Wednesday, April 10, 2013

காலத்தின் கொலைகாரன்


வினைகளின் சருகுகளைத் தீண்டிடவென
புதிதாக விழுந்திருக்கிறது
ஐங்கூர் பழுத்த இலை
சிவப்புக் கலந்த நிறமதற்கு
உடைசல்களின் சிதிலங்களுக்கிடையில்
சிக்கியிருக்கிறது புதுத் தளிரொன்றும்

எப்படிப் பூத்ததுவோ
பசுமையெரிந்த செடிகளுக்கிடையில்
எதற்கும் வாடிடா மலரொன்று
அன்றியும்
எந்தக் கனிக்குள் இருக்கின்றது
அடுத்த மரத்துக்கான விதை

எல்லா வாசனைகளும் பூக்களாகி
நாசிக்குள் நுழையும் கணமொன்றில்
செழித்த ஏரியின்
கரைகளைக் காக்கின்றன ஓர மரங்கள்

வசந்தத்தின் முகில் கூட்டங்களலையும்
சுவரோவியங்களில் தோப்புக்கள்
எவ்வளவு ரம்யமானதாயிருக்கின்றன

இங்கு நீர் தேங்கிய குட்டைகளில்
தலைகீழாக வளருகின்றன
அருகாமை சடப்பொருட்கள்

விம்பங்கள் மட்டுமே காட்டுகின்றன
வாழ்வின் நிறங்களை
கனவுக் கண்ணாடிகளில்

தேய்ந்திடும் காலமொன்றை நோக்கியே
நகரும் எண்ணங்களுக்குக் கூடமைத்து
வர்ணங்களைத் தீட்டலாமினி

ஆமாம்
காத்திருப்பு
காலத்தின் கொலைகாரன்தான்

- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி
# அம்ருதா, மகுடம் - கலை,இலக்கிய இதழ் 03, நவீன விருட்சம், பதிவுகள், திண்ணை

Friday, March 1, 2013

துயர் விழுங்கிப் பறத்தல்


பறந்திடப் பல
திசைகளிருந்தனவெனினும்
அப் பேரண்டத்திடம்
துயருற்ற பறவையைத் தேற்றவெனவோ
சௌபாக்கியங்கள் நிறைந்த
வழியொன்றைக் காட்டிடவெனவோ
கரங்களெதுவுமிருக்கவில்லை

ஏகாந்தம் உணர்த்தி உணர்த்தி
ஒவ்வொரு பொழுதும்
காற்று ரணமாய்க் கிழிக்கையில்
மௌனமாகத் துயர் விழுங்கும் பறவை மெல்ல
தன் சிறகுகளால்
காலத்தை உந்தித் தள்ளிற்றுதான்

முற்காலத்திலிருந்து தேக்கிய வன்மம்
தாங்கிட இயலாக் கணமொன்றில் வெடித்து
தன் எல்லை மீறிய பொழுதொன்றில்
மிதந்தலையும் தன் கீழுடலால்
மிதித்திற்று உலகையோர் நாள்

பறவையின் மென்னுடலின் கீழ்
நசுங்கிய பூவுலகும் தேசங்களும்
பிதுங்கிக் கொப்பளித்துக் காயங்களிலிருந்து
தெறித்த குருதியைப் பருகிப் பருகி
வனாந்தரங்களும் தாவரங்களும்
பச்சை பச்சையாய்ப் பூத்துச் செழித்திட
வலி தாள இயலா நிலம் அழுதழுது
ஊற்றெனப் பெருக்கும் கண்ணீர் நிறைத்து
ஓடைகள் நதிகள்
சமுத்திரங்கள் வற்றாமல் அலையடித்திட

விருட்சக் கிளைகள்
நிலம் நீர்நிலைகளெனத் தான்
தங்க நேர்ந்த தளங்களனைத்தினதும்
தடயங்களெதனையும் தன்
மெலிந்த விரல்களிலோ
விரிந்த சிறகுகளிலோ
எடுத்துச் செல்லவியலாத் துயரத்தோடு
வெளிறிய ஆகாயம் அதிர அதிர
தொலைதுருவமேகிற்று
தனித்த பறவை

- எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# உயிர்நிழல் இதழ் - 35, ஜூலை 2012உயிர்மைமகுடம் இதழ் - 03வெயில்நதி இதழ்திண்ணைபதிவுகள்

Friday, February 1, 2013

சொல்லித் தீராத சங்கிலி



எறிகல்லோடு சேர்ந்து வீழ்ந்த தாரகையொன்று
வர்ணத் திரைச்சீலைக்கப்பால்
சமையலறையில் உறைகிறது
வரவேற்பறையிலிருந்து எழும்புகின்றன படிக்கட்டுக்கள்
யன்னலால் எட்டிப் பார்க்கும் வெயிலுக்கு
ஏறிச் செல்லப் பாதங்களில்லை

கூடத்தில்
வீட்டின் பச்சையைக் கூட்டுகிறது
பூக்கள் பூக்காச் சிறு செடியொன்று
காலணி தாங்கும் தட்டு
தடயங்களைக் காக்கிறது

ஒரு தண்ணீர்க் குவளை
தோலுரித்த தோடம்பழச் சுளைகள் நிறைந்த பாத்திரமொன்று
வாடாத ஒற்றை ரோசாப்பூவைத் தாங்கி நிற்கும் சாடி
வெண்முத்துக்கள் சிதறிய மேசை விரிப்புக்கு
என்னவோர் எழில் சேர்க்கின்றன இவை

பிரகாசிக்கும் கண்கள்
செவ்வர்ணம் மிகைத்த ஓவியமொன்றென
ஆகாயம் எண்ணும்படியாக
பலகை வேலிக்கப்பால் துள்ளிக் குதித்திடும்
கறுப்பு முயல்களுக்குத்தான் எவ்வளவு ஆனந்தம்

எந்த விருந்தினரின் வருகையையோ
எதிரொலிக்கிறது காகம்
அவர் முன்னால் அரங்கேற்றிடவென
வீட்டைத் தாங்கும் தூண்களிரண்டின் இதயங்களுக்குள்
ஒத்திசைவான நாடகமொன்று ஒத்திகை பார்க்கப்படுகிறது

இரவின் அந்தகாரத்துக்குள் ஒளிந்துபோன
காதலின் பெருந்தீபம்
சொல்லித் தீராத சங்கிலியொன்றோடு
மௌனத்தைப் பிணைத்திருக்கிறது
என்னிலும் உன்னிலும்

- எம்.ரிஷான் ஷெரீப்
09012012

2012 ஆம் ஆண்டு சர்வதேச ரீதியில் 'பண்புடன்' குழுமம் நடத்திய ஆண்டு விழாப் போட்டியில் இரண்டாம் பரிசினை  வென்ற கவிதை 

நன்றி
# அம்ருதா இதழ் - நவம்பர், 2012 
# யாத்ரா இதழ் - நவம்பர், 2012
# எதுவரை இதழ் - ஜனவரி, 2013
# உயிர்மை
# திண்ணை
# நவீன விருட்சம்
# பதிவுகள்
# Artist - Roshan Dela Bandara

Thursday, January 3, 2013

இரவு விழித்திருக்கும் வீடு

# இலங்கை, தொழிற்சங்க மத்திய நிலையத்தின் இலக்கிய இணைக் குழுவானது அகில இலங்கை ரீதியில் நடத்திய 'வியர்வையின் ஓவியம்' இலக்கியப் போட்டி - 2012 இல் சிறப்புப் பரிசினை வென்ற கவிதை 

# 2012 இல் சர்வதேச ரீதியில் நடைபெற்ற 'பண்புடன்' ஆண்டு விழாப் போட்டியில் இரண்டாம் பரிசினை வென்ற கவிதை

                         இரவு விழித்திருக்கும் வீடு

நீ கதிரறுக்கும் வயல்பூமியை மஞ்சளால் போர்த்திய
அம் மாலை நேரம் எவ்வளவு அழகாயிருந்தது
இறுதியாக செஞ்சாயத் தேனீரும் கறுப்பட்டித் துண்டும்
சுமந்து வந்து அருந்த வைத்த உன் மனைவியின்
காலடித் தடத்தில் முழுவதுமாக இருள் உறைந்த
உனது தற்கொலைக்கு முன்னதான அக் கணம் வரை

பயிர்களை விதைக்கையில் நீயெழுப்பிய இனிய கீதம்
அம் மலைச்சரிவுகளில் இன்னும் அலைகிறது
மேய்ப்புக்காக நீயழைத்துச் செல்லும் செம்மறிகள்
ரோமம் மினுங்க வந்து காத்துக் கிடந்தன
களைகளகற்றுமுன் வலிய கைகளை
நெடுங்காலமாய்க் காணா பூமி வரண்டிருந்தது
மூதாதையர் தோண்டிய கிணற்றில்
ஒரு துளி நீரிருக்கவில்லை

நிலம் வெடித்துப் புழுதி கிளம்பும் காலங்களில்
அயல்கிராமங்களுக்கு கல்லுடைத்துச் சீவிக்கச் செல்லும் சனம்
அனல்காற்றில் வெந்துருகிச் சில காசு பார்க்கும்
விவசாயம்தான் மூச்சென வீராப்பாய் நீயிருந்தாய்

தந்தையைத் தேடியழும் பாலகிக்கு எதுவும் தெரியவில்லை
நச்சுச் செடிகளுக்கென தெளிக்க வைத்திருந்த கிருமிநாசினியை
உன் குடிசைக்கு எடுத்து வருகையில்
மனைவிக்கும் தவறாயெண்ணத் தோன்றவில்லை
விதைக்கும் காலத்தில் சேற்று மண்ணில் நீ தூவிய விதைகள்
கடன்களாய் முளைத்திருந்தன
உன் எதிர்பார்ப்புக்களையெல்லாம் வெள்ளத்தில் சுமந்துசென்று
ஆற்றில் சேர்த்தது பருவம் கடந்து வந்த மழை

வெயிலின் முதல் கிரணம் முற்றத்தில் வீழ்ந்த
அன்றினது விடிகாலையில் உன்னோடு ஓய்ந்த பாடல்
எழவேயில்லை உன் வீட்டில்
எல்லோரையும் உறங்க வைத்த அன்றைய இரவு
விழித்திருந்தது என்றென்றும்

- எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# கலைமுகம்
# எங்கள் தேசம் 
# எதுவரை இதழ் - 07, ஜனவரி 2013
# உயிர்மை 
# திண்ணை 
# Artist - Roshan Dela Bandara

Saturday, December 1, 2012

விஷமேறிய மரத்தின் சிற்பம்

மலைப்பாம்புக் குட்டிகளென விழுதுகளைப் படர விட்ட
மரத்தின் ஆதிக் கிளைகள்
காட்சி கூடத்தில் வனம் பார்க்கும் சிற்பங்களாகின்றன

விருட்சங்களை வெட்டிச் செல்லும்
விஷமேறிய பார்வைகளை சிற்பி
காடுகளெங்கிலும் சுமந்தலையும் செம்மாலை நேரங்களில்
வன மரங்களின் இலைகளினூடு சூரியனாடும் மஞ்சள் நடனம்
எவ்வளவு ப்ரியத்துக்குரியது

நச்சேற்றிய சிற்பியின் பாதங்களிலேயே வீழ்ந்து கிடக்கும் மரங்களில்
அவனது எண்ணங்களிலிருந்தும் ஆற்றல்களிலிருந்தும் உருவாகிய
வனக் கொலைகளுக்கான ஆயுதங்கள் தீட்டப்படுகையில்
வன்மங்கள் கூராகின

இங்கு தாயின் கரத்திலிருந்துகொண்டே தடவிப் பார்க்கிறது
புராதனச் சடங்குகளின் பிரிந்த விம்பங்களென
தனித்திருக்கும் அம் மரச் சிற்ப விலங்குகளால்
எவ்வித ஆபத்துமில்லையென்பதை உணர்ந்த குழந்தை

பிஞ்சு விரல்கள் தொட்ட மரங்கள்
உடல் சிலிர்த்து எழுந்திடப்
பற்றியெரிகிறது மலைக் காடு

 - எம்.ரிஷான் ஷெரீப்
16012012

நன்றி
# உயிர்நிழல் - இதழ் 35 - ஜூலை, 2012
# எதுவரை - இதழ் 06 - நவம்பர், 2012
# உயிர்மை
# திண்ணை 
# Artist - Mr. Roshan Dela Bandara

Thursday, November 8, 2012

வீழ்தலின் நிழல்



ஒரு கோட்டினைப் போலவும்
பூதாகரமானதாகவும் மாறி மாறி
எதிரில் விழுமது
ஒளி சூழ்ந்த
உயரத்திலிருந்து குதிக்கும்போது
கூடவே வந்தது
பின்னர் வீழ்ந்ததோடு சேர்ந்து
ஒரு புள்ளியில் ஐக்கியமாகி
ஒன்றாய்க் குவிந்ததும்
உயிரைப் போல
காணாமல்போன நிழலில்
குருதியொட்டவே இல்லை



- எம். ரிஷான் ஷெரீப்

நன்றி
# உயிர்மை
# திண்ணை
# நவீன விருட்சம்