Monday, November 23, 2009

அவகாசம்


சற்று இடமும், நேரமும் கொடு
எனைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி
இளைப்பாறிக் கொள்கிறேன்

ஒரு பெரும் புதைகுழியிலிருந்து
மீண்டு வந்திருக்கிறேன்
சூழ்ந்தேயிருந்தன
நச்சில் தோய்ந்த நாக்குகளோடு
சீறும் பாம்புகள் பல

கொடும்வெப்பம் உமிழும்
விஷக் காற்றினை மட்டும் சுவாசித்தபடி
மூர்ச்சையுற்றுக் கிடந்ததென் வெளியங்கு
வண்ணத்துப் பூச்சிகள் தொட்டுச் சென்றன
அனல் கக்கும் தணல் கற்றைக்குள்
ஒரு பூப்போல இருந்தேனாம்
சிறகுகள் கருகி அவையும்
செத்துதிரும் முன் இறுதியாகச் சொல்லின

அரசகுமாரனாகிய அவனையேதான்
தன்னலவாதியென்றும் துரோகியென்றும்
சனியனென்றும் சாத்தானென்றும்
பிடாரனென்றும்
பேய் பிசாசுகளின் தலைவனென்றும்
உண்மைகளை உரக்கச் சொல்வேன்
மீளவும் கண்களைக் கட்டிக்
கடத்திப் போகும் வரையில்

அதுவரையில்
உன் கையில் ஆயுதம் ஒதுக்கி
பார்வையில் குரூரம் தவிர்த்து
சற்று இடமும் நேரமும் கொடு
எனைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி
இளைப்பாறிக் கொள்கிறேன்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# உன்னதம் செப்டம்பர், 2009 இதழ்
# உயிர்மை
# திண்ணை





Sunday, November 15, 2009

மெல்லிசையழிந்த காலம்


உனக்கும் எனக்குமென்றிருந்த
ஒரேயொரு வீட்டின் அறைகளில்
அன்பைப் பூசி அழகுபடுத்தினோம்
பளிங்கென மிளிர்ந்த குவளைகளில்
பாசம் தேக்கி மெல்லப் பருகினோம்
மெல்லிசையைப் பாடல்களைத்
திக்கெட்டும் அனுப்பி
கூடிப் பேசிக் களித்திருந்தோம்
இருவரும் உறங்கிடும் மௌனத்துக்குள்
புது மொழியொன்றினைக் கற்றறிந்தோம்
சிரித்தோம் ஆனந்தித்தோம்
வாழ்ந்தோம்

கருணையின் கற்கள் தேடிக்
கட்டிய வீட்டுக்குள்
குரூப இதயங்கொண்டவர்கள் நுழைய
ஏன் அவ்வேளை அனுமதித்தோம்
பளிங்குக் குவளைகளில்
நிறைந்திருந்த பாசம் கொட்டி
சாக் கொணரும் விஷத்தினை
அவை வந்து நிரப்பிட ஏன் இடங்கொடுத்தோம்
இருவருக்கிடையிலும் பெருந்திரை பொருத்தி
உன் பற்றி என்னிலும்
என் பற்றி உன்னிலுமாக
நம் செவி வழி ஊதப்பட்ட வசவுகளை நெருக்கி
ஏன் அருகிலமர்த்திக் கொண்டோம்
பழகிய நேச மொழிகளை மறந்த மனங்களிரண்டும்
ஆழுறக்கம் தழுவட்டுமென
ஏன் அப்படியே விட்டுவைத்தோம்
அழுதோம் துயருற்றோம் - இன்றோ
இறவாது தினம் இறக்கிறோம்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி

# உயிர் எழுத்து இலக்கிய இதழ் - அக்டோபர், 2009
# உயிர்மை
# திண்ணை


Sunday, November 1, 2009

நினைவின் கணங்கள்


பெரும்பெரும் வலிநிறை
கணங்களுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கும்
நகர்ந்து வந்த கணங்கள்
சில பொழுதுகளில் அழகானவைதான்
புன்னகை தருபவைதான்

ஒரு தனித்த அந்தி
எல்லாக் கணங்களையும்
விரட்டிக்கொண்டு போய்
பசுமைப் பிராந்தியமொன்றில்
மேயவிடுகிறது
நீ வருகிறாய்

மேய்ச்சல் நிலத்திலிருந்த
கணங்களனைத்தையும் உன்னிரு
உள்ளங்கைகளிலள்ளி உயரத்தூக்கி
கீழே சிதறட்டுமென விடுகிறாய்
எல்லாம் பள்ளமென ஓடி
நினைவுகளுக்குள் புதைகிறது

மீளவும்
நினைவின் கணங்கள்
மலையிறங்கக் காத்திருக்கின்றன

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# உயிர்மை
# நவீன விருட்சம்
# திண்ணை