Saturday, February 21, 2015

ஒரு பனித் துளி ஈரம்


இலைகளை உதிர்த்தழும் விருட்சங்களைத் தடவிக் கொடுத்து
தாண்டிச் சென்ற கோடையைக் கழுவி
ஞாபகக் கொடியில் காயப்போட்டாயிற்று உலர்த்தவென

வெண்சாயங்களில் தோய்த்தெடுத்த இழைகளைக் கொண்டு
குளிர்காலக் கம்பளிகளை
பின்னுகிறது காலம்

அதைப் பிடித்துக் கொண்டு படர்கிறது
நேற்றைக்கு முந்தைய தினங்களில் துளிர்விட்ட
சிறு ஒற்றைக் கொடி
வைசாக தினங்களில் வெண்ணிற ஆடையும் பூக்களுமென 
விகாரைக்கு அணிவகுத்துச் சென்ற பக்தர்கள்
எறிந்து போன சிறு விதையாக இருக்கலாம் தாவரத்தின் மூலம்

நிலம் பிளந்து வந்த கொழுந்துக்குப் புதிது
அலையெனச் சுழலும் காற்றும்
நிமிரும்போதெல்லாம்
உற்றுப் பார்த்தவாறிருக்கும் பரந்த ஆகாயமும்
விசாலமாய் நகரும் பூச்சிகளும் இன்னபிற ஜந்துக்களும்
இன்னும்
மிதிக்கக் காத்திருக்கும் மனிதர்களும்

வரும் காலங்களில்
அதன் கிளைகளில் வந்தமரும் அணில்கள்
இன்னும் பிறக்கவேயில்லை
இலைகளின் மறைவுகளுக்குள் தம்
கூடுகளைச் செதுக்கக் கூடிய பட்சிகள்
கண்டங்கள் தாண்டி இன்னும் புலம்பெயரவேயில்லை
வேர்களை வளப்படுத்தும் புழுக்களும்
இன்னும் நகரவேயில்லை எனினும்
எப்போதோ மனிதன் உறிஞ்சியகற்றி விட்டான்
தாவரங்களுக்கான ஈரத்தை
மண்ணிலிருந்தும் மனதிலிருந்தும்

பனிக் கூட்டம் விடியலை
பேரோசையுடன் பாடும் சொப்பனங்களெல்லாம்
காடுகளால் நிரம்பி வழிகின்றன

தீயிடம் யாசகனாக்கும்
குளிர் காலத்தின் நீள இரவுகளிலும்
வனங்களைத் தொழுத ஆதிவாசிகளை
கடவுளிடம் மீளக் கொடுத்துவிட்ட இக் காலத்தில்
துளிர்த்திடப் போதுமானதாக இருக்கலாம்
தளிரின் வேருக்கென
இப் பேரண்டம் தரும்
ஒரு பனித் துளி ஈரம்

- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி 
அம்ருதா கலை இலக்கிய இதழ் - பெப்ரவரி 2015, நவீன விருட்சம் இதழ், வல்லமை இதழ், தமிழ் எழுத்தாளர்கள் இதழ், பதிவுகள் இணைய இதழ், காற்றுவெளி இதழ் 
# ஓவியம் - Mr.Milju Varghese Kurishingal 

No comments: