Monday, January 21, 2008

விதிக்கப்பட்ட மரணம் !


அது நீலமோ,சாம்பலோ
தெரியவில்லை
இரண்டும் கலந்தவோர்
அடர்நிறம் போர்த்திய அதிகாலை !

ஒரு பொழுதின் ஏக்கமும் ,
ஒரு பொழுதின் வசந்தங்களும்
பனியில் குழைக்கப்பட்டு
அந்நிறம் உருவாகியிருக்கக்கூடும் !

அடர்ந்த வனாந்தரத்துள்
மெல்லிய துயரத்தோடு
தனித்தாடும் ஆண்மயிலின்
இறகுகளின் முனையில்
அந்நிறத்தைக் காணலாம் !

அன்றியும் ,
மாலைவெயிலை
எதிர்கொண்டு நடக்கையில்
சட்டெனத் திரும்பிப்பார்ப்பீர்களாயின்
நிழலில் ஒரு கணம் - அந்
நிறம் தோன்றக்கூடும் !

வனம் கலைத்துச் செல்லும் பறவை
வான்வெளியில்
சிறகுதிர்த்துச் செல்வது போல
உங்கள் மனப்பரப்பில்
அந்நிறம் இப்பொழுது
கிளைபரப்பத் தொடங்கியிருக்கும் !

தொலைதூரப் பெருங்கடல்
தொடுவானுடன் சங்கமிக்கும்
புள்ளியொன்றில் தோன்றுமே...
அதே நிறம்தான் !

விடுங்கள் - உங்களுக்கு
ஆயிரம் வேலைகளிருக்கும் !
அன்றைய விடிகாலையில்
அவன் இறுதிமூச்சு விட்ட காற்றோடு
ஆயுதங்களால் விதிக்கப்பட்ட
அநீதியைப்பார்த்த சாட்சியாய்
அந்நிறம் மட்டுமேயிருந்தது !

- எம்.ரிஷான் ஷெரீப் ,
மாவனல்லை,
இலங்கை.

Thursday, January 10, 2008

தீயெனத் தனிமை சுட ...!


எந்தவொரு மேகக்கூட்டமும்
எனக்கென்று நிற்காதவொரு
பெரும்பரப்பில் நான்;
பேசக்கேட்க யாருமற்றுத்
தனித்திருக்கிறேன் !

இப்பொழுதுக்குச் சற்றுப்பின்
வலி மிகும் தொனியுடனான
எனது பாடல்
மணற்புயலடித்துக் கண்ணையுருத்தி
உடற்புழுதியப்பும்
இப்பாலைவனம் பூராவும்
எதிரொலிக்கக் கேட்கலாம் !

எனைச் சூழ ஒலித்தோயும்
எந்தவொரு அழைப்பும்
எனக்கானதாக இருப்பதில்லை ;
எனைச் சிதைத்து ஆளும்
இப் பெருவலியையும்
எவரும் உணர்வதில்லை !

இப்படியே போனாலோர் நாளென்
முதல்மொழியும் மறந்துவிடுமென
எண்ணிச் சோர்ந்த பொழுதொன்றில்
விழும் துளியொவ்வொன்றுமென்
செவிக்குள் ரகசியம் பேசித்
தசை தடவிக் கீழிறங்கி,
மணலுறிஞ்சி மறைந்து போக
சிறு தூறலாய் மழைத்துளி வீழ்ந்து
நெஞ்சம் நனைக்கக் காண்பேனா?

எனைச் சூழ்ந்திருக்கும்
தனிமையையும் , மௌனத்தையும்
பெரும் சாத்தான் விழுங்கிச்சாக - என்
தோள்தொட்டுக் கதை பேசவொரு
சினேகிதம் வேண்டுமெனக்கு.
நீயென்ன சொல்கிறாய் ?


- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை

Tuesday, January 1, 2008

பூக்களில் உறங்கும் மௌனங்கள்...!


பின்புலக்காட்சிகளெதுவும்
புலப்படாப்பொழுது கடந்து
பூனையாய் நிலவலையும் தெருவொன்றின்
வெளிச்சம் குவியும் மையத்தில்
நீயும் நானும் மட்டும்
நின்றிருந்தோம் !

விரக்தியும்,பசியின் வீம்பும்
நிர்க்கதி நிலையும்,விழிநீரும்
நிறைந்திருந்தவுன்
நயனங்களைச் சிமிட்டிச்சிமிட்டி
சக்கையாய்ப் பிழியப்பட்டவுனது
வாழ்வினொரு பக்கத்தை - நீ
திறக்கப்போவதாயெண்ணிக் காத்திருந்தேன் !

என்ன காண நேர்ந்ததுவோ...?
எதைக் கதைக்க வந்தாயோ...?
எதனையுமுன் இதழ் திறக்கவில்லை ;
தோள் தொட்டுக்கேட்டேன்,
விழிநீர் துடைத்துக் கேட்டேன்.
விம்மித்தவித்துத் துடித்து
விளங்காப் பொருளாய்
மௌனம் உதிர்த்தாய் !

வழித்துணை மறுத்து
நீ தனியாய் வீடு சென்றாய் ,
முதுகு காட்டி நான் நகர
பெயர் சொல்லியழைத்து
கையசைத்து விடைபெற்றாய் ;
கண்ணீர் நிரம்பியவுன் செவ்விழிகளினூடு
கலங்கலாய் நான் தெரிந்தேனா?

உதிரும் வரையில் மிக ஆழமான
மௌனத்தை மட்டுமே மொழியாய்ப்பேசும்
மலர்களுக்கு ஒப்பாக
மறுநாளின் விடியலில்
உன் வளவுப்பாசிக்கிணற்று நீரைக்
குருதி நிறமாக்கி
வல்லுறவுக்கும்,வதைப்படுத்தலுக்கும்
ஆற்பட்டுக் கொல்லப்பட்டவுன்
சடலம் மிதந்தது !

நினைத்த பொழுதுதோறும் வந்து
காத்துக் கிடக்கிறோம்
உன்னிடம் கேட்கவென
ஓராயிரம் கேள்விகளோடு
நானும்,நீ துயிலுறுமுன்
கல்லறை மௌனப் பூக்களும்...!

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.