தீயெரித்த வனமொன்றின்
தனித்த பறவையென
வரண்டு வெடித்த நிலமொன்றின்
ஒற்றைச் செடியென
சாக்காட்டுத் தேசமொன்றிலிருந்து
உயிர் பிழைத்தவள்
நிறைகாதலோடு காத்திருக்கிறாள்
அவன் சென்ற அடிச்சுவடுகளில் விழிகள்
சோரச் சோரச் சொட்டுச் சொட்டாய்க்
கண்ணீர் தூவி நிறைத்து
பொழுதனைத்தும் துயர்பாடல்கள் இரைத்து
எண்ணியெண்ணிக் காத்திருக்கிறாள்
பிரவாகங்கள் சுமந்துவரும் வலிய கற்களும்
ஒலிச் சலனத்தோடு நகர்கையில்
தொன்ம விடியலொன்றில் நதியோடு மிதந்த
இலையொன்றின் பாடல்கள் குறித்துக்
காற்றிடமோ நீரிடமோ குறிப்புகளேதுமில்லை
அவளது தூய காதல் குறித்தும்
அவளைத் தவிர்த்துக்
குறிப்புகளேதுமற்றவளானவளிடம்
ஏதும் கேட்டால்
வெட்கம் பூசிய வதனத்தை
திரையை இழுத்து மூடிக் கொள்கிறாள்
நிரம்பி வழியத் தொடங்கும் கண்களையும்
அவன் போய்விட்டிருந்தான்
அச்சாலையில் எவரும் போய்விடலாம்
மிகுந்த நம்பிக்கைகளைச் சிதைத்து
ஏமாற்றங்களை நினைவுகளில் பரப்பி
துரோகங்களால் போர்த்திவிட்டு
அவனும் போய்விட்டிருந்தான்
அதைப் போல எவரும் போய்விடலாம்
தூய தேவதைகள் மட்டும்
என்றோ போனவனை எண்ணிக்
காத்திருப்பார்கள் என்றென்றும்
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.
நன்றி
# வல்லினம் - மலேசிய கலை இலக்கிய இதழ் 12- டிசம்பர், 2009
# நவீன விருட்சம்
# திண்ணை
9 comments:
நல்ல கவிதை
ரசித்தேன் ரிஷான்.
/வரண்டு/
வறண்டு?
/இரைத்து/
இசைத்து?
Hi Rishan,
Congrats!
Your story titled 'முக்காட்டு தேவதைகள்' made popular by tamilish users at tamilish.com and the story promoted to the home page on 15th March 2010 11:42:01 AM GMT
Here is the link to the story: http://www.tamilish.com/story/204033
Thank you for using Tamilish.com
Regards,
-Tamilish Team
அவன் போய்விட்டிருந்தான்
அச்சாலையில் எவரும் போய்விடலாம்
ம்ம்ம் ...சரிதான் .நல்ல கவிதை ரிஷான்
"அவன் சென்ற அடிச்சுவடுகளில் விழிகள்
சோரச் சோரச் சொட்டுச் சொட்டாய்க்
கண்ணீர் தூவி நிறைத்து
பொழுதனைத்தும் துயர்பாடல்கள் இரைத்து
எண்ணியெண்ணிக் காத்திருக்கிறாள்"
"அவளது தூய காதல் குறித்தும்
அவளைத் தவிர்த்துக்
குறிப்புகளேதுமற்றவளானவளிடம்"
"அவன் போய்விட்டிருந்தான்
அச்சாலையில் எவரும் போய்விடலாம்
மிகுந்த நம்பிக்கைகளைச் சிதைத்து
ஏமாற்றங்களை நினைவுகளில் பரப்பி
துரோகங்களால் போர்த்திவிட்டு
அவனும் போய்விட்டிருந்தான்
அதைப் போல எவரும் போய்விடலாம்"
ம் ரிஷான் அந்த 'அவள்'கள் எதையும் மறந்துவிடத் தயாராகவும் இல்லை.
துரோகங்களைச் செய்வதையே வாழ்வாக்கிக் கொண்ட அந்த 'அவன்'கள் அவற்றை நிறுத்துவதாகவும் இல்லை.
ஆணினால் இழைக்கப் படும் எல்லா அநீதிகளையும் பெண் வாழ்நாள் முழுதும் சுமக்கிறாள்.
அன்பின் உழவன்,
//நல்ல கவிதை//
உங்கள் முதல்வருகை மகிழ்ச்சி தருகிறது. உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.
அன்பின் செல்வராஜ் ஜெகதீசன்,
/வரண்டு/
வறண்டு?
ஆமாம்..வறண்டு என்றுதான் வரவேண்டும். வறட்சி என்பதிலிருந்து வரும் சொல் அல்லவா?
/இரைத்து/
இசைத்து?//
இசைத்து என்பதும் அந்த வரிக்குப் பொருத்தமானதாகத்தான் இருக்கிறது அல்லவா? இரைத்து என்றே எழுதினேன். தண்ணீரை வாரி இரைப்பதைப் போல துயர்பாடல்களை இரைத்துக் கொண்டே இருக்கிறாள் எனப் பொருள் வரும்படி.
வருகைக்கும் கருத்துக்கும் எழுத்துப் பிழைகளைச் சுட்டிக் காட்டியமைக்கும் நன்றி நண்பரே !
அன்பின் பூங்குழலி,
//அவன் போய்விட்டிருந்தான்
அச்சாலையில் எவரும் போய்விடலாம்
ம்ம்ம் ...சரிதான் .நல்ல கவிதை ரிஷான்//
:-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !
அன்பின் ஃபஹீமாஜஹான்,
//ம் ரிஷான் அந்த 'அவள்'கள் எதையும் மறந்துவிடத் தயாராகவும் இல்லை.
துரோகங்களைச் செய்வதையே வாழ்வாக்கிக் கொண்ட அந்த 'அவன்'கள் அவற்றை நிறுத்துவதாகவும் இல்லை.
ஆணினால் இழைக்கப் படும் எல்லா அநீதிகளையும் பெண் வாழ்நாள் முழுதும் சுமக்கிறாள்.//
பெண் எப்பொழுதும் தனிமையிலேயே இருக்க வேண்டியிருக்கிறாள். சூழலால் தனிமைப்படுத்தப்பட்டு இல்லையேல் தானாகவே தனிமைப்படுத்திக் கொண்டு. ஆகவே ஆணினால் அவளை ஏமாற்றுவது சுலபமானதாக இருக்கிறது. :-(
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !
Post a Comment