Wednesday, January 4, 2012

புகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய்...


சலனமற்ற தூறலோ நிலவோ வெயிலோ
எதுவோ நகரும் இக் கணத்தில்
வரையப்பட்ட மண்டையோட்டின்
சாயலில் காண்கிறேன் என்னை
வளைந்து நெளிந்து செல்லும்
இப் பாதையொரு முடிவிலி

இரு மருங்குப் புதர்களிலிருந்தும்
வெளிப்பட்டிருக்கும்
புகையாய் காற்றாய் ஏதோவொரு ஆவியாய்
புதையுண்ட மனித உயிர்கள்
காலக் கண்ணாடியை விட்டும்
இரசம் உருள்கிறது
அதில் தென்பட்ட விம்பங்கள்தான்
புதையுண்டு போயினவோ

வேர்களில் சிக்கியிருக்கும்
உடல்களிலிருந்து எல்லாச் செவிகளையும்
உறிஞ்செடுத்த விருட்சங்கள்
எவ்விசை கேட்டு வளரும்
விதியெழுதும் பேனா
எக் கணத்தில் முறிந்திடுமோ
காத்திருக்கலாம்
இங்கு பூதம் காத்த விளக்காய் நான்

கால்களை விரித்தாடும்
எனது நிழல்களில்
ஒரு குழந்தை
ஒரு கொடூர விலங்கு
இணைந்திரண்டும்
ஒரு கணமேனும் விடாது அசைகின்றன
பார்வைக்குத் தெரியாத இழையொன்றால்
பிணைக்கப்பட்டிருக்கிறேனா
தெரியவில்லை

கடந்த காலத்தைக் காட்டிட
பறவைகளிடமில்லை
என்னிடமிருக்கின்றன
தேய்ந்தழியக் காத்திருக்கும் எனதேயான
பாதத் தடங்கள்

சுற்றிவரச் சட்டமிட்ட கூண்டுக்குள்
வளரும் தளிர் நானா
எவ்வாறாயினும் என்னில் வரையும்
எந்த வண்டிலுமில்லை
உணர்கொம்பில் ஒட்டிய தேன்
மண்டையோட்டிலுமில்லை
குருதியின் ஈரலிப்பு

பிறகும்
என் முகம் எதிலும் இல்லை
இருக்கக் கூடும்
இவ் வரிகளின் ஏதேனுமொரு மூலையில் நான்
நானாகவே

- எம். ரிஷான் ஷெரீப்
20100702

நன்றி 
# காலச்சுவடு இதழ் - 142 - அக்டோபர் 2011
# திண்ணை
வல்லினம் - கலை, இலக்கிய இதழ் - 37, ஜனவரி 2012
ஓவியம்: காச வினய்குமார்

6 comments:

Anonymous said...

// வேர்களில் சிக்கியிருக்கும்
உடல்களிலிருந்து எல்லாச் செவிகளையும்
உறிஞ்செடுத்த விருட்சங்கள்
எவ்விசை கேட்டு வளரும்//.

இந்த கொடுரமான வரலாற்றின் தடங்களினூடு தன்னைத் தேடும் ஒரு கவிஞன் மண்டையோட்டை மனித அழிவின் ஓவியமாய் வரைவதில் நிறங்கள் பூக்கவில்லை... கருகி கருகி விழுந்தழியும் நிறங்களை அள்ளியும் அளைந்தும் அப்பி அப்பி வரைய ஓயாது எத்தனிக்கிறான் வார்த்தைகளால். எம்மிலும் அவை தெறித்துப் பறக்கிறது. திரும்பத் திரும்ப வாசித்தேன்... அவன் நடந்துசெல்லும் பாதையில் அவன் இன்னும் மறைந்தானில்லை என் கண்களுக்கு. அற்புதமான கவிதை.
- -ரவி (சுவிஸ்)

hema said...

wow!!!!!!! really fantastic rishan.......

ராஜா சந்திரசேகர் said...

உதிரியாய் காட்சிகள் வந்து விழுந்தாலும் அது கொள்ளும் கனம் கவிதையை மையம் பிசகாமல் பார்த்துக்கொள்கிறது.

M.Rishan Shareef said...

அன்பின் ரவி,

//// வேர்களில் சிக்கியிருக்கும்
உடல்களிலிருந்து எல்லாச் செவிகளையும்
உறிஞ்செடுத்த விருட்சங்கள்
எவ்விசை கேட்டு வளரும்//.

இந்த கொடுரமான வரலாற்றின் தடங்களினூடு தன்னைத் தேடும் ஒரு கவிஞன் மண்டையோட்டை மனித அழிவின் ஓவியமாய் வரைவதில் நிறங்கள் பூக்கவில்லை... கருகி கருகி விழுந்தழியும் நிறங்களை அள்ளியும் அளைந்தும் அப்பி அப்பி வரைய ஓயாது எத்தனிக்கிறான் வார்த்தைகளால். எம்மிலும் அவை தெறித்துப் பறக்கிறது. திரும்பத் திரும்ப வாசித்தேன்... அவன் நடந்துசெல்லும் பாதையில் அவன் இன்னும் மறைந்தானில்லை என் கண்களுக்கு. அற்புதமான கவிதை.
- -ரவி (சுவிஸ்)//

வருகைக்கும் அருமையான கருத்துக்கும் நன்றி நண்பரே.

M.Rishan Shareef said...

அன்பின் ஹேமா,

//wow!!!!!!! really fantastic rishan.......//

மிகவும் நன்றி தோழி :-)

M.Rishan Shareef said...

அன்பின் ராஜா சந்திரசேகர்,

//உதிரியாய் காட்சிகள் வந்து விழுந்தாலும் அது கொள்ளும் கனம் கவிதையை மையம் பிசகாமல் பார்த்துக்கொள்கிறது.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !