Saturday, December 20, 2008

உன் பற்றிய கவிதைகள்

1.
மஞ்சள் பூக்களைப் பற்றிப் பேசியபடியும்
இலைகளிலிருந்து விழத்துடிக்கும்
மழைத்துளிகளைப் பாடியபடியும்
சாத்தான்களைத் தூதனுப்புமுன்
பாறாங்கல்லிதயத்திலிருந்து
நட்சத்திரமொன்றைத் தள்ளிவிட்டாய்
மனதின் முனையைப் பற்றியபடியது
இல்லாத உன் புகழ்பாடி வீணாகுகையில்
நீர்ப்பரப்பில் நத்தைகள்
நீந்துவதாகச் சொல்கிறாய்
ஓடு பொதுதானெனினும்
நத்தைகள் ஆமைகளாக முடியாது
எல்லாவற்றிலும்

2.
நீ உடைத்த வெளிகளில்
தூளாகிச் சிதறியது மனம்
சாத்தப்பட்ட கதவினைத் தட்டியபடி
கைகளில் விளக்கோடு காத்திருக்கிறாய்
அறை முழுதும் நிரம்பி
எக்காளமிடுகின்றன
உன் பற்றிய என் கவிதைகள்

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

Wednesday, December 10, 2008

முடிவிலி

அடர்ந்த இருளின் கரங்களில்
இன்று நிலவில்லை
ஒற்றை நட்சத்திரம்
ஒற்றைப் பூவரசு
ஒற்றைக் கிணறு
தனித்த நான்

இன்னும் பார்வைப்புலத்துக்கெட்டாச்
சில பிசாசுகளும் இருக்கக் கூடும்

நண்ப,
உயிர் பிரியும் வரை வலிகொடுத்த
குருதி கசிந்த ஒரு இரவின் பாடலை
ஒரு குறிப்பாக நீ
எழுதிவைத்திருந்ததைக் கண்ணுற்றேன்

எல்லா எழுத்துக்களையும் மீள எழுதிடும் போது
அவர்களது ஆயுதம் எனை நோக்கியும்
நீளக்கூடும்

ஒற்றைக் கிணற்று நீரில் மிதக்கும்
ஒற்றை நட்சத்திரத்துக்குத் துணையாக
ஒற்றைப் பூவரசும்,
இன்னும் பார்வைப்புலத்துக்கெட்டாப் பிசாசுகளும்
நிச்சலன சாட்சியாய்ப் பார்த்திருக்க
குருதி கசிந்துகொண்டிருக்கும்
ஒரு புதுச் சடலமாக நாளை நானும் மிதப்பேன்

இவர்கள் நம்மை வைத்துக்
கவிகளும் காவியங்களும் படைக்கட்டும்

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.


( யுகமாயினி - டிசம்பர், 2008 இதழில் பிரசுரிக்கப்பட்டுள்ள கவிதை )

Monday, December 1, 2008

நஞ்சூட்டியவள்

அவன் சோலைகள் பூத்த காலமொன்றில்
ஏகாந்தம் உலவி ஏழிசையும் இசைத்திற்று
காடுலாவி மணம் பூசித்தென்றலும்
கால்தொட்டுக் கெஞ்சிற்று

அப்பொழுதில்
சொல்லொணாப் பிரியத்தினைக் கொண்டு
சேமித்துப்பிதுங்கி வழிந்திடும் மன உண்டியலைப்
பலகாலங்களாகப் பத்திரப்படுத்திவந்தான்
எடுத்துச் செலவழிக்கவோ
எவர்க்கும் தானம் செய்திடவோ
உளமொப்பாமல் ஒரு துணைக்கு மட்டுமே
கொடுத்துக் களித்திடக் காத்திருந்தான்

சூழப் பெருவெளி,ஆழப்பெருங்கடலின்னும்
நீலவானெனப் பார்க்கும் அத்தனையிலும்
அதனையே நினைந்திருந்தான்
இராப்பொழுது தோறும்
விழிசோரும் கணம் தோறும்
முப்பொழுதும் ஒரு துணையே
தப்பாமல் கனாக் கண்டான்

இணையெனச் சொல்லிக் கொண்டு
நீ வந்தாய்
ஏழு வானங்கள், ஏழு கடல்கள்,
ஏழு மலைகளை விடப் பாரிய அன்பை
வழிய வழிய இரு கைகளில் ஏந்தி
உன்னிடம் தந்து பின் பார்த்து நின்றான்
பாழ்நதிக்கரையோரம் இரவுகளில்
கருங்கூந்தல் விரித்து ஓலமாய்ச் சிரிக்கும்
ஒரு பிடாரிக்கு ஒப்பாக
நீ சிரித்தாய் - பின்
அவனது அன்பையும் பிரியங்களையும் அள்ளியெடுத்து
ஊருக்கெல்லாம் விசிறியடித்தாய்

ஒரு கவளம் உணவெடுத்து
அதில் சிறிது நஞ்சூட்டிக்
கதறக் கதற அவன் தொண்டையில்
திணித்திடவெனத்துடித்தாய்
இன்று இடையறாது வீழும்
அவனிரு விழித்துளிகளில் உயிர் பெற்று
உனது ஆனந்தங்கள் தழைக்கட்டும்

- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

(அநங்கம் - மலேசியாவின் தீவிர இலக்கிய  இதழில் நவம்பர் மாதம் வெளியான கவிதை )