Thursday, July 15, 2010

மான்குட்டியைக் கைவிட்ட பின்


கனவுகளின் பிறழ்வுகளுக்குள்
மான்குட்டிகளை ஓடவிட்டபடி
பெருநகரத்துத் தெருவழியே
மேய்ப்பாளன் நடந்தான்
அழகழகாய்ப் புள்ளிகளிட்ட மான்கள்
அமைதியாக
அவன் காட்டிய திசை நடந்தன
ஆஸ்திகளனைத்தையும் அவனிடம் கொடுத்து
ஓர் மான்குட்டி வாங்கினேன்
என்னிடமிருந்து துள்ளிப்பாய்ந்த மான்
எங்கோடிற்றென நினைவில்லை
மான்குட்டியும் ஆஸ்திகளும்
கனவுகளின் பிறழ்வுகளினிடையிருந்து
இன்னும் மீளவேயில்லை
நானும்

- எம்.ரிஷான் ஷெரீப்
இலங்கை


நன்றி
# அம்பலம் கலை இலக்கிய இதழ் - ஜனவரி, 2010
# சொல்வனம் இதழ் - 28
# உயிர்மை

Thursday, July 1, 2010

எனது 'வீழ்தலின் நிழல்' கவிதைத் தொகுப்பு வெளியீடு மற்றும் வானொலி அறிமுகம்

அன்பின் நண்பர்களுக்கு,

காலச்சுவடு பதிப்பகம் வெளியிடும் எனது 'வீழ்தலின் நிழல்' கவிதைத் தொகுப்பின் வெளியீட்டுவிழா எதிர்வரும் சனிக்கிழமை (ஜூலை 03, 2010) மாலை ஆறு மணிக்கு, இந்தியா, சென்னை, எழும்பூர், இக்சா மையத்தில் நிகழவிருக்கிறது.

எனது கவிதைத் தொகுப்பை கவிஞர் சுகிர்தராணி வெளியிட கவிஞர் உமா ஷக்தி பெற்றுக் கொள்கிறார். எனது தொகுப்புடன் சேர்த்து மொத்தம் எட்டு ஈழத்து நூல்கள் அந் நாளில் வெளியிடப்படவிருக்கின்றன.

இது சம்பந்தமாக காலச்சுவடு பதிப்பக உரிமையாளர் திரு.கண்ணன் சுந்தரம், அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கிய அறிமுகம் கீழே...



திரு.கண்ணன் சுந்தரம், கவிஞர் சுகிர்தராணி, கவிஞர் உமா ஷக்தி, நேர்காணல் அறிவிப்பாளர் திரு.கானா பிரபா மற்றும் எனது கவிதைகளோடு இங்கு தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

விழாவுக்கு உங்கள் வருகையையும் நல்லாசிகளையும் பெரிதும் எதிர்பார்க்கிறேன்.

என்றும் அன்புடன் உங்கள்,
எம்.ரிஷான் ஷெரீப்