Monday, November 23, 2009

அவகாசம்


சற்று இடமும், நேரமும் கொடு
எனைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி
இளைப்பாறிக் கொள்கிறேன்

ஒரு பெரும் புதைகுழியிலிருந்து
மீண்டு வந்திருக்கிறேன்
சூழ்ந்தேயிருந்தன
நச்சில் தோய்ந்த நாக்குகளோடு
சீறும் பாம்புகள் பல

கொடும்வெப்பம் உமிழும்
விஷக் காற்றினை மட்டும் சுவாசித்தபடி
மூர்ச்சையுற்றுக் கிடந்ததென் வெளியங்கு
வண்ணத்துப் பூச்சிகள் தொட்டுச் சென்றன
அனல் கக்கும் தணல் கற்றைக்குள்
ஒரு பூப்போல இருந்தேனாம்
சிறகுகள் கருகி அவையும்
செத்துதிரும் முன் இறுதியாகச் சொல்லின

அரசகுமாரனாகிய அவனையேதான்
தன்னலவாதியென்றும் துரோகியென்றும்
சனியனென்றும் சாத்தானென்றும்
பிடாரனென்றும்
பேய் பிசாசுகளின் தலைவனென்றும்
உண்மைகளை உரக்கச் சொல்வேன்
மீளவும் கண்களைக் கட்டிக்
கடத்திப் போகும் வரையில்

அதுவரையில்
உன் கையில் ஆயுதம் ஒதுக்கி
பார்வையில் குரூரம் தவிர்த்து
சற்று இடமும் நேரமும் கொடு
எனைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி
இளைப்பாறிக் கொள்கிறேன்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை

நன்றி
# உன்னதம் செப்டம்பர், 2009 இதழ்
# உயிர்மை
# திண்ணை





4 comments:

பூங்குழலி said...

//சற்று இடமும் நேரமும் கொடு
எனைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி
இளைப்பாறிக் கொள்கிறேன்//

நன்றாக ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்

உங்கள் மற்ற கவிதைகளின் வீச்சை போன்று வலியதாக இல்லை இந்த கவிதையின் நடை ரிஷான் ....ஆனாலும் பாம்புகள், விஷம் கக்கும் ஜந்துகள் மீது என்ன பாசமோ உங்களுக்கு ...

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//சற்று இடமும் நேரமும் கொடு
எனைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி
இளைப்பாறிக் கொள்கிறேன்//

//நன்றாக ஆசுவாசப்படுத்திக் கொள்ளுங்கள்

உங்கள் மற்ற கவிதைகளின் வீச்சை போன்று வலியதாக இல்லை இந்த கவிதையின் நடை ரிஷான் //

:)

//....ஆனாலும் பாம்புகள், விஷம் கக்கும் ஜந்துகள் மீது என்ன பாசமோ உங்களுக்கு ...//

:)
இவ்வுலகில் நாம் எத்தனையோ பேருடன் வாழ்ந்துவிட்டுப் போகலாம். ஆனால் கல்லறையில் அவை மட்டும்தானே நமக்காகக் காத்திருக்கும் ஜீவராசிகள்? :)

கருத்துக்கு நன்றி சகோதரி !

இளசு said...

ஆணின் ஆக்கிரமிப்பில் இருந்த பெண்ணோ
ஆட்சியாளன் பிடியில் இருந்த பிரஜையோ...

இடைவேளைதான் இது..
இடர்கள் மீண்டும் தொட்ரும்..

இடைத்தங்கலிலும் கொடுமை நிகழலாம்..
ஆனால், வேண்டித் தணிக்க இயலலாம்..?

கோரிக்கை பலிக்கட்டும் - இடைவேளை இடர் குறைய!

மீண்டும் அரசகுமார-சாத்தானிடம் சிக்குவதைவிட மாற்றே இல்லையா?


மருக வைக்கிறது...


பாராட்டுகள் ரிஷான்!

சுகந்தப்ரீதன் said...

அவகாச கோரிக்கையில் அசுவாசமாய் வெளிப்படுகின்றன வலிகள்...!! அதை கொஞ்சமும் வீரியம் குறையாமல் இறுக்கத்துடன் வெளிப்படுத்தும் கவிதை வரிகள்..!!

உணர்வுகளை கட்டுக்கோப்பாக வெளிப்படுத்தும் உங்கள் கவிதைகளுக்கு என் பாராட்டுக்கள் ரிஷான்..!!