சிறகை அகல விரித்திருக்குமிரவில்
ஆலமரத்தடிக் கொட்டகை மேடையில்
ரட்சகனின் மந்திரங்கள் விசிறி
கிராமத்தை உசுப்பும்
சிக்குப் பிடித்துத் தொங்கும் நீண்ட கூந்தல்
ஒருபோதும் இமைத்திராப் பேய் விழிகள்
குருதிச் சிவப்பு வழியப் பரந்த உதடுகள்
முன் தள்ளிய வேட்டைப் பற்கள்
விடைத்து அகன்ற நாசியென
நெற்றியில் மாட்டப்பட்ட முகமூடியினூடு
கூத்துக்காரனின் முன்ஜென்மப் பெருந் துன்பம்
சனம் விழித்திருக்கும் அவ்விரவில்
பேரோலமெனப் பாயும்
பச்சைப் பொய்கை நீரின் ரேகைகள்
ஊழிக் காற்றின் வீச்சுக்கேற்ப
மாறி மாறியசையும் அக் காரிருளில்
அவளது உடல்விட்டகழ மறுக்கும்
யட்சியின் பிடியையும் துர்வார்த்தைகளையும்
மந்திரவாதியின் கசையும்
ஆட்டக்காரர்களின் பறையும்
மட்டுப்படுத்தும்
பேரிளம்கன்னியைப் பீடித்துள்ள பிசாசினை
அன்றைய தினம்
குறுத்தோலைப் பின்னல் அலங்காரங்களில்
எரியும் களிமண் விளக்குகளின் பின்னணியில்
அடித்தும் அச்சுறுத்தியும் வதைத்தும் திட்டியும்
துரத்திவிட எத்தனிக்கும் பேயோட்டியைப் பார்த்தவாறு
ஆல விழுதுகளைப் பற்றியபடி காத்துக் கிடக்கும்
பீதியோடு உறங்கச் செல்லவிருப்பவர்களுக்கான
துர்சொப்பனங்கள்
அந்தகாரத்தினூடே
அவர்களோடும் அவைகளோடும்
சுவர்க்கத்துக்கோ அன்றி நரகத்துக்கோ
இழுத்துச் செல்லும் தேவதூதர்கள்
அவளது ஆன்மாவைக் காத்திருக்கிறார்கள்
- எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி - அம்ருதா, நவீன விருட்சம், வல்லமை, பதிவுகள், வார்ப்பு, காற்றுவெளி, தமிழ் எழுத்தாளர்கள் இதழ்
Painting - Kalasuri Jayasiri Semage
Painting - Kalasuri Jayasiri Semage
No comments:
Post a Comment