Friday, February 1, 2008

ஏழு ஜென்ம வதைப்படுத்தி...


உன் மௌனத்தில் வலியுணர்த்தி
எதுவும் பேசாமல்
நின்று நின்று பார்த்தபடியே
மெல்ல நகர்கிறாய் நீ !

காயப்பட்டவுன்னிதயத்துக்கு
ஆறுதலாகவொரு துளிக்கண்ணீரோ
ஒரு கண அரவணைப்போ
தரவியலாத் துயரத்தோடு நான் !

எந்த நம்பிக்கையிலுன் சிறு ஜீவனை
எனதூர்தியின்
நான்கு சக்கரநிழலுக்குள்
நீ வந்து உறங்கவைத்தாய் ?

நசுங்கிச் சிதைந்தவுன் வாரிசின்
சடலத்தைக் காணநேர்ந்த பிற்பாடும்
எந்தவொரு அனல்பார்வையோ,
சாபமிடலோ,வைராக்கியமோ இன்றி
ஒதுங்கிப் பார்த்திருக்கிறாய்
ஆறறிவாய் நீ !

கணங்களைச் சப்பிவிழுங்கும்
பணியின் அவசரநிமித்தம்
ஒரு நிமிடமொதுக்கி
வண்டியின் கீழ்ப் பார்க்கமறந்து
ஏழேழு ஜென்மத்துக்குமான
வேதனையில் சிக்கித் தவிக்கும்
ஐந்தறிவாய் நான் !

-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை.

14 comments:

Anonymous said...

ரிஷான்
அந்தப் பூனை தானா (படத்திலுள்ள) இந்தப் பூனை?

அனுபவத்தைக் கவித்துவ வீச்சுடன் தந்திருக்கிறீர்கள்.
தேர்ந்தெடுத்த சொற்களில் கருத்துச் செறிவுடன் கவிதையை எழுதியுள்ளீர்கள்.

"உன் மௌனத்தில் வலியுணர்த்தி
எதுவும் பேசாமல்
நின்று நின்று பார்த்தபடியே
மெல்ல நகர்கிறாய் நீ !"

என்ற ஆரம்ப வரிகளிலேயே நின்று பார்த்து நகரும் காட்சி கண் முன்னே விரிகிறது.

படிப்போர் மனதில் பாதிப்பை நிகழ்த்தும் கவிதையாக இது உள்ளது.

M.Rishan Shareef said...

//அனுபவத்தைக் கவித்துவ வீச்சுடன் தந்திருக்கிறீர்கள்.
தேர்ந்தெடுத்த சொற்களில் கருத்துச் செறிவுடன் கவிதையை எழுதியுள்ளீர்கள்.//

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிகள் சகோதரி பஹீமாஜஹான்... :)

naan yaar said...

//வண்டியின் கீழ்ப் பார்க்கமறந்து
ஏழேழு ஜென்மத்துக்குமான
வேதனையில் சிக்கித் தவிக்கும்
ஐந்தறிவாய் நான் !///

அச்சோ..இது நெஜமா நடந்ததா?

ரொம்ப டச்சிங்பா இந்தக் கவிதை...எங்க வீட்டில் இறந்து போன 'கடலைகுட்டி"யின் நியாபகம் வருது...:(

M.Rishan Shareef said...

அன்பின் வாணி,

ஆச்சரியமாக இருக்கிறது.நிறையப் பேருக்கு இந்த அனுபவம் இருந்திருக்கிறது.

உங்கள் 'கடலைக்குட்டி' பூனையா? நாயா?

naan yaar said...

பூனை ரிஷான்..

ஆனா இந்த மாதிரி இறக்கல..ஒடம்பு சரியில்லாம இறந்திருச்சு...ரொம்ப கஷ்டப்பட்டு...:(

M.Rishan Shareef said...

அன்பின் வாணி,

//பூனை ரிஷான்..

ஆனா இந்த மாதிரி இறக்கல..ஒடம்பு சரியில்லாம இறந்திருச்சு...ரொம்ப கஷ்டப்பட்டு...//

நாம் நேசிக்கும்,அல்லது நம்மை நேசிக்கும் எதுவாக இருப்பினும் அவை நம்மை விட்டுப் பிரியும்போது பெரிதாக வலிக்கும்.சிறு பொம்மைகளைக் காணாவிடில் கூடக் கதறியழும் குழந்தைகளை நான் பார்த்திருக்கிறேன்.

Sakthy said...

கண்ணுக்கு முன் சிதைந்த நாய்க்குட்டியை
என் கையால் குழி வெட்டி புதைத்த போது
எவ்வளவு வலியோ, உங்கள் வரிகளிலும் அதை உண்ர முடிகிறது..

M.Rishan Shareef said...

அன்பின் சக்தி,

//கண்ணுக்கு முன் சிதைந்த நாய்க்குட்டியை
என் கையால் குழி வெட்டி புதைத்த போது
எவ்வளவு வலியோ, உங்கள் வரிகளிலும் அதை உண்ர முடிகிறது..//

உயிர்களின் வலிகளை நாம் அறிகையில்தான் நமக்குள்ளும் தாய்மை இருப்பதை உணரலாம் அல்லவா நண்பரே?!

வருகைக்கும் கருத்துக்கும் நன்று நண்பரே :)

Sakthy said...

வணக்கம் ரிஷான்
ஒவ்வொரு ஆணுக்கும் தாய்மை உணர்வு தேவை.
ஆமாம் 'நண்பரே' ஆண்பாலா, பெண்பால் ஆ..

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//எந்தவொரு அனல்பார்வையோ,
சாபமிடலோ,வைராக்கியமோ இன்றி
ஒதுங்கிப் பார்த்திருக்கிறாய்
ஆறறிவாய் நீ//

உன் ஆறறிவை ஆரறிவார்?
என் ஐந்தறிவை நானறிவேன்!
மனதை வருடியது ரிஷான்!

//ஏழு ஜென்ம வதைப்படுத்தி... //

நண்பனின் அனுமதியோடு தலைப்பை எனக்கு மட்டும் மாற்றிக் கொண்டு - ஆறறிவாய் நீ! ஐந்தறிவாய் நான்! - மீண்டும் ஒருமுறை படிக்கிறேன்!

M.Rishan Shareef said...

அன்பின் சக்தி,

நண்பரே... என்று உங்களைத்தான் அழைத்தேன்.அதில் இருபாலாரும் அடங்குவர் அல்லவா? :)

வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழி :)

M.Rishan Shareef said...

அன்பின் கண்ணபிரான் ரவிசங்கர்,

அத்தனை வேலைப்பளுவுக்கும் மத்தியில் வந்து கவிதையை ரசித்து கருத்தினையும்,வாழ்த்துக்களையும் தந்தமைக்கு நன்றி நண்பா :)

MSK / Saravana said...

படித்த என் மனதில் பாதிப்பை நிகழ்த்திய கவிதை ..

M.Rishan Shareef said...

அன்பின் சரவணகுமார்,

//படித்த என் மனதில் பாதிப்பை நிகழ்த்திய கவிதை ..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :)