Tuesday, April 21, 2015

செம்மஞ்சள் பொழுதின் வானம்


பூர்வீக வீட்டிலிருந்து சற்றுத் தொலைவுதான் எனினும்
நடந்தே செல்லத் தலைப்பட்டோம்
அரூப ஆவிகள் உலவும் தொன்ம பூமியென
வழி காட்டியவர்கள் சொன்ன கதை கேட்டு அச்சமுற்றாயா

எத்தனையெத்தனையோ தலைமுறைகளுக்கு ஊணிட்ட
வேலிகளற்ற தரிசு வயலது
பரந்து விரிந்த எம் பண்டைய பூமி
வண்டி கட்டிச் சென்று மூத்தோர் விவசாயம் பார்த்த
சருகுக் கோரைப் புற்கள் விரவிக் கிடக்கும் பயிர்நிலம்

என் ஞாபகத்திலொரு பூநெல்லிச் செடியிருக்கிறது
நிலா இரவுகளில் முற்றத்தில் பாய்விரித்து
தலைகோதிக் கதை சொன்ன அம்மா நட்ட செடி
பிஞ்சு விரல்கள் வலிக்க வலிக்க
மூக்கு நீண்ட பேணியொன்றில் நீரேந்தியூற்றி
நானதை வளர்த்து வந்தேன்
அந்நிய நகரத்தில் நீயும் நானும்
அலங்காரத்துக்காக வைத்திருக்கும் போலிச் செடி போலன்றி
அது நன்கு தளைத்திருந்தது
தேசம் விட்டகன்ற நாளில்

அக் காலத்தில் நிழலுக்கென்று வளர்த்திருக்கக் கூடிய
கொன்றையும் வேம்பும் இன்ன பிற மரங்களும்
குளிர்ச்சியைத் தந்திருக்கும்
கூடவே களைப்பறியாதிருக்க வாய்ப்பாடலும்
கூட்டுக் கதைகளும் வெற்றிலையும்
சிறு காயங்களுக்குச் சேற்று மண்ணுமென
உழுத பின் வாடிக் களைத்த மூத்தவர்கள்
அங்கமர்ந்து ஓய்வெடுத்திருப்பர்

இன்று
சட்டை கழற்றிச் சென்றிருந்ததொரு சர்ப்பம்
தூர்ந்துபோய் வான் பார்த்திருக்கும் பெருங்கிணறும்
பல பிரேதங்களைச் சுமந்திருக்கக் கூடும்

எம் மூதாதையரின் இதிகாச ரேகைகள் பரவிய நிலத்தை
பாதி விழுங்கிச் செரித்திருக்கின்றது கருவேலங்காடு
அநேகப் பெருவிருட்சங்கள் மரித்துவிட்டன இப்போது
வலிய துயர்களைக் கண்டு தளர்ந்து கிடக்கிறது பூமி
அதன் உடலிலின்னும்
சுருக்கங்களைத் தீட்டிக் கொண்டேயிருக்கிறது
கோடை காலத் தூரிகை

அத்தி மரத்தில் சாய்ந்து நின்றபடி
அந்திப் பேய் வெயில்
மஞ்சளாய் ஊடாடிய தரிசு வெளி பார்த்துச் சட்டென
''வான்கோ'வின் ஓவியமும் குரூர ஆயுதங்களும்
ஒருங்கே கலந்த நிலம்' என்றாய்
தங்க பூமியின் ஆகாயத்தில்
செஞ்சாயம் கலந்தது வேறெப்படியாம்

- எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# அம்ருதா இதழ், மலைகள் இதழ், வல்லமை இதழ், பதிவுகள் இதழ், காற்றுவெளி இதழ், நவீன விருட்சம் இதழ்
# ஓவியம் - Van gogh

Sunday, March 15, 2015

தொலைவிலும் அருகிலும் மிதக்கும் கடல்


துல்லியமான நீர்ப்பரப்பு
கூழாங்கற்களைப் போர்த்திப் படர்ந்திருக்கிறது
சலனமற்றிருக்கிறது ஈர நிலத்தின் சயனம்

போர்வையின் பாசிப் பூக்களும் பசிய அலங்காரங்களும்
அசைந்தசைந்து
காற்றின் தாலாட்டுக்களை இசைக்கின்றன மௌனமாய்

உன் கையிலொரு மதுக் குவளை
'அதிதிகளாய்ப் பறவைகள் வந்திரையும்
மா கடலின் மேலேயான வானம் பற்றித் தெளிவாகத் தெரியும்
சமுத்திரம் பற்றி மட்டும் சொல்' என்றாய்
'இறுதி மதுவில் கரைந்தழியும் பேரண்டம்'
வேறென்ன சொல்ல இயலும்

- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி - # அம்ருதா இதழ்-பெப்ரவரி 2015, # வல்லமை இதழ் # தமிழ் எழுத்தாளர்கள் இதழ், # நவீன விருட்சம் இதழ் # வார்ப்பு இதழ்
  

Saturday, February 21, 2015

ஒரு பனித் துளி ஈரம்


இலைகளை உதிர்த்தழும் விருட்சங்களைத் தடவிக் கொடுத்து
தாண்டிச் சென்ற கோடையைக் கழுவி
ஞாபகக் கொடியில் காயப்போட்டாயிற்று உலர்த்தவென

வெண்சாயங்களில் தோய்த்தெடுத்த இழைகளைக் கொண்டு
குளிர்காலக் கம்பளிகளை
பின்னுகிறது காலம்

அதைப் பிடித்துக் கொண்டு படர்கிறது
நேற்றைக்கு முந்தைய தினங்களில் துளிர்விட்ட
சிறு ஒற்றைக் கொடி
வைசாக தினங்களில் வெண்ணிற ஆடையும் பூக்களுமென 
விகாரைக்கு அணிவகுத்துச் சென்ற பக்தர்கள்
எறிந்து போன சிறு விதையாக இருக்கலாம் தாவரத்தின் மூலம்

நிலம் பிளந்து வந்த கொழுந்துக்குப் புதிது
அலையெனச் சுழலும் காற்றும்
நிமிரும்போதெல்லாம்
உற்றுப் பார்த்தவாறிருக்கும் பரந்த ஆகாயமும்
விசாலமாய் நகரும் பூச்சிகளும் இன்னபிற ஜந்துக்களும்
இன்னும்
மிதிக்கக் காத்திருக்கும் மனிதர்களும்

வரும் காலங்களில்
அதன் கிளைகளில் வந்தமரும் அணில்கள்
இன்னும் பிறக்கவேயில்லை
இலைகளின் மறைவுகளுக்குள் தம்
கூடுகளைச் செதுக்கக் கூடிய பட்சிகள்
கண்டங்கள் தாண்டி இன்னும் புலம்பெயரவேயில்லை
வேர்களை வளப்படுத்தும் புழுக்களும்
இன்னும் நகரவேயில்லை எனினும்
எப்போதோ மனிதன் உறிஞ்சியகற்றி விட்டான்
தாவரங்களுக்கான ஈரத்தை
மண்ணிலிருந்தும் மனதிலிருந்தும்

பனிக் கூட்டம் விடியலை
பேரோசையுடன் பாடும் சொப்பனங்களெல்லாம்
காடுகளால் நிரம்பி வழிகின்றன

தீயிடம் யாசகனாக்கும்
குளிர் காலத்தின் நீள இரவுகளிலும்
வனங்களைத் தொழுத ஆதிவாசிகளை
கடவுளிடம் மீளக் கொடுத்துவிட்ட இக் காலத்தில்
துளிர்த்திடப் போதுமானதாக இருக்கலாம்
தளிரின் வேருக்கென
இப் பேரண்டம் தரும்
ஒரு பனித் துளி ஈரம்

- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி 
அம்ருதா கலை இலக்கிய இதழ் - பெப்ரவரி 2015, நவீன விருட்சம் இதழ், வல்லமை இதழ், தமிழ் எழுத்தாளர்கள் இதழ், பதிவுகள் இணைய இதழ், காற்றுவெளி இதழ் 
# ஓவியம் - Mr.Milju Varghese Kurishingal 

Saturday, January 10, 2015

ஆட்டுக்குட்டிகளின் தேவதை




ஆட்டுக்குட்டியைத் தூக்கித் திரிந்த இடைச்சியின்
இடர்காலப் பாடல் எங்கும் விரிகிறது
கோடை காலங்களில் எஞ்சியிருக்கும்
அம் மலைப் பிரதேசப் பூக்களில் தேனுறிஞ்சும்
கூர் சொண்டுக் குருவி
நிலாக் கிரணங்கள் வீழும்
அவளுக்குப் பிடித்தமான வெளிகளுக்கெல்லாம்
அப் பாடலைக் காவுகின்றது

பள்ளத்தாக்கில் ஆடுகளைத் துரத்தியபடி
தண்ணீர் தேடிச் சென்றவேளை
சிதைந்தவோர் குளக்கரையைக் கண்டுகொண்டாள்
வரண்ட பாசிகளோடு வெடித்திருந்த தரையில்
களைத்துப் போய் பெருவலி தந்த
கால்களை மடித்து ஓய்வெடுத்தவளோடு
சேர்ந்து கொண்டதொரு சிவப்பு வால் தும்பி

வலிய விருட்சங்கள் உதிர்ந்துவிட்டிருந்தன
விதவிதமாய்க் குரலிட்ட பட்சிகளெல்லாம்
வேறு தேசங்களுக்குப் பறந்துவிட்டிருந்தன
புழுதி மண்டிய மேய்ச்சல் நிலத்தில்
மந்தைகளின் தேவதை
முடங்கிப் போயிருக்கிறாள்
உஷ்ணப் பிரம்பினைக் காட்டி
அவளை மிரட்டி வைத்திருக்கும் வெயில்
கடல் தாண்டித் தனது யாத்திரையைத் தொடரும்வரை

பயணப் பாதைகளிலெல்லாம்
ஆட்டுக்குட்டிகளே நிறைந்திருக்கும்
இடைச்சியின் கனவில் எப்போதும் வரும்
பசிய மரங்கள் அடர்ந்திருக்கும் வனமும்
மீன்கள் துள்ளித் தெளிந்த நீரோடும் நதியும்
புற்களும் புதர்களுமாய் அடர்ந்த சமவெளியும்
அவளுக்கு எப்போதும்
ஆதிக் காலங்களை நினைவுறுத்தும்

வாடிச் சோர்வுற்ற விழிகளினூடு
தொலைவில் அவள் கண்டாள்
யானையாய்க் கறுத்த மேகங்கள்
வானெங்கும் நகர்வதை

இனி அவள் எழுவாள்
எல்லா இடர்களைத் தாண்டியும்
துயருற்ற அவளது பாடலோடு
விழித்திருக்கும் இசை
ஒரு புன்னகையெனத் ததும்பித் ததும்பி மேலெழும்
ஆக்ரோஷமாக... ஆரவாரமாக...
ஆட்டுக்குட்டியைப் போலவே துள்ளித் துள்ளி...

- எம். ரிஷான் ஷெரீப்
நன்றி
# தீராநதி இதழ் - அக்டோபர் 2014வல்லமை, பதிவுகள், வார்ப்பு

Tuesday, November 18, 2014

அதைப் பற்றிச் சொல்வதற்கில்லை




கழுத்து நீண்ட வாத்துக்கள் பற்றிய உன் கதையாடலில்
சாவல் குருவிக்கு என்ன திரை
அதுவும் இருந்துவிட்டுப் போகட்டும்
அடித்த சாரலில்
வண்ணத்துப் பூச்சியின் நிறம் மட்டும் கரைந்தே போயிற்று
நல்லவேளை சருகுப் பூக்கள் அப்படியேதானே

பிறகென்ன
வற்றிய ஆழக் கடல்களின் நிலக் கரையில்
துருப்பிடித்துப் பாதி மணலில் மூழ்குண்ட
நங்கூரங்களின் கயிற்றோடு
உப்புக் கரித்துத் தனித்திருக்கின்றன சிதிலப் படகுகள்

அந்தி மாலையில் தூண்டிலிட்டமர்ந்து
வெகுநேரம் காத்திருக்கும் சிறுவன்
பாரம்பரிய விழுமியங்களைப் போர்த்தி
உணவு தயாரிக்கும் இளம்பெண்
நிலவொளியில் புயல் சரிக்க
போராடி அலையும் பாய்மரக் கப்பல்
அழிந்த மாளிகை
அசையாப் பிரேதம்

அது என் நிலம்தான்
உன் மொழி வரையும் ஓவியங்களில்
எல்லாமும் என்னவோர் அழகு

உண்மைதான்
மந்தையொன்றை அந்தியில்
நெடுந் தொலைவுக்கு ஓட்டிச் செல்லும்
இடையனொருவனை நான் கண்டிருக்கிறேன்
நீ சொல்வதைப் போல
காலத்தை மிதித்தபடிதான் அவன் நடந்துகொண்டிருந்தான்
நெடிதுயர்ந்த மலைகள்
உறைந்துபோன விலங்குகளைத்தான் தின்று வளர்கின்றன
ஆகவே மலைக் குகை வாசல்களில் அவன் அவைகளோடு
அச்சமின்றி ஓய்வெடுத்தான்

சொல்
மெய்யாகவே நீ கனவுதான் கண்டாயா

என்னைக் கேட்டால்
வாசப் பூஞ்சோலை
சுவனத்துப் பேரொளி
தழையத் தழையப் பட்டாடை
தாங்கப் பஞ்சுப் பாதணி
கால் நனைக்கக் கடல்
எல்லாவற்றிலும் நேர்த்தியும் மினுமினுப்பும்
தேவையெனில் அமைதியும்
தேர்ந்தெடுத்த மெல்லிசையும் என
எல்லாமும் இன்பமயம் என்பேன்

அத்தோடு
இன்னும் கூட இரவு
தினந்தோறும் கொஞ்சம் இருட்டை
எனக்காக விட்டுச் செல்கிறது கிணற்றுக்குள்
என்பதைச் சொல்வேன்
வேறென்ன கேட்கிறாய்

இலையுதிர் காலத்து மரத்தின் வலி
அதைப் பற்றிச் சொல்வதற்கில்லை

- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி
# தீராநதி இதழ், ஆகஸ்ட் 2014படிகள் - 50 ஆம் இதழ் சிறப்பு வெளியீடு, பதிவுகள், வல்லமை, நவீன விருட்சம், காற்றுவெளி