Thursday, December 1, 2011

தோள்களில் அமர்ந்திருக்கும் மரணத்தின் தூதுவன்

தோட்டத்துக் காவல்காரன்
நித்திரையிலயர்ந்த கணமொன்றில்
தனித்துவிழும் ஒற்றை இலை
விருட்சத்தின் செய்தியொன்றை
வேருக்கு எடுத்துவரும்

மௌனத்திலும் தனிமையிலும்
மூழ்கிச் சிதைந்த உயிரின் தோள்களில்
வந்தமர்ந்து காத்திருக்கிறான்
இறப்பைக் கொண்டுவரும்
கடவுளின் கூற்றுவன்

நிலவுருகி நிலத்தில்
விழட்டுமெனச் சபித்து
விருட்சத்தை எரித்துவிடுகிறேன்

மழை நனைத்த
எல்லாச் சுவர்களின் பின்னிருந்தும்
இருளுக்குள்ளிருந்து எட்டிப்பார்க்கிறது
ஈரத்தில் தோய்ந்த
ஏதோவொரு அழைப்பின் குரல்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# வடக்குவாசல் - நவம்பர், 2011
# மறுபாதி - கவிதைகளுக்கான இதழ்
# விடிவெள்ளி
# தமிழ் எழுத்தாளர்கள்
# திண்ணை

Tuesday, November 8, 2011

அக்கறை/ரையை யாசிப்பவள்அன்றைய வைகறையிலாவது
ஏதாவதொரு அதிசயம் நிகழக்கூடுமென
படிப்படியாயிறங்கி வருகிறாள்
சர்வாதிகார நிலத்து ராசாவின்
அப்பாவி இளவரசி

அதே நிலா, அதே குளம்,
அதே அன்னம், அதே பூங்காவனம்,
அதே செயற்கை வசந்தம்
அதுவாகவே அனைத்தும்

எந்த வர்ணங்களும் அழகானதாயில்லை
எந்த மெல்லிசையும் புதிதானதாயில்லை
எந்த சுதந்திரமும் மகிழ்வூட்டக் கூடியதாயில்லை

நெகிழ்ச்சி மிக்கதொரு
நேசத் தீண்டலை
அவள் எதிர்பார்த்திருந்தாள்
அலையடிக்கும் சமுத்திரத்தில்
பாதங்கள் நனைத்தபடி
வழியும் இருளைக் காணும்
விடுதலையை ஆவலுற்றிருந்தாள்
காவல்வீரர்களின் பார்வைக்குப் புலப்படா
மாய உடலையொன்றையும் வேண்டி நின்றாள்
அவள் நிதமும்

அப் புல்வெளியோடு
வானுக்குச் சென்றிடும் மாய ஏணியொன்றும்
அவளது கற்பனையிலிருந்தது

இப் பொழுதுக்கு மீண்டும் இக்கரை தீண்டா
ஒரு சிறு ஓடம் போதும்
எல்லை கடந்துசென்று
சுதந்திரமாய்ப் பறக்கும் பட்சிகள் பார்க்கவென
அச் சமுத்திரத்தின் அக்கரையில்
அவளுக்கொரு குடில் போதும்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
20100717

நன்றி
# மறுபாதி - கவிதைகளுக்கான இதழ் - 06 , வைகாசி-ஆவணி 2011
# உயிர்மை
# திண்ணை

Wednesday, October 12, 2011

மழைப்பாடல்

தாங்கவொண்ணாக் காதலின் வலி தவிர்க்க
சூழ்ந்திருந்த எல்லாவழிகளையும்
இறுக மூடித் திறப்புக்களைத் தூர வீசி
என்னை சிறையிலிட்டுக் கொண்டேன்
வெளியேற முடியா வளி
அறை முழுதும் நிரம்பி
சோக கீதம் இசைப்பதாய்க் கேட்ட பொழுதில்
மூடியிருந்த யன்னலின் கதவுகளைத் தட்டித் தட்டி
நீரின் ரேகைகளை வழியவிட்டது மழை

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி 
# மறுபாதி இலக்கிய இதழ்-06, வைகாசி-ஆவணி 2011
# விடிவெள்ளி

Sunday, July 10, 2011

சாபங்களைச் சுமப்பவன்

நேர் பார்வைக்குக் குறுக்கீடென
ஒரு வலிய திரை
ஏமாற்றுபவனுக்கு இலகுவாயிற்று

பசப்பு வரிகளைக் கொண்ட
பாடல்களை இசைத்தபோதும்
வெறித்த பார்வையோடு தான்
துயருறுவதாகச் சொன்ன போதும்
பொய்யெனத் தோன்றவில்லை
ஏமாறியவளுக்கு
இருள் வனத்திலொரு ஒளியென
அவனைக் கண்டாள்

புகைப்படச் சட்டங்களுக்குள்ளிருந்து நீண்டன
வாழ்வு கொடுப்பதாகச் சொன்ன
அவனது கைகள்
ஒலிக் கோப்புகளிலிருந்து வழிந்தன
தூரத்திலிருந்து அவனளித்த உத்தரவாதங்கள்

அவளது கைகளைப் பிணைத்திருந்தது
அவனிட்ட மாயச் சங்கிலி
விலங்கிடப்பட்ட பறவையென
காலடியில் வீழ்ந்துகிடந்தாள்
சிறகுகளை ஒவ்வொன்றாகப் பிய்த்தெறிந்தன
கூரிய நகங்களைக் கொண்ட
அவனது விரல்கள்
பின்னர் உச்சியில் ஏற்றிவிட்டு
விரைத்த ஒரு பொம்மையென விழச் செய்தான்

நேர்கோடென நட்சத்திரமொன்று வீழ்ந்த இரவில்
இருவரையும் நனைத்தது மழை
அவளது குருதியும் வேதனையின் ஓலமும்
தடயமழிந்து போயிற்று
என்றென்றைக்குமவளது
சாபங்களைச் சுமப்பவனானான் அவன்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# வடக்குவாசல் இதழ் - ஒக்டோபர், 2010
# உயிர்மை
# நவீன விருட்சம்
# தமிழ் எழுத்தாளர்கள்
# திண்ணை
# வார்ப்பு

Wednesday, June 1, 2011

உனை ஈர்க்காவொரு மழையின் பாடல்

நான் மழை
ஈரலிப்பாக உனைச் சூழப் படர்கிறேன்
உன் பழங்கால ஞாபகங்களை
ஒரு கோழியின் நகங்களாய்க் கிளறுகிறேன்

எனை மறந்து
சிறுவயதுக் காகிதக் கப்பலும், வெள்ள வாசனையும்
குடை மறந்த கணங்களும், இழந்த காதலுமென
தொன்ம நினைவுகளில் மூழ்கிறாய்
ஆனாலும்
உன் முன்னால் உனைச் சூழச்
சடசடத்துப் பெய்தபடியே இருக்கிறேன்

உனைக் காண்பவர்க்கெலாம்
நீயெனைத்தான் சுவாரஸ்யமாய்க்
கவனித்தபடியிருக்கிறாயெனத் தோன்றும்
எனக்குள்ளிருக்கும் உன்
மழைக்கால நினைவுகளைத்தான்
நீ மீட்கிறாயென
எனை உணரவைக்கிறது
எனது தூய்மை மட்டும்

இன்னும் சில கணங்களில்
ஒலிச் சலனங்களை நிறுத்திக்
குட்டைகளாய்த் தேங்கி நிற்க
நான் நகர்வேன்

சேறடித்து நகரும் வாகனச்சக்கரத்தை நோக்கி
'அடச்சீ..நீயெல்லாம் ஒரு மனிதனா?'
எனக் கோபத்தில் நீ அதிர்வாய்

எனைத் தனியே ரசிக்கத் தெரியாத
நீ மட்டும் மனிதனா என்ன?

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# வடக்கு வாசல் இதழ், அக்டோபர் 2010
# நவீன விருட்சம்
# தமிழ் எழுத்தாளர்கள்
# திண்ணை

Friday, May 6, 2011

போர்ப் பட்டாளங்கள்

மேசையில் ஊர்வலம் போகும்
குதிரைப் பட்டாளங்களைப் பார்த்திருந்த சிறுவன்
உறங்கிப் போயிருந்தான்
சிப்பாய்களிறங்கி தப்பித்து வந்த
முற்றத்தில் யானைகளின் நடனம்

தூரத்து மேகங்களிடையிருந்து
திமிங்கிலங்கள் குதித்திட
பாய்மரக் கப்பல்களின் பயணம்
கைகொட்டிச் சிரிக்கும் குழந்தையின் காலடியில்
படை வீரர்களின் வாட் போர்
கதை சொல்லும் தங்கையின் மொழியில்
கடற்குதிரை நடை

சிங்க வேட்டை சுவர்ப்படத்தின் கீழே
சிறுவனிடம் கதை கேட்கும் கிழச் சிங்கம்
விளக்கின் நிழலில் குள்ளநரி
கூடையில் இரட்டைக் குழந்தைகள்
தாலாட்டும் அம்மாவின் புத்தகத்தில்
கதைமாந்தர்களின் உறக்கம்

செதுக்கிய மரச் சிற்பங்களிடையிருந்து
எழுந்து நிற்கும் புதுச் சிலை
அப்பாவின் கை தொட்டு
உரத்துப் பேச ஆரம்பிக்கிறது
நிலவிலிருந்து இறங்கிவரும் பாலம்
யன்னல் கதவிடையில் முடிய
கட்டிலுக்கு இறங்கி வருகின்றனர்
தேவதைகளும் சாத்தான்களும் ஒருசேர

படுக்கையில் எழுப்பிய மாளிகை உச்சிகளில்
கொடிகள் பறக்கின்றன
வழமை போலவே
கீற்றுப்படைகளோடு வந்த ஒளி
மூடியிருந்த கண்ணாடி யன்னலோடு போரிட
சிதறிய வெளிச்சம் அறை நிரப்பி
என் கனவு கலைத்திற்று

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.நன்றி
# உயிர்நிழல் இதழ் 33
# அதீதம்
# உயிர்மை
# வீரகேசரி வார இதழ்
# தடாகம்
# நவீன விருட்சம்
# காற்றுவெளி
# திண்ணை
# தமிழ் முரசு அவுஸ்திரேலியா

Wednesday, March 2, 2011

பூக்கள் விசித்தழும் மாலை

வானை எடுத்து வாவென
காற்று வெளியெங்கும் 
பட்டத்தை அனுப்புகிறேன் பகலில்

சூரியனோ பௌர்ணமியோ எதுவோ
குளிரிரவில் நட்சத்திரங்களாலெறிந்து
என் மீதுள்ள கோபத்தைக் காட்டுகிறது

செடிகளில் விழும் எரிநட்சத்திரங்கள்
மொட்டுக்களாகிப் பூத்திடும்
விடிகாலையில்

மாலைகளாக்கப்படுபவற்றுக்கு
தெரியாது
எந்தச் சடங்குகளுக்காகக் கோர்க்கப்படுகிறோமென்று

எனினும் மாலையிலுதிரும்
பூக்கள் விசித்தழுகின்றன
மேடை நிழல்களிலிருந்தும்
பூத்த மரங்களின் கீழிருந்தும்

காலையில் பனி சொட்டிக் கிடக்கிறது

- எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை

நன்றி

# அதீதம் இதழ்

# காற்றுவெளி

# தமிழ்முரசு

# வீரகேசரி வார இதழ்

# திண்ணை

# வார்ப்பு

# தமிழ் எழுத்தாளர்கள்


Tuesday, February 1, 2011

சாட்சிகளேதுமற்ற மழை

கதவு யன்னல்களிலிருந்து
வழிகின்றன முகங்கள்
கொட்டப்படும் நீர்த்தாரைகளைப் போல

கைகளில் கட்டப்பட்டிருக்கும்
நுண்ணிய கயிறுகளை அவிழ்த்துக் கொண்டு
பார்த்திருக்கும் அவற்றின் விழிகளில்
நிழலாக அசைகின்றன
பாதையோர மரங்களும்
ஈரப் பறவைகளும் மழையும்
ஒரு தெருச் சண்டையும்

புன்னகையும் சிரிப்பும் எள்ளலும்
சுழிப்பும் முணுமுணுப்பும்
அருவருப்பும் கலந்த உணர்ச்சிகள்
மழைச்சாரலிடையில்
அங்கிங்கு தாவும் தவளைகளைப் போல
அவதானித்திருக்கும் முகங்களில் மாறிட
பேய்களின் வாய்களுக்கெனவே
பிறப்பெடுத்தவை போல
வெளியெங்கும் வீச்சமேற்றுகின்றன
பிணங்களின் வாடையுடனான
அழுக்கு மொழிகள்

இடி வீழ்ந்து
இலைகள் கிளைகள் எரிய
மொட்டையாகிப்போன மரமொன்றென
நடுத்தெருவில் நின்று ஓலமிட்டழுதாள்
மேலாடையுரிக்கப்பட்ட குடிகாரனின் மனைவி
புதைக்கப்பட்ட விரல்களில்
புழுக்களூர்வதைப் போல
நேச உணர்வேதுமற்றவன்
தன் தாக்குதலைத் தொடர்ந்தான்

நத்தைகள் ஆமைகளைப் போல
தங்களை உள்ளிழுத்து
கதவுகளைப் பூட்டிக்கொண்டன
தெருவில் நிகழ்ந்த
கொலையைக் கண்டமுகங்கள்
எதையும் காணவில்லையென்ற
பொய்யை அணியக்கூடும்
இனி அவர்தம் நாவுகள்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
21022010


நன்றி
# கலைமுகம் இதழ் - 50, ஒக்டோபர் 2010
# திண்ணை
# நவீன விருட்சம்
# தமிழ்முரசு அவுஸ்திரேலியா
# வார்ப்பு
# தமிழ் எழுத்தாளர்கள்

Sunday, January 2, 2011

எனதாக நீயானாய்


ஏழு வானங்களும் நிரம்பி வழியும்படியான
நேசத்தைப் பூத்திருக்கின்றன உனது விழிகள்
சுகந்தம் வீசிப் பரவுமதன் பூரிப்பில்தான்
செழிக்கிறேன் நானும்

காலங்காலமாக மென்மையில்
ஊறிக்கிடக்கும் மனமதில்
எக் கணத்தில் குடியேறினேனோ
இசைத்த கீதங்களின் ஒலியிலெனது
இடர்கள் தீர்ந்தன
உற்சாகத்தின் வீரியமிக்க விதைகள்
உன் நம்பிக்கையின் கரங்களால்
ஊன்றப்பட்ட நாளதில்தான்
தூய சுவனத்தின் மழையென்னை
முழுதும் நனைக்கப் பெய்ததையுணர்ந்தேன்

கலக்கின்றதுயிரில்
செவிகளுக்குள் நுழைந்த
உனதெழில் பாடல்களினூடு
ஆளுமைமிகு தொனி

இரைத்திரைத்து ஊற்றியும்
வரண்டிடா அன்பையெல்லாம்
எங்கு வைத்திருக்கிறாய் உயிர் சகா
காணும்போதெல்லாம் எழுமுன் புன்னகையின்
கீற்றில்தான் உதிக்கிறது எனதுலகு

மஞ்சள் பறவையொன்றும் சில அணில்குஞ்சுகளும்
வாடி உதிர்ந்திடா மலர்கள் நிறைந்த
சோலையில் விளையாடும்
வசந்தகாலத்தின் காலையொன்றில்
நானினி வாழ்வேன்
ஒலிக்கும் இன்னிசையின் பிண்ணனியில்
நீயிருப்பாய் என்றென்றுமினி

 - எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# வல்லினம் இலக்கிய இதழ் - ஜனவரி, 2011
# காற்றுவெளி இலக்கிய இதழ் - ஜனவரி, 2011
# வார்ப்பு
# திண்ணை