Tuesday, November 18, 2014

அதைப் பற்றிச் சொல்வதற்கில்லை
கழுத்து நீண்ட வாத்துக்கள் பற்றிய உன் கதையாடலில்
சாவல் குருவிக்கு என்ன திரை
அதுவும் இருந்துவிட்டுப் போகட்டும்
அடித்த சாரலில்
வண்ணத்துப் பூச்சியின் நிறம் மட்டும் கரைந்தே போயிற்று
நல்லவேளை சருகுப் பூக்கள் அப்படியேதானே

பிறகென்ன
வற்றிய ஆழக் கடல்களின் நிலக் கரையில்
துருப்பிடித்துப் பாதி மணலில் மூழ்குண்ட
நங்கூரங்களின் கயிற்றோடு
உப்புக் கரித்துத் தனித்திருக்கின்றன சிதிலப் படகுகள்

அந்தி மாலையில் தூண்டிலிட்டமர்ந்து
வெகுநேரம் காத்திருக்கும் சிறுவன்
பாரம்பரிய விழுமியங்களைப் போர்த்தி
உணவு தயாரிக்கும் இளம்பெண்
நிலவொளியில் புயல் சரிக்க
போராடி அலையும் பாய்மரக் கப்பல்
அழிந்த மாளிகை
அசையாப் பிரேதம்

அது என் நிலம்தான்
உன் மொழி வரையும் ஓவியங்களில்
எல்லாமும் என்னவோர் அழகு

உண்மைதான்
மந்தையொன்றை அந்தியில்
நெடுந் தொலைவுக்கு ஓட்டிச் செல்லும்
இடையனொருவனை நான் கண்டிருக்கிறேன்
நீ சொல்வதைப் போல
காலத்தை மிதித்தபடிதான் அவன் நடந்துகொண்டிருந்தான்
நெடிதுயர்ந்த மலைகள்
உறைந்துபோன விலங்குகளைத்தான் தின்று வளர்கின்றன
ஆகவே மலைக் குகை வாசல்களில் அவன் அவைகளோடு
அச்சமின்றி ஓய்வெடுத்தான்

சொல்
மெய்யாகவே நீ கனவுதான் கண்டாயா

என்னைக் கேட்டால்
வாசப் பூஞ்சோலை
சுவனத்துப் பேரொளி
தழையத் தழையப் பட்டாடை
தாங்கப் பஞ்சுப் பாதணி
கால் நனைக்கக் கடல்
எல்லாவற்றிலும் நேர்த்தியும் மினுமினுப்பும்
தேவையெனில் அமைதியும்
தேர்ந்தெடுத்த மெல்லிசையும் என
எல்லாமும் இன்பமயம் என்பேன்

அத்தோடு
இன்னும் கூட இரவு
தினந்தோறும் கொஞ்சம் இருட்டை
எனக்காக விட்டுச் செல்கிறது கிணற்றுக்குள்
என்பதைச் சொல்வேன்
வேறென்ன கேட்கிறாய்

இலையுதிர் காலத்து மரத்தின் வலி
அதைப் பற்றிச் சொல்வதற்கில்லை

- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி
# தீராநதி இதழ், ஆகஸ்ட் 2014படிகள் - 50 ஆம் இதழ் சிறப்பு வெளியீடு, பதிவுகள், வல்லமை, நவீன விருட்சம், காற்றுவெளி

Wednesday, October 15, 2014

மலையுச்சிப் பூவின் தியானம்
கைக்குழந்தை உள்ளங்கையென மொட்டவிழ்கிறது
பறிக்கப்படாத கனிகள் வீழ்ந்தழியும் மலைத் தரைகள்
வனப்பு மிக்க காடுகளைச் சுமக்கின்றன தம்மில் அவை

அந்திப் பறவைகள்
கறுப்புத் திட்டுகளாகப் பறந்து மறையும்
மாலை நேரங்களில் வனங்கள் என்ன செய்யும்

உன் பாடலெனப் பொழிந்திடும் மழை பார்
ஒவ்வொரு துளிகளிலும் உறைந்திருக்கக் கூடும்
தாண்டிப் பறந்த பட்சி இறகுகளின் ரேகைகள்

நீ மிதந்திருக்கிறாய் ஒரு வெண்குதிரையின் மீது
யாரும் அகற்றிடா ஆதிச் சருகுகள் மூடி மறைத்திருக்கும்
தடித்த வேர்கள் பிடித்து வைத்திருக்கும்
கருங்கற் குகைகளிடை வழி
உனது பயணப் பாதையல்ல

நீ பறித்து வரச் சென்ற மலையுச்சிப் பூவின் தியானம்
கடவுளுக்கானது
காட்டின் விரூபங்களை மறைக்கும் இராப் பொழுதுகளில்
உதிக்கும்
மலையுச்சிப் பூவின் சோர்ந்திடாத் திமிர்

உனது இலக்குகளில்
பகலைக் கரைத்த ஈரம் சொட்ட அழுத சூரியன்
எங்கோ தொலைந்துபோகும் இத் தருணத்தில்
தாமதியாதே
வனத்தின் வேர்களில் உனது புரவிகள் சற்று ஓயட்டும்

- எம். ரிஷான் ஷெரீப்
நன்றி

# தீராநதி இதழ் - ஆகஸ்ட், 2014, படிகள் - பத்தாவது ஆண்டுச் சிறப்பிதழ் - ஆகஸ்ட் 2014, வல்லமை இதழ், காற்றுவெளி, பதிவுகள், வார்ப்பு

Monday, May 5, 2014

விலகல்


அடைமழை பெய்தோய்ந்த
நள்ளிரவுக்கு முன்னரான பொழுதின் வளி
குளிரில் ஒடுங்கிக் கண்ணாடியில் தன்னைப் பார்க்கும்
பனியை விரலிலேந்தி கடைசிப் பேரூந்திலிருந்து இறங்கினாய்

பகலை விடவும் இருளிடம் இருக்கின்றன
பல்லாயிரம் விழிகள்
அன்று ஒவ்வொரு விழியின் துளியுமிணைந்து
தெருவெங்கும் குட்டைகளாய்த் தேங்கியிருந்ததை
தாண்டித் தாண்டி நீ வந்த காட்சி
இருளின் கறுப்புத் திரைக்குள் மறைந்தது

பட்ட மரத்தின் அடிப்பாகத்தில்
புற்றெழுப்பும் கரையான்களைக்
கொத்த வரும் சாம்பல்குருவிகளை
பொறி வைத்துப் பிடிக்க ஆவலெழும்
வேட்டைக் கதைகளை நீ கொண்டிருந்தாய்

நாம் கதைத்தபடியே நடந்து கடந்த
எனது கிராமத்தின் ஒற்றையடிப் பாதை
வழித்தடங்களிலெல்லாம் அக் கதைகள் சிந்தின
விடிகாலையில்
அக் கதைகளைப் பொறுக்கித் தின்ற சாம்பல்குருவிகள்
தொலைதூர தேசமேகிப் பின்னர் வரவேயில்லை
உன்னைப் போலவே

- எம். ரிஷான் ஷெரீப் 

# நன்றி - அம்ருதா இதழ், ஜனவரி 2014 , எதுவரை இதழ், வல்லமை இதழ், காற்றுவெளி இதழ், பதிவுகள் இதழ், இன்மை இலக்கிய இதழ்

Tuesday, April 1, 2014

நுழைதல்


எந்த நட்சத்திரமும் உதிர்ந்துவிழா பனிபடர்ந்த இரவின் காலம்
எனது கைவிரல்களை ஒற்றியொற்றி
உன் நேசத்தைச் சொல்லிற்று

பசியினைத் தூண்டும் சோள வாசம்
காற்றெங்கிலும் பரவும்
அத்திப்பூ மலையடிவாரக் கிராமங்களினூடான பயணத்தை
முடித்து வந்திருந்தாய்
குடிநீர் தேடி அடுக்கடுக்காய்ப் பானைகள் சுமந்து நடக்கும்
பெண்களின் சித்திரங்களை
புழுதி பறக்கும் தெருவெங்கும் தாண்டி வந்திருந்தாய்
வெயிலெரித்த சருமத்தின் துயரம்
உன் விழிகளுக்குள் ஒளிந்திருக்கும்
அந் நெய்தல் நிலத்தின் அழகை என்றும் மறந்திடச் செய்யாது

நகரும் தீவின் ஓசை
நீ நடந்த திசையெங்கிலும்
பாடலாகப் பொழிந்திடக் கூடும்
அனற்சூரியனை எதிர்க்கத் தொப்பிகள் விற்பவன்
வாங்க மறுத்து வந்த உன்னை நெடுநாளைக்கு நினைத்திருப்பான்

உனைத் தீண்டி நகர்ந்திருந்ததொரு விஷத் தேள்
உச்சியிலிருந்து சருக்கச் செய்தது அதன் நச்சு
எல்லாம் கடந்துவிட்டன
நேற்றிருந்த மேகத்தைப் போல
இக் கணத்து நதி நீர் போல

உனது பயணங்கள் முடிவற்றன
எல்லையற்று நீளும் உனது பாதைகள் வலியன
ஏமாற்றங்களில் தடுக்கி விழுந்து
அனுபவங்கள் பல ஒளிந்திருந்த நெஞ்சுனது
பாளங்களாய்க் கனன்றெரிந்து
உன் வாழ்வின் கதைகள் பேசிற்று
உள்ளிருந்த எனக்கான உன் நேசம் சுகமாயும் வலியாயும் மிதந்தூறிட
தெப்பமென நனைந்தேன்

நரகப் பெருநெருப்புக்கஞ்சி
எவருக்கெனவோ மூடிக் காத்திருந்த பொக்கிஷ நந்தவனமொன்று
நீ வரத் திறந்தது
அன்று
உனக்கென உதிர்ந்ததொரு மந்திரப் பூ
உனக்கெனத் தெளிந்ததொரு வாசனைப் பொய்கை
உனக்கென மட்டும் துளிர்விடத் தொடங்கியிருக்கிறது ஒரு தளிர்

எல்லாவற்றையும் குறித்துத் தெரிந்திருக்கிறாய்
ஆனாலும் சகா
நீ உணர்வதற்கும் நம்புவதற்கும்
அப்பாலுள்ளது எனதுலகம்

- எம். ரிஷான் ஷெரீப் 
# நன்றி - அம்ருதா இதழ், ஜனவரி 2014எதுவரை இதழ்வல்லமை இதழ்பதிவுகள்Painting - Abhijith