Wednesday, January 20, 2010

நீ விட்டுச் சென்ற மழை




எனது மௌனத்தின் பின்புறத்தில்
ஒளிந்திருந்தன
உனது சலனங்கள் குறித்து எழுதப்பட்ட
கதையொன்றின் மிச்சங்கள்

அதனூடு
இருப்பின் மகிழ்வுகளை எங்கோ
தொலைதூரத்துக்கு ஏகிவிட்டு
தீராப்பளுவாய் வந்தமர்ந்திருக்கிறது
தனிமை

செடி
பூக்களை உதிர்த்து
மழையைச் சூடிக்கொள்கிறது
வழமைபோலவே
மழைக்கு நனைந்த வீட்டை
வெயிலுலர்த்திப் போகிறது
வீழ்ந்த சாரல் போல
நிரம்பி உருண்டையாகி
உடைந்துவிழுகிறது
ஆற்றுப்படுத்தப்படாத
ஒரு விழிநீர்த் துளி

எல்லாமறிந்தும்
ஏதுமறியாய் நீ

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# உயிர் எழுத்து இலக்கிய இதழ் - அக்டோபர், 2009
# நவீன விருட்சம்
# திண்ணை






Monday, January 11, 2010

ஈழம்


ஒவ்வொரு துகளும்
செஞ்சாயம் பூசிக்கொள்ளக்
கடுங்குருதி நில மணலில் ஊர்ந்துறைகிறது

இடையறாப் பேரதிர்வு
நிசப்தங்கள் விழுங்கிடப்
பேச்சற்று மூச்சற்று
நாவுகள் அடங்குகையில்
விழித்தெழாப்பாடலொன்றைக்
கண்டங்கள் தோறும் இசைத்தபடி
அநீதங்கள் நிறைந்த
வாழ்வின் கொடிபிடித்துப்
பேய்கள் உலாவருகின்றன

இருக்கட்டும்
புத்தர் உறங்கும் விகாரைக்கு நீ
வெண்ணலறிப் பூக்களொடி

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை



நன்றி
# உன்னதம் இதழ் - டிசம்பர்,2009



Friday, January 1, 2010

குழந்தைகள்... கோப்பைகள்...

(உரையாடல் கவிதைப் போட்டிக்கான கவிதை)

அறைகள் தோறும்
தரை முழுதும்
இரைந்துகிடந்தன கோப்பைகள்
ஊர்வன ஜந்தொன்றைப் போல
வயிற்று மேட்டினால்
ஊர்ந்துவந்த குழந்தை
முதலெடுத்த கோப்பையினை
வாயிலிட்டு நக்கிப் பின்னர்
பிடிக்காத பாண்டமெனத் தூக்கியெறிந்தது
கண்ணாடிச் சன்னலில் பட்டுச்
சிதறியன இரண்டும்
குழந்தைக் காப்பாளி வந்தாள்
சபிக்கப்பட்ட அசுத்த வார்த்தைகளை
எஞ்சிய கோப்பைகளில் நிறைத்துக்
குழந்தை முன் நீட்ட
புது மொழியொன்றினைக் கற்றுக்கொண்டது
காப்பரணில் விடப்பட்ட தூய குழந்தை

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை