Tuesday, September 1, 2009

கோடை


பெரு வனத்தை எரிக்குமொரு
ஊழித் தீயின் கனல் நான்
எரித்து எரித்துக் கருக்கி
எரியாக் கணங்களில் உள்ளுக்குள்
புகைந்து வெளிக் கசிந்து இருளாக்கி
பின்னும் ஆகாயத்தையே எரிக்கப்போல
அதியுயர் விருட்சங்களின்
நுனி பற்றியெரித்து
இன்னும் காட்டைக் கூடெனக் கொண்ட
எல்லா உயிரையும் பொசுக்கும்
வல்லமை பெற்ற கட்டற்ற நெருப்பின்
வலுஞ்சுடர்கள் நான்
மண்ணின் அடியாழத்துக்குள்
முகம் புதைத்துக் கொண்டோரே
நீர் மட்டும்
எல்லா அனல்களினின்றும்
தப்பித்து விட்டீரா

- எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி - வார்த்தை - ஆகஸ்ட், 2009 இதழ்

25 comments:

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அன்பு நண்பர் ரிஷான்,
உங்கள் கவிதை வரிகள் வழமை போல நன்றாக இருக்கின்றது.
அதுவும் இறுதி வரிகள் மரணத்திற்கு பின்னர் உள்ள வாழ்க்கையை நினைவுப் படுத்தும் வண்ணம் அமைந்திருத்தல் மிக நன்றாக இருக்கிறது.

ஃபஹீமாஜஹான் said...

"மண்ணின் அடியாழத்துக்குள்
முகம் புதைத்துக் கொண்டோரே
நீர் மட்டும்
எல்லா அனல்களினின்றும்
தப்பித்து விட்டீரா"

பொருள் பொதிந்த வரிகள். வாழ்த்துக்கள் ரிஷான்.

பூங்குழலி said...

மண்ணின் அடியாழத்துக்குள்
முகம் புதைத்துக் கொண்டோரே
நீர் மட்டும்
எல்லா அனல்களினின்றும்
தப்பித்து விட்டீரா

நல்ல கேள்வி .....உள்ளே கிடந்தது வெந்து போக வேண்டியது தான் ...நல்ல உணர்வோட்டமான கவிதை

முஹம்மத் இஸ்மாயில் புஹாரி said...

அருமை கவிதை நண்பரே..

எழில் அரசு said...

//எரியாக் கணங்களில் உள்ளுக்குள்
புகைந்து வெளிக் கசிந்து இருளாக்கி
பின்னும் ஆகாயத்தையே எரிக்கப்போல
அதியுயர் விருட்சங்களின்
நுனி பற்றியெரித்து//


எரிக்கப்போல???? எரிக்கப்போவது போல என்று சொல்ல வருகிறீர்களா?

அப்படியென்றால் எரியாத போது மரத்தின் நுனிப்பற்றி எரிப்பேன் என்பது எப்படி?



//வலுஞ்சுடர்கள் நான்//

சொற்பிழை என நினைக்கிறேன்.



//மண்ணின் அடியாழத்துக்குள்
முகம் புதைத்துக் கொண்டோரே
நீர் மட்டும்
எல்லா அனல்களினின்றும்
தப்பித்து விட்டீரா//

எழுதிய கவிஞர் தன்னை 'வலிய ஊழித்தீ' என சொல்லியது சரி. இங்கே மண்ணில் புதைத்துக் கொண்டவரோடுத் தன்னை எந்த கோணத்தில் ஒப்பிடுகிறார்?

'நான் மேலேறி எரிக்கிறனே, நீ மண்ணில் புதைத்துக் கொள்கிறாயே' என்ற ஓப்பீட்டில் 'எரிக்கும் தீ' தன் இனமாகவே புதைத்துக் கொண்டவரை கேள்வி கேட்கும்போது புதைத்துக் கொண்டதும் 'தீ' என்றே ஆகிறது. அதன்பின் 'தப்பித்து விட்டீரா' என கேட்பது என்ன? புதைந்த தீ எதனிடம் இருந்து தப்ப வேண்டும்?

உருவகத்தில் என்னமோ குளறுபடி ஆகி விட்டது ரிஷான்.

இல்லை நீங்கள் எழுதிய கோணம் எனக்கு பிடிபடாமல் இருக்கலாம்.

விளக்குங்களேன்.

M.Rishan Shareef said...

அன்பின் ஷேக் தாவூத்,

//அன்பு நண்பர் ரிஷான்,
உங்கள் கவிதை வரிகள் வழமை போல நன்றாக இருக்கின்றது.
அதுவும் இறுதி வரிகள் மரணத்திற்கு பின்னர் உள்ள வாழ்க்கையை நினைவுப் படுத்தும் வண்ணம் அமைந்திருத்தல் மிக நன்றாக இருக்கிறது.//

அவ்வப்போதாவது இதுபோல மரண வாழ்க்கையை நினைவுபடுத்திக் கொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்பு நண்பா :)

M.Rishan Shareef said...

அன்பின் ஃபஹீமா ஜஹான்,

//"மண்ணின் அடியாழத்துக்குள்
முகம் புதைத்துக் கொண்டோரே
நீர் மட்டும்
எல்லா அனல்களினின்றும்
தப்பித்து விட்டீரா"

பொருள் பொதிந்த வரிகள். வாழ்த்துக்கள் ரிஷான்.//

:)
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//மண்ணின் அடியாழத்துக்குள்

முகம் புதைத்துக் கொண்டோரே
நீர் மட்டும்
எல்லா அனல்களினின்றும்
தப்பித்து விட்டீரா

நல்ல கேள்வி .....உள்ளே கிடந்தது வெந்து போக வேண்டியது தான் ...நல்ல உணர்வோட்டமான கவிதை //


:)

நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் முஹம்மத் இஸ்மாயில் புஹாரி,

//அருமை கவிதை நண்பரே..//


நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் எழில் அரசு,


//எரிக்கப்போல???? எரிக்கப்போவது போல என்று சொல்ல வருகிறீர்களா?


அப்படியென்றால் எரியாத போது மரத்தின் நுனிப்பற்றி எரிப்பேன் என்பது எப்படி?


வலுஞ்சுடர்கள் நான்//

சொற்பிழை என நினைக்கிறேன்.


மண்ணின் அடியாழத்துக்குள்
முகம் புதைத்துக் கொண்டோரே
நீர் மட்டும்
எல்லா அனல்களினின்றும்
தப்பித்து விட்டீரா//

எழுதிய கவிஞர் தன்னை 'வலிய ஊழித்தீ' என சொல்லியது சரி. இங்கே மண்ணில் புதைத்துக் கொண்டவரோடுத் தன்னை எந்த கோணத்தில் ஒப்பிடுகிறார்?

'நான் மேலேறி எரிக்கிறனே, நீ மண்ணில் புதைத்துக் கொள்கிறாயே' என்ற ஓப்பீட்டில் 'எரிக்கும் தீ' தன் இனமாகவே புதைத்துக் கொண்டவரை கேள்வி கேட்கும்போது புதைத்துக் கொண்டதும் 'தீ' என்றே ஆகிறது. அதன்பின் 'தப்பித்து விட்டீரா' என கேட்பது என்ன? புதைந்த தீ எதனிடம் இருந்து தப்ப வேண்டும்?

உருவகத்தில் என்னமோ குளறுபடி ஆகி விட்டது ரிஷான்.

இல்லை நீங்கள் எழுதிய கோணம் எனக்கு பிடிபடாமல் இருக்கலாம்.

விளக்குங்களேன். //

நிச்சயமாக விளக்குகிறேன் நண்பரே.

இந்தக் கவிதை நான்கு நிலைப்பாடுகளில் எழுதப்பட்டதெனக் கொள்ளலாம்.

1. முதலாவதாக வெளிப்படையான கருத்து. எல்லா வாசகர்களுக்கும் எளிதில் புரியக்கூடியது.
அது கோடை காலத்தில் வனமெரிக்கும் இயற்கைத் தீ பற்றிய கருத்து.


# பெரு வனத்தை எரிக்குமொரு
ஊழித் தீயின் கனல் நான் #

இங்கு நான் ஊழித் தீ - அழிக்கும் நெருப்பு.
ஒரு காட்டினை அழிக்கிறேன்.


# எரித்து எரித்துக் கருக்கி
எரியாக் கணங்களில் உள்ளுக்குள்
புகைந்து வெளிக் கசிந்து இருளாக்கி #

பச்சைக் காடுகள், பச்சை மரங்கள் எரியும் போது கவனித்திருப்பீர்கள். வரண்ட இலைகளையெல்லாம் வேகம் வேகமாகத் தின்னும் தீ, பிறகு அதன் தணலை சாம்பல் மூட, பச்சை இலைகளுக்குள் புகையும். பற்றி எரியும் போது வெளிவரும் புகையை விடவும், எரியாமல் இலைகளுக்குள் பொசுங்கும்போது அதிகமான புகை வெளியாகும். அது வெளியே கசிந்து அந்த இடத்தையே இருளாக்கும்.

# பின்னும் ஆகாயத்தையே எரிக்கப்போல

அதியுயர் விருட்சங்களின்
நுனி பற்றியெரித்து #

அந்த அளவுக்கு உள்ளுக்குள் புகைந்துகொண்டிருக்கும் நெருப்பு, புகையில் இலைகளின் நீரெல்லாம் வற்றிப் போனபின்பு சட்டென்று ஓர் கணத்தில் தன் தீ நாக்கை வெளியே நீட்டி எஞ்சிய கிளைகளைத் தின்னும். கவனித்திருப்பீர்கள். அந்த நேரத்தில் வெளிவரும் தீ, மிக அதிகபட்ச உயரத்துக்கு எழுந்து எரியும். இங்கு 'எரிக்கப்போல' எனும் சொற்றொடரை இரு அர்த்தங்களில் எழுதியிருக்கிறேன்.

(1). பெருங்கோபத்தோடு ஆகாயத்தையே எரிக்கவெனப் போய், அது இயலாமல் போக, அதே கோபத்தோடு பார்த்திருக்கும் உயர்ந்த மரங்களின் நுனிகளை எரித்துவிடுதல்.

(2). அதியுயர்ந்த மரங்களை எரித்துவிடுவதன் மூலம் ஆகாயத்தையே தீப்பற்றச் செய்து எரியச் செய்தல். இது கோடையின் வெப்பத்தைக் குறிக்கிறது.

# இன்னும் காட்டைக் கூடெனக் கொண்ட

எல்லா உயிரையும் பொசுக்கும்
வல்லமை பெற்ற கட்டற்ற நெருப்பின்
வலுஞ்சுடர்கள் நான் #

காட்டுக்குள் வசித்திடும் அனைத்து உயிரினங்களையும் பொசுக்கிவிடுமளவுக்கு, கட்டுப்படுத்த முடியாத உக்கிரமான நெருப்பின் வலுஞ்சுடர்கள் நான். வலுஞ்சுடர்கள் = சக்திமிக்க சுடர்கள்.

# மண்ணின் அடியாழத்துக்குள்

முகம் புதைத்துக் கொண்டோரே
நீர் மட்டும்
எல்லா அனல்களினின்றும்
தப்பித்து விட்டீரா #

இங்கு மண்ணின் அடியாழத்துக்குள் முகம்புதைத்துக் கொண்டவர்கள் எனப்படுபவர்கள், நான் எரித்த விருட்சங்களின் வேர்கள். எவ்வளவுதான் காட்டை எரித்தாலும், மண்ணுக்குள் இருக்கும் வேர்களை நெருப்பால் எதுவும் செய்யமுடியாது. அவை மட்டும் தப்பித்து விடுகின்றன. ஆகவே, இயலாமையோடும், வெறுப்போடும் தீயானது, வேர்களிடம் இக் கேள்வியைக் கேட்பதாகக் கொள்ளலாம்.

M.Rishan Shareef said...

2. இரண்டாவதாக, இக் கவிதை எழுதப்பட்ட காலகட்டம், இலங்கையில் யுத்தமும் அநீதியும் உச்சகட்டத்தில் இருந்த காலகட்டம்.


# பெரு வனத்தை எரிக்குமொரு
ஊழித் தீயின் கனல் நான் #

இங்கு தீயானது யுத்தம், அநீதி, ஆயுதம்..
அது காலம், காலமாக வாழ்ந்து வந்த இருப்பொன்றை அழிக்கிறது.

# எரித்து எரித்துக் கருக்கி

எரியாக் கணங்களில் உள்ளுக்குள்
புகைந்து வெளிக் கசிந்து இருளாக்கி
பின்னும் ஆகாயத்தையே எரிக்கப்போல
அதியுயர் விருட்சங்களின்
நுனி பற்றியெரித்து
இன்னும் காட்டைக் கூடெனக் கொண்ட
எல்லா உயிரையும் பொசுக்கும்
வல்லமை பெற்ற கட்டற்ற நெருப்பின்
வலுஞ்சுடர்கள் நான் #

அந்த இருப்புக்குள் வாழ்ந்து வரும் அத்தனை உயிர்களையும் அழித்த, அழிக்கும் வல்லமை பெற்றவை அந்த வலிமை மிக்க சுடர்கள்.

//மண்ணின் அடியாழத்துக்குள்

முகம் புதைத்துக் கொண்டோரே
நீர் மட்டும்
எல்லா அனல்களினின்றும்
தப்பித்து விட்டீரா //

அந்த இருப்புக்குள் வாழ்ந்து, முன்பே மரணித்து விட்டவர்களே மண்ணின் அடியாழத்துக்குள் முகம் புதைத்துக் கொண்டவர்கள். நீங்கள் மட்டும் இந்தக் கொடுமைகளிலிருந்து தப்பித்துக் கொண்டு விட்டீர்களா என யுத்தம் வெறியோடு கேட்கிறது.

இந்தக் கருப்பொருளில்தான் அனேகமான ஈழ வாசகர்கள் இக் கவிதையைப் புரிந்துகொண்டார்கள்.

M.Rishan Shareef said...

3. மூன்றாவதாக, இக் கவிதை எழுதப்பட்ட காலநிலை மற்றும் நான் வாழும் பாலைவன தேசம். இங்கு கோடையின் உக்கிரத் தாண்டவம் பற்றி வசிப்பவர்களும், வசித்தவர்களுக்கும் தெரியும்.

# பெரு வனத்தை எரிக்குமொரு
ஊழித் தீயின் கனல் நான் #

இது இந் நிலையில் கோடை காலத்தின் கடும் வெயிலைக் குறிக்கிறது.

# எரித்து எரித்துக் கருக்கி

எரியாக் கணங்களில் உள்ளுக்குள்
புகைந்து வெளிக் கசிந்து இருளாக்கி #

பகலில் நன்றாக வெயில் காய்ச்சியெடுக்கும். பிறகு இரவில், இருளில் அப்படியே வெப்பமும், ஒரு விதப் புழுக்கமும் அதிகபட்சமாகி, வியர்வை ஊற்றெடுத்து வழியும். பகலை விடவும் தாங்கிக் கொள்ளமுடியாதபடி இரவுப்பொழுதுகள் நகரும்.

# பின்னும் ஆகாயத்தையே எரிக்கப்போல

அதியுயர் விருட்சங்களின்
நுனி பற்றியெரித்து
இன்னும் காட்டைக் கூடெனக் கொண்ட
எல்லா உயிரையும் பொசுக்கும்
வல்லமை பெற்ற கட்டற்ற நெருப்பின்
வலுஞ்சுடர்கள் நான் #

பாலை நிலங்களில் அங்கிங்கே காணப்படும் உயர்ந்த ஒன்றிரண்டு மரங்களும், கோடை காலத்தில் வெயில் அதிகரிக்கும்போது தானாக உச்சியில் பற்றியெரியும். அந் நெருப்பில் அம் மரத்தின் கூடுகளும் எரியக்கூடும். அதைக் குறிப்பிட்டிருக்கிறேன்.


# மண்ணின் அடியாழத்துக்குள்
முகம் புதைத்துக் கொண்டோரே
நீர் மட்டும்
எல்லா அனல்களினின்றும்
தப்பித்து விட்டீரா #

இம் மண்ணில் வாழ்ந்து, கடந்த காலங்களில் வெயிலை அனுபவித்துவிட்டு, இப்பொழுது மரணித்து விட்டவர்களே, இதே மண்ணுக்குள் புதையுண்டு கிடப்பவர்களே, நீங்கள் மட்டும் இந்தக் கோடையில் என்னிலிருந்து தப்பித்துவிட்டீர்களா என வெயில் கேட்கிறது.

பாலைவன மண்ணில் வசிப்பவர்கள் இந்த வகையில் இக் கவிதையை உணரலாம்.

M.Rishan Shareef said...

4. நான்காவதாக, இஸ்லாம் மார்க்கத்தில், பாவங்கள் செய்து மரணித்துவிட்டவர்களுக்கு, மண்ணில் புதைக்கப்பட்ட பின்பும், அம் மண்ணறையில் வேதனைகள் உண்டு. அதையும் இக் கவிதையின் இறுதிவரிகள் சொல்கின்றன.

நண்பருக்கு, இப்பொழுது இந்தக் கவிதை புரிந்திருக்குமென நினைக்கிறேன்.
கருத்துக்கு நன்றி அன்பு நண்பரே !

Anonymous said...

really nice rishan...
ur's words r amezing... keep rocking..

ur's snehidhi..
sakthy rasiah

M.Rishan Shareef said...

அன்பின் சக்தி,

//really nice rishan...
ur's words r amezing... keep rocking..

ur's snehidhi..
sakthy rasiah//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஸ்னேகிதி !

அஹமத் சுபைர் said...

அடப்பாவி ரிஷான்...

என் கூடத் தானே பேசிக்கிட்டு இருக்க??

எப்படி இம்புட்டு அறிவு உனக்கு??

முதல் தடவை படிக்கும்போது என்னமோ எழுதியிருக்கான் பய.. நெருப்புங்குறான், சுடும்கிறான், ஆகாயத்தை எரிக்கும்கிறான்.. ஒன்னுமே புரியலையேன்னு நினைச்சேன்..

மக்கா, 4 வகையா விளக்கம் கொடுத்த பாரு.. கலக்கல்டா..

ரொம்ப நல்லாயிருக்கு..

(சுபைரின் மனசாட்சி.. நீயெல்லாம் ஒரு மண்ணுக்கும் லாயக்கில்லை.. நவீன கமலா காமேஷ் ரசிகன்லாம் பிச்சு உதர்றான்.. நீ ஒன்னும் கிழிக்க மாட்டேங்குற.. ஆனா மொக்கை மட்டும் நல்லா போடுற..)

தமிழன் வேணு said...

ரிஷான்! எனக்கு இந்தக் கவிதை பல சூழல்களை நினைவுறுத்துகின்றது. சூரியன், வெப்பம், தீ, தணல் என்று பல சொற்களைப் பொருத்திப் பார்த்தாலும் கவிதை சுவைக்கிறது. எப்படித்தான் எழுதுகிறீர்களோ? பாராட்ட மாத்திரமே முடிகிறது எம்மால்..

தமிழன் வேணு

விஜி said...

கொளுத்துகிறது கோடை'......


மண்ணின் அடியாழம் காப்பாற்றும் தோழா...

M.Rishan Shareef said...

அன்பின் சுபைர்,

//அடப்பாவி ரிஷான்...

என் கூடத் தானே பேசிக்கிட்டு இருக்க??

எப்படி இம்புட்டு அறிவு உனக்கு??

முதல் தடவை படிக்கும்போது என்னமோ எழுதியிருக்கான் பய.. நெருப்புங்குறான், சுடும்கிறான், ஆகாயத்தை எரிக்கும்கிறான்.. ஒன்னுமே புரியலையேன்னு நினைச்சேன்..

மக்கா, 4 வகையா விளக்கம் கொடுத்த பாரு.. கலக்கல்டா..

ரொம்ப நல்லாயிருக்கு..

(சுபைரின் மனசாட்சி.. நீயெல்லாம் ஒரு மண்ணுக்கும் லாயக்கில்லை.. நவீன கமலா காமேஷ் ரசிகன்லாம் பிச்சு உதர்றான்.. நீ ஒன்னும் கிழிக்க மாட்டேங்குற.. ஆனா மொக்கை மட்டும் நல்லா போடுற..) //


ஆஹா நண்பா, இப்ப என்னைப் பாராட்டுறீகளா இல்ல த்ரிஷாவை ஓட்டுறீகளான்னு தெரியலையே ..

நன்றிண்ணா :)

M.Rishan Shareef said...

அன்பின் வேணு,

//ரிஷான்! எனக்கு இந்தக் கவிதை பல சூழல்களை நினைவுறுத்துகின்றது. சூரியன், வெப்பம், தீ, தணல் என்று பல சொற்களைப் பொருத்திப் பார்த்தாலும் கவிதை சுவைக்கிறது. எப்படித்தான் எழுதுகிறீர்களோ? பாராட்ட மாத்திரமே முடிகிறது எம்மால்.. //


உங்கள் வார்த்தைகள் என்னைப் பெரிதும் ஊக்குவிக்கிறது.

நன்றி அன்பு நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் விஜி,


//-- கொளுத்துகிறது கோடை'......


மண்ணின் அடியாழம் காப்பாற்றும் தோழா...//


நம் எல்லோரையும் காப்பாற்றட்டும்..பிரார்த்திப்போம்.

நன்றி தோழி !

கீதம் said...

கோடையின் உக்கிரம் கவிதையின் வழியாய்! ரசிக்கும்பொழுதில் கூட ஒரு கணம் பொசுக்கிச் செல்வது உண்மையே

Aren said...

கவிதை நன்றாக உள்ளது நண்பரே. இது நீங்கள் எழுதியதா. அப்படியானால் எதற்கு வார்த்தை இதழுக்கு நன்றி சொல்கிறீர்கள்.

M.Rishan Shareef said...

அன்பின் கீதம்,

//கோடையின் உக்கிரம் கவிதையின் வழியாய்! ரசிக்கும்பொழுதில் கூட ஒரு கணம் பொசுக்கிச் செல்வது உண்மையே //

:)
கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் Aren,

//கவிதை நன்றாக உள்ளது நண்பரே. இது நீங்கள் எழுதியதா. அப்படியானால் எதற்கு வார்த்தை இதழுக்கு நன்றி சொல்கிறீர்கள். //

நன்றி நண்பரே !
கவிதை நான் எழுதியதுதான்.
அதனை 'வார்த்தை இதழ்' சிறப்பாகப் பிரசுரித்திருந்தது.
அதற்காகத்தான் அதற்கு நன்றி தெரிவித்திருக்கிறேன் !