Monday, June 15, 2009

பின்னங்கால் வடு


உதிர்ந்த சருகு போலாகிவிட்ட
அப்பாவுக்கு முந்தியவர்கள் 
எப்பொழுதோ நட்டுச் சென்ற
முற்றத்து மாமரம்
அகன்ற நிழலைப் பரப்பி
மாம்பிஞ்சுகளை
பூக்களைப் பழங்களை வீழ்த்தும்

தண்டின் தடித்த பரப்பிலோர் நாள்
என் பெயர் செதுக்கினார் அப்பா
தடவிப்பார்க்கிறேன்
கசிந்து காய்ந்த தழும்பின்
நெருடலும் அப்பாவுமாக
விரல்களில் உறைகிறது நினைவுகள்

இறுதியாக அவர் மடியிலமர்த்திச்
சொல்லித்தந்திட்ட வேளையில்
விரிந்திருந்த அரிச்சுவடியின்
எழுத்துகள் ஒவ்வொன்றிலும்
நகர்ந்த என் பிஞ்சுச் சுட்டுவிரலின் அழுத்தத்தில்
நகக்கண்ணில் வெள்ளை பூத்தது
எழுத்துக்கள் குறித்துநின்ற
விலங்குகளுக்கும் கூட
உயிரிருந்திருக்கும் அப்பொழுது

வீட்டின் கொல்லையில்
அகன்ற பெருங்கூட்டுக்குள்
அழகிய பூமைனா வளர்ந்தது
விழி சூழ்ந்த மஞ்சள் கீற்று
மென்சதை மூடித்திறக்கும் கருமணிகள் உருள
நாற்சூழலுக்கும் கேட்கும் படி
தன் சொண்டுகளிலிருந்து
எப்பொழுதுமேதேனும்
வார்த்தைகளை வழியவிட்டுக் கொண்டிருக்கும்
அதுதான் முதலில் அலறியது
கப்பம் கேட்டு
ஆயுதங்கள் நுழையக் கண்டு

பீதியில் நடுங்கிப்
பதைபதைத்து நாங்கள்
ஒளிந்திருந்த தளத்துள்
பலத்த அரவங்களோடு
அப் பேய்கள் நுழைந்திற்று
ஏதும் சொல்ல வாயெழாக் கணம்
கோரமாயிருந்தவற்றின் அகலத்திறந்த
வாயிலிருந்து கடுஞ்சொற்களும்
துப்பாக்கிகளில் சன்னங்களும் உதிரக்கண்டு
மேலுமச்சத்தில் விதிர்விதித்து
மூர்ச்சையுற்றுப் போனேன்

விழித்துப் பார்க்கையில்
பிணமாகியிருந்தார் அப்பா
ஊனமாகியிருந்தேன் நான்
அம்மாவும் அக்காவும்
எங்கெனத் தெரியவில்லை
இன்றுவரை

குறி பிசகிய
துப்பாக்கி ரவை விட்டுச் சென்ற
ஒற்றைக்காலின் சாம்பல் வடு
அப்பா,அம்மா,அக்கா,சுற்றம் குறித்த நினைவுகளை
இனி வரும் நாட்களிலும்
ஏந்தி வரக்கூடும்

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி - புகலி
                மனிதம் - ஏப்ரல் இதழ்

Monday, June 1, 2009

விருட்ச துரோகம்

தென்றல் சாட்சியாக
பிறை நிலவும் தாரகைகளும் சாட்சியாக
அல்லிக்குளத்து நீர்ப்பூக்கள் சாட்சியாக
விருட்சக் கூட்டுப் பட்சிகளும் சாட்சியாக
ராக்குருவியின் மெல்லிசையொன்றோடு
இருள் படர்ந்த நடுநிசிப்பொழுதொன்றில்
அடர்துயிலில் நிலத்தில்
ஒன்றிப்படர்ந்திருந்த பூங்கொடியினைத்
தன் மேல் போட்டுக்கொண்டது
வனத்தின் பெருவிருட்சமொன்று

புது இடத்தில் துவண்ட கொடியின்
மனவலியகற்றி
நேசம் சொல்லிச் சொல்லி
ஆறுதல்படுத்திற்று மரம்

கொடியின் பேரெழில் பூக்கள்
வண்ணத்துப்பூச்சிகளுக்கும் வண்டுகளுக்கும்
தேன்சிட்டுகளுக்கும் எட்டாமல்
மரத்தின் இலைகள்
முக்காடாகிப்போயின
கொடி சூழலுக்கிறைக்கும்
சுத்தக்காற்றும் மேல்நோக்கிப் பறந்து
வீணாகியே போயிட
எதற்கும் பயனற்றுப்போன
கொடியின் மலர்கள் வீழ்ந்து
வேரின் மண்ணுக்கு உரமாகின

வசந்தங்கள் மிகைத்த காலமொன்றில்
சூழவும் மரத்தின் நிழலில்
அழகழகான பூக்கள் கொண்ட
வேற்றுக்கொடிகள் சில
வேர்விடத் தொடங்குகையில்
தூக்கிவளர்த்த கொடியை சிறிதகற்றி
மரம் அனைத்தையும்
வரவேற்றுப் பாடியது

ஓர் துர்நாளில்
தன்னை நம்பிப் படர்ந்திருந்த
பழங் கொடியுதிர்த்தகன்றது துரோகித்த மரம்
அந்தோ
விருட்சத்தை மட்டுமே
நம்பிச் சிதைந்த கொடி
நீரற்றுக் கிளையற்றுப்
படர ஒரு துரும்பற்றுத் திரும்பவும்
மண்ணிலே வீழ்ந்தழிந்தது

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி - வடக்குவாசல் - ஏப்ரல், 2009

                 திண்ணை