தென்றல் சாட்சியாக
பிறை நிலவும் தாரகைகளும் சாட்சியாக
அல்லிக்குளத்து நீர்ப்பூக்கள் சாட்சியாக
விருட்சக் கூட்டுப் பட்சிகளும் சாட்சியாக
ராக்குருவியின் மெல்லிசையொன்றோடு
இருள் படர்ந்த நடுநிசிப்பொழுதொன்றில்
அடர்துயிலில் நிலத்தில்
ஒன்றிப்படர்ந்திருந்த பூங்கொடியினைத்
தன் மேல் போட்டுக்கொண்டது
வனத்தின் பெருவிருட்சமொன்று
புது இடத்தில் துவண்ட கொடியின்
மனவலியகற்றி
நேசம் சொல்லிச் சொல்லி
ஆறுதல்படுத்திற்று மரம்
கொடியின் பேரெழில் பூக்கள்
வண்ணத்துப்பூச்சிகளுக்கும் வண்டுகளுக்கும்
தேன்சிட்டுகளுக்கும் எட்டாமல்
மரத்தின் இலைகள்
முக்காடாகிப்போயின
கொடி சூழலுக்கிறைக்கும்
சுத்தக்காற்றும் மேல்நோக்கிப் பறந்து
வீணாகியே போயிட
எதற்கும் பயனற்றுப்போன
கொடியின் மலர்கள் வீழ்ந்து
வேரின் மண்ணுக்கு உரமாகின
வசந்தங்கள் மிகைத்த காலமொன்றில்
சூழவும் மரத்தின் நிழலில்
அழகழகான பூக்கள் கொண்ட
வேற்றுக்கொடிகள் சில
வேர்விடத் தொடங்குகையில்
தூக்கிவளர்த்த கொடியை சிறிதகற்றி
மரம் அனைத்தையும்
வரவேற்றுப் பாடியது
ஓர் துர்நாளில்
தன்னை நம்பிப் படர்ந்திருந்த
பழங் கொடியுதிர்த்தகன்றது துரோகித்த மரம்
அந்தோ
விருட்சத்தை மட்டுமே
நம்பிச் சிதைந்த கொடி
நீரற்றுக் கிளையற்றுப்
படர ஒரு துரும்பற்றுத் திரும்பவும்
மண்ணிலே வீழ்ந்தழிந்தது
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி - வடக்குவாசல் - ஏப்ரல், 2009
திண்ணை
44 comments:
"”கொடியின் மலர்கள் வீழ்ந்து
வேரின் மண்ணுக்கு உரமாகின”
சோகமான உண்மை!
விருட்சத்தின் துரோகம், தனித்தனி கிளைகளின் சுயநலத்தில் இதுநாள்வரை பொதிந்து, மறைந்திருந்தன..."
ஆறுதல் சொல்லி அடைக்கலம் தந்திருந்த மரமே அறுத்தெறிந்த துரோகம் பெரும் சோகம்.
//நீரற்றுக் கிளையற்றுப்
படர ஒரு துரும்பற்றுத் திரும்பவும்
மண்ணிலே வீழ்ந்தழிந்தது//
:( !
நீங்கள் எழுதியதன் பின்னணியில் ஒரு வரலாறு இருந்து, அது வாசகனுக்குத் தெரிந்திருக்கவேண்டும்.
மற்றபடி உருவக/உவமைகள் எல்லாமே கண்முன்னே அழைத்துச் சென்றது. அந்த விருட்சத்தின் கிளைமேலே ஊர்ந்து செல்வதைப் போன்றே இருந்தது!
"முக்காடாகிப்" போயின.. - இதை முக்காடிட்டன என்று எழுதலாமா?
அன்புடன்
ஆதவா
அன்பின் வெங்கடேஷ் விஜயகுமார்,
//"”கொடியின் மலர்கள் வீழ்ந்து
வேரின் மண்ணுக்கு உரமாகின”
சோகமான உண்மை!
விருட்சத்தின் துரோகம், தனித்தனி கிளைகளின் சுயநலத்தில் இதுநாள்வரை பொதிந்து, மறைந்திருந்தன..."//
அழகான கருத்து.
நன்றி நண்பரே !
அன்பின் ராமலக்ஷ்மி,
//ஆறுதல் சொல்லி அடைக்கலம் தந்திருந்த மரமே அறுத்தெறிந்த துரோகம் பெரும் சோகம்.
//நீரற்றுக் கிளையற்றுப்
படர ஒரு துரும்பற்றுத் திரும்பவும்
மண்ணிலே வீழ்ந்தழிந்தது//
:( !//
இது இன்று எல்லா இடங்களிலும் , நேசங்களிலும், அரசியலிலும், தேர்தலிலும் சாதாரணமாக நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. தான் செய்யும் துரோகத்தைச் சில விருட்சங்கள் தெரிந்தே செய்கின்றன எனினும் திருந்துவதில்லை என்பதுதான் பெரும் சோகம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !
அன்பின் ஆதவா,
//நீங்கள் எழுதியதன் பின்னணியில் ஒரு வரலாறு இருந்து, அது வாசகனுக்குத் தெரிந்திருக்கவேண்டும். //
எல்லோருக்கும் தெரிந்த வரலாறுதான்.
எல்லோரும் ஒரு கணத்திலாவது கடந்துவந்திருக்கக் கூடிய 'நம்பிக்கைத் துரோகம்'. அண்மைக்கால அரசியலிலும் தேர்தலிலும் அதிகம் பார்த்தேன். :(
//மற்றபடி உருவக/உவமைகள் எல்லாமே கண்முன்னே அழைத்துச் சென்றது. அந்த விருட்சத்தின் கிளைமேலே ஊர்ந்து செல்வதைப் போன்றே இருந்தது!
"முக்காடாகிப்" போயின.. - இதை முக்காடிட்டன என்று எழுதலாமா?//
முக்காடாகிப் போயின - விருட்சம் அரவணைத்த காலத்தில் அது அறியாமலே இயல்பாக நடந்தவிடயம்
முக்காடிட்டன - திட்டமிட்டே செய்த விடயம்
எனப் பொருளாகின்றன அல்லவா? :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
ரிஷான்,
வடக்கு வாசலில் வாசித்தேன்.
கவிதை அருமை.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
இலங்கை வாசகனாய் வாசிக்கையில் கடந்து வந்த பாதைகளை நினைத்து மனம் கனத்துப் போகிறது.
துரோகத்தனங்கள் நிறைந்து நடந்துகொண்டிருக்கும் வலிகளை நினைத்து கண்மூடி வெப்பக் காற்றை வெளித்தள்ளுவைதைத் தவிர யாதொன்றும் செய்ய வழியில்லை.
கௌபாய்மது
possessiveness என்ற ஒன்றும் இப்படித்தான், அதுவும் நட்பிலே வந்துவிட்டால் இப்படித்தான். அதுவும் ஒரு பெண்ணுக்கு ஆணின் மீதோ ஒரு ஆணுக்குப் பெண்ணின் மீதோ வந்துவிட்டால் இப்படித்தான். தனது தனக்கென்று தன்மீது படரச் செய்த கொடியை வேறு எதுவோடும் சேர விடாது தடுக்கும். ஒரு நாளில் அதற்கென்ற வாழ்க்கை கூடும்போது அந்தக் கொடியை துச்சமாய் ஒதுக்கி விடும். மரத்தையே நம்பியிருந்த கொடிக்குத் துணையாய் வேறு ஏதுமில்லாது வீழும்.
மிக அழகான படைப்பு.. வாழ்த்துக்கள் ரிஷான்
முதன்முறையாய் வருகிறேன். எதிர்பார்க்கவில்லை, இப்படி ஒரு செரிவான (க)விதையை!
//
விருட்சத்தை மட்டுமே
நம்பிச் சிதைந்த கொடி
நீரற்றுக் கிளையற்றுப்
படர ஒரு துரும்பற்றுத் திரும்பவும்
மண்ணிலே வீழ்ந்தழிந்தது
//
- சோகம் .
மனம் கலங்குகிறது.
கவிதை நல்லா இருக்கு.
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
ஆரம்பிக்கும் போதே எங்கே முடியப் போகிறதென்று தெரிந்து விட்டது :( உங்க வார்த்தை பிரயோகங்கள் வழக்கம் போலவே அருமை ரிஷு.
நாம் விருட்சமாகிறோம் என்றி எம்கீழ் இருக்கும் எம்மையே நம்பும் எளியோருக்கு துரோகம் செய்வது பாவமாகிறது இது மனிதருக்கு நிறையவே பொருந்தும்.
அருமை ரிசான்
// தென்றல் சாட்சியாக
பிறை நிலவும் தாரகைகளும் சாட்சியாக
அல்லிக்குளத்து நீர்ப்பூக்கள் சாட்சியாக
விருட்சக் கூட்டுப் பட்சிகளும் சாட்சியாக
ராக்குருவியின் மெல்லிசையொன்றோடு
இருள் படர்ந்த நடுநிசிப்பொழுதொன்றில்
அடர்துயிலில் நிலத்தில்
ஒன்றிப்படர்ந்திருந்த பூங்கொடியினைத்
தன் மேல் போட்டுக்கொண்டது
வனத்தின் பெருவிருட்சமொன்று//
இந்த அழகான அருமையான ஆரம்பத்தை படிக்கும் போதே அச்சமாக இருக்கிறது என்ன தொடரப் போகிறதோ என்று ..
// புது இடத்தில் துவண்ட கொடியின்
மனவலியகற்றி
நேசம் சொல்லிச் சொல்லி
ஆறுதல்படுத்திற்று மரம்
கொடியின் பேரெழில் பூக்கள்
வண்ணத்துப்பூச்சிகளுக்கும் வண்டுகளுக்கும்
தேன்சிட்டுகளுக்கும் எட்டாமல்
மரத்தின் இலைகள்
முக்காடாகிப்போயின//
அருமை
//கொடி சூழலுக்கிறைக்கும்
சுத்தக்காற்றும் மேல்நோக்கிப் பறந்து
வீணாகியே போயிட
எதற்கும் பயனற்றுப்போன
கொடியின் மலர்கள் வீழ்ந்து
வேரின் மண்ணுக்கு உரமாகின
வசந்தங்கள் மிகைத்த காலமொன்றில்
சூழவும் மரத்தின் நிழலில்
அழகழகான பூக்கள் கொண்ட
வேற்றுக்கொடிகள் சில
வேர்விடத் தொடங்குகையில்
தூக்கிவளர்த்த கொடியை சிறிதகற்றி
மரம் அனைத்தையும்
வரவேற்றுப் பாடியது
ஓர் துர்நாளில்
தன்னை நம்பிப் படர்ந்திருந்த
பழங் கொடியுதிர்த்தகன்றது துரோகித்த மரம்
அந்தோ
விருட்சத்தை மட்டுமே
நம்பிச் சிதைந்த கொடி
நீரற்றுக் கிளையற்றுப்
படர ஒரு துரும்பற்றுத் திரும்பவும்
மண்ணிலே வீழ்ந்தழிந்தது //
இது என்ன கதை ரிஷான் ?
நம்பி சிதைந்த கொடி படர வேறு மரங்கள் இல்லையா இல்லையா ?
மனம் வலிக்கச் செய்யும் கேள்விகளோடு முடியாமல் கதை போல் முடிந்த வித்தியாசமான கவிதை ரிஷான் .....
இந்த துரோகம் விருட்சத்துக்கு மட்டும் இருப்பதில்லை......
கவிதை......மனசுக்குள் ஓடி விளையாடியது...
இயல்பான வரிகளில், வாசிப்போரின் கண்களில் ஈரத்தை வரவழைக்கிற இயற்கையான
மொழிச்செறிவு உங்கள் கவிதையின் சிறப்பு என்பதை மீண்டும் ஒரு முறை
நிரூபித்து விட்டீர்கள் ரிஷான்.
இதுதான் நிதர்சனமோ..அதனாலென்ன வேறு மரமா இல்லை படர?
அழகிய வரிகள்.
வருக வருக நண்பரே
இயல்பான நடையில் இதயம் தொட்டுவிட்டீர்கள்
அன்பின் ரிஷான்
அருமை அருமை கவிதை அருமை
விருட்சம் துரோகம் செய்கிறது
பூங்கொடியினை தன்மேல் போட்டுக்கொண்ட பெரும் விருட்சம் கொஞ்சம் கொஞ்சமாக துரோகத்தினால் அதனை அழிக்கிறது.
நல்வாழ்த்துகள்
மரத்திற்கும் கொடிக்கும் இடையிலான காதலில்
ஏதோ நிழந்திருக்க வேண்டும்!
கதைசொன்ன கவிதை அழகு
நம்பி நம்பி ஏமாறுவதுதான் கொடிக்கு வழக்கமாயிற்றே ...நிகழ்கால நிதர்சனத்தை இவ்வளவு அழகாக சொல்ல முடியுமா ?உங்க வார்த்தை பிரயோகங்கள் வழக்கம் போலவே அருமை ரிஷான் .. வாழ்த்துக்கள்
ம் கலக்கல்
அன்பின் 'அகநாழிகை' பொன் வாசுதேவன்,
//ரிஷான்,
வடக்கு வாசலில் வாசித்தேன்.
கவிதை அருமை.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.
இம்மாத வடக்குவாசலிலும் ஒரு கவிதை வந்திருக்கிறது. நேரம் கிடைக்கும்போது பார்த்துச் சொல்லுங்கள்.
அன்பின் மதுவதனன் மௌ,
//இலங்கை வாசகனாய் வாசிக்கையில் கடந்து வந்த பாதைகளை நினைத்து மனம் கனத்துப் போகிறது.
துரோகத்தனங்கள் நிறைந்து நடந்துகொண்டிருக்கும் வலிகளை நினைத்து கண்மூடி வெப்பக் காற்றை வெளித்தள்ளுவைதைத் தவிர யாதொன்றும் செய்ய வழியில்லை.//
ஆமாம் நண்பரே.. :(
வெளியெங்கும் நம்பிக்கைத் துரோகமும் சுயநலமும் வெயிலைப் போல அலைகிறது. பாதிக்கப்படும்போது நொறுங்கிப் போவதைத் தவிர வேறெதுவும் செய்யும் நிலையற்றுப் பார்த்திருக்கிறோம். :(
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் 'ஒளியவன்' பாஸ்கர்,
//possessiveness என்ற ஒன்றும் இப்படித்தான், அதுவும் நட்பிலே வந்துவிட்டால் இப்படித்தான். அதுவும் ஒரு பெண்ணுக்கு ஆணின் மீதோ ஒரு ஆணுக்குப் பெண்ணின் மீதோ வந்துவிட்டால் இப்படித்தான். தனது தனக்கென்று தன்மீது படரச் செய்த கொடியை வேறு எதுவோடும் சேர விடாது தடுக்கும். ஒரு நாளில் அதற்கென்ற வாழ்க்கை கூடும்போது அந்தக் கொடியை துச்சமாய் ஒதுக்கி விடும். மரத்தையே நம்பியிருந்த கொடிக்குத் துணையாய் வேறு ஏதுமில்லாது வீழும்.//
மிகச் சரி நண்பா.
நீங்கள் கூறும் பொஸசிவ்நெஸ் மற்றும் அதிகபட்ச அன்பும் நம்பிக்கையும்தான் பல நட்புகளின் துயரங்களும் துரோகங்களும் செழித்துவளர நீரூற்றுகின்றன. 'விட்டுக் கொடுத்துப் போகலாமே'போன்ற வார்த்தைகளும் எண்ணங்களும் வெறும் வரிகளோடு நின்றுவிடுகின்றன. :(
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா !
அன்பின் கௌரிப்ரியா,
//மிக அழகான படைப்பு.. வாழ்த்துக்கள் ரிஷான்//
:)
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !
அன்பின் சுமஜ்லா,
//முதன்முறையாய் வருகிறேன். எதிர்பார்க்கவில்லை, இப்படி ஒரு செரிவான (க)விதையை!//
:)
உங்கள் முதல்வருகையில் மகிழ்கிறேன். உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !
அன்பின் பிரவின்ஸ்கா,
////
விருட்சத்தை மட்டுமே
நம்பிச் சிதைந்த கொடி
நீரற்றுக் கிளையற்றுப்
படர ஒரு துரும்பற்றுத் திரும்பவும்
மண்ணிலே வீழ்ந்தழிந்தது
//
- சோகம் .
மனம் கலங்குகிறது.
கவிதை நல்லா இருக்கு. //
உங்கள் கருத்தில் மகிழ்கிறேன். :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் கவிநயா,
//ஆரம்பிக்கும் போதே எங்கே முடியப் போகிறதென்று தெரிந்து விட்டது :( //
எனது கவிதைகளைக் குறித்த உங்கள் தொடர் வாசிப்பு உதவியிருக்கிறதென நினைக்கிறேன். :)
//உங்க வார்த்தை பிரயோகங்கள் வழக்கம் போலவே அருமை ரிஷு.//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
அன்பின் சக்தி,
//நம்பி நம்பி ஏமாறுவதுதான் கொடிக்கு வழக்கமாயிற்றே ...நிகழ்கால நிதர்சனத்தை இவ்வளவு அழகாக சொல்ல முடியுமா ?உங்க வார்த்தை பிரயோகங்கள் வழக்கம் போலவே அருமை ரிஷான் .. வாழ்த்துக்கள்//
நீண்ட நாட்களின் பிறகு வந்திருக்கிறீர்கள்..நலம் தானே?
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழி :)
அன்பின் தேனுஷா,
//நாம் விருட்சமாகிறோம் என்றி எம்கீழ் இருக்கும் எம்மையே நம்பும் எளியோருக்கு துரோகம் செய்வது பாவமாகிறது இது மனிதருக்கு நிறையவே பொருந்தும். //
ஆமாம். நம்பிக்கைத் துரோகம் பெரும் பாவம்தான். அதிலும் நம்மை மட்டுமே நம்பியிருப்போரை நம்ப வைத்துக் கழுத்தறுப்பதென்பது மிகக் கொடிய பாவம். பாவத்தின் சம்பளங்களை விருட்சங்கள் சம்பாதித்துக்கொள்ளும் ஓர் நாள்.
/அருமை ரிசான் ////
நன்றி தோழி !
அன்பின் பூங்குழலி,
// இந்த அழகான அருமையான ஆரம்பத்தை படிக்கும் போதே அச்சமாக இருக்கிறது என்ன தொடரப் போகிறதோ என்று ..//
:)
//நம்பி சிதைந்த கொடி படர வேறு மரங்கள் இல்லையா இல்லையா ?//
படரவென கொடிக்கு நிறைய மரங்கள் கிடைத்தனதான். எதிலும் சிக்காமல் தன் பாட்டில் நிம்மதியாக நிலத்தில் கொடியிருந்தது. அதை ஒரு நச்சு விருட்சம் மட்டும் உயரத் தூக்கி வைத்திருந்து தள்ளிவிட்டால் வாடிப் போவதைத் தவிர கொடியின் நிலை வேறென்ன ஆகும்? இனி வேறெங்கும் படர விருப்பற்றுப் போகும் நிலையும் சாத்தியம் தானே? :)
//மனம் வலிக்கச் செய்யும் கேள்விகளோடு முடியாமல் கதை போல் முடிந்த வித்தியாசமான கவிதை ரிஷான் .....//
நன்றி சகோதரி :)
அன்பின் ஜெயஸ்ரீ ஷங்கர்,
//இந்த துரோகம் விருட்சத்துக்கு மட்டும் இருப்பதில்லை......//
ஆமாம்..நிச்சயமாக !
//கவிதை......மனசுக்குள் ஓடி விளையாடியது...
நன்றி சகோதரி !
அன்பின் வேணு ஐயா,
உங்கள் கருத்து என்னை மகிழ்விக்கிறது.
நன்றி அன்பு நண்பரே !
அன்பின் சாந்தி,
//இதுதான் நிதர்சனமோ..அதனாலென்ன வேறு மரமா இல்லை படர?
அழகிய வரிகள்.//
நன்றி சகோதரி :)
அன்பின் துரை,
//வருக வருக நண்பரே
இயல்பான நடையில் இதயம் தொட்டுவிட்டீர்கள்//
நன்றி நண்பரே !
அன்பின் நண்பர் சீனா,
//அன்பின் ரிஷான்
அருமை அருமை கவிதை அருமை
விருட்சம் துரோகம் செய்கிறது
பூங்கொடியினை தன்மேல் போட்டுக்கொண்ட பெரும் விருட்சம் கொஞ்சம் கொஞ்சமாக துரோகத்தினால் அதனை அழிக்கிறது.//
மிகச் சரி நண்பரே !
விருட்சத்தின் பாகங்களெங்கிலும் செறிந்திருந்த வன்மத்தைக் கொடி, கடைசி வரை அறியவேயில்லை. :(
//நல்வாழ்த்துகள்//
நன்றி நண்பரே !
அன்பின் நண்பர் புகாரி,
//மரத்திற்கும் கொடிக்கும் இடையிலான காதலில்
ஏதோ நிழந்திருக்க வேண்டும்! //
ஆமாம்..மரத்தின் காதலை உண்மையென நம்பி கொடி சிதைந்தது :(
//கதைசொன்ன கவிதை அழகு//
நன்றி நண்பரே !
//வசந்தங்கள் மிகைத்த காலமொன்றில்
சூழவும் மரத்தின் நிழலில்
அழகழகான பூக்கள் கொண்ட
வேற்றுக்கொடிகள் சில
வேர்விடத் தொடங்குகையில்
தூக்கிவளர்த்த கொடியை சிறிதகற்றி
மரம் அனைத்தையும்
வரவேற்றுப் பாடியது//
அற்புதமான தெள்ளிய தமிழ் வரிகள் நண்பரே..... உங்கள் கவிதையின் நோக்கம் எதுவாகினும்
கவிதை மிக வளமை......சில வரிகள் புதுமையாகவும் வியக்க வைத்தன.....
பாராட்டுக்கள் கவிஞரே தொடர்ந்து எழுதுங்கள்.........
அன்பின் வசீகரன்,
மிக அழகான பெயர் உங்களுக்கு !
//வசந்தங்கள் மிகைத்த காலமொன்றில்
சூழவும் மரத்தின் நிழலில்
அழகழகான பூக்கள் கொண்ட
வேற்றுக்கொடிகள் சில
வேர்விடத் தொடங்குகையில்
தூக்கிவளர்த்த கொடியை சிறிதகற்றி
மரம் அனைத்தையும்
வரவேற்றுப் பாடியது
அற்புதமான தெள்ளிய தமிழ் வரிகள் நண்பரே..... உங்கள் கவிதையின் நோக்கம் எதுவாகினும்
கவிதை மிக வளமை......சில வரிகள் புதுமையாகவும் வியக்க வைத்தன.....//
உங்கள் கருத்தினில் மகிழ்கிறேன் !
//பாராட்டுக்கள் கவிஞரே தொடர்ந்து எழுதுங்கள்.........//
நிச்சயம் எழுதுகிறேன்.
கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே !
அன்பு ரிஷான் ஷெரிஃப்,
http://en.wikipedia.org/wiki/Symbiosis
சேர்ந்து வாழ்தலில் மூன்று வகை -
ஒன்று கொடுக்க, மற்றொன்று எடுக்க - ஒட்டுண்ணி வகை.. ( Parasitism)
நீ உன் வழி, நான் என் வழி - பாறை மேல் நீர் வகை..(Commensal)
உன்னால் நானும் , என்னால் நீயும் பயனடைந்து - இருவகைச் சார்பு வகை..(Mutual = True Symbiosis).
கட்டிக்கொடுக்கும் கொடிமகள் நாளைக்கு புருஷமரம் இல்லாமல்போனாலும்
நிலைக்க எண்ணிப் பெற்றோர் கொடுக்கும் கொழுகொம்பு - கல்வி, பணி ஆயத்தம்..
இங்கே கவிதையில் நிகழ்ந்த கொடி(ய) நிலை
இனி நிகழாமல் இருக்க
எல்லா உறவுகளிலும் கவனம் இருக்கட்டும் -
இந்த மூன்றில் இந்த உறவு எவ்வகை?
பாராட்டுகள்..
அன்பின் இளசு,
//அன்பு ரிஷான் ஷெரிஃப்,
http://en.wikipedia.org/wiki/Symbiosis
சேர்ந்து வாழ்தலில் மூன்று வகை -
ஒன்று கொடுக்க, மற்றொன்று எடுக்க - ஒட்டுண்ணி வகை.. ( Parasitism)
நீ உன் வழி, நான் என் வழி - பாறை மேல் நீர் வகை..(Commensal)
உன்னால் நானும் , என்னால் நீயும் பயனடைந்து - இருவகைச் சார்பு வகை..(Mutual = True Symbiosis).
கட்டிக்கொடுக்கும் கொடிமகள் நாளைக்கு புருஷமரம் இல்லாமல்போனாலும்
நிலைக்க எண்ணிப் பெற்றோர் கொடுக்கும் கொழுகொம்பு - கல்வி, பணி ஆயத்தம்..//
நிறையத் தேடலுள்ளவர் நீங்களெனத் தெரிகிறது. அழகான கருத்து நண்பரே !
//இங்கே கவிதையில் நிகழ்ந்த கொடி(ய) நிலை
இனி நிகழாமல் இருக்க
எல்லா உறவுகளிலும் கவனம் இருக்கட்டும் -
இந்த மூன்றில் இந்த உறவு எவ்வகை? //
நிச்சயமாக !
தன் பாட்டில் சிறப்பாகச் செழித்துவளர்ந்த கொடியொன்றினை எடுத்து, தன் மேல் போட்டுக் கொண்டு , அதன் பயனையெல்லாம் தான் மட்டுமே அனுபவித்து, காலம் கடந்த பின் கீழே தள்ளிவிடுகிறது மரம். இது ஒரு வகைச் சார்பு வகையெனக் கொள்ளலாமோ? :)
சமீபத்திய உதாரணமாக, தமிழக அரசை இறுதிவரை நம்பிக் கையேந்தி நின்ற ஈழ மக்களைக் குறிப்பிடலாம். தேர்தல் வரையும் தூக்கிவைத்துக் கொண்டாடிவிட்டு, இறுதியில் அம்போவெனக் கைவிட்டுவிட்ட துயரத்தையும் ஒருவகைச் சார்பு வகையில் எடுக்கலாம் தானே?
//பாராட்டுகள்.. //
கருத்துக்கும் பாராட்டுக்களுக்கும் நன்றி அன்பு நண்பரே !
Post a Comment