Showing posts with label உயிர்நிழல். Show all posts
Showing posts with label உயிர்நிழல். Show all posts

Friday, March 1, 2013

துயர் விழுங்கிப் பறத்தல்


பறந்திடப் பல
திசைகளிருந்தனவெனினும்
அப் பேரண்டத்திடம்
துயருற்ற பறவையைத் தேற்றவெனவோ
சௌபாக்கியங்கள் நிறைந்த
வழியொன்றைக் காட்டிடவெனவோ
கரங்களெதுவுமிருக்கவில்லை

ஏகாந்தம் உணர்த்தி உணர்த்தி
ஒவ்வொரு பொழுதும்
காற்று ரணமாய்க் கிழிக்கையில்
மௌனமாகத் துயர் விழுங்கும் பறவை மெல்ல
தன் சிறகுகளால்
காலத்தை உந்தித் தள்ளிற்றுதான்

முற்காலத்திலிருந்து தேக்கிய வன்மம்
தாங்கிட இயலாக் கணமொன்றில் வெடித்து
தன் எல்லை மீறிய பொழுதொன்றில்
மிதந்தலையும் தன் கீழுடலால்
மிதித்திற்று உலகையோர் நாள்

பறவையின் மென்னுடலின் கீழ்
நசுங்கிய பூவுலகும் தேசங்களும்
பிதுங்கிக் கொப்பளித்துக் காயங்களிலிருந்து
தெறித்த குருதியைப் பருகிப் பருகி
வனாந்தரங்களும் தாவரங்களும்
பச்சை பச்சையாய்ப் பூத்துச் செழித்திட
வலி தாள இயலா நிலம் அழுதழுது
ஊற்றெனப் பெருக்கும் கண்ணீர் நிறைத்து
ஓடைகள் நதிகள்
சமுத்திரங்கள் வற்றாமல் அலையடித்திட

விருட்சக் கிளைகள்
நிலம் நீர்நிலைகளெனத் தான்
தங்க நேர்ந்த தளங்களனைத்தினதும்
தடயங்களெதனையும் தன்
மெலிந்த விரல்களிலோ
விரிந்த சிறகுகளிலோ
எடுத்துச் செல்லவியலாத் துயரத்தோடு
வெளிறிய ஆகாயம் அதிர அதிர
தொலைதுருவமேகிற்று
தனித்த பறவை

- எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# உயிர்நிழல் இதழ் - 35, ஜூலை 2012உயிர்மைமகுடம் இதழ் - 03வெயில்நதி இதழ்திண்ணைபதிவுகள்

Saturday, December 1, 2012

விஷமேறிய மரத்தின் சிற்பம்

மலைப்பாம்புக் குட்டிகளென விழுதுகளைப் படர விட்ட
மரத்தின் ஆதிக் கிளைகள்
காட்சி கூடத்தில் வனம் பார்க்கும் சிற்பங்களாகின்றன

விருட்சங்களை வெட்டிச் செல்லும்
விஷமேறிய பார்வைகளை சிற்பி
காடுகளெங்கிலும் சுமந்தலையும் செம்மாலை நேரங்களில்
வன மரங்களின் இலைகளினூடு சூரியனாடும் மஞ்சள் நடனம்
எவ்வளவு ப்ரியத்துக்குரியது

நச்சேற்றிய சிற்பியின் பாதங்களிலேயே வீழ்ந்து கிடக்கும் மரங்களில்
அவனது எண்ணங்களிலிருந்தும் ஆற்றல்களிலிருந்தும் உருவாகிய
வனக் கொலைகளுக்கான ஆயுதங்கள் தீட்டப்படுகையில்
வன்மங்கள் கூராகின

இங்கு தாயின் கரத்திலிருந்துகொண்டே தடவிப் பார்க்கிறது
புராதனச் சடங்குகளின் பிரிந்த விம்பங்களென
தனித்திருக்கும் அம் மரச் சிற்ப விலங்குகளால்
எவ்வித ஆபத்துமில்லையென்பதை உணர்ந்த குழந்தை

பிஞ்சு விரல்கள் தொட்ட மரங்கள்
உடல் சிலிர்த்து எழுந்திடப்
பற்றியெரிகிறது மலைக் காடு

 - எம்.ரிஷான் ஷெரீப்
16012012

நன்றி
# உயிர்நிழல் - இதழ் 35 - ஜூலை, 2012
# எதுவரை - இதழ் 06 - நவம்பர், 2012
# உயிர்மை
# திண்ணை 
# Artist - Mr. Roshan Dela Bandara

Friday, May 6, 2011

போர்ப் பட்டாளங்கள்

மேசையில் ஊர்வலம் போகும்
குதிரைப் பட்டாளங்களைப் பார்த்திருந்த சிறுவன்
உறங்கிப் போயிருந்தான்
சிப்பாய்களிறங்கி தப்பித்து வந்த
முற்றத்தில் யானைகளின் நடனம்

தூரத்து மேகங்களிடையிருந்து
திமிங்கிலங்கள் குதித்திட
பாய்மரக் கப்பல்களின் பயணம்
கைகொட்டிச் சிரிக்கும் குழந்தையின் காலடியில்
படை வீரர்களின் வாட் போர்
கதை சொல்லும் தங்கையின் மொழியில்
கடற்குதிரை நடை

சிங்க வேட்டை சுவர்ப்படத்தின் கீழே
சிறுவனிடம் கதை கேட்கும் கிழச் சிங்கம்
விளக்கின் நிழலில் குள்ளநரி
கூடையில் இரட்டைக் குழந்தைகள்
தாலாட்டும் அம்மாவின் புத்தகத்தில்
கதைமாந்தர்களின் உறக்கம்

செதுக்கிய மரச் சிற்பங்களிடையிருந்து
எழுந்து நிற்கும் புதுச் சிலை
அப்பாவின் கை தொட்டு
உரத்துப் பேச ஆரம்பிக்கிறது
நிலவிலிருந்து இறங்கிவரும் பாலம்
யன்னல் கதவிடையில் முடிய
கட்டிலுக்கு இறங்கி வருகின்றனர்
தேவதைகளும் சாத்தான்களும் ஒருசேர

படுக்கையில் எழுப்பிய மாளிகை உச்சிகளில்
கொடிகள் பறக்கின்றன
வழமை போலவே
கீற்றுப்படைகளோடு வந்த ஒளி
மூடியிருந்த கண்ணாடி யன்னலோடு போரிட
சிதறிய வெளிச்சம் அறை நிரப்பி
என் கனவு கலைத்திற்று

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.



நன்றி
# உயிர்நிழல் இதழ் 33
# அதீதம்
# உயிர்மை
# வீரகேசரி வார இதழ்
# தடாகம்
# நவீன விருட்சம்
# காற்றுவெளி
# திண்ணை
# தமிழ் முரசு அவுஸ்திரேலியா