தண்ணீர்ச் சுவர்களை ஊடறுக்கும்
வலிமைகொண்ட நீர்ப் பிராணிகளை உள்ளடக்கிய
வனத்தின் நீரூற்றுக்கள்
பெரும்பாலும் மௌனமானவை
எப்பொழுதேனும் வனம் பற்றும் நாளில்
பரவியணைக்கப் போதா நீர்
நதியாகிப் பெருக்கெடுத்தோடுவதில்
யாது பயன்
காலம் காலமாக அழிந்த மர விலங்குடல்களை
செரித்து
தேயாப் பசி கொண்ட கானகத்தின்
எப் பெருவிருட்சத்தின் வேர்
அகன்ற வாயைக் கொண்டதுவோ
புராதனச் சிதிலங்கள் தொக்கி நிற்கும்
இக் காட்டிலெது நீ
அண்டும் குருவிகள் எக்கணமும்
குருதி சிந்தப் பறக்கக் கூடுமான
முற்செடியொன்றின் ஒற்றைப் பூ
விஷமெனப் பலரும்
விட்டொதுங்கக் கூடுமான
பாம்புப் புற்றருகில் தனித்த காளான்
இக் காட்டிலெது நீ
உள்ளே செல்ல எப்பொழுதும்
அனுமதி மறுக்கப்படக் கூடுமான
மாளிகை வாசல் யாசகன்
எவராலும் கரை சேர்க்கப்படாமல்
பயணம் தொடரக் கூடுமான
நதி முதுகின் இலை
மற்றுமோர் அழியா மேகமும் நான்
தவிர்ப்புக்களுக்கு வசப்படா
நினைவுகள் மிதந்து வழிவதானது
மெதுவாய்க் கொல்லும் நச்சு
இப்பொழுதும்
உள்ளிருந்து விழிகளுக்கு
தாவித் தீர்க்கும் உள்ளாழ்ந்த நிறைகனல்
உன்னால் தோன்றியதுதான்
- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி
# அம்ருதா இதழ் - பெப்ரவரி, 2012
# எதுவரை இதழ் - 02, ஜூன், 2012
# உயிர்மை
# திண்ணை
- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி
# அம்ருதா இதழ் - பெப்ரவரி, 2012
# எதுவரை இதழ் - 02, ஜூன், 2012
# உயிர்மை
# திண்ணை
4 comments:
"கனம்" செறிந்த வார்த்டைப்பிரயோகங்கள் ரிஷான்.
நிறையப்புத்தகங்கள் வாசிப்பீங்களோ?
இறுக்கமும் அகப்பார்வையும் கொண்ட தங்களின் கவிதை வாசக மனத்துக்குள் விசேடப் பிரதேசங்களில் ஆழப் பிரவேசிக்கிறது! வாழ்த்துகள்!
அன்பின் விஜி சுதன்,
//"கனம்" செறிந்த வார்த்டைப்பிரயோகங்கள் ரிஷான்.
நிறையப்புத்தகங்கள் வாசிப்பீங்களோ?//
நிச்சயமாக. புத்தகங்கள்தான் எனது நெருங்கிய தோழர்கள். :-)
கருத்துக்கு நன்றி தோழி !
அன்பின் ஏ. தேவராஜன்,
//இறுக்கமும் அகப்பார்வையும் கொண்ட தங்களின் கவிதை வாசக மனத்துக்குள் விசேடப் பிரதேசங்களில் ஆழப் பிரவேசிக்கிறது! வாழ்த்துகள்!//
கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !
Post a Comment