Monday, February 18, 2008

தடங்களழியும் பொழுதிலுன் நேசம் ...!


வெப்பக்கணப்பொழுதின்
ஆவியேற்றப்பட்ட மேகப்பொதியை
மண்டைக்குள் பிதுக்கியடைத்ததாய்
பேய்க்கனம் கனக்கும்
இருவிழியும் மிகக்கலங்கி
தலைக்குள் வலியெடுக்கும்
மரணத்தின் எல்லையில்
ஆரம்பிக்கும் பாடலெனது !

எந்தப்பொழுதொன்றில்
என் பெயர் சொல்லியழைக்கின்றாய் ?
ஒரு கோடிக்கீற்றுக்களும்
எனக்கு மட்டுமேயான
அந்தகாரத்திலொரு பகுதிக்கேனும்
ஒளியினை வழங்கமுடியாப்பட்சத்தில்
எந்த நம்பிக்கையிலெனை
வழி தொடருகிறாய்...?

ஒப்பாரிக்கவி மட்டுமே பாடும்
ஒரு குயிலின் ராகத்தை
எந்தக்காற்றின் தேசத்திற்குள்
சிறையடைக்கப் பார்க்கின்றாய்?
அல்லது
எந்தக்காலத்தினறைகளுக்குள்
ஒளித்து வைக்கப்போகின்றாய்...?

உலகத்திலெனதிருப்பு
இந்நாள் வரை மட்டும்தானென
முடிவானதன் பிற்பாடுமதனை
மாற்றமுடியுமெனில் மட்டுமிங்குனக்கு
இருதுளிக் கண்ணீர் விடலாம் !

எனினும்,
கரையானாய்க் குடிபுகுந்து
மூளைக்குள் அரித்தெடுக்கும்
வலியுணர்ந்தவன்(ள்) நீயல்ல !


-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Monday, February 11, 2008

நீ நிழலாய்ப் படரும் வெளிச்சம் !


விடிகாலைத் தூக்கம்,
மழைநேரத் தேனீர்,
பிடித்த செடியின் புதுமொட்டு,
புதுப்புத்தகக் காகிதவாசனை,
இமைதடவும் மயிலிறகு
மேலுரசிடச் சிலிர்க்கும்
ரோமமெனச் சுகமாய்
எனை ஏதும் செய்யவிடாமல்
நீ வந்து நிரப்புகிறாய்
எனதான பொழுதுகளை !

மூங்கில்களுரசிடக்
குழலிசை கேட்குமோ...?
உன் மொழியில்
தினம்தினமொரு இசை
எனைக்கேட்கச் செய்கிறாய் !

புருவம் தடவப் பூஞ்சிரிப்பு
தெற்றுப் பல்காட்டி மின்னும் ;
சிவந்த அழகுக் கன்னமென்
அழுத்தமான முத்தத்தில்
நிறம் மாறி நீலம்பூக்கும் !

விழிகளிரண்டும் மின்மினிப்பூச்சிகளென
விழித்திருந்து அலைபாய
என் தூக்கம் கரைத்துக்குடித்து
நீ புதிதாய் தினம் வளர்வாய் ;
உன்னிமையில் துயில் வளர்க்க
என் பொறுமை சோதிப்பாய் !

எனைப்பெற்றவளின் சுவாசங்களையும்
அத்தனை பதற்றங்களையும்
நானறியச் செய்தாயென்
பிரசவத்தின் இறுதிக்கணங்களில்
நீ வந்து அழுதாய் ;
நான் வலி நிறுத்திப் புன்னகைக்க...!

-எம். ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Friday, February 1, 2008

ஏழு ஜென்ம வதைப்படுத்தி...


உன் மௌனத்தில் வலியுணர்த்தி
எதுவும் பேசாமல்
நின்று நின்று பார்த்தபடியே
மெல்ல நகர்கிறாய் நீ !

காயப்பட்டவுன்னிதயத்துக்கு
ஆறுதலாகவொரு துளிக்கண்ணீரோ
ஒரு கண அரவணைப்போ
தரவியலாத் துயரத்தோடு நான் !

எந்த நம்பிக்கையிலுன் சிறு ஜீவனை
எனதூர்தியின்
நான்கு சக்கரநிழலுக்குள்
நீ வந்து உறங்கவைத்தாய் ?

நசுங்கிச் சிதைந்தவுன் வாரிசின்
சடலத்தைக் காணநேர்ந்த பிற்பாடும்
எந்தவொரு அனல்பார்வையோ,
சாபமிடலோ,வைராக்கியமோ இன்றி
ஒதுங்கிப் பார்த்திருக்கிறாய்
ஆறறிவாய் நீ !

கணங்களைச் சப்பிவிழுங்கும்
பணியின் அவசரநிமித்தம்
ஒரு நிமிடமொதுக்கி
வண்டியின் கீழ்ப் பார்க்கமறந்து
ஏழேழு ஜென்மத்துக்குமான
வேதனையில் சிக்கித் தவிக்கும்
ஐந்தறிவாய் நான் !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.