கதவு யன்னல்களிலிருந்து
வழிகின்றன முகங்கள்
கொட்டப்படும் நீர்த்தாரைகளைப் போல
கைகளில் கட்டப்பட்டிருக்கும்
நுண்ணிய கயிறுகளை அவிழ்த்துக் கொண்டு
பார்த்திருக்கும் அவற்றின் விழிகளில்
நிழலாக அசைகின்றன
பாதையோர மரங்களும்
ஈரப் பறவைகளும் மழையும்
ஒரு தெருச் சண்டையும்
புன்னகையும் சிரிப்பும் எள்ளலும்
சுழிப்பும் முணுமுணுப்பும்
அருவருப்பும் கலந்த உணர்ச்சிகள்
மழைச்சாரலிடையில்
அங்கிங்கு தாவும் தவளைகளைப் போல
அவதானித்திருக்கும் முகங்களில் மாறிட
பேய்களின் வாய்களுக்கெனவே
பிறப்பெடுத்தவை போல
வெளியெங்கும் வீச்சமேற்றுகின்றன
பிணங்களின் வாடையுடனான
அழுக்கு மொழிகள்
இடி வீழ்ந்து
இலைகள் கிளைகள் எரிய
மொட்டையாகிப்போன மரமொன்றென
நடுத்தெருவில் நின்று ஓலமிட்டழுதாள்
மேலாடையுரிக்கப்பட்ட குடிகாரனின் மனைவி
புதைக்கப்பட்ட விரல்களில்
புழுக்களூர்வதைப் போல
நேச உணர்வேதுமற்றவன்
தன் தாக்குதலைத் தொடர்ந்தான்
நத்தைகள் ஆமைகளைப் போல
தங்களை உள்ளிழுத்து
கதவுகளைப் பூட்டிக்கொண்டன
தெருவில் நிகழ்ந்த
கொலையைக் கண்டமுகங்கள்
எதையும் காணவில்லையென்ற
பொய்யை அணியக்கூடும்
இனி அவர்தம் நாவுகள்
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை
21022010
நன்றி
# கலைமுகம் இதழ் - 50, ஒக்டோபர் 2010
# திண்ணை
# நவீன விருட்சம்
# தமிழ்முரசு அவுஸ்திரேலியா
# வார்ப்பு
# தமிழ் எழுத்தாளர்கள்
2 comments:
/நத்தைகள் ஆமைகளைப் போல
தங்களை உள்ளிழுத்து
கதவுகளைப் பூட்டிக்கொண்டன
தெருவில் நிகழ்ந்த
கொலையைக் கண்டமுகங்கள்
எதையும் காணவில்லையென்ற
பொய்யை அணியக்கூடும்
இனி அவர்தம் நாவுகள்
/
உங்களின் கவிதைப் பொத்தகத்தில் 35 ஆவது பக்கத்தில் உள்ள கவிதை என்று நினைக்கிறேன்
சமீபத்தில் படித்தேன்
அருமையான கவிதைகளின் தொகுப்பு
வாழ்த்துகள்
தமிழுடன்
திகழ்
அன்பின் திகழ்,
//உங்களின் கவிதைப் பொத்தகத்தில் 35 ஆவது பக்கத்தில் உள்ள கவிதை என்று நினைக்கிறேன்
சமீபத்தில் படித்தேன்
அருமையான கவிதைகளின் தொகுப்பு
வாழ்த்துகள்
தமிழுடன்
திகழ்//
ஆமாம் நண்பரே.. :)
வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !
Post a Comment