அத்திவாரத்தை
வெடிபொருட்களால் நிரப்பி
அது இறுகிச் சேர்ந்திட
மனிதக் குருதி சேர்த்து
நெருப்புக்களால் ஆன
வீடொன்று கட்டு உனக்கு.
பேய்களே அதற்குக் காவலிருக்கட்டும் !
முன்பு புதைத்த
சவங்களைத் தோண்டியெடுத்து
அதன் எலும்புகளால் சில யன்னல்களும் வை.
இரவானாலும் - எந்த
இருளானாலும்
அவை மூடப்படாமலே கிடக்கட்டும் ;
அனல்காற்றும்,
அரைவேக்காட்டுப் பிணவாடையும்
மட்டுமே சுமந்தது உள்ளே வரட்டும் !
உருகிச் சிவந்து சூடு சுமக்கும்
தட்டை இரும்பினாலோர்
ஒற்றைக் கதவு வை.
வெப்பத்திறவுகோலால்
சாத்தான்களுக்கு மட்டுமதனைத்
திறந்து வழிவிட்டு நகர் !
பிணக்கால்களின் மூட்டுக்கள் கொண்டு
உன் சிம்மாசனம் அமையட்டும்,
மண்டையிலடித்துக் கொன்றொழித்த
பெண்களின் முத்துப் பற்களை
அழகுக்காகப் பதி ;
சிறு மழலையின் மண்டையோடு
செங்கோலின் கைப்பிடியை அலங்கரிக்கட்டும் !
இளம்பெண்களின் அலறலும்,
குழந்தைகளின் அழுகையும்,
மனிதர்களின் ஓலமும்
துயர் சுமந்த ஒப்பாரிகளும்
உன் வீட்டை இசையாக
நிரப்பட்டும் !
விருந்தினர் வருகையில்-கொதிக்கும்
விஷபானம் குடிக்கக் கொடு ;
அவர்கள் தொண்டை வழியே உருகிவழிகையில்
உன் வீரவாள் கொண்டு
வெட்டிக் கறி சமை !
அவர்கள் கண்களைத் தோண்டி-அதில்
ஆயிரம் அலங்காரம் பண்ணி,
நாக்குகளை அறுத்துத் துணைக்குத்
தொட்டுக் கொள்ளவை !
உன் பசி தீர்ந்ததா?
இப்பொழுது சொல்.
நான் சொன்னபடி கட்டிய
உன் வீட்டுக்கும்
என் தாய்தேசத்துக்கும்
என்ன வித்தியாசம் இன்று?
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
இணைய வானொலியில் ஒலிபரப்பான இக்கவிதையை பிரபல அறிவிப்பாளர் அப்துல் ஜப்பார் அவர்களது குரலில் கேட்க...
Friday, August 15, 2008
Friday, August 1, 2008
நேசத்தை விழிநீரில் அழித்து...!
வீடு முழுவதிற்குமான
மகிழ்ச்சியின் ஆரவாரத்தினை
ஒரு புகைப்படம் கொண்டுவந்தது ;
இதைப் போலப்
பேருவகையொன்றைத் தவிர்த்து
நிராகரிப்பின் பெருவலியை
அவள் அவனுக்குத் தரவிரும்பவில்லை !
அவளது வீடு வளர்கிறதா என்ன ?
அவனது காதலை ஏற்க மறுத்து
உள்ளுக்குள் புதைந்து
மனம் குறுகி நின்றவேளை
குறுகுறுப்பாகப் பார்த்து
குறுகிச் சிறுத்த அதே வீடு - இன்று
சொந்தங்களின் கிண்டல்களுக்குத்
துள்ளிக்குதித்து ஓடும் போதெல்லாம்
இத்தனை காலமும்
ஒளித்து வைத்திருந்த
நீண்ட புதுப்புதுப் பாதைகளை
அகன்று விரிக்கிறது !
சாஸ்திரங்கள்,சம்பிரதாயங்கள்,
வீட்டிற்கான பழம்பெரும் கலாச்சாரங்கள்
அவளது கரம்பிடித்து
இறுக்க நெருக்குகையில்,
வெட்கத்தைப் போர்த்திய சாலைவழியே
அவனது காதலைப் பாடிச்செல்வாளென
அவனெப்படி எண்ணலாம் ?
சமுத்திரங்கள் பிரித்த
பெருங்கண்டங்களிரண்டில்
நீந்தத் தெரியாமல் அவன்களும்
நீர் வற்றுமென அவள்களும்
பார்த்தவாறு காத்திருக்கையில் ,
காதலும் , நேசங்களும்
அவன்களுக்குள்ளேயே
புதையுண்டு போகட்டும் - அவ்வாறே
அவள்களது நிலவெரிந்த
நடுநிசிகள் கண்ணீரால் நனையட்டும் !
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Tuesday, July 15, 2008
உன்னைப் புலம்பும் எனது பாடல் !

அதுவொரு பெருமழைக்காலம் !
வனாந்தரங்களின் பசுமையை,
பனிக்கால நீரோடைகளின் குளிர்ச்சியை,
பூஞ்சோலைகளின் பேரழகை,
ஆலப்பெரு மரங்களின் நிழல்களை
அவள் கொண்டிருந்ததாக
நீ எண்ணி எண்ணித் திளைத்த காலம் !
ஒரு துர்தேவதையின் பாடல்கள் மட்டுமுன்
செவிகளை நிரப்பிய காலம் ,
அவளுக்கான சாபங்களனைத்தும்
உன்னைப் பீடித்தலையத்
தருணம் பார்த்துக் காத்திருந்த காலம் ;
அத்தனையையும் அறியாது - நீ
அவளுக்கு நேசனானாய் !
அவளது அழகிய மாயநதியில்
நீ மூழ்கிச் சுவாசம் மறந்தாய் ;
உன் இமைகளைப் பிடுங்கி
அது கொண்டவளை
ஓவியங்கள் வரைந்திட்டாய் !
அவளது ஆன்மாவின் சலனங்கள்
நாணத்தைத் தொலைத்தன,
பாதங்களை முக்காடுகள்
போர்த்திக் கொண்டன ;
அன்றுதான் நண்பனே - நீ
பைத்தியமானாய் !
பறவையொன்று சத்தமிட்டுச் சிரித்ததென
அவள் சொல்லிப் போனாலும்
நம்பிப் புருவமுயர்த்தி ரசித்து மகிழ்ந்தாய் !
முகவரியற்ற சுவர்களையுன்
இருப்பிடமாக்கிக் காலம் பார்த்தது ;
அவளது காலடிச் சுவடுகளிலுன்
உயிரினைத் தேடிய நீ
காலத்தைப் பார்க்கமறந்திட்டாய் !
அந்தக் காலம்தான்
உன்னைக் கல்லறையிலும்,
அவளை மணவறையிலும்
இருத்தி அழகுபார்க்கிறதின்று !
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Tuesday, July 1, 2008
எரிக்கிறாய் ; எரிகிறேன் !

எனதுயிருருக்கும் பாடலைப்
பின்பற்றி வந்த உன் நேசம்
எனக்கென்றிருந்த
ஒரேயொரு கேடயத்தையும்
மூலைக்கொன்றாக உடைத்துப் போட்டதில்
வருத்தம்தான் எனக்கு..!
ஆதியின் மூலங்களறுத்து,
சார்ந்திருந்த அரண்களையுடைத்து
உனை நம்பி வந்த நான்
காணும் எல்லாவற்றிலும்
நீ மட்டுமே
காட்சிப் பொருளாக வேண்டுமென்கிறாய்
நட்சத்திரங்களை எனக்காக
வளைப்பதாகச் சொன்ன நீ
எனதழகு மின்னிடும் பொழுதுகளில்
பீதியுடன் முறைக்கிறாய்
எனது குரல்வளையினை நெரித்து
உனது நிம்மதிக்கான
பிரார்த்தனை கீதங்களைப்
பாடச் சொல்கிறாய்
என் நெற்றியில் தொடங்கியுன்
கூராயுதங்கள் கீறுகின்றன,
உயிருருகி வழியும் குருதியில்
தாகம் தணித்துக்கொள்கிறாய்
என் உயிரின் மூலங்களை
உன் வார்த்தைகளால் வேரறுக்கிறாய்
என் வாழ்வின் தீர்ப்பினை
இவ்வாறு நீயே எழுதுகிறாய் !
சிம்மாசனங்கள் வேண்டவில்லை
செங்கோலையும் தீண்டவில்லை
ஆட்சிகள்,ஆகிருதிகள் அத்தனையும்
உன்னுடையதாகவே இருக்கட்டும் ;
நானென்ன கேட்கிறேன் ?
பறவையின் உதிர்ந்த சிறு இறகினைப் போல
எடைகளற்றுத்தானே
இருக்கின்றன என் தேவைகள் !
இறுதியாக,
வாழ்வுக்கு ஒளியூட்டுவதாகச் சொல்லி
என் நெஞ்சின் ஓரத்தில்
தீச்சுடரை வைத்து - அது
பற்றி எரியும் போதினில் குளிர்காய்கிறாய்.
பரவாயில்லை.
உனது சந்தோஷங்களுக்காக நானெரிகிறேன்.
இப்படியே விட்டுவிடலாமென்னை !
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Sunday, June 15, 2008
துயர் துடைக்கும் விரல்கள் கொடு !

இறகுகளற்ற தேவதையவள்;
அள்ளிச் சூடும் ஆபரணங்களோ,
அலங்கார வார்த்தைகளோ,
தனித்த பூஞ்சோலையொன்றின் புல்வெளியில்
மீட்டப்படும் மெல்லிசையொன்றோ
அவளெழிலில் தோற்றுத்தான் போகும் !
ஆனால்...
அவள் பிரசவித்த விழிநீரே
துளித்துளியாய்ச் சேர்ந்து,
நாணல்கள் வளைத்துக் கரையுடைத்து,
அவளுக்கான எல்லைகளுடைத்து
அலையாய்,நதியாய்ப் பெருக்கெடுக்க
மீண்டும் மீண்டும்
சாட்டையாலடித்து வதை செய்யவென்றே
நாற்திசைகளிலும் காத்திருக்கிறது
சாத்தான்களுக்குப் பிறந்த கூட்டமொன்று !
தனிமையின் கொடுவாய்க்குள்
தன்னைத் தின்னக் கொடுத்துவிட்டு
காயங்களைப் போர்த்தி
ஆகாயம் பார்த்தபடி நடுநடுங்கி நிற்குமவளைக்
கொண்டு போ ராசகுமாரனே
அந்த மலைகளைத் தாண்டி...!
மாய உலகின் கரங்களை விலக்கி
மரங்களுக்கும் அதனுடனான தென்றலுக்கும்
தூதனுப்புகிறேன்
தூய பனிபடர்ந்த தேசமொன்றின்
குளிர்ந்த சோலைகளின்
அழகிய பெருவாழ்வை
அவளுக்குத் தருவாய்தானே நீ ?!
சாபங்கள் சூழ்ந்த
அவளது துயர வாழ்வைப் பாடுவதால்
ஆகப்போவது ஏதுமில்லையெனக்
கூறுபவர்கள் முன்னால் வரலாம் !
அலறல் மட்டுமே சுமக்கும் அவளது இசை
காற்றுடன் கலந்து போயொரு நாள்
சூரியனை விழுங்கிவிடும்,
நிலமிருட்டிப் பாதம் உதைக்க
எரிமலைகள் வெடித்துப் பிளக்கும்
நாளது வெகுதொலைவிலில்லையென்ற
அச்சத்தில் நடுநடுங்கியே
நானிதனை எழுதுகிறேன் !
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Sunday, June 1, 2008
என்னைத் தொலைத்த நான்...!

யுத்தப் பெருவெளியொன்றின்
விஷக்காற்றினைச் சுவாசித்தபடி
பேருவகை ஏதுமற்ற வாழ்வின்
கடைசிச் சொட்டில் உயிர் வழிய
காற்றின் துவாரங்களெங்கிலும்
ஒழுகும் எனது பாடல்கள்
துயரத்தைச் சோர்கின்றன !
எனது கழுத்தை நெரிக்க
நீளும் கைகள்
எனது நண்பனுடையதாக இருக்கின்றன,
எனது சுவாசம் பறித்துக்
காறியுமிழும் வாயும் அவனுக்கிருக்கிறது,
சுயநலத்தின் உள்ளங்கை
அவன் தலைதடவி
எனை நோக்கி அனுப்பியிருக்கிறது
அவன் உறிஞ்சி விழுங்கிச் சிரிக்கும்படியாகவே
என் உயிரும் நிரம்பி
வழிந்து கொண்டிருக்கிறது இப்போது !
ஒரு காலம் இருந்தது,
அன்று நாம் அழகாயிருந்தோம்,
இனிமையான பாடல்களும்,
தென்றலும்,வாசனையும்
எம்மைச் சூழ்ந்திருந்தது
எந்தவித அச்சங்களுமற்று
கனவுகளின் நீள்பாதை நீண்டுகிடக்க
மின்னலைப் பேசிய வானத்தின் கீழ்
நானுமவனும் மட்டும்
நடைபயின்று களிப்புற்றோம் !
ஒன்றான ரசனை எமை இணைத்த
நாட்களின் முடிவில்
ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவனானான்
அப்பொழுதுதான் முதன்முதலாக
அவன் ஆயுதம் எனை நோக்கி நீண்டது !
நட்பின் இறுதிச் சொட்டு
நயவஞ்சகத்தைக் கோர்த்துவந்தது,
எனைக் கொல்லத் தேடிவந்தது தெரியாமல்
என் தாய் அவனுக்கு உணவிட்டாள் !
எந்தச் சூனியமுன்னை இடறச் செய்தது?
எந்தக் கணத்தில்
சுவடழிக்கப்பட வேண்டியவனானேன்?
எந்தக் கூர்நகங்கள் கொண்ட கரங்கள்
உனக்கந்தக் கொலைக்கருவிகளை
எனை நோக்கி நீளச்செய்தன ?
எதற்காக நானன்று ஓடினேன் ?
ஓடிச் சோர்ந்து,தவித்து,நின்று
பாலைநிலமது
பாதங்களை விழுங்கிக்கொள்ள,
உயிர் வழியும் இறுதிச் சொட்டில்
என்னையே தொலைத்த
நானாகி நிற்கிறேன் பார்..!
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Thursday, May 15, 2008
ஒரு தேவதையும் சில சாத்தான்களும்..!

எந்த ஆரூடங்களாலும்
ஊகிக்கவே முடியாத
திடுக்கிடும் துயரங்களுடனானவொரு
காலத்தை நீ கொண்டிருக்கிறாய் !
இதிகாசத்திலிருந்து நீ வாழ்ந்துவரும்
புராதனக் குடியிலிருப்பிலின்னும்
பூதங்களின் ஆட்சி தொடர்வதை - நீ
சொல்லிச் சொல்லியழுத வேளை,
எதைக் கொண்டும் அணைக்கமுடியாத
சினக் கனலொன்று என்னுள்
மூண்டு பொங்கிப் பிரவகித்திற்று !
உனது விரல்கள் வடிக்கும்
உக்கிர ஓவியங்களைப்
பார்த்து,ரசித்து - உன்னை
உச்சத்தில் வைத்திடக் காலம்
பலபேரைக் கொண்டிருக்கையில் ;
எந்தச் சத்தியங்கள்
சகதிக்குள் புதைந்தனவோ...
எந்த வீரப்பிரதாபங்கள்
வெட்டவெளியிலலைந்தனவோ...
எந்த சுபவேளை கீதங்கள்
ஒப்பாரிகளாக மாறினவோ...
எந்தப் பிசாசுகள் உன்னில்
விலங்கு பூட்டிச் சிரித்தனவோ...
அத்தனையும் இன்னுமேன்
உன் நினைவுக்குள் இடறவேண்டும் ?
உன் விழி துடைக்க - பிற
தேவ தூதர்களின் சிறகுகளிலிருந்து
ஒற்றை இறகாவது நீளும் ;
உன்னை உறங்கச் செய்யும்
மந்திர வித்தையொன்றைக்
காற்றும் ஒருநாள் ஏகும் !
நம்பு !
அன்றைய தினமதில்
பூதங்களும் அவற்றின் அடிமைகளும்
பேரதிர்ச்சியில் பார்த்துநிற்க
சவால்களனைத்தையும் விழுங்கி
உன் மேனி சிலிர்த்து
ஆதிகாலந்தொட்டு வரும்
அத்தனை காயங்களையும்
ஒரு கணத்தில் உதறுவாய் !
வீழும் வலியனைத்தும் படபடத்துச்
செத்துமடியும் - பிசாசுகளின்
எல்லை தாண்டிப் பறந்த உன்னை
நண்பர்களின் உலகம்
கைகோர்த்து வரவேற்கும்
அப்பிரகாச நாளில்
என்னை மறந்திடுவாயா சினேகிதி?
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Thursday, May 1, 2008
எனக்கே எனக்கானதாக மட்டும்..!

உடைந்த வானத்தின் கீழ்
நிலவு சலித்தனுப்பிய
வெளிச்சத்தினூடு,
உறுதியற்ற தேசத்தினொரு மூலையில்
உடையாத வெட்கத்தை
உறுதியான இறகுகளால் போர்த்தியபடி
முன் காலமொன்றில்
அழகிய வண்ணத்துப்பூச்சிகள் சூழ
தேவதையாக நான் நின்றிருந்தேன் !
வேட்டைக்காரனாக நீ வந்தாய் ;
என்னையும்,வெட்கத்தையும்
மூடியிருந்த சிறகதனைக்
கத்தரித்துக் காதில் சொன்னாய்-இனிக்
காலம் முழுதும்
உன் சிறகுகள் மட்டுமே
போதுமெனைச் சுமக்கவென
அழகிய வாக்குறுதிகள் தந்தாய் !
அன்றிலிருந்துதான்
உனது வலிமை மேலோங்கிய
வேட்டைக்கரங்கள்,
எனது சுவாசங்களையும்
சிறிதுசிறிதாகக் கொடுக்கத்தொடங்கின !
எனக்குப் பல்முளைத்த அன்றின் இரவில்
தனியாக மெல்ல முடியுமினியென்றேன்,
உனது அத்தனை அகோரங்களும்
ஒன்றாய்ச் சேர்ந்து
அன்றுதான் என் உதடுகளைத்
தைக்க ஆரம்பித்தாய் !
எழுதவேண்டுமென்ற பொழுதில்
பேனாமுனை ஒடித்துச் சிரித்தாய்,
வரைவதற்கான வண்ணங்களைக்
கலந்த விரல்களை
வளைத்துச் சிதைத்தாய்,
பாடலுக்கான எண்ணமெழும் முன்னமே
நானூமை என
சொல்லிச் சொல்லி ரசித்தாய் !
இனிக் காலங்கள்
எனக்கே எனக்கானதாக மட்டும் இருக்கட்டும் !
இந்த வெடிப்புற்று வரண்டு,
கதிர்களேதுமற்ற வயல்வெளியில்
நேற்றிலிருந்து புதிதாக முளைக்க
ஆரம்பித்திருக்கும் பற்களால்
என் தீய கனவுகளை மென்று விழுங்கியபடி,
உச்சரிப்புப் பிழைகளோ,சுருதி விலகலோ
சுட்டிக்காட்ட யாருமின்றி...
ஒரு பக்கம் எனது கவிதைகள்,
மறு பக்கம் எனது வண்ணங்கள்
எனத் துணையாய்க் கொண்டு
பாடிக்கொண்டிருக்கிறேன் ;
ஆனாலும்,
என்னை விதவையென்கிறீர்கள் நீங்கள் !
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Tuesday, April 15, 2008
காதலென்றும் தலைப்பிடலாமிதற்கு !

நெருப்பு விழுங்கும் பறவையொன்றென்
நிழலிலேயே
உட்கார்ந்திருக்கிறது !
உங்கள் கனல்களை
அதன்மேல் கொட்டலாம்,
சாபங்களை அள்ளியெறியலாம் ;
அத்தனையையும் விழுங்கியது - நிலம்
அதிர அதிரச் சிரிக்கும் !
அதன் அருகாமை
வெப்பம் பரவியென் உடலசையுமெனில்
ஒருகணம் உற்றுப்பார்க்கும்,
விழிகளிரண்டும் எரிகற்களென எச்சரிக்கும்
நொடியில் நான் பொசுங்கிப்போவேன் !
சீண்டிப்பார்க்கலாம் - அதனை
சிரிக்கவைக்கவும் முயற்சிக்கலாம்,
தலைகோதித் தடவலாம்,
செல்லமாய்ச் சிறிது தட்டக்கூடச் செய்யலாம்;
அத்தனையையும்
மெதுவாய்ப் பார்த்து வாய்திறந்து
உங்களை முழுதாக உள்வாங்கிக் கொள்ளும் !
நுனிவிரல் தீண்டி
உடல்முழுதும் பொசுங்கிக் கருகும்
வேதனையை சிரிப்பால் உதறுவீர்களாயின்...
இதுவரையில் காதலிக்காதவர் பட்டியலில்
நீங்கள் இருப்பதாக
உறுதிபட உரக்கச் சொல்வேன் !
நெருப்பு விழுங்கும் பறவையது
தொடர்ந்தும் தன் சிறகினை உதறும் !
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Tuesday, April 1, 2008
பால்யம் நகரும் பொழுதை மிதி !

ஆலயங்களின் பெரும்பரப்பில்
அமைதி தேடிப் பாதங்கள் பதியும்
நாட்கள் நினைவில் இடற
ஒரு மலை போன்ற வேதனை,
ஒரு வனாந்தரப்பசுமை
அத்தனையும்
ஒருங்கே கொண்ட நெஞ்சுடன்
கனவாய்க் காற்றாய்
வாழ்க்கை தொலைத்தேன் ;
யாதுமாகி நின்ற உன்னையும்தான் !
பால்யத்துப் பள்ளிக்கூடங்களில்
ஒன்றாய்த் திரிந்தோம் ;
கூழாங்கற்கள்,ஓட்டுத் துண்டுகளைக்
கையால்,காலால் விளையாடிச் சோர்ந்துபின்
காட்டு இலைகளையும்,மணலையும்
சிரட்டையில் அள்ளிச் சோறாயெண்ணி உண்டோம் !
என் முழங்கால்ச் சிராய்ப்புக்கு
உன் எச்சில் தடவினாய்,
எவனோ உன் பட்டப்பெயர் சொல்லிக்கூவ
அவன் சட்டை கிழித்துச் சண்டை பிடித்தேன்
காதலில்லை,காமமில்லை
அறுவெறுக்கும் எந்த அசிங்கங்களும்
அதிலிருக்கவில்லை !
புது வயதுகள் பிறக்க,
பால்யம் பாதி கரைய,
வசந்தங்கள் உன் வாழ்வில் வர
நான் தனித்து வரண்டுபோனேன் ;
என் இரகசியச் சினங்களைத்
தூறலாய்ப்பொறுத்து
முக்காட்டுக்குள் நீ புகுந்தாய்,
நான் யாதாகித் திரிகிறேன்...?
நாடுதாண்டிக் கண்டம் தாண்டி,
செவியேற்க யாருமற்ற
பாழ்வீதியொன்றில்- நானின்று
நின்றுகொண்டேயிருக்கிறேன்
என் துயரங்களைப் பாடியபடி;
சாபங்கள் துரத்தித் துரத்தி விழுங்கி
பூமிக்குள் புதையுண்டிருக்குமெனது
பாதங்களை மீளப்பெறும் நாளில்
நாடேகுவேன் !
அன்று
வீதியில் உன் மழலைகள்
செம்மண் தூசு உடல் அப்ப
பால்யத்தில் திளைத்து விளையாடுவதைக்
காண நேரிடலாமெனக்கு..!
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Friday, March 21, 2008
மனவெடிப்பிலுன் தடம்பதித்து...!

ஒரு பெருவெளிப் போர்க்களத்தை
மனதுள் பரப்பிச்
சென்றதுன் வருகை
மீளவும் மீளவும்
சுடுகாடாய்ப் புகை கசிய
வெடித்துச் சிதறுகிறது மனம் !
அமைதி,அந்தஸ்து,
அத்தனை நிம்மதியும்
வாய்க்கப் பெற்றவன் நானென
இறுமாந்து நின்றவேளை
சலனமற்ற தூறலென
சப்தங்களை விழுங்கி,விழுங்கி
நீ வந்துநின்றாய்
உள்ளுக்குளென்ன வெள்ளமோ...
நானேதுமறியேன் !
வந்தாய் - விழியுரசிடச் சிலகணங்கள்
மௌனத்தை மொழியாக்கிப்
பார்த்தபடி நின்றாயதில்
சலனத்தையோ,சிவப்பையோ
நான் காணவில்லை !
கேள்விகளை மட்டுமே
வார்த்தைகளாக்கியுன்னிடம்
வருகையின் மூலத்தை - நான்
வினவிச் சோர்ந்தவேளையிலும்
என் நெஞ்சப்பரப்பில்
ஆழத்தடம் பதித்து,
மௌனத்தை மொழியாக்கி
ஓர் தென்றல் போல
நீ விலகிச்சென்றாய் !
உனது கருவிழிகள்
பயணிக்கும் திசையில்
மட்டுமே வாழ்ந்திடப்
பலர் காத்து நிற்கையில்...
எந்தக் கோலத்துக்கும்
வசப்படாப் புள்ளியொன்றிடம்
என்ன எதிர்பார்த்து நீ வந்தாய் ?
எந்தத்திசை நோக்கியும்
முடிவுறாப் பாதையொன்றில்
எங்கு பயணிக்கக் காத்திருந்தாய் ?
உன் வாசனை நிறுத்திச்சென்று
சிலபொழுது கடந்தவேளை,
தீயிடம் என் பெயரை - நீ
உச்சரித்து மாண்டதாக
வேதனை மிகும் செய்தியொன்று
காற்றோடு வந்தது !
ஒரு பெருஞ்சமுத்திரச்சோகத்தை
மனதில் ஓயாமல் அலையடிக்கச்
செய்ததுன்னிறப்பு.
மீளவும் மீளவும்
வசந்தங்களேதுமற்றவொரு
மயானத்து வனாந்தரமாய்
வெடித்துச் சிதறியும்
துடித்துக்கொண்டே
ஏனின்னும் இருக்கிறதுன்
நேசத்தை உணர்ந்திடா என் மனம் ?
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Saturday, March 1, 2008
மரணம் துரத்தும் தேசத்துக்குரியவனாக...!

எந்த தேவதைக்கதைகளும்
தேவையில்லை,
மெல்லிசைகளோ,சுகந்தங்களோ கூட
வேண்டவே வேண்டாம்,
பாவங்கள் சூழ்ந்த
இந்த யுத்தப்பிசாசினை மட்டும்
ஓட ஓட விரட்டி அதன்
ஓசைகளை நிறுத்தித் தாருங்கள் !
என் ஜன்னலில் தெரியும் வானம்
உங்களுடையதைப் போலவே
மேகம் தழுவும் மென் நீலமாயும்,
என் பாதங்கள் பயணிக்கும்
வயல்வெளி,வனாந்தரங்களத்தனையும்
உங்களுடையதைப் போலவே
அடர்பச்சை கலந்ததாயும்,
மழைநீரும்,நதியும்,நீர்வீழ்ச்சி,வாவிகளும்
நிறமற்றதாயும்,
வெயில் வெப்பம் சுமந்தலைவதாயுமே
இருக்கின்றதென்பதை மறுப்பீர்களாயினும்
உங்களைப் போலவே
காற்றைத்தான் நானும்
சுவாசித்துச் சீவிக்கிறேனென்பதை
மட்டுமாவது ஒத்துக்கொள்வீர்களா?
உங்களுக்கேயுரியதாக நீங்கள்
காவியங்களில் சொல்லிக்கொள்ளும்
சூரிய,சந்திர,நட்சத்திரங்கள்
எனக்கும் சில கிரணங்கள் மூலம்
வெளிச்சம் பாய்ச்சுவதோடு,
உங்கள் வியர்வையழிக்குமல்லது
மேனி சிலிர்க்கச் செய்யும் தென்றல்
எனக்காகவும் கொஞ்சம்
வீசத்தான் செய்கிறது !
உங்களுக்கேயுரியதான
இவ்வினிய பொழுதில்
எனதிப் புலம்பல் எதற்கெனில்
பசி,தாகம்,உறக்கமென
உங்களைப் போலவே
அத்தனை உணர்ச்சிகளும்
எனக்கும் வாய்த்திருக்கையில்...
பெரும் அடர்புற்றுப் போல்
என் தேசம் முழுதும்
வியாபித்துச் சூழ்ந்திருக்கும்
இந்த யுத்தப்பிசாசினை
ஓட ஓட விரட்டி அதன்
ஓசைகளை நிறுத்தித் தாருங்கள் !
உங்களைப் போலவே
எனக்கும்
எத்துயர் நிஜங்களோ,
தீய கனவுகளோ அற்றுக் கொஞ்சம்
நிம்மதியாக உறங்க ஆசை !
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Monday, February 18, 2008
தடங்களழியும் பொழுதிலுன் நேசம் ...!

வெப்பக்கணப்பொழுதின்
ஆவியேற்றப்பட்ட மேகப்பொதியை
மண்டைக்குள் பிதுக்கியடைத்ததாய்
பேய்க்கனம் கனக்கும்
இருவிழியும் மிகக்கலங்கி
தலைக்குள் வலியெடுக்கும்
மரணத்தின் எல்லையில்
ஆரம்பிக்கும் பாடலெனது !
எந்தப்பொழுதொன்றில்
என் பெயர் சொல்லியழைக்கின்றாய் ?
ஒரு கோடிக்கீற்றுக்களும்
எனக்கு மட்டுமேயான
அந்தகாரத்திலொரு பகுதிக்கேனும்
ஒளியினை வழங்கமுடியாப்பட்சத்தில்
எந்த நம்பிக்கையிலெனை
வழி தொடருகிறாய்...?
ஒப்பாரிக்கவி மட்டுமே பாடும்
ஒரு குயிலின் ராகத்தை
எந்தக்காற்றின் தேசத்திற்குள்
சிறையடைக்கப் பார்க்கின்றாய்?
அல்லது
எந்தக்காலத்தினறைகளுக்குள்
ஒளித்து வைக்கப்போகின்றாய்...?
உலகத்திலெனதிருப்பு
இந்நாள் வரை மட்டும்தானென
முடிவானதன் பிற்பாடுமதனை
மாற்றமுடியுமெனில் மட்டுமிங்குனக்கு
இருதுளிக் கண்ணீர் விடலாம் !
எனினும்,
கரையானாய்க் குடிபுகுந்து
மூளைக்குள் அரித்தெடுக்கும்
வலியுணர்ந்தவன்(ள்) நீயல்ல !
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Monday, February 11, 2008
நீ நிழலாய்ப் படரும் வெளிச்சம் !

விடிகாலைத் தூக்கம்,
மழைநேரத் தேனீர்,
பிடித்த செடியின் புதுமொட்டு,
புதுப்புத்தகக் காகிதவாசனை,
இமைதடவும் மயிலிறகு
மேலுரசிடச் சிலிர்க்கும்
ரோமமெனச் சுகமாய்
எனை ஏதும் செய்யவிடாமல்
நீ வந்து நிரப்புகிறாய்
எனதான பொழுதுகளை !
மூங்கில்களுரசிடக்
குழலிசை கேட்குமோ...?
உன் மொழியில்
தினம்தினமொரு இசை
எனைக்கேட்கச் செய்கிறாய் !
புருவம் தடவப் பூஞ்சிரிப்பு
தெற்றுப் பல்காட்டி மின்னும் ;
சிவந்த அழகுக் கன்னமென்
அழுத்தமான முத்தத்தில்
நிறம் மாறி நீலம்பூக்கும் !
விழிகளிரண்டும் மின்மினிப்பூச்சிகளென
விழித்திருந்து அலைபாய
என் தூக்கம் கரைத்துக்குடித்து
நீ புதிதாய் தினம் வளர்வாய் ;
உன்னிமையில் துயில் வளர்க்க
என் பொறுமை சோதிப்பாய் !
எனைப்பெற்றவளின் சுவாசங்களையும்
அத்தனை பதற்றங்களையும்
நானறியச் செய்தாயென்
பிரசவத்தின் இறுதிக்கணங்களில்
நீ வந்து அழுதாய் ;
நான் வலி நிறுத்திப் புன்னகைக்க...!
-எம். ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Friday, February 1, 2008
ஏழு ஜென்ம வதைப்படுத்தி...

உன் மௌனத்தில் வலியுணர்த்தி
எதுவும் பேசாமல்
நின்று நின்று பார்த்தபடியே
மெல்ல நகர்கிறாய் நீ !
காயப்பட்டவுன்னிதயத்துக்கு
ஆறுதலாகவொரு துளிக்கண்ணீரோ
ஒரு கண அரவணைப்போ
தரவியலாத் துயரத்தோடு நான் !
எந்த நம்பிக்கையிலுன் சிறு ஜீவனை
எனதூர்தியின்
நான்கு சக்கரநிழலுக்குள்
நீ வந்து உறங்கவைத்தாய் ?
நசுங்கிச் சிதைந்தவுன் வாரிசின்
சடலத்தைக் காணநேர்ந்த பிற்பாடும்
எந்தவொரு அனல்பார்வையோ,
சாபமிடலோ,வைராக்கியமோ இன்றி
ஒதுங்கிப் பார்த்திருக்கிறாய்
ஆறறிவாய் நீ !
கணங்களைச் சப்பிவிழுங்கும்
பணியின் அவசரநிமித்தம்
ஒரு நிமிடமொதுக்கி
வண்டியின் கீழ்ப் பார்க்கமறந்து
ஏழேழு ஜென்மத்துக்குமான
வேதனையில் சிக்கித் தவிக்கும்
ஐந்தறிவாய் நான் !
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Monday, January 21, 2008
விதிக்கப்பட்ட மரணம் !

அது நீலமோ,சாம்பலோ
தெரியவில்லை
இரண்டும் கலந்தவோர்
அடர்நிறம் போர்த்திய அதிகாலை !
ஒரு பொழுதின் ஏக்கமும் ,
ஒரு பொழுதின் வசந்தங்களும்
பனியில் குழைக்கப்பட்டு
அந்நிறம் உருவாகியிருக்கக்கூடும் !
அடர்ந்த வனாந்தரத்துள்
மெல்லிய துயரத்தோடு
தனித்தாடும் ஆண்மயிலின்
இறகுகளின் முனையில்
அந்நிறத்தைக் காணலாம் !
அன்றியும் ,
மாலைவெயிலை
எதிர்கொண்டு நடக்கையில்
சட்டெனத் திரும்பிப்பார்ப்பீர்களாயின்
நிழலில் ஒரு கணம் - அந்
நிறம் தோன்றக்கூடும் !
வனம் கலைத்துச் செல்லும் பறவை
வான்வெளியில்
சிறகுதிர்த்துச் செல்வது போல
உங்கள் மனப்பரப்பில்
அந்நிறம் இப்பொழுது
கிளைபரப்பத் தொடங்கியிருக்கும் !
தொலைதூரப் பெருங்கடல்
தொடுவானுடன் சங்கமிக்கும்
புள்ளியொன்றில் தோன்றுமே...
அதே நிறம்தான் !
விடுங்கள் - உங்களுக்கு
ஆயிரம் வேலைகளிருக்கும் !
அன்றைய விடிகாலையில்
அவன் இறுதிமூச்சு விட்ட காற்றோடு
ஆயுதங்களால் விதிக்கப்பட்ட
அநீதியைப்பார்த்த சாட்சியாய்
அந்நிறம் மட்டுமேயிருந்தது !
- எம்.ரிஷான் ஷெரீப் ,
மாவனல்லை,
இலங்கை.
Thursday, January 10, 2008
தீயெனத் தனிமை சுட ...!

எந்தவொரு மேகக்கூட்டமும்
எனக்கென்று நிற்காதவொரு
பெரும்பரப்பில் நான்;
பேசக்கேட்க யாருமற்றுத்
தனித்திருக்கிறேன் !
இப்பொழுதுக்குச் சற்றுப்பின்
வலி மிகும் தொனியுடனான
எனது பாடல்
மணற்புயலடித்துக் கண்ணையுருத்தி
உடற்புழுதியப்பும்
இப்பாலைவனம் பூராவும்
எதிரொலிக்கக் கேட்கலாம் !
எனைச் சூழ ஒலித்தோயும்
எந்தவொரு அழைப்பும்
எனக்கானதாக இருப்பதில்லை ;
எனைச் சிதைத்து ஆளும்
இப் பெருவலியையும்
எவரும் உணர்வதில்லை !
இப்படியே போனாலோர் நாளென்
முதல்மொழியும் மறந்துவிடுமென
எண்ணிச் சோர்ந்த பொழுதொன்றில்
விழும் துளியொவ்வொன்றுமென்
செவிக்குள் ரகசியம் பேசித்
தசை தடவிக் கீழிறங்கி,
மணலுறிஞ்சி மறைந்து போக
சிறு தூறலாய் மழைத்துளி வீழ்ந்து
நெஞ்சம் நனைக்கக் காண்பேனா?
எனைச் சூழ்ந்திருக்கும்
தனிமையையும் , மௌனத்தையும்
பெரும் சாத்தான் விழுங்கிச்சாக - என்
தோள்தொட்டுக் கதை பேசவொரு
சினேகிதம் வேண்டுமெனக்கு.
நீயென்ன சொல்கிறாய் ?
- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை
Tuesday, January 1, 2008
பூக்களில் உறங்கும் மௌனங்கள்...!

பின்புலக்காட்சிகளெதுவும்
புலப்படாப்பொழுது கடந்து
பூனையாய் நிலவலையும் தெருவொன்றின்
வெளிச்சம் குவியும் மையத்தில்
நீயும் நானும் மட்டும்
நின்றிருந்தோம் !
விரக்தியும்,பசியின் வீம்பும்
நிர்க்கதி நிலையும்,விழிநீரும்
நிறைந்திருந்தவுன்
நயனங்களைச் சிமிட்டிச்சிமிட்டி
சக்கையாய்ப் பிழியப்பட்டவுனது
வாழ்வினொரு பக்கத்தை - நீ
திறக்கப்போவதாயெண்ணிக் காத்திருந்தேன் !
என்ன காண நேர்ந்ததுவோ...?
எதைக் கதைக்க வந்தாயோ...?
எதனையுமுன் இதழ் திறக்கவில்லை ;
தோள் தொட்டுக்கேட்டேன்,
விழிநீர் துடைத்துக் கேட்டேன்.
விம்மித்தவித்துத் துடித்து
விளங்காப் பொருளாய்
மௌனம் உதிர்த்தாய் !
வழித்துணை மறுத்து
நீ தனியாய் வீடு சென்றாய் ,
முதுகு காட்டி நான் நகர
பெயர் சொல்லியழைத்து
கையசைத்து விடைபெற்றாய் ;
கண்ணீர் நிரம்பியவுன் செவ்விழிகளினூடு
கலங்கலாய் நான் தெரிந்தேனா?
உதிரும் வரையில் மிக ஆழமான
மௌனத்தை மட்டுமே மொழியாய்ப்பேசும்
மலர்களுக்கு ஒப்பாக
மறுநாளின் விடியலில்
உன் வளவுப்பாசிக்கிணற்று நீரைக்
குருதி நிறமாக்கி
வல்லுறவுக்கும்,வதைப்படுத்தலுக்கும்
ஆற்பட்டுக் கொல்லப்பட்டவுன்
சடலம் மிதந்தது !
நினைத்த பொழுதுதோறும் வந்து
காத்துக் கிடக்கிறோம்
உன்னிடம் கேட்கவென
ஓராயிரம் கேள்விகளோடு
நானும்,நீ துயிலுறுமுன்
கல்லறை மௌனப் பூக்களும்...!
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Wednesday, December 26, 2007
சுனாமியழித்த சினேகிதனுக்கு...!

எங்கிருக்கிறாய்
எனதினிய நண்ப?
கறுப்பு,வெள்ளை ஓவியங்களாய்க்
காட்சிகள் மறைய
நிலவின் சாட்சியாக
நீ வாழ்ந்த ஊருக்கு
நிவாரணப் பொருட்களோடு
நாமனைவரும்
நள்ளிரவில் வந்தடைந்தோம் !
உனது சுவடு பதித்த
கடற்கரை,
உனது சுவடு அழித்த
கடல்
அனைத்தையும் பார்த்து
விக்கித்து நின்றோம் !
என்றாவதொருநாளில்
என்னையும் - உனதூருக்கு
அழைத்துச் சென்று,
கடல் அழகு காட்டி,
நடுநிசியில் - சுடச்சுட
மீன் வறுத்த
நிலாச்சோறுண்ணும் ஆசையை
இறுதியாக என்னிடம்
சொல்லிச் சென்றிருந்தாய் !
புன்னகை தவறிய முகங்களையும்,
விரக்தி தேங்கிய கண்களையும்
பார்க்க நேரிட்டபோதெல்லாம்
உன்னையும் உயிருடன்
சந்திக்க வேண்டுமென
இதயம் - ஏங்கித் தவித்திற்று !
உனது இறுதி மூச்சை
ஏந்திய காற்று,
உனது சுவாசப்பைகளை
நிரப்பிய சமுத்திரம்,
உனது தேகத்தை
விழுங்கியிருக்கும் பூமி
அனைத்தும்,
உனது ஞாபகங்களைத் திரட்டி
என்னிடம் தந்தன !
கொடிய கனவொன்றினால்
திடுக்கிட்டெழுதல் போல
கொடியில் உலரும்
உனதாடைகளைக் காண
நேரிடும் கணங்களிலெல்லாம்
நெஞ்சு நடுங்கி,
விம்மித் தடுமாறுகின்றேன்
உனது வெறுமையுணர்ந்து
திகைத்து நிற்கின்றேன் !
உனது தொழுகைகளும்,
நோற்ற நோன்புகளும்,
வாய்மொழிந்த திக்ருகளும்
ஓதிய ஒவ்வொரு ஆயத்களும்
நீ பற்றிக்கொள்ள
பெரும் தூணாக அமைந்திருக்குமென
உறுதியாக நம்புகிறேன் !
எனது அறையில்
என்னுடன் வசித்த
என்னினிய நண்பனே;
மஹ்ஷரில்
மறுபடியும் கரம் கோர்ப்போம்,
நீண்ட நடை பயில்வோம் - அங்கே
சுனாமி வராது !
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Saturday, December 22, 2007
எனதூருக்கு வருவாயா...?

அன்புடன் சினேகிதனுக்கு ...,
பனை மரங்களையும்
பவளப் பாறைகளையும்
பார்த்திடும் ஆவலில் நீ
எனதூர் வரப்போவதாக
மூன்று வாரங்களுக்கு
முன் அனுப்பிய
அஞ்சலட்டை
இன்றென் கரம் சேர்ந்தது !
என்ன செய்ய ?
உள்நாடு தானெனினும் - அதுவும்
பல சாவடிகளில் தரித்தே
வரவேண்டியிருக்கிறது !
யுத்தம் தின்று துப்பி
எச்சிலான எனதூரில்,
சமுத்திரம் உறிஞ்சிக் குடித்து,
வாந்தியெடுத்துயிர் பிழைத்த
மக்களுடன் முகாமினில்
எனது இருப்பு !
நண்பா ,
பனை மரங்களை விட
மீஸான் கட்டைகளே
தற்போது '
எனதூரெங்கும் நடப்பட்டுள்ளன.
ஆழிப்பேரலை
தாண்டவமாடிப் போன
பவளப் பாறைகளினிடையில்
மனித எலும்புகளே -
மக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன !
எனதூரைத் தாண்டிச் செல்லும்
நிலவும்
தவித்து அழும்;
நட்சத்திரங்களும் நடுநடுங்கித்
திசைமாறித் துடிக்கும் !
நடுநிசி இருளில்
வெடியோசைகளோடு
அப்பாவி ஆன்மாக்களின்
அலறல் கேட்டு
ஒரு பொழுதேனும் -இதயம்
அதிர்ந்த அனுபவம்
உண்டா உன்னிடத்தில் ...?
பௌர்ணமி நிலவெரிந்து ,
உறக்கம் தொலைத்த
கறுப்பு இரவுகளில் ,
தொலைதூர சப்பாத்துக்
காலடிச் சத்தங்கள்
நெஞ்சினில் மிதித்துப் போகும்
வலியை என்றேனும்
உணர்ந்ததுண்டா நீ?
நீ பாதம் பதிக்குமிடமெல்லாம்
கண்ணிவெடி புதைக்கப்பட்டிருக்கும் ;
கவனமாக வா !
உன் மூச்சுக் காற்றோடு
விஷவாயு சங்கமிக்கும் ;
சுவாசிக்க முன் யோசி !
நீ வந்து சேர வசதியாக
எனதூரின் அடையாளம்
கேட்டிருந்தாய் ;
துப்பாக்கி சல்லடையாக்கிய
சுவர்களுடையதும் ,
நிலையுடன் சேர்த்து
கதவுகளும் , யன்னல்களும்
களவாடப்பட்டதுமான
பாழடைந்த வீடுகள் ,
இரத்தக் கறை படிந்து
கறுத்துப் போன வேலிகள்
பாதையோரத்திலிருந்து
மயானத்தை ஞாபகப்படுத்துமெனில்,
அது எனதூர் !
இன்னும் ஒரு புராதனகால
இரும்புத் தகடு
" இந்த அழகிய கிராமம்
இனிதே உங்களை வரவேற்கிறது !"
என்ற வாசகங்களுடன்
எஞ்சியிருக்கும்
ஒன்றை ஆணியில் சரிந்து தொங்கும் !
- எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.
Subscribe to:
Posts (Atom)

