Sunday, July 10, 2011

சாபங்களைச் சுமப்பவன்

நேர் பார்வைக்குக் குறுக்கீடென
ஒரு வலிய திரை
ஏமாற்றுபவனுக்கு இலகுவாயிற்று

பசப்பு வரிகளைக் கொண்ட
பாடல்களை இசைத்தபோதும்
வெறித்த பார்வையோடு தான்
துயருறுவதாகச் சொன்ன போதும்
பொய்யெனத் தோன்றவில்லை
ஏமாறியவளுக்கு
இருள் வனத்திலொரு ஒளியென
அவனைக் கண்டாள்

புகைப்படச் சட்டங்களுக்குள்ளிருந்து நீண்டன
வாழ்வு கொடுப்பதாகச் சொன்ன
அவனது கைகள்
ஒலிக் கோப்புகளிலிருந்து வழிந்தன
தூரத்திலிருந்து அவனளித்த உத்தரவாதங்கள்

அவளது கைகளைப் பிணைத்திருந்தது
அவனிட்ட மாயச் சங்கிலி
விலங்கிடப்பட்ட பறவையென
காலடியில் வீழ்ந்துகிடந்தாள்
சிறகுகளை ஒவ்வொன்றாகப் பிய்த்தெறிந்தன
கூரிய நகங்களைக் கொண்ட
அவனது விரல்கள்
பின்னர் உச்சியில் ஏற்றிவிட்டு
விரைத்த ஒரு பொம்மையென விழச் செய்தான்

நேர்கோடென நட்சத்திரமொன்று வீழ்ந்த இரவில்
இருவரையும் நனைத்தது மழை
அவளது குருதியும் வேதனையின் ஓலமும்
தடயமழிந்து போயிற்று
என்றென்றைக்குமவளது
சாபங்களைச் சுமப்பவனானான் அவன்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# வடக்குவாசல் இதழ் - ஒக்டோபர், 2010
# உயிர்மை
# நவீன விருட்சம்
# தமிழ் எழுத்தாளர்கள்
# திண்ணை
# வார்ப்பு

4 comments:

ப.மதியழகன் said...

கவிதை அருமையாக இருந்தது.இணைய இதழ்(நவீன விருட்சம்,திண்ணை,கீற்று,பதிவுகள்,வார்ப்பு,வடக்குவாசல்) மற்றும் இலக்கிய சிற்றிதழ்களில் எழுதி வரும் எனது இரண்டாவது கவிதை தொகுப்பு வெளிவந்துள்ளது.உடுமலை.காம்ல் வாங்கலாம்.முகவரி udumalai.com/?prd=sathurangam&page=products&id=10029

க.நா.சாந்தி லெட்சுமணன். said...

அன்பு சகோ ரிஷான் நலமா? உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை. உங்களின் கவிதை நடை வித்தியாசமானது. அதற்கு நான் அடிமை.

M.Rishan Shareef said...

அன்பின் ப.மதியழகன்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :-)

M.Rishan Shareef said...

அன்பின் க.நா.சாந்தி லெட்சுமணன்,

//அன்பு சகோ ரிஷான் நலமா? உங்கள் கவிதைகள் அனைத்தும் அருமை. உங்களின் கவிதை நடை வித்தியாசமானது. அதற்கு நான் அடிமை.//

நலம் சகோதரி..நீங்கள் எப்படியிருக்கிறீர்கள்? :-)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :-)