Thursday, May 15, 2008

ஒரு தேவதையும் சில சாத்தான்களும்..!


எந்த ஆரூடங்களாலும்
ஊகிக்கவே முடியாத
திடுக்கிடும் துயரங்களுடனானவொரு
காலத்தை நீ கொண்டிருக்கிறாய் !

இதிகாசத்திலிருந்து நீ வாழ்ந்துவரும்
புராதனக் குடியிலிருப்பிலின்னும்
பூதங்களின் ஆட்சி தொடர்வதை - நீ
சொல்லிச் சொல்லியழுத வேளை,
எதைக் கொண்டும் அணைக்கமுடியாத
சினக் கனலொன்று என்னுள்
மூண்டு பொங்கிப் பிரவகித்திற்று !

உனது விரல்கள் வடிக்கும்
உக்கிர ஓவியங்களைப்
பார்த்து,ரசித்து - உன்னை
உச்சத்தில் வைத்திடக் காலம்
பலபேரைக் கொண்டிருக்கையில் ;

எந்தச் சத்தியங்கள்
சகதிக்குள் புதைந்தனவோ...
எந்த வீரப்பிரதாபங்கள்
வெட்டவெளியிலலைந்தனவோ...
எந்த சுபவேளை கீதங்கள்
ஒப்பாரிகளாக மாறினவோ...
எந்தப் பிசாசுகள் உன்னில்
விலங்கு பூட்டிச் சிரித்தனவோ...
அத்தனையும் இன்னுமேன்
உன் நினைவுக்குள் இடறவேண்டும் ?

உன் விழி துடைக்க - பிற
தேவ தூதர்களின் சிறகுகளிலிருந்து
ஒற்றை இறகாவது நீளும் ;
உன்னை உறங்கச் செய்யும்
மந்திர வித்தையொன்றைக்
காற்றும் ஒருநாள் ஏகும் !

நம்பு !
அன்றைய தினமதில்
பூதங்களும் அவற்றின் அடிமைகளும்
பேரதிர்ச்சியில் பார்த்துநிற்க
சவால்களனைத்தையும் விழுங்கி
உன் மேனி சிலிர்த்து
ஆதிகாலந்தொட்டு வரும்
அத்தனை காயங்களையும்
ஒரு கணத்தில் உதறுவாய் !

வீழும் வலியனைத்தும் படபடத்துச்
செத்துமடியும் - பிசாசுகளின்
எல்லை தாண்டிப் பறந்த உன்னை
நண்பர்களின் உலகம்
கைகோர்த்து வரவேற்கும்
அப்பிரகாச நாளில்
என்னை மறந்திடுவாயா சினேகிதி?

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Thursday, May 1, 2008

எனக்கே எனக்கானதாக மட்டும்..!


உடைந்த வானத்தின் கீழ்
நிலவு சலித்தனுப்பிய
வெளிச்சத்தினூடு,
உறுதியற்ற தேசத்தினொரு மூலையில்
உடையாத வெட்கத்தை
உறுதியான இறகுகளால் போர்த்தியபடி
முன் காலமொன்றில்
அழகிய வண்ணத்துப்பூச்சிகள் சூழ
தேவதையாக நான் நின்றிருந்தேன் !

வேட்டைக்காரனாக நீ வந்தாய் ;
என்னையும்,வெட்கத்தையும்
மூடியிருந்த சிறகதனைக்
கத்தரித்துக் காதில் சொன்னாய்-இனிக்
காலம் முழுதும்
உன் சிறகுகள் மட்டுமே
போதுமெனைச் சுமக்கவென
அழகிய வாக்குறுதிகள் தந்தாய் !

அன்றிலிருந்துதான்
உனது வலிமை மேலோங்கிய
வேட்டைக்கரங்கள்,
எனது சுவாசங்களையும்
சிறிதுசிறிதாகக் கொடுக்கத்தொடங்கின !

எனக்குப் பல்முளைத்த அன்றின் இரவில்
தனியாக மெல்ல முடியுமினியென்றேன்,
உனது அத்தனை அகோரங்களும்
ஒன்றாய்ச் சேர்ந்து
அன்றுதான் என் உதடுகளைத்
தைக்க ஆரம்பித்தாய் !

எழுதவேண்டுமென்ற பொழுதில்
பேனாமுனை ஒடித்துச் சிரித்தாய்,
வரைவதற்கான வண்ணங்களைக்
கலந்த விரல்களை
வளைத்துச் சிதைத்தாய்,
பாடலுக்கான எண்ணமெழும் முன்னமே
நானூமை என
சொல்லிச் சொல்லி ரசித்தாய் !

இனிக் காலங்கள்
எனக்கே எனக்கானதாக மட்டும் இருக்கட்டும் !

இந்த வெடிப்புற்று வரண்டு,
கதிர்களேதுமற்ற வயல்வெளியில்
நேற்றிலிருந்து புதிதாக முளைக்க
ஆரம்பித்திருக்கும் பற்களால்
என் தீய கனவுகளை மென்று விழுங்கியபடி,
உச்சரிப்புப் பிழைகளோ,சுருதி விலகலோ
சுட்டிக்காட்ட யாருமின்றி...

ஒரு பக்கம் எனது கவிதைகள்,
மறு பக்கம் எனது வண்ணங்கள்
எனத் துணையாய்க் கொண்டு
பாடிக்கொண்டிருக்கிறேன் ;

ஆனாலும்,
என்னை விதவையென்கிறீர்கள் நீங்கள் !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.