Wednesday, September 13, 2017

மழைப் பயணி
ஆங்காங்கே தேங்கியிருக்கும் சகதிகளோடு
மழை நனைத்த ஒற்றையடிப் பாதை
ஈரமாகவே இருக்கிறது இன்னும்

ஊதா நிறப் பூக்களைக் கொண்ட
தெருவோர மரங்கள்
கிளைகளிலிருந்து காற்று உதிர்க்கும் துளிகளினூடு
நீரில் தலைகீழாக மிதக்கின்றன

இருண்ட மேக இடைவெளிகளிலிருந்து வந்து
தரையிலிறங்கியதும்
சந்திக்க நேரும் மனிதர்களுக்கேற்ப
மழையின் பெயர் மாறிவிடுகிறது
ஆலங்கட்டி, தண்ணீர், ஈரம், சேறு, சகதியென

மழைக்குப் பயந்தவர்கள்
அடைத்து மூடிய ரயில் யன்னல் வழியே
இறுதியாகக் காண நேர்ந்த
பச்சை வயல்வெளியினூடு
மழையில் சைக்கிள் மிதித்த பயணி
இந் நேரம் தனது இலக்கை அடைந்திருக்கக் கூடும்


- எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com
நன்றி - அம்ருதா இதழ், வல்லமை, பதிவுகள், தமிழ் எழுத்தாளர்கள் இணையத்தளம், வார்ப்பு

Wednesday, August 9, 2017

கோடைக்கு இரை ஈரம் - எம்.ரிஷான் ஷெரீப்யானை எலும்புகளில் அமரும் மீன்கொத்திகளும்
புறக்கணித்துவிட்ட
இலையுதிர்த்த விருட்சங்களில்
பௌர்ணமி நிலவு
கோடையை வாசித்தபடி வானில் நகரும்


வனத்தில்
புள்ளி மான்கள் நீரருந்திய
குட்டைகள் வரண்டு விட்டன


அகோரச் சூரியன் தினமும்
தனதாயிரம் உஷ்ணக் கரங்களால் தடவும்
பசிய புற்கள் படர்ந்திருந்த நிலம்
தன் மென்பரப்பையிழந்து
வெடிக்கத் தொடங்கி விட்டது


சாம்பல் குருவிகள் ஏழு
இரை தேடும் தம் ஒற்றைத் திட்டத்தோடு
தினந்தோறும் காலையில்
முற்றத்திலிறங்கும்
காட்டு மலைச் சரிவின் பலகை வீடுகள்
உஷ்ணப் பிராந்தியக் கதைகளைச் சுமந்த
காற்றோடு வரும் பூ இலைச் சருகுகளைப் போர்த்தி
தம்மை மரமென அலங்கரித்துக் கொள்கின்றன


எஞ்சியிருக்கும் ஓரோர் பட்சிகளும்
தமக்கொரு மரப் பொந்து வேண்டுமென
கேட்டுக் கொள்ளும் பார்வைகளை
சேமித்து வைத்தவாறு
வட்டமிட்டபடியே இருக்கின்றன
கருநிறப் பின்னணியில் வெண்ணிற வளையமிட்ட
மரங்கொத்திப் பறவையின் கண்கள்


கொக்குகளும் நாரைகளும்
தம் ஒற்றைக் கால் தவத்தோடு மறந்து கைவிட்ட
தண்ணீர்க் குளங்களின்
ஈர மணற்தரையைத் தொடுகின்றன
ஆழமற்ற நீரில் பிரதிபலிக்கும்
தாகித்த மேக விம்பங்கள்


அவ்வாறாக
கோடைக்கு இரை
ஈரமென ஆயிற்று

- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி - அம்ருதா இதழ், வல்லமை, பதிவுகள், தமிழ் எழுத்தாளர்கள் இணையத்தளம், வார்ப்பு

Monday, May 1, 2017

தென்னைகளில் கள்ளெடுப்பவள்


பக்கவாதப் புருஷனுக்கென முதலில்
வீட்டுத் தென்னையில் கள்ளெடுத்தவளின்
தோப்பு மரங்கள்
அத் தடவை காய்த்துக் குலுங்கியது கண்டு
தொடக்கத்தில் ஊர் முழுவதும்
வியப்பாகக் கிசுகிசுத்துக் கொண்டார்கள்
பெண்ணேறும் தென்னைகள்
அதிகமாகக் காய்க்கிறதென


விடியலிலும், இரவிலுமென
எக் காலத்திலும் மரமேறுபவள்
எல்லாத் தென்னைகளினதும் உச்சிகளைத் தொடுத்து
நீண்ட கயிற்றினால் முடிச்சிட்டுக் கட்டினாள்


ஓரோர் மரத்துக்கும்
கயிற்றின் வழியே நடந்து சென்று
மண்பானைகளைப் பொருத்தியும், எடுத்தும் வரும்
கள்ளெடுக்கும் செம்பருத்தி
தென்னை ஓலைகளினூடே தொலைவில்
கடல் மின்னுவதை
எப்போதும் பார்த்திருப்பாள்


தென்னந் தோட்டங்களை வைத்திருப்பவர்கள்
அவளைக் காண வரும் பின் மதியங்களில்
தம் தோப்புக்களைச் செழிக்கச் செய்ய வேண்டுமென்ற
அவர்களது வேண்டுகோள்களோடு பணத்தையும் வாங்கி
பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வாள்


ஒரு தொகை பணம் சேர்த்த பின்
கடலின் அப்புறம் தெரியும் தீவுத் தென்னைக்கு
கயிறெரிந்து முடிச்சிட்டு
கணவனோடு தப்பித்துச் செல்லும் வீரியம்
அவள் கண்களில் மின்னும்
அப்போதெல்லாம்

- எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி - காலச்சுவடு இதழ்-207, தமிழ் எழுத்தாளர்கள் இதழ், ஊடறு, வல்லமை, வார்ப்பு