பிரபஞ்ச வெளியெங்கும்
சுகந்தம் நிறைக்கும்
அழகிய பூவொன்றை
வசந்தநாளொன்றில் எதிர்கொள்ள
தன்
பரப்பெங்கிலும் பாசம் நிரப்பி
நெடுநாளாகக் காத்திருந்ததோர்
பச்சை இல்லம்
மெதுவாக நகர்கையில்
பெருஞ்சலனத்தில்
சிதறச் செய்த கரும்பாறைகள்
மேலிருந்த சினமோர் யுகமாய்த் தொடர்ந்தும்
தன் பழஞ்சுவடுகளில் நலம் விசாரிக்கும்
எளிய நாணல்களை
மீளவும் காணவந்தது
நீர்த்தாமரை
விரிசல்கள் கண்ட மண்சுவர்
மழையின் சாரலை
தரையெங்கும் விசிறும்
ஓட்டுக் கூரை சிறிய வீடு
தொடரும்
புராதன இருளின் ஆட்சி மறைக்க
தன் கீற்றுக்களைப் பரப்பி
பரிபூரணத்தை எடுத்துவந்தது
பேரன்பின் தேவதை
மெல்லிய வண்ணத்துப் பூச்சியென
பொக்கிஷங்களைச் சுமந்து வந்த தன்
சிறகுகளைச் சிறிதேனும்
இளைப்பாறவிடாமல்
வந்தது என்றுமழியாப் புன்னகையோடு
யாவர்க்கும் மகிழ்வைத் தரும்
மந்திரங்களை உதிர்த்தது
பின்னர்
தவறவிட்ட விலைமதிக்கமுடியாதவொன்றை
தேடிச் செல்வது போல
மிகத் துரிதமாகத் தன் நிலம் நாடி
தொன்ம பயிர்நிலங்கள் தாண்டி
மீண்டும் பறந்தது
ஆத்மாக்களனைத்திற்கும்
இனி வாழப்போதுமான
சுவாசத்தை விட்டுச் சென்ற
அத் தூய காற்றினூடே
அந்தகாரத்தைப் பரப்பி
தைத்திருந்த கருங்குடையை திரும்பவும்
விரித்தது மழை இரவு
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.
@ அன்புச் சகோதரி ஃபஹீமா ஜஹானின் வருகை ( 03-11-2009)
நன்றி
# சொல்வனம் இதழ் 13 (27-11-2009)
34 comments:
கவிஞனை சகோதரனாய்ப் பெற்றிருப்பதன் சந்தோசம் சகோதரிக்கு கிடைத்திருக்கும்.
வாழ்த்துகள்.
அன்பு ரிஷான்,
கவிதை நன்றாக இருக்கின்றது. உங்களிருவரின் பாசம் என்றும் நீடிக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக. அஹமத் சுபைர் சொன்னது போல கவிஞரை சகோதரனாக பெற்ற சந்தோசம் சகோதரி பஹிமாவுக்கு கண்டிப்பாக இருக்கும். அதே போல சகோதரி பஹிமாவை சகோதரியாக பெற்ற சந்தோசம் ரிஷானுக்கு இரு மடங்கு உண்டு என்பதையும் அஹமத் சுபைர் அறிந்து கொள்ள வேண்டும்.
"பேரன்பின் தேவதை வருகை" அன்பின் வெளிப்பாடு அருமை. வாழ்த்துக்கள்.
ஆகா, அருமை ரிஷான்
உங்கள் சந்திப்பில் இடைச்செறுகலாக இருக்கவேணும் ஆசை :)
சொற்களைச் செதுக்கி செதுக்கி எழுப்பிய கவிதை
அடடா, என்ன அழகான வெளிப்பாடு ரிஷு! அருமை.
அருமை ரிஷான்
கவிதை மிக அருமை நண்பரே ..மிகவும் ரசித்தேன்
அன்புத் தம்பி ரிஷான்,
உங்கள் முத்திரை முழுதுமாய் பதித்த கவிதை...
இயற்க்கை உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.
என் பால்யகாலம் இந்த சூழ்நிலையில் வளர்ந்ததால்,
ஒவ்வொரு வரியையும் ரசிக்கின்றேன்
இது கற்பனை கவிதையல்ல - நிஜம் தான்.
அன்புடன்
ராகவ.வ
இப்படி வசந்தமாய் ஒரு கவிதை வாசம் வீசுகிறதே பாசத்தின் நேசம் தெரிகிறது ரிஷான்.
ரிஷான்,
உங்களை எல்லாம் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
அன்றைய நாட்களில் நானும் கண்டியில் உங்கள் ஊர் ஊடாக செல்லும்பொழுது
உங்கள் வீடு வருகிற பாக்கியத்தை இழந்துவிட்டேன்.
பஹீமஜஹான் எனக்கும் மிகவும் பிடித்த சகோதரி. அவரது மனம்
என்னை மிகுந்த ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
எனது பல்கலைக்கழக பட்ட ஆய்வில் அவரையும் அனாரையும் இணைத்திருப்பது
என் மனதில் மிகுந்த ஆறுதலான பிரியமான அவர்களது கவிமனம் கண்டுதான்...
பஹீமாக்கா, வாழ்த்துக்கள். இணையமும் தொலைபேசியும் வாயிலாக உங்கள் கவிதைகள் தேடித் தந்த உறவில் நான் அகிலன் என்று வந்தாலும் யாழ்ப்பாணத்தில்
சித்தாந்தன், துவாரகன், மருதம்கேதீஸ்...என்று
வன்னியில் உங்களை எல்லாருக்கும் பிடிக்கும்.
உங்கள் யாவரது மனங்கள் கண்டும் மகிழ்கிறேன்.
இவ்வளவு அழகான வரவேற்பு கவிதை எழுதிவிங்க என்றால் அக்காவை அடிக்கடி வர சொல்லலாம் .. வார்த்தைகள் அவ்வளவு அழகு.. வாழ்த்துக்கள் ரிஷான் ...
அருமையான கவிதை. வாழ்த்துகள்.
அன்பின் அஹமத் சுபைர்,
//கவிஞனை சகோதரனாய்ப் பெற்றிருப்பதன் சந்தோசம் சகோதரிக்கு கிடைத்திருக்கும்.
வாழ்த்துகள்.//
அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பா.
ஒரு கவிஞரை சகோதரியாகப் பெற்றிருப்பது குறித்து எனக்குத்தான் மகிழ்ச்சி நண்பா. எனது வருகையையிட்டு அவரது கவிதையைப் பாருங்கள்
எங்கள் நேத்திரனே
உனது முக வசீகரத்தைத்
துலக்கித் துலக்கித்
தன்னைப் புதுப்பித்துக் கொள்கிறது
காலத்தின் அற்புதக் கரங்கள்
உனது சொற்களைப் பற்றியவாறு
வீடெங்கும் படர்கிறது
பாசத்தில் வேர் ஊன்றிய கொடியொன்று
அத்தனை இனிமையான
அவ்வளவு ஆனந்தமான
அந்த மாலைப் பொழுதிலிருந்து
மெல்லத் துளிர்விட்டது
எப்பொழுதும் வாடாத ஒரு பூ
மரணம் இயன்றவரை பந்தாடிக்
கை விட்டுச் சென்ற
பாலை நிலத்திலிருந்து
ஒளிர்விடும் முத்தெனத் திரும்பி வந்திருந்தாய்
எமைப் பரிதவிக்க விட்ட
காலத்தின் கண்ணீரைத் துடைத்தவாறு
நிகரிலா ஆவலுடன்
நேத்திரங்களில் நிறைந்தாய்
எவரும் வந்து போய்விடக்கூடிய
முடிவற்ற தெருவினூடாக
எவராலும் எடுத்துவரமுடியாத
ஆனந்ததை ஒப்படைத்த பெருமிதத்துடன்
விடைபெறத் தயாரானாய்
உன்னிடம் காண்பித்திட
ஒரு வெளி நிறைந்த காட்சிகள் இருந்தன
அவசர மனிதர்களும்
மாலைப் பொழுதும்
எமைக் கடந்து போய்க் கொண்டிருந்த
வீதியிலே நடந்தோம்
பெரு மழைக் காலத்தை எதிர்பார்த்து
தூரத்து வயல் வெளிகளில்
எரிந்து கொண்டிருந்தது தீ
மூங்கில்கள் தலைகுனிந்து
எதனையோ உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும்
அடர்ந்த மரங்களின் கீழே
ஓடிக் கொண்டிருந்தது ஆறு
கொடிகளை இழுத்து அசைத்தவாறு
நீலம் பூத்த மலைகளும் தென்னந்தோப்புகளும்
கரையத் தொடங்கிய இருளில்
எம்மீது படிந்து கொண்டிருந்தது
ஏதோவோர் ஒளி
ஆகாயத்தின் கிழக்கே
உன்னைப் போலவே ஒரு நட்சத்திரம்
மின்னத் தொடங்கியிருந்தது
நின்று இரசித்திட யாருக்கும் நேரமற்ற
அந்த அஸ்தமனத்தின் மெல்லிய ஒளியினூடாக
தெருமுனைவில் வழிபார்த்திருந்த
அம்மாவிடம் மீண்டோம்
இருளானதும் கூடு செல்லத் துடிக்கும்
பறவையின் சிறகுகளோடு உந்திப் பறந்தாய்
பரிமாறப்படாத இரவுணவையும்
தந்துசென்ற அன்பின் பரிசுகளையும்
எங்கள் உள்ளங்களில் சுமக்கவிட்டு
(2009.09.27 இன் நினைவாக)
Posted by ஃபஹீமாஜஹான்
அன்பின் ஷேக் தாவூத்,
உங்கள் பிரார்த்தனை பலிக்கட்டும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் மாதேவி,
//"பேரன்பின் தேவதை வருகை" அன்பின் வெளிப்பாடு அருமை. வாழ்த்துக்கள்.//
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி !
அன்பின் நண்பர் புகாரி,
//ஆகா, அருமை ரிஷான்
உங்கள் சந்திப்பில் இடைச்செறுகலாக இருக்கவேணும் ஆசை :)//
நிச்சயம் ஒரு நாள் சந்திப்போம். அது எமது ஆசையும் கூட :)
நன்றி நண்பரே !
அன்பின் புவனேசுவரி,
//சொற்களைச் செதுக்கி செதுக்கி எழுப்பிய கவிதை. //
:)
நன்றி சகோதரி !
அன்பின் பூங்குழலி,
கருத்துக்கு நன்றி சகோதரி !
அன்பின் விஷ்ணு,
//கவிதை மிக அருமை நண்பரே ..மிகவும் ரசித்தேன் ...//
நன்றி அன்பு நண்பா :)
அன்பின் கவிநயா,
//அடடா, என்ன அழகான வெளிப்பாடு ரிஷு! அருமை.//
:)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி :)
அன்பின் சகோதரி ஜெயஸ்ரீ சங்கர்,
//அன்புத் தம்பி ரிஷான்,
உங்கள் முத்திரை முழுதுமாய் பதித்த கவிதை...
இயற்க்கை உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.//
கருத்துக்கு நன்றி சகோதரி !
அன்பின் ராகவன்,
//என் பால்யகாலம் இந்த சூழ்நிலையில் வளர்ந்ததால்,
ஒவ்வொரு வரியையும் ரசிக்கின்றேன்
இது கற்பனை கவிதையல்ல - நிஜம் தான்.//
நிச்சயமாக நண்பரே !
கருத்துக்கு நன்றி !
அன்பின் விஜி,
//இப்படி வசந்தமாய் ஒரு கவிதை வாசம் வீசுகிறதே பாசத்தின் நேசம் தெரிகிறது ரிஷான்.//
:)
நன்றி அன்புத் தோழி :)
அன்பின் கீதா குமாரி,
//அருமையான கவிதை. வாழ்த்துகள்.........//
அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி :)
அன்பின் தீபச் செல்வன்,
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் சக்தி,
புது இடம் போன பின்பு உங்கள் முதல்வருகை இங்கு.
நலமா?
//இவ்வளவு அழகான வரவேற்பு கவிதை எழுதிவிங்க என்றால் அக்காவை அடிக்கடி வர சொல்லலாம் //
நானும் கூப்பிட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். விரைவில் வருவார்
//.. வார்த்தைகள் அவ்வளவு அழகு.. வாழ்த்துக்கள் ரிஷான் ...//
வருகைக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழி :)
அன்புள்ள தம்பி ரிஷான்,
உங்களை மிகமிகத் தாழ்த்தியும் என்னை இயன்றவரை உயர்த்தியும் எழுதப்பட்டுள்ள இக்கவிதையைப் பார்க்கும் ஒவ்வொரு வேளையும் சங்கடமாகவே உள்ளது.
அன்புநிறைந்த அந்த பச்சை இல்லத்தின் செல்லப்பிள்ளையான இளவரசன் நீங்கள்.அந்தப் பாசத்தின் பயணத்தையும் உங்கள் வீட்டில் காத்திருந்த வரவேற்பையும் உபசரிப்பையும் வாழ்வில் ஒருபோதும் மறக்க முடியாது. மீண்டும் மீண்டும் நான் அங்கு வருவதற்கான எல்லாச் சுதந்திரத்திடனும் உங்கள் இல்லம் காத்திருப்பதையும் அறிவேன்.
இந்தச் சகோதரத்துவமும் அன்பும் எமது வாழ்வு நீளவும் தொடர்ந்திட வேண்டும் என்றே பிராத்தனை செய்கிறேன்.நீங்கள் சகோதரனாக வாய்த்ததையிட்டு நான்தான் பல மடங்கு சந்தோஷமடைகிறேன்.
உங்கள் சகோதரி
ஃபஹீமாஜஹான்
அன்பின் ஃபஹீமாஜஹான்,
//அன்புள்ள தம்பி ரிஷான்,
உங்களை மிகமிகத் தாழ்த்தியும் என்னை இயன்றவரை உயர்த்தியும் எழுதப்பட்டுள்ள இக்கவிதையைப் பார்க்கும் ஒவ்வொரு வேளையும் சங்கடமாகவே உள்ளது.
அன்புநிறைந்த அந்த பச்சை இல்லத்தின் செல்லப்பிள்ளையான இளவரசன் நீங்கள்.அந்தப் பாசத்தின் பயணத்தையும் உங்கள் வீட்டில் காத்திருந்த வரவேற்பையும் உபசரிப்பையும் வாழ்வில் ஒருபோதும் மறக்க முடியாது. மீண்டும் மீண்டும் நான் அங்கு வருவதற்கான எல்லாச் சுதந்திரத்திடனும் உங்கள் இல்லம் காத்திருப்பதையும் அறிவேன்.
இந்தச் சகோதரத்துவமும் அன்பும் எமது வாழ்வு நீளவும் தொடர்ந்திட வேண்டும் என்றே பிராத்தனை செய்கிறேன்.நீங்கள் சகோதரனாக வாய்த்ததையிட்டு நான்தான் பல மடங்கு சந்தோஷமடைகிறேன்.//
நான் தான் பலமடங்கு மகிழ்கிறேன் சகோதரி. இறைவனின் அருளோடு, உங்கள் உதவியும் இல்லாவிட்டால் இரண்டு வருடங்களில் இவ்வளவு உயரம் சாத்தியமில்லை. எனதும் பிரார்த்தனைகள் உங்களதே. :)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்புச் சகோதரி !
இப்படியான கனத்த கவிதைகள் ஏனோ எனக்கு விளங்கிக்கொள்ள முடிவதில்லை. வாசிக்கும்போது மிக நன்றாக இருக்கிறது. ஆனால் கவிதை எதைப் பற்றியது என தெளிவாக என்னால் விளங்கிக்கொள்ள முடியாததால்....
குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. ஆனால் வரிகளில் இருக்கும் ஒழுங்கும், கனமும் மிக அருமை. வாழ்த்துகள் ரிஷான்.
பேரன்பின் தேவதை வருகையில்தான் இன்னமும் நீடித்துக் கொண்டிருக்கிறது இப்பூமியில் உயிரினங்களின் நீட்சியும் மனித வாழ்வின் வளர்ச்சியும்..!!
ஏகாந்தத்தை எளிதாக கையாண்டிருக்கிறீர்கள் கவிதையில்... வாழ்த்துக்கள் ரிஷான்..!!
அன்பின் சிவா.ஜி,
//இப்படியான கனத்த கவிதைகள் ஏனோ எனக்கு விளங்கிக்கொள்ள முடிவதில்லை. வாசிக்கும்போது மிக நன்றாக இருக்கிறது. ஆனால் கவிதை எதைப் பற்றியது என தெளிவாக என்னால் விளங்கிக்கொள்ள முடியாததால்....//
இந்தக் கவிதை எனது வீட்டுக்கு வருகை தந்த எனது சகோதரியின் வருகையைப் பற்றியது. :)
//குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. ஆனால் வரிகளில் இருக்கும் ஒழுங்கும், கனமும் மிக அருமை. வாழ்த்துகள் ரிஷான். //
கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :)
அன்பின் சுகந்தப்ரீதன்,
//பேரன்பின் தேவதை வருகையில்தான் இன்னமும் நீடித்துக் கொண்டிருக்கிறது இப்பூமியில் உயிரினங்களின் நீட்சியும் மனித வாழ்வின் வளர்ச்சியும்..!!
ஏகாந்தத்தை எளிதாக கையாண்டிருக்கிறீர்கள் கவிதையில்... வாழ்த்துக்கள் ரிஷான்..!! //
அழகான நிதர்சனமான கருத்து.
கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !
Post a Comment