Monday, June 15, 2009
பின்னங்கால் வடு
உதிர்ந்த சருகு போலாகிவிட்ட
அப்பாவுக்கு முந்தியவர்கள்
எப்பொழுதோ நட்டுச் சென்ற
முற்றத்து மாமரம்
அகன்ற நிழலைப் பரப்பி
மாம்பிஞ்சுகளை
பூக்களைப் பழங்களை வீழ்த்தும்
தண்டின் தடித்த பரப்பிலோர் நாள்
என் பெயர் செதுக்கினார் அப்பா
தடவிப்பார்க்கிறேன்
கசிந்து காய்ந்த தழும்பின்
நெருடலும் அப்பாவுமாக
விரல்களில் உறைகிறது நினைவுகள்
இறுதியாக அவர் மடியிலமர்த்திச்
சொல்லித்தந்திட்ட வேளையில்
விரிந்திருந்த அரிச்சுவடியின்
எழுத்துகள் ஒவ்வொன்றிலும்
நகர்ந்த என் பிஞ்சுச் சுட்டுவிரலின் அழுத்தத்தில்
நகக்கண்ணில் வெள்ளை பூத்தது
எழுத்துக்கள் குறித்துநின்ற
விலங்குகளுக்கும் கூட
உயிரிருந்திருக்கும் அப்பொழுது
வீட்டின் கொல்லையில்
அகன்ற பெருங்கூட்டுக்குள்
அழகிய பூமைனா வளர்ந்தது
விழி சூழ்ந்த மஞ்சள் கீற்று
மென்சதை மூடித்திறக்கும் கருமணிகள் உருள
நாற்சூழலுக்கும் கேட்கும் படி
தன் சொண்டுகளிலிருந்து
எப்பொழுதுமேதேனும்
வார்த்தைகளை வழியவிட்டுக் கொண்டிருக்கும்
அதுதான் முதலில் அலறியது
கப்பம் கேட்டு
ஆயுதங்கள் நுழையக் கண்டு
பீதியில் நடுங்கிப்
பதைபதைத்து நாங்கள்
ஒளிந்திருந்த தளத்துள்
பலத்த அரவங்களோடு
அப் பேய்கள் நுழைந்திற்று
ஏதும் சொல்ல வாயெழாக் கணம்
கோரமாயிருந்தவற்றின் அகலத்திறந்த
வாயிலிருந்து கடுஞ்சொற்களும்
துப்பாக்கிகளில் சன்னங்களும் உதிரக்கண்டு
மேலுமச்சத்தில் விதிர்விதித்து
மூர்ச்சையுற்றுப் போனேன்
விழித்துப் பார்க்கையில்
பிணமாகியிருந்தார் அப்பா
ஊனமாகியிருந்தேன் நான்
அம்மாவும் அக்காவும்
எங்கெனத் தெரியவில்லை
இன்றுவரை
குறி பிசகிய
துப்பாக்கி ரவை விட்டுச் சென்ற
ஒற்றைக்காலின் சாம்பல் வடு
அப்பா,அம்மா,அக்கா,சுற்றம் குறித்த நினைவுகளை
இனி வரும் நாட்களிலும்
ஏந்தி வரக்கூடும்
-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
நன்றி - புகலி
மனிதம் - ஏப்ரல் இதழ்
Subscribe to:
Post Comments (Atom)
35 comments:
வடுக்கள் மறைவதில்லையென்பதால் தலைப்பு சாலப் பொருத்தம். சில வருத்தங்கள் மட்டுமே வடுக்களாக மாறுகின்றன. நீ கூறியிருக்கும் வடு பின்னங்காலில் மட்டுமல்ல எங்கள் உள்ளங்களிலுமே!
மாமரம்..
பின்னங்கால்..
வடு..
வலிக்கிறது!!
அன்பின் ஒளியவன் பாஸ்கர்,
//வடுக்கள் மறைவதில்லையென்பதால் தலைப்பு சாலப் பொருத்தம். சில வருத்தங்கள் மட்டுமே வடுக்களாக மாறுகின்றன. நீ கூறியிருக்கும் வடு பின்னங்காலில் மட்டுமல்ல எங்கள் உள்ளங்களிலுமே!//
நிச்சயமாக நண்பா.
இது போன்ற பல வடுக்கள் இன்று நம் மக்கள் மத்தியில் உடலிலும் உள்ளத்திலும் பரவிப்போயுள்ளன. காலம்தான் களைந்திட வேண்டும் !
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா !
அன்பின் கார்த்தி,
//மாமரம்..
பின்னங்கால்..
வடு..
வலிக்கிறது!!//
ம்ம் !
உங்கள் முதல்வருகை மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும் !
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
//தண்டின் தடித்த பரப்பிலோர் நாள்
என் பெயர் செதுக்கினார் அப்பா
தடவிப்பார்க்கிறேன்
கசிந்து காய்ந்த தழும்பின்
நெருடலும் அப்பாவுமாக
விரல்களில் உறைகிறது நினைவுகள்//
நினைவின் சுமைகளை அருமையாக உறைய வைத்திருக்கிறீர்கள் ரிஷான்
// இறுதியாக அவர் மடியிலமர்த்திச்
சொல்லித்தந்திட்ட வேளையில்
விரிந்திருந்த அரிச்சுவடியின்
எழுத்துகள் ஒவ்வொன்றிலும்
நகர்ந்த என் பிஞ்சுச் சுட்டுவிரலின் அழுத்தத்தில்
நகக்கண்ணில் வெள்ளை பூத்தது
எழுத்துக்கள் குறித்துநின்ற
விலங்குகளுக்கும் கூட
உயிரிருந்திருக்கும் அப்பொழுது//
இறுதியாக என்று சொல்லும் போதே மனதின் நிழல் படிகிறது .மடியில் அமர்த்தி சொல்லித் தந்த என்று பாசத்தையும் அதை தந்தவர் இல்லாத துயரத்தையும் நன்கு பிரதிபலித்திருக்கிறீர்கள் .
//வீட்டின் கொல்லையில்
அகன்ற பெருங்கூட்டுக்குள்
அழகிய பூமைனா வளர்ந்தது
விழி சூழ்ந்த மஞ்சள் கீற்று
மென்சதை மூடித்திறக்கும் கருமணிகள் உருள
நாற்சூழலுக்கும் கேட்கும் படி
தன் சொண்டுகளிலிருந்து
எப்பொழுதுமேதேனும்
வார்த்தைகளை வழியவிட்டுக் கொண்டிருக்கும்
அதுதான் முதலில் அலறியது
கப்பம் கேட்டு
ஆயுதங்கள் நுழையக் கண்டு
பீதியில் நடுங்கிப்
பதைபதைத்து நாங்கள்
ஒளிந்திருந்த தளத்துள்
பலத்த அரவங்களோடு
அப் பேய்கள் நுழைந்திற்று
ஏதும் சொல்ல வாயெழாக் கணம்
கோரமாயிருந்தவற்றின் அகலத்திறந்த
வாயிலிருந்து கடுஞ்சொற்களும்
துப்பாக்கிகளில் சன்னங்களும் உதிரக்கண்டு
மேலுமச்சத்தில் விதிர்விதித்து
மூர்ச்சையுற்றுப் போனேன்//
பயத்தையும்
//விழித்துப் பார்க்கையில்
பிணமாகியிருந்தார் அப்பா
ஊனமாகியிருந்தேன் நான்
அம்மாவும் அக்காவும்
எங்கெனத் தெரியவில்லை
இன்றுவரை
குறி பிசகிய
துப்பாக்கி ரவை விட்டுச் சென்ற
ஒற்றைக்காலின் சாம்பல் வடு
அப்பா,அம்மா,அக்கா,சுற்றம் குறித்த நினைவுகளை
இனி வரும் நாட்களிலும்
ஏந்தி வரக்கூடும்//
ஒரு குழந்தையின் தவிப்பையும் ஆறாத மன ரணத்தையும் உணர்வுப் பூர்வமாக சொல்கிறது உங்கள் கவிதை ரிஷான் .இது போல் நிஜத்தில் எத்தனை என்ற எண்ணமும் வராமல் இல்லை .காலம் நல்ல மருந்து கொண்டு வரட்டும்
அருமை நண்பரே !! வலியின் வடுமாராமல் இருந்தது கவிதை !!
ரிஷான்...................
வார்த்தைகளாலும்
வரிவரியாய்க் கீறல் விழுகிறது இதயத்தில்
வாய்விட்டுக் கதறி அழுகிறது மனதுக்குள்
நம் தழும்புகள் எல்லாம் வேதனை வடுக்களாகிவிட்டன
//குறி பிசகிய
துப்பாக்கி ரவை விட்டுச் சென்ற
ஒற்றைக்காலின் சாம்பல் வடு
அப்பா,அம்மா,அக்கா,சுற்றம் குறித்த நினைவுகளை
இனி வரும் நாட்களிலும்
ஏந்தி வரக்கூடும்//
அந்தக் கொடூரத்தை உலகவரலாறு எளிதில் மறக்காது. அந்த வடுக்கள் எகிப்தியர்களின் பிரமிடுகளை விடவும் உயரமானவை. அவற்றைக் காலச்சருகுகளால் மூடி மறைத்து விடுகிற வீரியம் எந்தக் காற்றுக்கும் இருக்காது. உலகம் அந்தக் கதறல்களின் எதிரொலிகளிலிருந்து தப்பித்துச் செல்ல முடியாது.
அன்பின் பூங்குழலி,
//ஒரு குழந்தையின் தவிப்பையும் ஆறாத மன ரணத்தையும் உணர்வுப் பூர்வமாக சொல்கிறது உங்கள் கவிதை ரிஷான் .இது போல் நிஜத்தில் எத்தனை என்ற எண்ணமும் வராமல் இல்லை .காலம் நல்ல மருந்து கொண்டு வரட்டும்//
நிச்சயமாக சகோதரி. காலம் ஒரு நாள் ஆற்றும்தான். அதற்கும் காலமெடுக்குமென்றே தோன்றுகிறது.
கருத்துக்கு நன்றி சகோதரி !
அன்பின் ராஜா,
//அருமை நண்பரே !! வலியின் வடுமாராமல் இருந்தது கவிதை !!//
கருத்துக்கு நன்றி நண்பரே !
அன்பின் துரை,
//ரிஷான்...................
வார்த்தைகளாலும்
வரிவரியாய்க் கீறல் விழுகிறது இதயத்தில்
வாய்விட்டுக் கதறி அழுகிறது மனதுக்குள் //
ம்ம்..அதைத் தவிர்த்து நாமும் எதுவும் செய்ய இயலா நிலையிலிருக்கிறோம் நண்பரே !
கருத்துக்கு நன்றி !
அன்பின் தேனுஷா,
//நம் தழும்புகள் எல்லாம் வேதனை வடுக்களாகிவிட்டன //
ஆமாம்..நிச்சயமாக !
வரலாறுகள் தோறும் மறக்கப்படாமலும், துயர்படுத்தவென்றும் இப் புண்கள் கிளறப்பட்டுக் கொண்டே இருக்கும் என்பதுதான் வேதனை தோழி !
கருத்துக்கு நன்றி !
அன்பின் வேணு ஐயா,
//குறி பிசகிய
துப்பாக்கி ரவை விட்டுச் சென்ற
ஒற்றைக்காலின் சாம்பல் வடு
அப்பா,அம்மா,அக்கா,சுற்றம் குறித்த நினைவுகளை
இனி வரும் நாட்களிலும்
ஏந்தி வரக்கூடும்
அந்தக் கொடூரத்தை உலகவரலாறு எளிதில் மறக்காது. அந்த வடுக்கள் எகிப்தியர்களின் பிரமிடுகளை விடவும் உயரமானவை. அவற்றைக் காலச்சருகுகளால் மூடி மறைத்து விடுகிற வீரியம் எந்தக் காற்றுக்கும் இருக்காது. உலகம் அந்தக் கதறல்களின் எதிரொலிகளிலிருந்து தப்பித்துச் செல்ல முடியாது. //
நிச்சயமாக நண்பரே..அருமையான கருத்து.
நன்றி நண்பரே !
//எழுத்துகள் ஒவ்வொன்றிலும்
நகர்ந்த என் பிஞ்சுச் சுட்டுவிரலின் அழுத்தத்தில்
நகக்கண்ணில் வெள்ளை பூத்தது
எழுத்துக்கள் குறித்துநின்ற
விலங்குகளுக்கும் கூட
உயிரிருந்திருக்கும் அப்பொழுது //
அழகு வரிகள் ரிஷான் ,,
காயங்களைக் கூட காலங்கள் மாற்றலாம் ஆனால் அதன் வடுக்கள் என்றும் நிலைத்திருப்பவை தான் ..அது மரத்தின் வடுவாக இருந்தாலென்ன ,மனத்தின் வடுவாக இருந்தாலென்ன .. வலியும் வேதனையுமே வாழ்வாகி ,மிச்சமாய் இருக்கிறது இன்னும் ...
அன்பின் சக்தி,
////எழுத்துகள் ஒவ்வொன்றிலும்
நகர்ந்த என் பிஞ்சுச் சுட்டுவிரலின் அழுத்தத்தில்
நகக்கண்ணில் வெள்ளை பூத்தது
எழுத்துக்கள் குறித்துநின்ற
விலங்குகளுக்கும் கூட
உயிரிருந்திருக்கும் அப்பொழுது //
அழகு வரிகள் ரிஷான் ,,
காயங்களைக் கூட காலங்கள் மாற்றலாம் ஆனால் அதன் வடுக்கள் என்றும் நிலைத்திருப்பவை தான் ..அது மரத்தின் வடுவாக இருந்தாலென்ன ,மனத்தின் வடுவாக இருந்தாலென்ன .. வலியும் வேதனையுமே வாழ்வாகி ,மிச்சமாய் இருக்கிறது இன்னும் ...//
நிச்சயமாக தோழி. சரியாகச் சொன்னீர்கள். வரலாறுகள் கூட என்றுமே மறக்காத, மன்னிக்காத பாவக் கறைகளை, வடுக்களை சுமக்க நேர்ந்திருக்கிறோம். என்ன செய்ய? :(
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சினேகிதி !
எல்லாரையும் குளுத்தும் வெள்ளை
எங்களை எரியவைக்கும்.
எல்லாருக்கும் களிப்பூட்டும் இரவுமடி
எங்களுக்கு கழியவைக்கும்.
பசியெடுத்து வந்த பசு
கழனிப்பானைக்குள் தலைவிட்ட சத்தமும்
நெஞ்சத்துள் இடிமுழக்கும்.
கடந்து வந்தாலும்
இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிற்ன
ஏதேதோ நினைவுகள்
மாம்பிசினைப் போல...
அந்தகாலம் இனி
அடிக்கடி வந்து இடிக்கும்
வருங்காலத்தில்..
உடல் தகனித்து உயிர் தனித்தாலும் அழுகுரல் மட்டும் கரைந்து போய்விடாது. அத்துனை அனுபவம். அதன் ஒரு விள்ளளின் தடயம் இந்தக்கவி.
ரிஷான்,
இதற்கெல்லாம் என்றேனும் முடிவு வருமா?
'திரைப்படங்களின் இப்படியான காட்சிகளைக்கண்டு கண்ணீர் விட்ட காலமெல்லாம் மலையேறிவிட்டது நிகழ்வின் தாக்கங்களால் உணர்வுகள் உறைந்துபோய் கிடக்கிறது.
புலம்பெயர்ந்த நாங்கள் எல்லாம் 'நடைப்பிணமாகவே" இருக்கின்றோம்.
உறவுகளின் இழப்பை, உறுப்புகளின் இழப்பை, கற்பினைச்சூறையாடி வெறியன் செய்யும் கொடூரத்தை".....
மரத்துப்போய்விட்டது மனசு.....
உடல் தகனித்து உயிர் தனித்தாலும் அழுகுரல் மட்டும் கரைந்து போய்விடாது. அத்துனை அனுபவம். அதன் ஒரு விள்ளளின் தடயம் இந்தக்கவி. கவிஞர் என்னைவிடக் கொடுத்து வைத்தவர். எனக்கு வீடுமில்லை. முற்றமுமில்லை. தெருவும் இல்லை ஈழத்தில்.
அன்பின் அமரன்,
//எல்லாரையும் குளுத்தும் வெள்ளை
எங்களை எரியவைக்கும்.
எல்லாருக்கும் களிப்பூட்டும் இரவுமடி
எங்களுக்கு கழியவைக்கும்.
பசியெடுத்து வந்த பசு
கழனிப்பானைக்குள் தலைவிட்ட சத்தமும்
நெஞ்சத்துள் இடிமுழக்கும்.
கடந்து வந்தாலும்
இன்னும் ஒட்டிக்கொண்டிருக்கிற்ன
ஏதேதோ நினைவுகள்
மாம்பிசினைப் போல...
அந்தகாலம் இனி
அடிக்கடி வந்து இடிக்கும்
வருங்காலத்தில்.. //
நிச்சயமாக நண்பரே !
நாமே விரும்பாப் பட்சத்திலும் திரும்பும் திசைகள்தோறும் காணும் வடுக்களையெல்லாம் காலம் நினைவூட்டும். :(
//உடல் தகனித்து உயிர் தனித்தாலும் அழுகுரல் மட்டும் கரைந்து போய்விடாது. அத்துனை அனுபவம். அதன் ஒரு விள்ளளின் தடயம் இந்தக்கவி. கவிஞர் என்னைவிடக் கொடுத்து வைத்தவர். எனக்கு வீடுமில்லை. முற்றமுமில்லை. தெருவும் இல்லை ஈழத்தில்.//
எதுவுமில்லாவிட்டாலும் சொந்தங்கள் இருக்கிறோம் நண்பரே.
வாருங்கள்..காத்திருக்கிறேன் !
கருத்துக்கு நன்றி அன்பு நண்பரே !
அன்பின் விஜி,
//ரிஷான்,
இதற்கெல்லாம் என்றேனும் முடிவு வருமா?//
முடிவு வந்தாலும், பழைய வடுக்களைக் காலம் கிளறிக் கொண்டே இருக்குமே?
//'திரைப்படங்களின் இப்படியான காட்சிகளைக்கண்டு கண்ணீர் விட்ட காலமெல்லாம் மலையேறிவிட்டது நிகழ்வின் தாக்கங்களால் உணர்வுகள் உறைந்துபோய் கிடக்கிறது.//
ஆமாம் தோழி. திரைப்படங்களில் பார்க்கையில் இப்படியெல்லாம் நடக்குமா என பிரமித்துப் போய் நின்றோம். நேரில் அதைவிடப் பலமடங்கு நடக்கிறது.
//புலம்பெயர்ந்த நாங்கள் எல்லாம் 'நடைப்பிணமாகவே" இருக்கின்றோம்.
உறவுகளின் இழப்பை, உறுப்புகளின் இழப்பை, கற்பினைச்சூறையாடி வெறியன் செய்யும் கொடூரத்தை".....
மரத்துப்போய்விட்டது மனசு.....//
நிச்சயமாக.. :(
மரத்துப் போய்விட்ட மனம்தான் இன்னும் ஜீவிக்க வைத்திருக்கிறது எங்களை.
இக் கவிதை இயக்குனர் ப்ரியகவியனால் குறும்படமாகவும் எடுக்கப்படுகிறது தோழி !
கருத்துக்கு நன்றி !
வலிகள் உணரும்போது வீரியம் தெரியும்.. உங்கள் வரிகளிலும் அந்த வீரியம் இருக்கிறது.வாழ்க்கை திரும்பவேண்டும் வேண்டுகிறோம் கடவுளிடம்...
அன்பின் கா.ரமேஷ்,
//வலிகள் உணரும்போது வீரியம் தெரியும்.. உங்கள் வரிகளிலும் அந்த வீரியம் இருக்கிறது.வாழ்க்கை திரும்பவேண்டும் வேண்டுகிறோம் கடவுளிடம்...//
உங்கள் பிரார்த்தனைகள் பலிக்கட்டும்.
கருத்துக்கு நன்றி நண்பரே !
ஹெலிகாப்டர் ஒலி கேட்டாலே இதயம் அதிர்ந்து ஒடுங்கும் அளவு
புதைந்துவிட்ட அச்சம்... அயல்தேசம் வந்து ஆண்டுகள் கடந்தும்...
மனதிலும் உடலிலும் மாறாத் தழும்புகளை ஏந்தி மருகும்
அத்தனை உறவுகளுக்கும் என் புரிந்துணர்வு அர்ப்பணம்..
ரிஷானின் கவிதைச் சிற்பத்துக்கு என் வீரவணக்கம்!
//விரிந்திருந்த அரிச்சுவடியின்
எழுத்துகள் ஒவ்வொன்றிலும்
நகர்ந்த என் பிஞ்சுச் சுட்டுவிரலின் அழுத்தத்தில்
நகக்கண்ணில் வெள்ளை பூத்தது
எழுத்துக்கள் குறித்துநின்ற
விலங்குகளுக்கும் கூட
உயிரிருந்திருக்கும் அப்பொழுது//
நான் ரசித்த வரிகள். வார்த்தைகள் வழக்கம் போல் உங்களுக்கு கைகட்டி சேவகம் செய்கின்றன. துயரத்தின் அழகான வெளிப்பாடு.
// துப்பாக்கி ரவை விட்டுச் சென்ற
ஒற்றைக்காலின் சாம்பல் வடு //
பின்னங்கால் வடு
வலி உணர்கிறேன்.
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
அன்பின் இளசு,
//ஹெலிகாப்டர் ஒலி கேட்டாலே இதயம் அதிர்ந்து ஒடுங்கும் அளவு
புதைந்துவிட்ட அச்சம்... அயல்தேசம் வந்து ஆண்டுகள் கடந்தும்...
மனதிலும் உடலிலும் மாறாத் தழும்புகளை ஏந்தி மருகும்
அத்தனை உறவுகளுக்கும் என் புரிந்துணர்வு அர்ப்பணம்..
ரிஷானின் கவிதைச் சிற்பத்துக்கு என் வீரவணக்கம்!//
எப்பொழுதும் ஆறாத் தழும்புகளைக் காலம் தந்துவிட்டது நண்பரே. உண்மையான ஆயுதப் பொருட்களை எடுத்துவிளையாடி வளர்ந்த குழந்தைகளை நான் கண்டிருக்கிறேன். அவர்களது ஒவ்வொரு வளர்ச்சியின் போதும் காலம் அதன் விளைவுகளை மறக்கடிக்குமா? அவர்களது மனப்புண்களை ஆற்றுமா? மறக்கடிக்கவேண்டுமெனவும் ஆற்றவேண்டுமெனவும் பிரார்த்திப்போம்.
கருத்துக்கு நன்றி நண்பரே !
அன்பின் கவிநயா,
////விரிந்திருந்த அரிச்சுவடியின்
எழுத்துகள் ஒவ்வொன்றிலும்
நகர்ந்த என் பிஞ்சுச் சுட்டுவிரலின் அழுத்தத்தில்
நகக்கண்ணில் வெள்ளை பூத்தது
எழுத்துக்கள் குறித்துநின்ற
விலங்குகளுக்கும் கூட
உயிரிருந்திருக்கும் அப்பொழுது//
நான் ரசித்த வரிகள். வார்த்தைகள் வழக்கம் போல் உங்களுக்கு கைகட்டி சேவகம் செய்கின்றன. துயரத்தின் அழகான வெளிப்பாடு.//
:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !
அன்பின் பிரவின்ஸ்கா,
//// துப்பாக்கி ரவை விட்டுச் சென்ற
ஒற்றைக்காலின் சாம்பல் வடு //
பின்னங்கால் வடு
வலி உணர்கிறேன்.
-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா //
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
புறமுதுகிடாமல் பட்ட வடுதானே இது!
இப்போதைய உலகில் சமாதனம் என்ற வார்த்தையே வழக்கொழிந்து விடும் போல இருக்கிறது.
வடுக்களை தடுக்காமல் பொறுக்கி எடுத்த எழுத்துகளால்
மனதில் தடம் பதித்த கவிதை - காலம் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை காலாகாலத்திற்கும் கண்முன்னே காட்டும் கவிதை.
பாராட்டுகிறேன் நண்பரே.
அன்பின் பாரதி,
//புறமுதுகிடாமல் பட்ட வடுதானே இது!
இப்போதைய உலகில் சமாதனம் என்ற வார்த்தையே வழக்கொழிந்து விடும் போல இருக்கிறது.
வடுக்களை தடுக்காமல் பொறுக்கி எடுத்த எழுத்துகளால்
மனதில் தடம் பதித்த கவிதை - காலம் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை காலாகாலத்திற்கும் கண்முன்னே காட்டும் கவிதை.
பாராட்டுகிறேன் நண்பரே. //
சமாதானம் எனும் வார்த்தை அரசியல் நாடகங்களுக்கே அதிகம் பயன்பட்டுக்கொண்டிருக்கின்றது. உண்மையான சமாதானம் கிட்டுவதே இல்லை.
கருத்துக்கு நன்றி நண்பரே !
சில நினைவுகள் எத்தனை வருடம் சென்றாலும் மறக்க முடியாதது..அதனை மிக அழகாக கவிதையில் உணர்த்தி இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள் .............
வலியைச் சுமந்து வரிகள் ஆறாத வடுவாக..:(!
அன்பின் ஏழிசை யாழினி,
//சில நினைவுகள் எத்தனை வருடம் சென்றாலும் மறக்க முடியாதது..அதனை மிக அழகாக கவிதையில் உணர்த்தி இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள் //
உங்கள் முதல்வருகையும் கருத்தும் மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !
அன்பின் ராமலக்ஷ்மி,
//வலியைச் சுமந்து வரிகள் ஆறாத வடுவாக..:(!//
:(
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !
Post a Comment