வஞ்சித்த சினேகமொன்றினை
எண்ணித்தனித்துச் சோர்ந்து
கதறிக் கதறியழுதவேளை
நீயுள் நுழைந்தாய்
மிகுந்து வெடித்த
கவலைக்கான கலங்கலிலுன்னுருவம்
தட்டுப்படவில்லையெனினும்
தலைசாயத் தோள் கொடுத்து
மிதந்த துயரையெல்லாம்
மேலும் மேலும் அழுதுதீர்க்கும்படி
ஆதரவாய்ச் சொன்னாய்
கவலையறியாக் கண்ணீரறியா
தனித்த ஜீவனொன்று
காலம் காலமாய்ச் சேமித்த விழிநீரெல்லாம்
அணை உடைப்பெடுத்துத் திமிறிப் பொங்கி
உன் தோள் நனைத்த கணத்தில்
அன்னையின் அணைப்பையொத்த
அன்பான தலைதடவலுன்
கருணை மனம் சொல்லிற்று
எதற்கிந்த அழுகை
ஏதுன்னைக் கதறச் செய்தது
எதையுமே நீ கேட்டிடவில்லை
தூய அன்பைக் கொன்றவனதை
மயானத்தில் புதைத்த கதையின்
ஒரு சொல் பற்றிக் கூட
உன்னிடம் கேள்விகள் இருக்கவில்லை
அத்துயர்பற்றியேதும் நீ அறிந்திருக்கவுமில்லை
நீ யாரெனத் தெரிந்திருக்கவில்லையெனினும்
அக்கணத்தில் நீயொரு
ஊமையாய் இருந்தாய்
செவிடனாய் இருந்தாய்
எதையுமே அறியாமல்
பாசமாய் அரவணைத்தவொரு
பொம்மையாய் இருந்தாய்
வழிந்த துளிகள் காய்ந்து
கண்ணீர் மீதமற்ற பொழுதில்
புன்னகை தந்தவொரு தேவதூதனாயிருந்தாய்
வாழ்வின் பாதங்கள்
வழிதவறிப் போனதை மட்டும்
எக்கணத்திலும் கேட்டாயில்லை
வழிய வழிய அன்பைத்தந்து இப்பொழுதெல்லாம்
நயவஞ்சகனொருவன் பற்றிய
பழங்கால எண்ணங்கள் மிகைக்காமல்
நேசத்தின் அழகிய பாடல்களை
காலங்கள் தோறும் காற்றில் மிதக்கும்படி
எப்படிப் பாடுவதெனச் சொல்லித் தருகிறாய்
சகா
இரு கரங்கள் உயர்த்திய
புராதனப் பிரார்த்தனையொன்றின் பலனாக
அமைதியையும் அன்பையும்
அகிலம் முழுதுமான மகிழ்வையும் நிம்மதியையும்
அள்ளியெடுத்து நீ வந்தாயோ
வசந்தங்கள் நிறைந்து
நறுமண வாடை சுமந்த தென்றலுலவும்
ஓரழகிய பூஞ்சோலை வாழ்வின்
பளிங்குப் பாதை வழியே
எந்த இடர்களும் இடறல்களுமற்று
சிறுமழலையாய் விரல் பிடித்து
வழிகூட்டிப் போகிறாய்
இப்போதைய அழகிய வாழ்வின்
நேசனாயுனைச் சேர்த்த
அந்தக் கண்ணீருக்கு நன்றி
கரிய இருள் பரவிய கொடிய வழியினில் அழைத்துக்
காயங்கள் தந்து கண்ணீர் தந்து
அன்பான உன்னிடம்
கைவிட்டுச் சென்ற
அந்தத் துரோகிக்கு மிகவும் நன்றி
-எம்.ரிஷான் ஷெரீப்,
மாவனல்லை,
இலங்கை
நன்றி - 'நாம்' மலேசிய காலாண்டிதழ் ஜனவரி - மார்ச் 2009
22 comments:
பல நேரங்களில் சில கஷ்டங்களே பல நல்லவை நடப்பதற்குக் காரணகர்த்தாவாய் அமைந்து விடுகின்றன. நல்ல கவிதை ரிஷான். வாழ்த்துக்கள்.
அன்பின் ராமலக்ஷ்மி,
//பல நேரங்களில் சில கஷ்டங்களே பல நல்லவை நடப்பதற்குக் காரணகர்த்தாவாய் அமைந்து விடுகின்றன. நல்ல கவிதை ரிஷான். வாழ்த்துக்கள்.//
மிகச் சரி. அக் கணங்களில் பெருந்துன்பத்தில் வாடுகிறோம். பின்னாட்களில் அது கொண்டுவந்திருக்கும் நற்செய்தி அளப்பரியதாக இருக்கும்.
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !
அருமையான கவிதை.இன்னும் நல்லவிதமாக, உயர்வாக சொல்லவிரும்புகிறேன்.
எனக்கு இந்தக் கவிதையே ஆறுதலாய், இருக்கிறது.இதிலுள்ள நேர்மறையான பார்வையும்,உத்வேகமும், நம்பிக்கையும் பிடித்திருக்கிறது.முடித்தவிதம் மிக அருமை.
கவிதை மிகவும் பிடித்திருக்கிறது.
//கரிய இருள் பரவிய கொடிய வழியினில் அழைத்துக்
காயங்கள் தந்து கண்ணீர் தந்து
அன்பான உன்னிடம்
கைவிட்டுச் சென்ற
அந்தத் துரோகிக்கு மிகவும் நன்றி//
அருமையாக இருக்கிறது நண்பரே.
நண்பர் ரிஷான்,
தங்கள் வருகைக்கு மிக்க நன்றி.
சில வலிகளைத்தான் காட்சி படுத்தியிருக்கிறார் என்பதை நானும் ஏற்கிறேன்.
நீங்கள் குறிப்பிடும் ஆணிவேர் திரைப்படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை. தங்கள் பரிந்துரைக்கு நன்றி.
அப்படத்தின் முன்னோட்டத்தை Youtube-ல் பார்த்தேன். விடுமுறைக்கு இந்தியா செல்லும் போது வாங்கிப் பார்க்கிறேன் அந்த படம் எங்கு கிடைக்கிறது? கொஞ்சம் சொல்லுங்கள்.
அஞ்சலில் என்றால் முகவரி தாருங்கள்.
அன்புடன்,
மண்குதிரை.
அன்பின் ச.முத்துவேல்,
//அருமையான கவிதை.இன்னும் நல்லவிதமாக, உயர்வாக சொல்லவிரும்புகிறேன்.
எனக்கு இந்தக் கவிதையே ஆறுதலாய், இருக்கிறது.இதிலுள்ள நேர்மறையான பார்வையும்,உத்வேகமும், நம்பிக்கையும் பிடித்திருக்கிறது.முடித்தவிதம் மிக அருமை.//
உங்கள் கருத்து என்னை மகிழ்விக்கின்றது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் யாத்ரா,
நண்பர் ச.முத்துவேல் அவர்களின் பதிவொன்றில் உங்களைப்பற்றி அறியக் கிடைத்ததில் மகிழ்ச்சி. நன்றாக எழுதுகிறீர்கள். தொடருங்கள் !
//கவிதை மிகவும் பிடித்திருக்கிறது.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் மண்குதிரை,
(உங்களை இந்தப்பெயரைச் சொல்லி அழைக்கச் சற்றுச் சங்கடமாக இருக்கிறது)
//
அருமையாக இருக்கிறது நண்பரே.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் மண்குதிரை,
//நீங்கள் குறிப்பிடும் ஆணிவேர் திரைப்படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் பார்த்ததில்லை. தங்கள் பரிந்துரைக்கு நன்றி.
அப்படத்தின் முன்னோட்டத்தை Youtube-ல் பார்த்தேன். விடுமுறைக்கு இந்தியா செல்லும் போது வாங்கிப் பார்க்கிறேன் அந்த படம் எங்கு கிடைக்கிறது? கொஞ்சம் சொல்லுங்கள்.
அஞ்சலில் என்றால் முகவரி தாருங்கள். //
தற்பொழுது எந்த நாட்டில் வசிக்கிறீர்கள்?
இப்படத்தை நீங்கள் விரும்பினால் இணையத்தில் கூட இலவசமாகப் பார்க்கலாம். குறுந்தகடு பற்றித் தெரியவில்லை. இந்தியாவில் இப்படம் திரையிடப்படவில்லை என அறிகிறேன்.
http://www.tubetamil.com/view_video.php?viewkey=e9f528eb3e1cda69699b
இணையத்தில் அதன் சுட்டி இது நண்பரே !
நண்பர் ரிஷான்,
அன்பின் என்ற சொல் நெருக்கமாக இருகிறது.
நான் இப்போது மொரீசியஸ் வசிக்கிறேன். அப்படத்தின் சுட்டி அளித்ததிற்கு நன்றி.
//(உங்களை இந்தப்பெயரைச் சொல்லி அழைக்கச் சற்றுச் சங்கடமாக இருக்கிறது)//அதனால் என்ன நண்பரே உங்கள் அன்பு போதும்.
அது என்னுடைய புனைப்பெயர். முடிந்தால் தொலைபேசியிலோ, இணையத்திலோ தொடர்புகொள்கிறேன். விரிவாக பேசலாம்.
உணர்வலைகள் கரைமோதும் கவிதை..
எல்லாம் நன்மைக்கே எனும் கோட்பாட்டை மெய்ப்பிக்கும் கதை..
வளமான சொற்கட்டுகள் கவிதையின் பலம்.
பாராட்டுகள் ரிஷான் ஷெரீப் அவர்களே!
------------------------------------
கவிதை வாசித்த என் மனதிலும் எண்ண அலைகள் -
பாதையெல்லாம் மாறிவரும்... பயணம் முடிந்துவிடும்..
மாறுவதைப் புரிந்துகொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்..
இன்று நேற்று வந்ததெல்லாம் நாளை மாறலாம்
நீரில் தோன்றும் நிழல்களைப்போலே நிலையில்லாமல் போகலாம்..
மாற்றம் ஒன்றே மாறாதது..
எதுவும் கடந்து போகும்!
அன்பின் மண்குதிரை,
//அது என்னுடைய புனைப்பெயர். முடிந்தால் தொலைபேசியிலோ, இணையத்திலோ தொடர்புகொள்கிறேன். விரிவாக பேசலாம்.//
நிச்சயமாக நண்பரே..காத்திருக்கிறேன் !
அன்பின் இளசு,
அருமையான வரிகளில் உங்கள் கருத்தினைப் பகிர்ந்துகொண்டிருக்கிறீர்கள்.
மிகவும் மகிழ்வாக உணர்கிறேன். நன்றி நண்பரே !
//இப்போதைய அழகிய வாழ்வின்
நேசனாயுனைச் சேர்த்த
அந்தக் கண்ணீருக்கு நன்றி//
உண்மைதான் ரிஷு. கண்ணீரின் காரணமும் விளைவும் கண்ணீர்க் காலங்களில் புரிபடுவதில்லை. அழகான கவிதை.
//இப்போதைய அழகிய வாழ்வின்
நேசனாயுனைச் சேர்த்த
அந்தக் கண்ணீருக்கு நன்றி//
உண்மைதான் ரிஷு. கண்ணீரின் காரணமும் விளைவும் கண்ணீர்க் காலங்களில் புரிபடுவதில்லை. அழகான கவிதை.
வித்தியாசமாக இருக்கிறது ரிஷான்.. நீங்கள் தேர்ந்தெடுக்கும் கவிதையும்... சிலசமயம் தலைப்புகளும்!
நன்கு கடைந்தெடுத்த தமிழ்!!!! உணர்வுகளைக் கிளப்பும் கவிதை!!!
வாழ்த்துகள் ரிஷான்!
அன்பின் கவிநயா,
//உண்மைதான் ரிஷு. கண்ணீரின் காரணமும் விளைவும் கண்ணீர்க் காலங்களில் புரிபடுவதில்லை. அழகான கவிதை.//
நிச்சயமாக சகோதரி.
வேதனையில் உருகி ஊற்றும் கண்ணீர்த்துளிகள்தான் பின்னாட்களின் மகிழ்ச்சி விதைகளை விருட்சங்களாக்குகின்றன.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !
அன்பின் ஆதவா,
//வித்தியாசமாக இருக்கிறது ரிஷான்.. நீங்கள் தேர்ந்தெடுக்கும் கவிதையும்... சிலசமயம் தலைப்புகளும்!
நன்கு கடைந்தெடுத்த தமிழ்!!!! உணர்வுகளைக் கிளப்பும் கவிதை!!!
வாழ்த்துகள் ரிஷான்!//
உங்கள் வருகை மகிழ்வளிக்கிறது. வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !
வழி நெடுகத் தோள் தருகிறது வரிகள்!!
அன்பின் kartin ,
//வழி நெடுகத் தோள் தருகிறது வரிகள்!!//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
பல சமயங்களில் துரோகங்கள் தான் நினைவில் நிற்கின்றன ...அது தரும் வலி மற்றும் காயம் மறப்பதற்கு இல்லை அதலால் அடுத்து ஒன்றை என்னும் போது மனம் எச்சரிக்கை மணி அடிக்கிறது அந்த வகையில் , துரோகிக்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளோம் ...கவிதை வழக்கம் போல அருமை ரிஷான் ....
Post a Comment