ஏமாற்றத்தின் சலனங்களோடு
மெல்லிய வேனிற்காலம் தொடர்ந்தும்
அருகாமையை எண்ணச் செய்தவண்ணம் தேய்கிறது
மழை பெய்யலாம் அல்லது பெய்யாது விடலாம்
இரண்டையும் எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறேன்
எல்லாவற்றையும் அதிர்ந்துபோகச் செய்த இறுதிக் கணங்கள்
மிகப் பற்றுதலோடு என்னைப் பிடித்திருந்தன
வாழ்வைப் பற்றிய பற்றுதல் குறித்து இனி எதுவும் எழுதுவதாயில்லை
மகிழ்ச்சி ததும்பிய நேற்றின் தருணங்கள்
ஒரு புகையென மறைந்து அழிந்துவிட்டன
நூதனங்களை மிஞ்சிய பழங்காலத் தடயமொன்றைப் பேணிக் காக்கும்
மூதாட்டியொருத்தியைப் போல எல்லாவற்றையும் சுமந்து திரிவதில்
விசனப்படத்தான் வேண்டியிருக்கிறது
மிக எளிய ஆசைகள் கொண்டு
நான் பூட்டிய குதிரைகள் தப்பியோடினவோ
புழுதி மட்டுமே எஞ்சியிருக்கிறது
வெளிச்சம் எதிலுமில்லை
கடற்கரையெங்கிலும் மணற்துகள்கள்
அகலும்போது உறுத்துவதைத் தட்டிவிடத்தான் வேண்டியிருக்கிறது
ஊரில் கடலற்ற சிறுவனின் பாதம் நனைக்க
அலைகளும் எங்குமில்லை
நேற்றைய சமுத்திரத்தோடு அது ஓய்ந்துவிட்டது
எந்த நேசமுமற்று எப்பொழுதும்
உனது தேவைகளுக்காக மட்டுமே நான் பயன்படுத்தப்பட்டேன் எனும்
ஏமாற்றத்தின் முதல் தளிரோடு
ஒரு கவிதை எஞ்சியிருக்கிறது தலைப்பேதுமற்று
நாளைக்கு இருக்கும் முகம் உனதானதில்லை
- எம்.ரிஷான் ஷெரீப்
13202320130501
நன்றி
# உயிர்மை, திண்ணை, பதிவுகள்
10 comments:
/// மூதாட்டியொருத்தியைப் போல எல்லாவற்றையும் சுமந்து திரிவதில்
விசனப்படத்தான் வேண்டியிருக்கிறது ///
“மிக எளிய ஆசைகள் கொண்டு /நான் பூட்டிய குதிரைகள் தப்பியோடினவோ/ புழுதி மட்டுமே எஞ்சியிருக்கிறது/வெளிச்சம் எதிலுமில்லை” என்ற வரிகளை மிகவும் ரசித்தேன். துயரச்சுவை நெஞ்சை நெகிழவைக்கிறது. - நியுஜெர்சியிலிருந்து கவிஞர் இராய. செல்லப்பா.
அன்பின் திண்டுக்கல் தனபாலன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் கவிஞர் இராய. செல்லப்பா,
//“மிக எளிய ஆசைகள் கொண்டு /நான் பூட்டிய குதிரைகள் தப்பியோடினவோ/ புழுதி மட்டுமே எஞ்சியிருக்கிறது/வெளிச்சம் எதிலுமில்லை” என்ற வரிகளை மிகவும் ரசித்தேன். துயரச்சுவை நெஞ்சை நெகிழவைக்கிறது.//
நிஜமாகவே வாழ்க்கையானது ஒவ்வொரு விடயத்திலும் துயரச்சுவை பூசப்பட்டதுதான் இல்லையா? :-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அருமை ரிஷான்,
வரிகளில் சோகம் ஆழப்பதிந்திருப்பதாகத் தோன்றுகின்றது.
//ஒரு கவிதை எஞ்சியிருக்கிறது தலைப்பேதுமற்று//
//நாளைக்கு இருக்கும் முகம் உனதானதில்லை//
மனதைத் தொட்டன இவ்வரிகள்.
உண்மை, முத்து முத்தான வரிகள்! வாழ்த்துக்கள் ரிஷான்!
அன்பின் சுபாஷினி ட்ரெம்மல்,
//அருமை ரிஷான்,
வரிகளில் சோகம் ஆழப்பதிந்திருப்பதாகத் தோன்றுகின்றது.//
:-)
கருத்துக்கு நன்றி தோழி !
அன்பின் சுபா,
////ஒரு கவிதை எஞ்சியிருக்கிறது தலைப்பேதுமற்று//
//நாளைக்கு இருக்கும் முகம் உனதானதில்லை//
மனதைத் தொட்டன இவ்வரிகள்.//
நன்றி சகோதரி !
அன்பின் பவளசங்கரி,
//உண்மை, முத்து முத்தான வரிகள்! வாழ்த்துக்கள் ரிஷான்!//
கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !
Post a Comment