மான்கள் துள்ளும் அவ் வனத்தில்
செங்குருவிக்கென இருந்ததோர் மரம்
தனித்த மீன்கொத்தியொன்று
அமரும் கிளைக்கு
நேரெதிரே இருக்கும் பெருந்தடாகம்
செங்குருவிக்குப் பிடித்தமானது
அல்லிப்பூக்களுக்குச் சிறகு முளைத்து
பறந்து திளைக்கும் கனவுகளையெல்லாம்
சொட்டு நீருஞ்சி வரும் கணங்களில்
குளத்தில் விட்டு வரும் செங்குருவி
கிளையில் அமர்ந்திருக்கும்
தன் ஒற்றைக் கண்ணால் பார்க்கும் உதிர்ந்த மயிலிறகு
சொன்ன கதைகளையெல்லாம்
கேட்டுக் கேட்டுச் சலித்திருக்கும் செங்குருவி
வானவில் விம்பம் காட்டும்
தெளிந்த தடாகத்தைத் தன் பச்சை விழிகளால்
அருந்தித் திளைத்திருக்கும்
அச் செங்குருவிக்கின்று
எந்தத் தும்பி இரையோ
இல்லை எக் கிளைக் கனியோ
நடுநிசியொன்றில் அகாலமாய்
செங்குருவியின் பாடலொலிக்கக் கேட்பின்
அதன் ப்ரியத்துக்குரிய
மரத்திலேறிய சர்ப்பம் குறித்த
செய்தியை அறிந்துகொள்ளும்
அல்லிப் பூக்களும்
குருவிச் சிறகு தொட்டுத் தனித்துப் போன
மேகங்களும்
பின்னர் துயரத்தில் கதறும்
- எம். ரிஷான் ஷெரீப்
07012012
07012012
நன்றி
# அம்ருதா மாத இதழ், யாத்ரா கவிதைகளுக்கான இதழ், உயிர்மை, திண்ணை, பதிவுகள்