எனதான தனிமையை
இருட்டைப் போல உளவு பார்த்து
அடர் சருகுகள் பேய்களின் காலடியில்
மிதிபடும் ஓசையைக்
கனவுகள் தோறும் வழியவிட்டு
நெஞ்சு திடுக்கிட்டலறும்படி
அச்சமூட்ட முயலுமுனது
புலன்கள் முழுதும் பகை நிரம்பிக்
காய மறுத்திற்று
சாத்தான்களுலவும் வானின் மத்தியில்
முகில்களின் மறைப்புக்குக் காவிச்சென்றெனது
சிறகுகளகற்றிப் பறக்கவிடுகிறாய்
விசித்து விசித்தழும் மெல்லிய இதயத்தோடு
வீழ்ந்து நொறுங்குமெனது
இறுதிக் கணத்தில் தொங்கியபடி
கேட்கிறதுன் விகாரச் சிரிப்பு
பற்றுறுதியற்று
அழுந்தி வீழ்ந்த கண்ணாடி நேசத்தில்
பழங்கானல் விம்பங்களைக் கொடுங்காற்று
காலங்கள் தோறும் இரைத்திட
உனது வரையறைகளை
நீ விதித்த கட்டுப்பாடுகளை
விஷச்சர்ப்பமொன்று விழுங்கட்டும்
ஆதி தொட்டுக் காத்துவரும் வைரமாயவை
உருப்பெற்றுக் கக்கியபின் கொன்று
காவல்பாம்பாக நீயே மாறு
இலகுதானுனக்கு
கொன்றொழிப்பதும் காவல் காப்பதுவும்
காவலெனச் சொல்லிச் சொல்லிக் கொன்றொழிப்பதுவும்
-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.
நன்றி
# உன்னதம் செப்டம்பர், 2009 இதழ்
# திண்ணை இணைய இதழ்