Wednesday, August 1, 2012

உன் காலடி வானம்

அன்றைய மழைக்கால முன்னிரவில்
அவளது நீண்ட நேரக் காத்திருப்பின் முடிவு
பேருந்துத் தரிப்பிடத்தில் தேங்கி நின்றதோர் கணம்
தாண்டிச் சென்ற எவரையோ அழைத்துப் பேசி
கூடச் செல்லுமுனது பார்வையின் கீழே
நழுவியதவளது பூமி

தெருவோரம் எவரோ வெட்டி வீழ்த்தியிருந்த
மரத்தினை நோக்கிக் கூடு திரும்பிய பட்சிகள்
இருளாய் வட்டமிட்ட அன்றைய இரவு
ஒரு சாத்தானின் உருவம் கொண்டது
அந்தகாரத்தில் உனது நடை
மீன்களின் நீச்சலை ஒத்திருந்தது

நீ எடுத்து வைத்த ஒவ்வொரு எட்டிலும்
நதிகள் உதித்தன
தண்ணீரில் தோன்றிய மலையின் விம்பத்தில்
தலைகீழாய் ஏறினாய்
வானவில் தொட்டில் அந்தரத்தில் ஆடிய
அம் முன்னந்திப் பொழுதில்
இதுநாள் வரையில் அவள் கண்டிருந்த
மேகங்கள், வெண்ணிலவு, நட்சத்திரங்களெல்லாம்
உன் காலடியில் நீந்தின

அந்தப் பயணத்தின் முடிவில்
இருவரும் பிரிந்துவிடுவதான உறுதி
தீர்மானமாயிற்ற பின்னரும்
உனக்காக மட்டுமே காத்திருந்தவளை
விழுங்கிய அம் மௌனச் சிலந்தி
நீர் வலைப்பின்னல்களின் மீது
இன்னும் ஊர்கிறது
இரவின் பனியோடு சொட்டுகிறது
எட்டுக்கால் பூச்சியின் ரேகைகள்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# அம்ருதா இதழ் - பெப்ரவரி 2012
# எதுவரை இதழ் - 03, ஜூலை 2012
# உயிர்மை
# திண்ணை

8 comments:

Author said...

Migavum arumai Sago... Sorry for the short comment as i am on Mobile. thodarattum un ilakkiya payanam

M.Rishan Shareef said...

அன்பின் ஜாவிட் ரயீஸ்,

//Migavum arumai Sago... Sorry for the short comment as i am on Mobile. thodarattum un ilakkiya payanam//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா !

பூங்குழலி said...

அவளது நீண்ட நேரக் காத்திருப்பின் முடிவு
பேருந்துத் தரிப்பிடத்தில் தேங்கி நின்றதோர் கணம்
தாண்டிச் சென்ற எவரையோ அழைத்துப் பேசி
கூடச் செல்லுமுனது பார்வையின் கீழே
நழுவியதவளது பூமி


நிராகரிப்பின் வலி சொல்லும் வலிமையான வரிகள் .வழமை போலவே மெல்லிய உணர்வுகளின் தேக்கமாய் அற்புதம் ரிஷான் .

எஸ்.மதி said...

உனக்காக மட்டுமே காத்திருந்தவளை
விழுங்கிய அம் மௌனச் சிலந்தி
நீர் வலைப்பின்னல்களின் மீது
இன்னும் ஊர்கிறது
இரவின் பனியோடு சொட்டுகிறது
எட்டுக்கால் பூச்சியின் ரேகைகள்....

T.K.Theeransamy,Kongutamilarkatchi said...

அய்யா!உங்களுடைய தளம் காணக்கிடைத்தது!மிக்க மகிழ்ச்சி, எம் போன்ற இளைய தளப்பதிவர்களுக்கு!தாங்கள் முன்னோடியாகக் காண்கிறேன்! உங்கள் தளத்தை எமக்கு காணக்கிடைக்க செய்த மரியாதைக்குரிய "தமிழ்தொகுப்புகள்" சிங்கமணி அய்யா அவர்களுக்கு நன்றி! இவன்:-தெ.கு.தீரன்சாமி,மாநில தலைவர்,கொங்குதமிழர்கட்சி,மற்றும் தீரன்சின்னமலை-புலனாய்வு,செய்தி ஊடகம்-http://theeranchinnamalai.blogspot.com

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//நிராகரிப்பின் வலி சொல்லும் வலிமையான வரிகள் .வழமை போலவே மெல்லிய உணர்வுகளின் தேக்கமாய் அற்புதம் ரிஷான் .//

அருமையான கருத்து சகோதரி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

M.Rishan Shareef said...

அன்பின் மதி,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் டி.கே.தீரன்சாமி,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !