Friday, April 17, 2009

சாகசக்காரியின் வெளி

அதீத மனங்களில் மிதந்து வழியும்
ஆசைகளை அவளறிவாள்
தன் வஞ்சக விழிகளில் சிரித்து
மென்மை வழியும் குரலினை
சாம்பல் காலங்களின் முனையினில் மாட்டி
தூண்டிலென எறிவாள்

கபடங்களறியாக் கண்களைக் கொண்ட
பிஞ்சுமனங்களை அவளிடம்
கொடுத்துப் பார்த்திருங்கள்
அல்லது
உலகம் மிகவும் நல்லதெனச்
சொல்லிக் கொண்டிருக்குமொரு மனிதனை
அவளிடம் விடுங்கள்
அம் மனிதன் தானாகவே
முன்பு நல்லதெனச் சொன்ன நாவை
கருஞ்சுவரில் தேய்த்துக்கொள்ளும்படியான
நஞ்சை மிடறாக்கி
அருந்த வைத்திருப்பாள் அவள்
கைவசமிருக்கும்
எல்லா நெஞ்சங்களையும்
கெட்டதாக்கி அழுகவைத்துப்
பின்னொருநாள் புது இதயங்களுக்கு
மீண்டும் தூண்டிலிடவென விட்டுச் செல்வாள்
அழுதழுது நீங்கள்
அவளைத் தேடிச் சென்றால்
உங்களைத் திரும்பச் சொல்லி
மென்மையானதென நீங்கள் சொல்லும்
அவளது பாதங்களால் எட்டியுதைப்பாள்
கொடுந்தீய வார்த்தைகளையெல்லாம்
எச்சிலோடு காறி உங்கள்
வாடிய முகங்களில் துப்பிடுவாள்

பிஞ்சு மனங்களை, நல்ல மனிதனை
வக்கிரங்களறியவென
அவளிடம் கொடுத்த நீங்கள்
இதையெல்லாம்
சகித்துக்கொள்ளத்தான் வேண்டும்
ஏனெனில் அவள்
சாகசக்கார வெளியில்
வன்முறைகளை விதைப்பவள்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.


லண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பான இக்கவிதையை ஒலிபரப்பாளர் ஸைஃபா பேகம் அவர்களின் குரலில் கேட்க...





நன்றி - 
* நவீன விருட்சம் காலாண்டிதழ்
* லண்டன் தமிழ் வானொலி

14 comments:

பூங்குழலி said...

என்ன இத்தனை கோபம் ?கவிதை ரொம்பவும் உக்கிரமாக இருக்கிறது

Karthikeyan G said...

Sir, R u fine now? Best wishes..

ஆயிஷா said...

படித்தேன். மகிழ்ந்தேன்
கேட்டேன்........ரசித்தேன்....

ஒளியவன் said...

நண்பா,
வன்முறையைக் கட்டவிழ்த்துவிடும் அவளிடம் எதையும் இனி கொடுக்க வேண்டாம். அவளது ஆசை வார்த்தையில் வீழாது இருப்பதற்கான மன உறுதியை மட்டும் வளர்த்துக் கொள்ள வேண்டும்

தேனுஷா said...

அருமைங்க ரிசான்
சாகசக்காரியிடம் சிக்கித்தான் சின்னாபின்னமாகி இருக்கோம் நாங்கள்

சாந்தி said...

வாழ்த்துகள் ரிஷான்.. ஆனால் ஏன் இப்படியான ஒரு வர்ணனை , வருத்தம் னு புரியவில்லை.. அதுவும் பெண்ணைப்பழிப்பதாய்...

இருப்பினும் ஒரு ரத்தக்காட்டேரியை கண்முன் கொண்டுவந்தது கவிதை...

பத்திரமாகத்தான் இருக்கணும்.. குழந்தையை கொடுக்கலாமோ?..

ஜெயஸ்ரீ ஷங்கர் said...

ரிஷான் சாகசக்காரி யார்????? சொல்லுங்களேன் ..கவிதை அருமை

fonio sivakumar said...

ஒரு பெண்ணை வித்தியாசமாக வடிவமைத்த கவிஞன் /நன்று / ஒரு பெண்மை இவவளவு வித்தியாசமாக இருக்குமா?

சாந்தி said...

பெண் என ஒரு நாட்டை குறிக்கிறாரோ என எண்ணுகின்றேன்...

ப்ரியன் said...

மீண்டு(ம்) வந்தமைக்கு வாழ்த்துக்கள் ரிஷி..

கீதா சாம்பசிவம் said...

என்ன இவ்வளவு வருத்தம்?? :((((((((

சக்தி சக்திதாசன் said...

அன்பின் தம்பி ரிஷான்,

எகிறிக் குதிக்கும் வார்த்தைகள், நெஞ்சத்தின் அதீத ஆத்திர உணர்வுகளை
அழகாய்ப் ப்டம் பிடித்துக் காட்டுகிறது.

"கவிஞனின் உணர்வுகள் கவிதை எழுதும் அந்த நிமிடங்களிலே தான் அவன்
உள்ளத்தில் நர்த்தனமாடுகின்றன" என்னும் கருத்தை முற்று முழுதாக
ஆதரிப்பவன் நான்.

கவிதைகள் என்றுமே கவிஞனின் வாழ்வில் நடந்த ஒரு உண்மைச் சம்பவமாக
இருக்கும் என்பது நியதியல்ல, அப்படி இருக்கக்கூடாது என்றொரு விதியும்
இல்லை.

கவிஞர்களின் சிறப்பு என்னவெனில் ஒரு காட்சியை கற்பனையில் உருவகித்து
அதற்கு உணர்ச்சித் ததும்பலுடன் கூடிய வார்த்தைகளைக் கொடுத்து படிப்போரை
அந்த உணர்வுகளுக்குள் அந்த சொற்பநேரம் மிதக்க விடுவதேயாகும்.

ரிஷான் உங்கள் கவிதையின் உணர்ச்சிகள் மிகவும் ஆழமானது. ஒரு தூய்மையான
அன்பான இதயத்தை உடைத்தெறியும் பெண்ணால் பாதிக்கப்பட்ட ஒரு ஆணின்
உணர்வுகளைத் தத்ரூமாக வடித்திருக்கிறீர்கள்.

இதையே பால் மாற்றி பெண்ணொருத்தி ஆணால் வஞ்சிக்கப்படும் போது ஏற்படும்
உணர்வென்ரு கூட ர்டுத்துக் கொள்ளலாம்.

அருமையாக இருக்கிறது.

வாழ்த்துக்கள்

அன்புடன்
சக்தி

விஜி said...

இந்த சாகசங்களே அவளையும் சாகடித்துவிடும். ஏய்த்தோ ஏமாற்றியோ வஞ்சனை சூதோடு பிழைக்கின்ற எந்தப்பிழைக்கும் ஆயுள் அதிகம் இல்லை.


காலங்கள் சில தேவைகளை எதைக்கருதியோ செய்கின்றது அதன் காரணம் புரியவரும் போது...

சாகசத்தின் சலிப்புகள் அவளுக்கே புரியும்.


'ரிஷான்,

சொல்லவேண்டியதை நேர்த்தியாகச்சொல்லி இருக்கின்றீர்கள்.

துரை said...

ஆகா
மீண்டும் ரிஷான்.............

இப்போதைக்கு இதைத்தவிர வேறெதுவும் மனதுக்குள் இறங்கவில்லை