Tuesday, November 27, 2007

திமிர் களைந்தெழு...!

எழும்பு!
கனவுகளேதுமற்றவுன்
நெடுந் தூக்கத்தை விட்டும்!

பார்!
உன்னால் துடி துடிக்கப் பிடுங்கப்பட்ட
சிட்டுக் குருவிகளின்
சிறகுகளின் முனையில்
குருதி கறுப்பாய்க்
காய்ந்து கிடப்பதை!

கேள்!
இறக்கைகளனைத்தையும்
விலங்கான உன்னிடத்தில் இழந்து
பறக்க முடியாமல்
குருவிகள் பாடும்
ஒப்பாரியின் ராகத்தை!

புரிந்து கொண்டாயா
இருந்தும் என்ன திமிருனக்கு ?

உன் பாதத்தை
விளிம்பாய்க் கொண்டு,
உன் ரேகையை
நூலாய் எடுத்து,
ஓர் அந்தகாரக் காரிருளில்
ஒரு விஷச் சிலந்தி
தனக்கான வலையைப் பின்னும் வரை
உனக்கேதும் புரியாதுதான்!

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Thursday, November 22, 2007

பேய் மழை ...!


சட்டென்று வந்த மழை
சடசடத்துப் பெய்த மழை !

வற்றிவாடி வதங்கி
வசந்தமிழந்த காலங்களில்
வாராதிருந்த மழை
வரவேற்றும் தூறாதிருந்த மழை !

இப்போது வந்திங்கு
இடைவிடாது பெய்யும் மழை ;
இடிமின்னலைக் கூட்டி வந்து - பல
இதயங்களை நிறுத்தும் மழை !

கோழிகுஞ்சையெல்லாம்
கொத்தோடு நனைத்த மழை ;
கொட்ட வந்த தேளைக்கூட
கொல்லாமல் விட்ட மழை !

மின்சாரக்கம்பியையெல்லாம் நிலத்தில்
மிதக்க விட்ட மழை - அதனை
மிதித்த உயிர்களையெல்லாம்
மேலோகம் சேர்த்த மழை !

தொற்று நோயையெல்லாம் - தன்
தோளில் தூக்கி வந்த மழை
வற்றிய உடலோடு போய்
வைத்தியரை வாழவிட்ட மழை !

மரங்களை முறித்துப்போட்டு
மண்சரித்து வந்த மழை - பெரு
விருட்சங்களை விழவைத்து
வீடழித்துப் பெருத்த மழை !

அகதியென்ற காரணத்தால்
சொந்தமிழந்து சொத்திழந்து
சுகமிழந்து சுவடிழந்து
சுயமிழந்து வந்த இடத்தில்

கட்டிய கூடாரத்தினுள்ளும் வெள்ளமாய்க்
கைவீசி வந்த மழை
காற்றனுப்பிக் காற்றனுப்பிக் கூரை
களவாடிப்போன மழை !

பாதையோரங்களில்
படுத்துக் குமுறியவரை
பதறவைத்த மழை ;
விதியை நொந்தவாறே
விம்மிக்கிடந்தவரை
விரட்டியடித்த மழை !

சட்டென்று வந்துள்ள மழை
சடசடத்துப் பெய்யும் இப்பேய் மழை...!

-எம்.ரிஷான் ஷெரீப்
மாவனல்லை
இலங்கை.

Monday, November 19, 2007

இதயங்கள் தேவை !

பூத்திருந்த பூவொன்று
செடிவிட்டுக் கழன்று
புல் மீது விழுந்தென்னெஞ்சில்
தீப்பற்ற வைத்தது !

கூட்டிலிருந்து
காகம் கொத்திச்
சொண்டகன்று
நிலம் வீழ்ந்தென்
கரண்டிப் பால் நக்கிப்
பின்னிறந்த அணில்குஞ்சு
என்னிதயத்தில்
அமிலமள்ளிப் பூசியது !

பாதை கடக்கமுயன்று
கண்முன்னே கணப்பொழுதில்
மோதுண்டு மரணித்த தாயும்

குருதிக்கோடுகளைச்
சிரசில் ஏந்தி,
லேசான புன்னகையை
முகத்தில் கொண்டு
பெற்றவளின்
கரத்திலிருந்திறந்த
கைக்குழந்தையும்
என்னுள்ளத்தைச்
சிலுவையிலறைந்தனர் !

நம்பவைத்து நயவஞ்சகனாகிய
நண்பனும்,
உரிமையெடுத்து உருக்குலைத்த
உறவினரும்
என்மனதைக் கழற்றியெடுத்துக்
கூர்ஈட்டி குத்திக்
கொடூரவதை செய்தனர் !

புராணக்கதைகளில் போல
படைத்தவன் முன் தோன்றி
வரம் தரக்கேட்பானெனின்,
செத்துப்பிழைக்க-எனக்குப் பல
இதயங்கள் வேண்டுமென்பேன்...
இல்லையெனில்-உடம்புக்குப்
பாரமெனினும்,
எதையும் தாங்கும்
பாறாங்கல் இதயங்கேட்பேன்...!


- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Wednesday, November 14, 2007

செல்வி.ஸ்ரீஜான்சி செந்தில்குமார், இறப்பு : 12/11/2007

முள்ளில் உறைந்த
விடிகாலைப் பனித்தூய்மை நீ ;
ஆவியாகும் கணம் வரையில்
எந்த தேவதையும் தலைகோதிடாப்
பெருவலி சுமந்தாய் !

கருணை நிறைந்த உலகிலொரு
தேவதையாய் வலம்வந்தாய்,
இறப்பின் வலியதனை
அனுதினமும் அனுபவித்தாய்,
விழிகளிரண்டின் மூலமிரு
உயிர்க்கு ஒளியூட்டி
விண்நோக்கியுன் பயணம்
இன்று நீ ஆரம்பித்தாய் !

நீ காட்டிய பேரன்பு
நெஞ்சம் முழுதும் அலைமோத
பத்திரமாய்ப் போய்வரும்படி
சொல்லிச்சொல்லியனுப்பினேன் - அதனை
எந்தக்காதில் வாங்கி - உன்
உயிரோடு விட்டுவிட்டாய் ?

இத்தனை துயரங்களையும்
எனை மட்டும் தாங்கச்செய்து,
எவராலும் மீட்சி வழங்கமுடியாப்
பெருவெள்ளத்தில் எனை மட்டும்
நீந்தச்செய்து நீங்கிச்செல்ல
உன்னால் எப்படி முடிந்தது தோழி ?

மௌனமாய் வலிபொறுக்கும்,
விழிநீர் அத்தனையையும்
நெஞ்சுக்குள் விழுங்கி விழுங்கி
ஆழப்பெருமூச்சு விடுமொரு
அப்பாவி ஜீவனென்பதாலா
அத்தனை தூரமெனை நேசித்தாய் ?

எந்த வனாந்தரங்களுக்குள்ளும்
வசப்படாத இயற்கையை,
எந்தப் பனிமலையும்
தந்திடாத குளிர்மையை,
எந்தச் சோலைகளும்
கண்டிராத எழிற்பொலிவை,
எந்தப் பட்சிகளும்
இசைத்திடாத இனிய கீதமதை
உன்னில் கொண்டிருந்த நீ
எந்த மேகத்தின்
துளிகளுக்குள்ளூடுருவி
மழையாய்ப் பொழியக்காத்திருக்கிறாய் ?

கருவிழியிரண்டையும் - ஒளியற்ற
இருவர் வதனங்களில்
விதைத்துச்சென்றாய் ;
அவர்கள் வெளிச்சம் பார்த்துத்
திளைக்கும் கணந்தோறும்
அப்பூஞ்சிரிப்பில் நீயிருப்பாய் - என்
நிரந்தரப் பிரார்த்தனைகளிலும்
நீ வந்து தங்கிவிட்டாய் !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Monday, November 12, 2007

கண்ணாடியின் வேர்கள் !வானத்தினழகும் ,
வசந்தகால
வனாந்தரங்களின்
பசுமையும்,
வானவில் வர்ணங்களும்,
வண்ணத்துப் பூச்சிச்
செட்டையின்
மென்மையும் ;
இந்தக் கண்ணாடி விம்பத்திடம்
தோற்றுத்தான் போகுமென
சொல்லிக் கொண்டிருந்தேன் !

எங்கிருந்து வந்தாய்...?
என் கனவுகளில்
தீப்பிடிக்கச் செய்தாய் ;
எனது பாடல்களை
ஒப்பாரியாக்கி,
எனது தேடல்களை
விழிநீரில் கரைத்து
வழியனுப்பச் செய்யுமுன்
சந்தர்ப்பவாதத்தை
எந்தக் கரங்களில்
ஏந்தி வந்தாய்...?

என் தோழனா நீ...?
நட்பென்ற கண்ணாடியை
உடைத்துப் பார்த்ததன்
வேரைத் தேடினாய் ; - இன்று
கீறல்களையொட்டி
புதுமெருகு
பூசமுடியாதென்பதை
புரிந்துகொண்டாயா...?

என் எதிரியா நீ...?
எங்கிருந்து வந்தாய்...?
என் தலை கோதிக் கோதி
ஓங்கிக் குட்டுமுன்
சூட்சுமக் கரங்களோடு
எங்கிருந்து வந்தாய் நீ...?

போதுமுன் சுயநலத்தை
இத்தோடு
நிறுத்திக்கொள் ;
தலைகோதுமுன்
துரோகத்தை
கொத்தோடு
தூக்கியெறி !

ஓர்
அந்தகாரக் காரிருளில்
என் நிழல்தேடி
நான் சோர்ந்த வேளை,
உன் விரல் தீண்டித்
திரை அகன்று,
புதுவெளிச்சம்
பாய்ந்தென்
பூஞ்சோலை
பூத்ததென்பேனோ
இனிமேலும்...?


-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Thursday, November 1, 2007

எனது துயரங்களை எழுதவிடு...!பொன்மஞ்சளின் தீற்றலோடு
இளஞ்சிவப்பு மலருரசிச்செல்லும்
மெல்லிய வாடை சுமந்த காற்று
உன் தேநீர்க்கோப்பையின்
ஆவிகலைத்துச் செல்லும்
இக்கணப்பொழுதில்
எனது கவிதைகளில்
சோகம் அழித்து,
காதலையும்,கனவுகளையும்
அழகாய்ப் பதித்திட
அன்பாய்க் கட்டளையிடுகின்றாய் !

ஐரோப்பாவின் குளிர்ந்த தெருக்களில்
உலாவி நடக்கவும்,
சோம்பிப்போய்ப் படுக்கையில்
குலாவிக்கிடக்கவும்,
தேவதைகளின் தாலாட்டில்
உலகம் மறக்கவும்
உனக்கு வாய்த்திருக்கிறது !

நாளைக்கே
நானும் கொல்லப்படலாம் ;
சோகம் தவித்துக்கனக்குமெனது
மெல்லிய மேனியில்
மரணம் தன் குரூரத்தை - மிக
ஆழமாக வரையவும் கூடுமான
அக்கணத்திலும்...
உனது கோப்பைகளில் திரவங்கள்
ஊற்றி வழிந்திட,
தேவதைகள் இதழ்ரேகை
தீர்க்கமாய்ப் பதிந்திட,
மாலை வேளைகளுனக்குச்
சொர்க்கத்தை நினைவுறுத்தும் !

வாழ்க்கை
வளர்ப்பு நாய்க்குட்டி போல்
வசப்பட்டிருக்கிறதுனக்கு !

உலகச்சோகங்களனைத்தும்
கரைத்தூற்றப்பட்டு
நான் மட்டும் வளர்ந்தேனோ...?
ஒரு கோடித்துயரங்கள்
தீப்பாறைக் குழம்புகளாயென்
உள்ளே கிடக்கையில்
எனது விரல்களிலிருந்து மட்டுமென்ன
செந்தேனா வடியும் ?


-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.