Wednesday, September 30, 2009

என்னை ஆளும் விலங்குகள்

எல்லாமாயும் எனக்குள்ளே
ஒளிந்திருக்கின்றன பல விலங்குகள்
பூசி மெழுகும் சொற்களெதுவும்
அவையிடத்திலில்லை
சில மீன்களைப் போல அமைதியாயும்
இன்னும் சில தேவாங்குகளைப் போல சோம்பலாயும்
சில நேரங்களில் மட்டும்
எறும்பு, தேனி, கரையான்களைப் போல
சுறுசுறுப்பாகுபவையுமுண்டு

காலத்தைப் பயனுள்ளதாக
நகர்த்திப் போவதாகப் பெருமை பேசி
திரும்பிப் பார்க்கையில்
தடங்களேதுமற்ற பொழுதில் பறவையாயும்
கோபமுறுகையில்
சீறும் சர்ப்பத்தைக் கொண்டு சிலதும்
நன்றி காட்டுகையில் நாயின் வாலாட்டுதலோடும்
நன்றி மறப்பதில்
பூனையின் மெதுநடைத் திருட்டு போலவும்
குவிந்த பல குணவியல்புகளோடு உலாவருகையில்
புன்னகைப்பது மட்டும்
மனிதத்தை ஒத்திருக்கிறது


- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# வார்த்தை - ஆகஸ்ட், 2009 இதழ்
# நவீன விருட்சம் - பெப்ரவரி,2010 இதழ்கள் 85/86ன் தொகுப்பு
# உயிர்மை

Sunday, September 13, 2009

சிதைந்த நாட்களோடு ஓய்தல்


எல்லாமாயும் ஓய்ந்துபோயிற்று
காலத்தின் நோய்ச் சக்கரம்

கரும்புகைகளில் சிக்குண்ட
வாழ்வினை மீட்டாயிற்று
சாத்தான் கரும்புள்ளிகளிட்டுக் கனத்த
இதயத்தோடு சேர்த்து வாழ்வினையும் கழுவி
தூய்மைப்படுத்தியுமாயிற்று

நீ அதிரவிட்ட
குரூர வார்த்தைகளின் பெருமதிர்வு
சுழன்று சுழன்று பரப்பெங்கும் மேவி
இருந்த ஆரோக்கியத்தையெல்லாம்
அள்ளிப்பறந்தது ஓர்பொழுது

நச்சுப்பரவிய தோல்மட்டும் இப்பொழுதும்
கருந்தழும்புகளைத் தாங்கியிருக்கிறது

வேறெதுவும் வேண்டேன்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி 
# நடுகை - கவிதைகளுக்கான இதழ் - ஆகஸ்ட் 2009
# ஓவியம் - நஜி அல் அலி (கொலை செய்யப்பட முன்னரான இறுதி ஓவியம்)
# திண்ணை இணைய இதழ்

Tuesday, September 1, 2009

கோடை


பெரு வனத்தை எரிக்குமொரு
ஊழித் தீயின் கனல் நான்
எரித்து எரித்துக் கருக்கி
எரியாக் கணங்களில் உள்ளுக்குள்
புகைந்து வெளிக் கசிந்து இருளாக்கி
பின்னும் ஆகாயத்தையே எரிக்கப்போல
அதியுயர் விருட்சங்களின்
நுனி பற்றியெரித்து
இன்னும் காட்டைக் கூடெனக் கொண்ட
எல்லா உயிரையும் பொசுக்கும்
வல்லமை பெற்ற கட்டற்ற நெருப்பின்
வலுஞ்சுடர்கள் நான்
மண்ணின் அடியாழத்துக்குள்
முகம் புதைத்துக் கொண்டோரே
நீர் மட்டும்
எல்லா அனல்களினின்றும்
தப்பித்து விட்டீரா

- எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி - வார்த்தை - ஆகஸ்ட், 2009 இதழ்