Friday, March 1, 2013

துயர் விழுங்கிப் பறத்தல்


பறந்திடப் பல
திசைகளிருந்தனவெனினும்
அப் பேரண்டத்திடம்
துயருற்ற பறவையைத் தேற்றவெனவோ
சௌபாக்கியங்கள் நிறைந்த
வழியொன்றைக் காட்டிடவெனவோ
கரங்களெதுவுமிருக்கவில்லை

ஏகாந்தம் உணர்த்தி உணர்த்தி
ஒவ்வொரு பொழுதும்
காற்று ரணமாய்க் கிழிக்கையில்
மௌனமாகத் துயர் விழுங்கும் பறவை மெல்ல
தன் சிறகுகளால்
காலத்தை உந்தித் தள்ளிற்றுதான்

முற்காலத்திலிருந்து தேக்கிய வன்மம்
தாங்கிட இயலாக் கணமொன்றில் வெடித்து
தன் எல்லை மீறிய பொழுதொன்றில்
மிதந்தலையும் தன் கீழுடலால்
மிதித்திற்று உலகையோர் நாள்

பறவையின் மென்னுடலின் கீழ்
நசுங்கிய பூவுலகும் தேசங்களும்
பிதுங்கிக் கொப்பளித்துக் காயங்களிலிருந்து
தெறித்த குருதியைப் பருகிப் பருகி
வனாந்தரங்களும் தாவரங்களும்
பச்சை பச்சையாய்ப் பூத்துச் செழித்திட
வலி தாள இயலா நிலம் அழுதழுது
ஊற்றெனப் பெருக்கும் கண்ணீர் நிறைத்து
ஓடைகள் நதிகள்
சமுத்திரங்கள் வற்றாமல் அலையடித்திட

விருட்சக் கிளைகள்
நிலம் நீர்நிலைகளெனத் தான்
தங்க நேர்ந்த தளங்களனைத்தினதும்
தடயங்களெதனையும் தன்
மெலிந்த விரல்களிலோ
விரிந்த சிறகுகளிலோ
எடுத்துச் செல்லவியலாத் துயரத்தோடு
வெளிறிய ஆகாயம் அதிர அதிர
தொலைதுருவமேகிற்று
தனித்த பறவை

- எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# உயிர்நிழல் இதழ் - 35, ஜூலை 2012உயிர்மைமகுடம் இதழ் - 03வெயில்நதி இதழ்திண்ணைபதிவுகள்

6 comments:

பிரவின்ஸ்கா said...

Nallarukku..
- Pravinska

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_27.html) சென்று பார்க்கவும்... நன்றி...

mohamedali jinnah said...

எம்.ரிஷான் ஷெரீப்கவிதைகள்
இவரின் எழுத்தாளுமை அசர வைக்கும். நீண்டக்காலமாக இவரின் எழுத்துகளின் ரசிகை நான். கவிதைகள், சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள் என இவரின் படைப்புகள் பல. புத்தகங்களும் பல வெளியிட்டிருக்கும் இவரின் கவிதைகளில் மிகப் பிடித்தமானது காத்திருப்பு என்ற கவிதை. மேலும் உன் காலடி வானம் என்ற கவிதையும் அதற்கு தகுந்த படமும் மனதைக் கவர்கிறது.

இன்றைய அறிமுகங்கள் அனைவரும் மனத்தைக் கொள்ளை கொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.. மீண்டும் நாளை புதிய அறிமுகங்களுடன் சந்திக்கிறேன்..

அன்புடன்,
பூமகள்.
Source :http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_27.html

M.Rishan Shareef said...

அன்பின் ப்ரவின்ஸ்கா,

கருத்துக்கு நன்றி.
நலமா?
நீண்ட காலமாக உங்களைக் காணக் கிடைக்கவில்லை. எங்கிருக்கிறீர்கள் நண்பா?

M.Rishan Shareef said...

அன்பின் தனபாலன்,

மிகவும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் நீடூர் அலி,

நன்றி அன்பு நண்பரே !