Saturday, December 1, 2012

விஷமேறிய மரத்தின் சிற்பம்

மலைப்பாம்புக் குட்டிகளென விழுதுகளைப் படர விட்ட
மரத்தின் ஆதிக் கிளைகள்
காட்சி கூடத்தில் வனம் பார்க்கும் சிற்பங்களாகின்றன

விருட்சங்களை வெட்டிச் செல்லும்
விஷமேறிய பார்வைகளை சிற்பி
காடுகளெங்கிலும் சுமந்தலையும் செம்மாலை நேரங்களில்
வன மரங்களின் இலைகளினூடு சூரியனாடும் மஞ்சள் நடனம்
எவ்வளவு ப்ரியத்துக்குரியது

நச்சேற்றிய சிற்பியின் பாதங்களிலேயே வீழ்ந்து கிடக்கும் மரங்களில்
அவனது எண்ணங்களிலிருந்தும் ஆற்றல்களிலிருந்தும் உருவாகிய
வனக் கொலைகளுக்கான ஆயுதங்கள் தீட்டப்படுகையில்
வன்மங்கள் கூராகின

இங்கு தாயின் கரத்திலிருந்துகொண்டே தடவிப் பார்க்கிறது
புராதனச் சடங்குகளின் பிரிந்த விம்பங்களென
தனித்திருக்கும் அம் மரச் சிற்ப விலங்குகளால்
எவ்வித ஆபத்துமில்லையென்பதை உணர்ந்த குழந்தை

பிஞ்சு விரல்கள் தொட்ட மரங்கள்
உடல் சிலிர்த்து எழுந்திடப்
பற்றியெரிகிறது மலைக் காடு

 - எம்.ரிஷான் ஷெரீப்
16012012

நன்றி
# உயிர்நிழல் - இதழ் 35 - ஜூலை, 2012
# எதுவரை - இதழ் 06 - நவம்பர், 2012
# உயிர்மை
# திண்ணை 
# Artist - Mr. Roshan Dela Bandara

Thursday, November 8, 2012

வீழ்தலின் நிழல்



ஒரு கோட்டினைப் போலவும்
பூதாகரமானதாகவும் மாறி மாறி
எதிரில் விழுமது
ஒளி சூழ்ந்த
உயரத்திலிருந்து குதிக்கும்போது
கூடவே வந்தது
பின்னர் வீழ்ந்ததோடு சேர்ந்து
ஒரு புள்ளியில் ஐக்கியமாகி
ஒன்றாய்க் குவிந்ததும்
உயிரைப் போல
காணாமல்போன நிழலில்
குருதியொட்டவே இல்லை



- எம். ரிஷான் ஷெரீப்

நன்றி
# உயிர்மை
# திண்ணை
# நவீன விருட்சம்

Wednesday, August 1, 2012

உன் காலடி வானம்

அன்றைய மழைக்கால முன்னிரவில்
அவளது நீண்ட நேரக் காத்திருப்பின் முடிவு
பேருந்துத் தரிப்பிடத்தில் தேங்கி நின்றதோர் கணம்
தாண்டிச் சென்ற எவரையோ அழைத்துப் பேசி
கூடச் செல்லுமுனது பார்வையின் கீழே
நழுவியதவளது பூமி

தெருவோரம் எவரோ வெட்டி வீழ்த்தியிருந்த
மரத்தினை நோக்கிக் கூடு திரும்பிய பட்சிகள்
இருளாய் வட்டமிட்ட அன்றைய இரவு
ஒரு சாத்தானின் உருவம் கொண்டது
அந்தகாரத்தில் உனது நடை
மீன்களின் நீச்சலை ஒத்திருந்தது

நீ எடுத்து வைத்த ஒவ்வொரு எட்டிலும்
நதிகள் உதித்தன
தண்ணீரில் தோன்றிய மலையின் விம்பத்தில்
தலைகீழாய் ஏறினாய்
வானவில் தொட்டில் அந்தரத்தில் ஆடிய
அம் முன்னந்திப் பொழுதில்
இதுநாள் வரையில் அவள் கண்டிருந்த
மேகங்கள், வெண்ணிலவு, நட்சத்திரங்களெல்லாம்
உன் காலடியில் நீந்தின

அந்தப் பயணத்தின் முடிவில்
இருவரும் பிரிந்துவிடுவதான உறுதி
தீர்மானமாயிற்ற பின்னரும்
உனக்காக மட்டுமே காத்திருந்தவளை
விழுங்கிய அம் மௌனச் சிலந்தி
நீர் வலைப்பின்னல்களின் மீது
இன்னும் ஊர்கிறது
இரவின் பனியோடு சொட்டுகிறது
எட்டுக்கால் பூச்சியின் ரேகைகள்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# அம்ருதா இதழ் - பெப்ரவரி 2012
# எதுவரை இதழ் - 03, ஜூலை 2012
# உயிர்மை
# திண்ணை

Monday, July 16, 2012

காத்திருப்பு

காற்றுக் குதிரைகள் கிளர்ந்து கிளப்பிய
தூசுப் படலத்தினுள்
சேர்த்து வைத்திருந்த இனிய பாடல்களும்
அந்தி விசும்போடு சிதைந்தழிந்தன
பகல் முழுதும் தீக் கண்களால்
பார்த்திருந்த வெயில்
மேகக் கூட்டத்துக்கு
மேலும் நீர் கோர்த்தது
 
கதவுகளைத் திறந்தேதான்
வைத்திருக்கிறேன்
எந்த ஓவியனாவது வந்து
வெயிலைப்போல
அல்லது சாரலைப்போல
ஏதேனும் கிறுக்கிச் செல்லட்டும்
ஒரு தபால்காரனாவது வந்து
ஏதேனும் தந்துசெல்லட்டும்
ஒரு வண்ணத்துப்பூச்சி
பூக்களின் வாசனைகளோடு
வந்துசெல்லட்டும்
அன்றேல்
மெதுநடைப் பூனையொன்றேனும்

- எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# யாத்ரா இதழ் - 20, ஜனவரி 2012
# எதுவரை இதழ் - 03, ஜூலை 2012
# உயிர்மை
# திண்ணை

Sunday, July 1, 2012

நினைவுகள் மிதந்து வழிவதானது

இருளின் மொழியைப் பேசும்
தண்ணீர்ச் சுவர்களை ஊடறுக்கும்
வலிமைகொண்ட நீர்ப் பிராணிகளை உள்ளடக்கிய
வனத்தின் நீரூற்றுக்கள்
பெரும்பாலும் மௌனமானவை
எப்பொழுதேனும் வனம் பற்றும் நாளில்
பரவியணைக்கப் போதா நீர்
நதியாகிப் பெருக்கெடுத்தோடுவதில்
யாது பயன்

காலம் காலமாக அழிந்த மர விலங்குடல்களை
செரித்து
தேயாப் பசி கொண்ட கானகத்தின்
எப் பெருவிருட்சத்தின் வேர்
அகன்ற வாயைக் கொண்டதுவோ

புராதனச் சிதிலங்கள் தொக்கி நிற்கும்
இக் காட்டிலெது நீ
அண்டும் குருவிகள் எக்கணமும்
குருதி சிந்தப் பறக்கக் கூடுமான
முற்செடியொன்றின் ஒற்றைப் பூ
விஷமெனப் பலரும்
விட்டொதுங்கக் கூடுமான
பாம்புப் புற்றருகில் தனித்த காளான்
இக் காட்டிலெது நீ

உள்ளே செல்ல எப்பொழுதும்
அனுமதி மறுக்கப்படக் கூடுமான
மாளிகை வாசல் யாசகன்
எவராலும் கரை சேர்க்கப்படாமல்
பயணம் தொடரக் கூடுமான
நதி முதுகின் இலை
மற்றுமோர் அழியா மேகமும் நான்

தவிர்ப்புக்களுக்கு வசப்படா
நினைவுகள் மிதந்து வழிவதானது
மெதுவாய்க் கொல்லும் நச்சு
இப்பொழுதும்
உள்ளிருந்து விழிகளுக்கு
தாவித் தீர்க்கும் உள்ளாழ்ந்த நிறைகனல்
உன்னால் தோன்றியதுதான்

- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி
# அம்ருதா இதழ் - பெப்ரவரி, 2012
# எதுவரை இதழ் - 02, ஜூன், 2012
# உயிர்மை
# திண்ணை

Wednesday, June 13, 2012

பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயில்

வானக் கரிய வாவியில் மின்னி நீந்திடும்
சிலவேளை
வீழ்வதாய்ப் போக்குக் காட்டும்
ஊணுண்ணிப் பட்சியென மீன்கொத்தி நிலா
மேற்கிலிருந்து கிழக்காய் நகர்ந்து நகர்ந்து கொத்திட
காலையில் செவ்வாகாயம் வெறிச்சோடிக் கிடக்கும்

இடித்திடித்துக் கொட்டிய
நேற்றின் இரவை நனைத்த மழை
உனதும் எனதுமான ஏகாந்தப் பொழுதொன்றை
நினைவுறுத்திக் கொண்டேயிருந்ததில்
அச்சமுற்றிருந்தேன் நான்

மின்சாரம் தடைப்பட்டெங்கும்
அந்தகாரம் மேவிய பொழுதில் கண்மூடி
விழித் திரைக்குள் உனையிறக்கியிருந்தேன்
உதறப்பட்ட காலத்தின் துளிகளோடு
உன் மீதான எனது சினங்களும்
ஆற்றாமைகளும் வெறுப்பும்
விலகியோடிப் போயிருக்கவேண்டும்
நினைத்துக் கொண்டேயிருந்தேன் உன்னையே

அப் பாடலைப் பாடியபடி
அச் செல்லப் பெயரால் எனை விளித்தபடி
பிரகாசத்தையள்ளி வீசுமுன் குரலையும் கேட்டேன்
அங்குமிங்குமசையும் ஊஞ்சல்
அந்தரத்தில் சரணடையும் ஆவல்
அக் கணத்து மனநிலையை என்சொல்வேன்

அகழ்வுகளுக்குள் தேடினால் அர்த்தமற்ற நம்
சச்சரவுகளின் நூலாம்படை திரண்டுகிடக்கும்
எமக்கெதிரான
எல்லாப் புழுதிகளுமெழும்பிக் கட்டிய மதிலதன்
அத்திவாரத்தில் இருவரில்
எவரது அன்பைப் போட்டு மூடினோம்

இனித் தவறியும் ஒருவரையொருவர்
நினைத்தலோ பார்த்தலோ கதைத்தலோ
ஆகாதெனும் விதியை நிறுவிச் சலனங்களை
விழுங்கிச் செறிக்க முடியாது
விழி பிதுங்கி நிற்கும் நம் துயர் பொழுதுகள்
யுகங்களாகத் தொடர
வேண்டியிருந்தோமா

பிரிவின் அன்றை
இருவரும் எப்படியோ வாழ்ந்து கடந்தோம்
சர்வமும் நிகழ்ந்து முடிந்தது பூமியில் அன்றும்
பின்வாசல் சமதரைப் புல்வெளி
நிலவின் பால் குடித்தரும்பிய
பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயிலில்
இரவின் சாயல் துளியேதுமில்லை

- எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# அம்ருதா இதழ் - பெப்ரவரி, 2012
# எதுவரை இதழ் - 02, ஜூன்,2012
# நவீன விருட்சம்
# திண்ணை