திருக்கலாமல்லவா?

விதி உனக்கென்று
வரைந்த பாதையினூடு-உன்
வாழ்க்கை போகிறது.
நீ அதற்கென்
செய்வாய் தோழி?

நீ செய்த தவறுக்காக
காற்று – உனை மட்டும்
விட்டுவிட்டு வீசுகிறதா?
நிலா –தன்
பால் கிரணங்களை உன்மேல்
பொழிய மறுக்கின்றதா?
உனை நனைக்க
மழை தூற மாட்டேனென்கிறதா?

அவன் போய்விட்டான்
இனி உனக்கான தேசத்தில்
நிச்சயமாய் வாழ வரமாட்டானென்ற
நிதர்சனத்தை
நீயுணர்ந்த போதிலும்
நிம்மதியிழந்து தவிப்பதேன் தோழி?

கண்ணீரால் வரையப்பட்ட-உன்
காதல் சரித்திரம்
மறக்கவே முடியாததொன்றுதான்.
ஆனாலும் உனக்கான வாழ்க்கை
இன்னும் மிச்சமிருக்கிறதென்கிற
உண்மையை உணர்வாயா?

வசந்தத்தின் ஆணி வேர்கள்
உனை நோக்கி வருகிறது
இதய வாசலைத் திறந்துவிடு தோழி!
வாழ்க்கை உனை
வாழ அழைக்கிறது-ஒரு
முன் மாதிரியாய் வாழ்ந்துகாட்டு தோழி!

ஒரு பூ
உதிர்ந்து போனதென்று
செடிகள் என்றேனும்
சித்தம் கலங்குவதில்லை.
கணப்பொழுதுதான் தனக்கு
காட்சி தர முடிகிறதென்று
வானவில் ஒருபோதும்
வருத்தப் பட்டதில்லை!

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை

Saturday, September 8, 2007

நிசப்தம் விழுங்கும் உறக்கம்...!













நிசப்தித்திருந்தது நள்ளிரவு;
காலமோடும் சப்தம் கூட
காதுக்குள் அதிர்ந்தறைந்தது...!

ஒரு அசாத்தியமான மௌனத்தின்,
அமைதியின் உலகை
பேரிரைச்சலின் கை
அறைந்து சாத்தியதும்,
எனதான தேசம்
பற்றியெரிய தொடங்கியதுமான
அன்றிலிருந்துதான்...

இமைகளின் மேல் மயிலிறகால்
'உறக்கமே வருக'வென
மெலிதாய் எழுதி வைத்திடினும்
விழிகளில் ரயிலூர்ந்ததாய்
உறக்கம் மட்டும் வரவே வராது !

இப்படித்தானே இருந்து வருகிறது
தமதான தேசத்தைப் பிரிந்து,
சுயததை இழந்த
ஒவ்வொரு மனிதனுக்கும்...
ஒவ்வொரு நள்ளிரவும்...

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Saturday, August 25, 2007

விழிகளில் வழியும் ஏக்கம் !




















உனது உயிர்
போகும் பாதையைப்
பார்த்த படியே
விழிகள் திறந்தபடி
உயிர்விட்டிருந்தாய் !

ஏழு வானங்களையுமது
எந்தத் தடைகளுமின்றித்
தாண்டிச்சென்றதுவா...?

திறந்திருந்த வாய்வழியே
இறுதியாக என்ன வார்த்தையை - நீ
உச்சரிக்க நினைத்திருந்தாய்...?

நீ
நிரபராதியோ...
தவறிழைத்தவனோ...
உயிர்விடும் கணம்வரை
எப்படித் தாங்கிக் கொண்டாய்
அவ்வலிகளை ?

உன் நகங்கள்
ஒவ்வொன்றாக பிடுங்கப்பட்டிருந்தன .
நீ பிறந்தவேளையில்
ஒரு மெல்லிய பூவிதழ்போல்
அவை இருந்திருக்கக்கூடும் !

உன் உடம்பு முழுக்க
வரி வரியாய்
காயங்கள்...வீக்கங்கள்...
சிறுவயதில் நீயும்
சிறு சிராய்ப்புக்கு அழுதபடியே
எச்சில் தடவியிருப்பாய் !

என்றபோதிலும்
எதுவுமே சொல்லாமல்
உயிர் விட்டிருந்த உனது
விழிகளில் மட்டும்
எஞ்சியிருக்கிறது இன்னும்
ஏதோ ஒரு ஏக்கம்...
ஏதோ ஒரு தாகம்...


- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Thursday, August 9, 2007

இன்னும் எழுதப்படாத என் கவிதை













பொய்யைக் கனவைக் கற்பனையைக்
கவிதையாய்க் கிறுக்கிடினும்
பிரமிப்புகள் நீங்கலாக
என்னவெல்லாமோ
எஞ்சியிருக்கின்றன இன்னும்
எழுதப்படாமலே இங்கு...!

வானவில்லின் வசீகரம்,
வண்ணத்துப்பூச்சி அழகு,
இதழ் விரிக்கும் பூக்களின் மென்மை,
காதலியின் பொய்க்கோபம்-எல்லாமே
எழுதப்பட்டிருப்பினும்...

எந்த மொழியில்,
எந்தச் சொற்களைக் கொண்டு,
எப்படி எழுதி முடிப்பேன்
என் தாயின் புன்னகையை
ஒரு சில வரிகளில்.....?

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Saturday, August 4, 2007

வெறுக்கப்படும் மழைப்பொழுதுகள்...!


















மழை
பிடித்திருந்தது !

வேர்த்துப் புழுங்கிச் செத்து,
மேற்சட்டை வெதும்பி
முதுகோடு ஒட்டும் கணங்களில்
நிலா மறைத்து,
வானிலிருந்து துளித்துளியாய்க்
கீழிறங்கும்
நீர்த்துளிகளைப் பிடித்திருந்தது!

நெஞ்சைக் குளிர்விக்கும்
ஈரச்சாரலோடு,
நாசியை வருடும்
தூசு மணத்தில்
வினாடி நேரம் - நான்
என்னை மறந்ததுமுண்டு!

வாய்திறந்து நா காட்டி,
மழைத்துளியை உள்வாங்க
மனம் விரும்பிச் சிறுபிள்ளையாய்ச்
செய்து பார்த்ததுமுண்டு!

முகாம் கூரை விரிந்து
மழைத்துளிமுக்காடு நனைத்த கதைகளை,
சுவர் இடிந்து விழுந்துயிர்கள்
நசுங்கிச் சக்காகிச் சாறாகிப்
பிரிந்த கதைகளை,
வெள்ளம்
அழையா விருந்தாளியாய்
வீட்டினுள் புகுந்து
குடியிருந்தவர்களையெல்லாம்
கூரையிலேற்றிக் குடித்தனம் செய்யச்
சொன்ன கதைகளையெல்லாம்
பேசப்பார்க்கக்
கேட்கும் கணங்களிலெல்லாம்
ஏனோ - மழையையும்
மழை சார்ந்த எதையுமே
பிடிக்காமல் போகிறது !

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Friday, August 3, 2007

எலும்புக்கூட்டு ராஜ்ஜியங்கள்











காற்றினைப் போல்
எங்கள் வாழ்க்கை,
ஓரிலக்கில்லாமலும்...
அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டும்...!

ஓடும் நதியினைப் போல்
எங்கள் பயணம்,
ஓரிடத்தில் தரித்திருக்க முடியாமலும்...
திக்குதிசையின்றி பாய்ந்தோடிக்கொண்டும்...!

வானவில்லினைப் போல்
எங்கள் சந்தோஷம்,
நிலைத்து நிற்காமலும்...
உடனே கலைந்து போவதாயும்...!

மயானபூமியைப் போல்
எங்கள் கனவுகள்,
பயமுறுத்தும் அமைதியோடும்...
எலும்புக்கூடுகளின் ராஜ்ஜியங்களோடும்...!

பாழடைந்த வீட்டினைப் போல்
எங்கள் எதிர்காலம்,
எப்பொழுதும் பயமுறுத்திக்கொண்டும்...
எவராலும் கவனிக்கப்படாமலும்...!

மீஸான்கட்டைகளைப் போல்
எங்கள் சமூகம்,
அழிந்துகொண்டே இருப்பதாயும்...
அடையாளத்துக்காக வேண்டி மட்டுமாயும்...!

மணல்மேட்டினைப் போல்
எங்கள் தேசம்,
சரிந்துகொண்டே இருப்பதாயும்...
விலங்குகளின் எச்சங்களைச் சுமந்துகொண்டும்...!

ஊசலாடும் ஒட்டடைகளைப்போல்
எங்கள் உயிர்கள்,
எவராலும் வேண்டப்படாத குப்பையாயும்...
எப்பொழுதிலும் அறுந்துவிழக்கூடியதாயும்...!

எங்களது உயிர்கள்
எடுக்கப்படும் கணப்பொழுதுகளில்
என்ன செய்துகொண்டிருப்பீர் தோழரே..?
ஓர் அழகிய பாடலின்
ஆரம்ப வரிகளை
முணுமுணுத்துக் கொண்டிருப்பீரோ...?

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Thursday, August 2, 2007

வாழ்க்கையின் மௌன ஓவியம்...!












எதனாலும் நிற்காமலும்
எதுவாகவும் ஆகாமலும்
எப்படிப் போகிறது வாழ்க்கை...?

சடுதியாய்ச் சந்திப்புகள் - குருதிச்
சகதியாய் விபத்துகள்,
எவராலும் தடுக்க முடியாதவையாக
அன்றாடம் நிகழ்கின்றன.

விரும்பியபடியே வாழ்க்கையெனினும்,
வாழ்க்கையின் மௌன ஓவியத்தை
விரும்பிய நிறங்களைக் கொண்டு
வரைய முடிவதேயில்லை !

வாழ்க்கை போகிறது
அதனுடனே நானும்...
சிலவற்றைப் பெற்றுக் கொண்டும்...
நிறைய இழந்து கொண்டும்...

- எம்.ரிஷான் ஷெரீப் ,
மாவனல்லை,
இலங்கை.