Sunday, August 1, 2010

சூறாவளியின் பாடல்

பலம் பொருந்திய
பாடலொன்றைச் சுமந்த காற்று
அங்குமிங்குமாக அலைகிறது

இறக்கி வைக்கச் சாத்தியமான
எதையும் காணவியலாமல்
மலைகளின் முதுகுகளிலும்
மேகங்களினிடையிலும்
வனங்களின் கூரைகளிலும்
நின்று நின்று தேடுகிறது

சமுத்திரவெளிகளிலும்
சந்தைத் தெருக்களிலும்
சுற்றித்திரிய நேரிடும்போது
இரைச்சல்கள் எதுவும் தாக்கிடாமல்
பொத்திக்கொள்கிறது பாடலை

பறவைகள் தாண்டிப் பறக்கையிலும்
காத்துக்கொள்ளப்படும்
இசை செறிந்த பாடல்
சலித்துக் கொள்கிறது
ஓய்வின்றிய அலைச்சலின்
எல்லை எதுவென்றறியாது

தனிமைப்பட்டதை
இறுதியிலுணர்ந்தது
தெளிந்த நீர் சலசலக்கும்
ஓரெழில் ஆற்றங்கரை
மரமொன்றின் துளைகளுக்குள்ளிருந்து
வெளிக்கசிந்து பிறந்த நாதம்

இருளுக்குள் விசித்தழும்
பாடலின் கண்கள் துடைக்கும் காற்று
அதைச் சில கணங்கள்
அந்தரத்தில் நின்று
பத்திரமாகப் பார்த்திருக்கச் சொல்லி
ஆவேசத்தோடு கீழிறங்கும்

பின்னர் பாடலை அழ வைத்த
காரணம் வினவி
தான் காணும்
வெளி, தெரு, சமுத்திரம், நதி, வனமென
அத்தனையிலும் தன் சினத்தினைக் காட்டி
அடித்துச் சாய்க்கும்

இயலாமையோடு எல்லாம்
பார்த்திருக்கும் பாடல்
இறுதியில் கீழிறங்கி
எஞ்சிய உயிர்களின்
உதடுகளில் ஒப்பாரியாகி
கோபக் காற்றெதிரில் செத்துப்போகும்

காலம்
இன்னுமோர் பாடலை
காற்றுக்குக் கொடுக்கக் கூடும்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# காலச்சுவடு இதழ் 123, மார்ச் - 2010
# உயிர்மை
# விகடன்
# திண்ணை
# தமிழ் முரசு அவுஸ்திரேலியா

12 comments:

லறீனா அப்துல் ஹக் said...

//இருளுக்குள் விசித்தழும்
பாடலின் கண்கள் துடைக்கும் காற்று
அதைச் சில கணங்கள்
அந்தரத்தில் நின்று
பத்திரமாகப் பார்த்திருக்கச் சொல்லி
ஆவேசத்தோடு கீழிறங்கும்

பின்னர் பாடலை அழ வைத்த
காரணம் வினவி
தான் காணும்
வெளி, தெரு, சமுத்திரம், நதி, வனமென
அத்தனையிலும் தன் சினத்தினைக் காட்டி
அடித்துச் சாய்க்கும்

இயலாமையோடு எல்லாம்
பார்த்திருக்கும் பாடல்
இறுதியில் கீழிறங்கி
எஞ்சிய உயிர்களின்
உதடுகளில் ஒப்பாரியாகி
கோபக் காற்றெதிரில் செத்துப்போகும்//

அழகான உருவகம். அற்புதமான வரிகள். வித்தியாசமான கவிதை.

'எழுக புலவர்!'

வியாசன் said...

//இயலாமையோடு எல்லாம்
பார்த்திருக்கும் பாடல்
இறுதியில் கீழிறங்கி
எஞ்சிய உயிர்களின்
உதடுகளில் ஒப்பாரியாகி
கோபக் காற்றெதிரில் செத்துப்போகும்//

நல்ல வரிகள் தற்போதைய யதார்த்தை கொண்டு வந்திருக்கின்றீர்கள். வாழ்த்துக்கள் நண்பரே

சுடர்விழி said...

அருமையான கவிதை....பாராட்டுக்கள்!

ம.தி.சுதா said...

“இயலாமையோடு எல்லாம்
பார்த்திருக்கும் பாடல்
இறுதியில் கீழிறங்கி
எஞ்சிய உயிர்களின்
உதடுகளில் ஒப்பாரியாகி
கோபக் காற்றெதிரில் செத்துப்போகும்“

மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரா?

ஃபஹீமாஜஹான் said...

"மலைகளின் முதுகுகளிலும்மேகங்களினிடையிலும்
வனங்களின் கூரைகளிலும்நின்று நின்று தேடுகிறது
சமுத்திரவெளிகளிலும்
சந்தைத் தெருக்களிலும்
சுற்றித்திரிய நேரிடும்போது
இரைச்சல்கள் எதுவும் தாக்கிடாமல்பொத்திக்கொள்கிறது பாடலை"
அழகான வரிகள்.பாராட்டுக்கள்.

Rafiq said...

பொருளை மட்டும் தேடி அழையும் மானிட உலகில். மனிதம் மரித்துவிட்டாலும். கால சுழற்ச்சியில் கோலங்கள் மாறும். நிச்சயம் ஒரு நாள் பாடலின் (மனிதனின்) சுழ்நிலை மாறும். நம்பிக்கையுடன் காத்திருப்போம். வாழ்த்துக்கள்.

M.Rishan Shareef said...

அன்பின் லறீனா அப்துல் ஹக்,

//அழகான உருவகம். அற்புதமான வரிகள். வித்தியாசமான கவிதை.

'எழுக புலவர்!'//

கருத்துக்கு நன்றி சகோதரி :-)

M.Rishan Shareef said...

அன்பின் வியாசன்,

கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :-)

M.Rishan Shareef said...

அன்பின் சுடர்விழி,

கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி சகோதரி :-)

M.Rishan Shareef said...

அன்பின் ம.தி சுதா,

//“இயலாமையோடு எல்லாம்
பார்த்திருக்கும் பாடல்
இறுதியில் கீழிறங்கி
எஞ்சிய உயிர்களின்
உதடுகளில் ஒப்பாரியாகி
கோபக் காற்றெதிரில் செத்துப்போகும்“

மிகவும் அருமை வாழ்த்துக்கள் சகோதரா//

வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :-)

M.Rishan Shareef said...

அன்பின் ஃபஹீமாஜஹான்,

//"மலைகளின் முதுகுகளிலும்மேகங்களினிடையிலும்
வனங்களின் கூரைகளிலும்நின்று நின்று தேடுகிறது
சமுத்திரவெளிகளிலும்
சந்தைத் தெருக்களிலும்
சுற்றித்திரிய நேரிடும்போது
இரைச்சல்கள் எதுவும் தாக்கிடாமல்பொத்திக்கொள்கிறது பாடலை"
அழகான வரிகள்.பாராட்டுக்கள்.//

வருகைக்கும் கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி சகோதரி :-)

M.Rishan Shareef said...

அன்பின் ராஃபிக்,

//பொருளை மட்டும் தேடி அழையும் மானிட உலகில். மனிதம் மரித்துவிட்டாலும். கால சுழற்ச்சியில் கோலங்கள் மாறும். நிச்சயம் ஒரு நாள் பாடலின் (மனிதனின்) சுழ்நிலை மாறும். நம்பிக்கையுடன் காத்திருப்போம். வாழ்த்துக்கள்.//

அருமையான கருத்து !
வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :-)