Thursday, February 20, 2014

நீந்தும் மீன்களை வரைபவள்


அக் காலத்தில் பன்புற்களை நேர்த்தியாக வரிசைப்படுத்தி
அம்மா நெய்யும் பாய்கள்
அழகுணர்ச்சியை விதந்துரைக்கும்
பலரும் கேட்டுவந்து வாங்கிச் செல்வரென
சிறுமியின் தாய் பகன்றதும்
சிலிர்த்துக் கொள்ளும் மூதாட்டி
காடுகாடாய் நதிக்கரை தேடியலைந்து
கோரைப் புற்களைச் சுமந்து வந்த
அந்தி நேர நினைவுகளை
பேத்தியிடம் பகிர்கிறாள்

'முக்காடிட்ட பெண்கள் வரைதல் தகா'
மதகுருவின் உரை சுவரெங்கும் எதிரொலிக்கிறது
பித்தேறிய ஆண்கள் கூட்டம்
நளினமான கரங்களை அடக்கிவைத்திடும்
பாரம்பரிய எண்ணச் சங்கிலிகளோடு
புனித இல்லத்தின் வாயில் தாண்டுகிறது

உயிர் ஜீவராசிகளை
வர்ணச் சித்திரங்களாக வரைவோர்
நரகத்தில் அவற்றுக்கு உயிர்கொடுக்கக் கடவர்
எனவே ஓவியம் கவிதை பாடலிசை
திறமை எதிலிருப்பினுமதைக் காண்பித்தல் கூடாது
மீறிடின் சிறுமியெனக் கூடப் பாராது
மூங்கில் பிரம்பு பேசிடுமென
தடைக் குரல்கள் பல
வீடுகள் தோறும் முழங்கித் தீர்ப்பிடுகின்றன

கோரைப் புற்களைக் கொண்டு வந்து காய்த்து
நெய்யும் பாய்களில் சிறுமியின் முடங்கிய விரல்கள்
அழகிய சித்திரங்களைப் பின்னுகின்றன
ஓலைப் படல்களைத் தாண்டும்
தொட்டில் குழந்தைகளிற்கான
பெண்களின் தாலாட்டுக்கள்
தினந்தோறும் புதிது புதிதாய் உதிக்கின்றன
ஏரிக்கரைகளில் நிலா நேரங்களில்
உலவிடும் பிசாசுகளைப் பிடித்துன் தந்தையை
கட்டிவைக்கச் சொல்லவேண்டுமென்பது போன்ற
விதவிதமான உள்ளக் கிடக்கைகள்
சிறுவர் சிறுமிகளுக்கான பெண்களின் கதைகளில் வெளிச்சமிடுகின்றன

மூதாட்டியின் சிறுபராயம்
பாய்களிலும் கூடைகளிலும் கழிகிறது
வீட்டின் அனைத்து ஆண்களினதும்
வலிய கட்டளைகளுக்கு அஞ்சிய
அவளது எல்லா ஆற்றல்களும்
விரல்கள் வழி கசிகிறது
துளையிடப்பட்ட ஓடம்
மழைக் கணமொன்றில் நடுக்கடலில் தத்தளிக்கிறது

பாட்டியின் கதைகேட்ட சிறுமி தனது
வர்ணப்பெட்டியை எடுக்கிறாள்
எவளது கூந்தல் தூரிகையாலோ மீன்களை வரைபவள்
சித்திரத் தாள்களை ஊஞ்சலில் வைத்து ஆட்டி விடுகிறாள்
காற்றுவெளியில் நீந்தும் மீன்களைப் பிடிக்க
இரை தேடித் தடுமாறுகிறான்
அவ் வீட்டின் தூண்டில்காரன்
யன்னல்வழி கசியும்  மஞ்சள் வெளிச்சம்
அறை முழுவதையும் நிரப்புகிறது

- எம்.ரிஷான் ஷெரீப்
20102012
நன்றி
# காலச்சுவடு இதழ் - 162, எதுவரை இதழ், தமிழ் மிரர் இதழ்