Tuesday, March 2, 2010

தொலைந்த பாதங்களின் சுவடுகளேந்தி...

பார்வைக்குப் புலப்படாப்
பாதங்களைக் கொண்டது
நீருக்குள் அசைந்தது
சிற்பங்களெனக் கண்ட
உயிர்த் தாவரங்கள்
ஒளித்தொகுக்கும் வழியற்று
மூலைகளை அலங்கரித்திட
விட்டுவந்த துணையை
குமிழிகள் செல்லும்
பரப்பெங்கிலும் தேடியது

எல்லாத் திசைகளின் முனைகளிலும்
வாழ்வின் இருளே மீதமிருக்க
காணும் யாரும் உணராவண்ணம்
மூடா விழிகளில் நீர் உகுத்து
அழகுக் கூரை கொண்ட
கண்ணாடிச் சுவர்களிடம்
தன் இருப்பை உணர்த்த
கொத்திக் கொத்தி நகர்ந்திற்று
செம்மஞ்சள் நிற தங்கமீனொன்று
அது நானாகவும் இருக்கக் கூடும்

-எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# வல்லினம் - மலேசிய கலை இலக்கிய இதழ் 12- டிசம்பர், 2009 
# நவீன விருட்சம்
# திண்ணை


23 comments:

Dr.M.Sivasankar said...

எல்லாம் சரிதான், கடைசி வரிதான் :)))

சாந்தி said...

//எல்லாத் திசைகளின் முனைகளிலும்
வாழ்வின் இருளே மீதமிருக்க//


//அது நானாகவும் இருக்கக் கூடும்//

அச்சமில்லை அச்சமில்லை உச்சி மீது வானிடிந்து வீழினும் ... என இருந்தால்
உலகம் நம் கையில்...

இருளோ ஒளியோ நம் மனதில்தான் ரிஷான்..

அடுத்து ஒளிமயமா ஒரு கவி வரட்டுமே..

ஜெயலக்ஷ்மி said...

மிகவும் அருமை நண்பரே

Anonymous said...

எண்ணற்ற நதிகளும் ஏராளமான கடல்களும் இருந்தும்
பிடிவாதமாய் அந்த சிறு தொட்டிக்குள் தன் துணையை தேடும் இந்த மீனிற்காய்
நாம் வருத்தப் பட மட்டுமே முடியும்

"உழவன்" "Uzhavan" said...

அருமை.. வாழ்த்துகள்

Ashok D said...

நல்லாயிருக்குங்க :)

அக்னி said...

என்னே சொற்கட்டு!

வெளிச்சம் வரும் கண்ணாடித் தடுப்பு,
சுதந்திரத்தின் தடுப்பாகி இருள் தர,
நீருக்குள் வதங்குது தங்க மீனொன்று...

அழகுக்காக,
வீட்டிற்குள் ஒரு சிறை...
அமைதிக்காக,
ஒரு உயிருக்கு வதை...

இந்த நன்னீர்த் தொட்டியின்
ஒவ்வொரு துளியும்
நாளை உவர்க்கும்.
அது அதன்
கண்ணீரின் உவர்ப்பாயுமிருக்கலாம்.

ஆனால்,
அலங்காரத்திற்கென்றே,
சிருஷ்டிக்கப்பட்ட
சிங்கார மீனுக்கு,
இங்கு தங்கும் வரைக்கும்தான்
தன் உயிரும் தங்கும் என்பது
புரியாமலே...
இல்லை, புரிய விரும்பாமலே...

எதிர்காலத்தில்,
விண்வெளியில் விண்வெளிநிலையத்திலிருந்து
சுதந்திரம் தேடும்போதும்,
வேற்றுக் கிரகத்தில் வெளியெற வழியின்றி
வேதனைப் படும்போதும்,
மனிதனுக்கு இந்த மீனின் நிலை விளங்கலாம்.

நானும் ஒரு மீன் தொட்டிப் பிரியனே...
மீன்களின் வெட்டசைவுகளுக்கு எத்தனை மைக்கல் ஜாக்சன்களும் ஈடாக மாட்டார்கள்.
அந்த அசைவுகளுக்குச், சலன வேளையில் மனதை அமைதிப்படுத்தும் சக்தி நிரம்பவேயுண்டு.

ரிஷான் அவர்களுக்கு எனது பாராட்டு....

அப்பணா said...

ஏம்பா ரிஷான்
இந்த கவித நல்லா இருக்கு
நான் பல பயிற்சிகள் முடிந்து
வீடு திரும்புகையில்
நான் தங்கி இருந்த இடங்களின் நினைவுகள்
மறக்க முடியாது.

இளசு said...

ரிஷான்

மிக உயரிய தளத்தில் இக்கவிதை..

பாராட்டுகள்!

மூடா விழிகளில் கண்ணீர்...

( தண்ணீரிலே மீன் அழுதால் கண்ணீரைத்தான் யாரறிவார் என்ற வரி நினைவாடலில்..)

ஒளி தொகுக்காத் தாவரம்...


( பொன்சாயில் வளர்ச்சிச் சிறை... போல் இங்கே பச்சய உற்பத்தித் தடை)


கண்ணாடிக் கூரை..

(கடல் Vs கண்ணாடி நீர்த்தொட்டி..
சில மாற்றுகளுக்கிடையான ஏற்றத்தாழ்வுகள் ஏ......ராளம்)


இல்லாத பாதங்கள்
அவற்றின் நீருள் சுவடுகள்!

கரைந்த காற்றுக்குமிழ்களா
காட்டிக்கொடுக்கும் கணையாழிகள்???


இல்பொருள் உவமைகளின் அணிவகுப்பு
இயலாமை, சோகம் சொல்லும் சொல்லடுக்கு


அருமை...


இறுதிவரிக்கு அணிகலனாய் அக்னியின் அருமையான பின்கவிதை!


அக்னியின் பின்கவிதைகள் பெறும் படைப்புகள் பெருமைக்குரியன..

பாராட்டுகிறேன் அக்னி!

Sofi said...

ரிஷான்..
உங்கள் கவிதைகளின் ரசிகை நான் ...மிகவும் அருமை ..வாழ்த்துக்கள் ரிஷான்

அக்னி said...

//ரிஷான்

மிக உயரிய தளத்தில் இக்கவிதை..//

ஆமாம்... நிறைவாக ஆமோதிக்கின்றேன்...

இந்தவகைக் கவிதைகள் உள்ளொன்று வைத்துப் புறம் வேறு காட்டும்.
அமரனுக்கடுத்து, இப்படியான படைப்புக்களை உங்களிடத்திற் காண்கின்றேன்.

நான் புரிந்தது சரியா எனத் தெரியவில்லை.
எனக்குப் புரிந்ததை வைத்துப் பதிவிட்டிருந்தேன்.

இந்தக் கவிதை சார்ந்து, இன்னும் பல பின்னூட்டங்களை ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்.

பாராட்டுக்கு நன்றி அண்ணலே...

பூங்குழலி said...

உயிர்த் தாவரங்கள்
ஒளித்தொகுக்கும் வழியற்று
மூலைகளை அலங்கரித்திட

கண்ணாடிச் சுவர்களிடம்
தன் இருப்பை உணர்த்த
கொத்திக் கொத்தி நகர்ந்திற்று
செம்மஞ்சள் நிற தங்கமீனொன்று
அது நானாகவும் இருக்கக் கூடும்

இந்த கவிதை முழுமையும் ஏதோ ஒரு சூனியம் நிறைந்திருப்பதாக தோன்றுகிறது ரிஷான் ...

M.Rishan Shareef said...

அன்பின் Dr.M.Sivasankar,

//எல்லாம் சரிதான், கடைசி வரிதான் :)))//

கருத்துக்கு நன்றி நண்பரே :-)

M.Rishan Shareef said...

அன்பின் சாந்தி,

கருத்துக்கு நன்றி சகோதரி !

M.Rishan Shareef said...

அன்பின் ஜெயலக்ஷ்மி,

கருத்துக்கு நன்றி தோழி !

M.Rishan Shareef said...

அன்பின் அனானி,

//எண்ணற்ற நதிகளும் ஏராளமான கடல்களும் இருந்தும்
பிடிவாதமாய் அந்த சிறு தொட்டிக்குள் தன் துணையை தேடும் இந்த மீனிற்காய்
நாம் வருத்தப் பட மட்டுமே முடியும்//

இம் மீனுக்கு தொட்டியே விதியென்றாயிற்று.

கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் உழவன்,

//அருமை.. வாழ்த்துகள்//

வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் D.R.அஷோக்,

//நல்லாயிருக்குங்க :)//

:-)
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் அக்னி,

பெரிதும் உவக்கச் செய்வதுவும், ஊக்கமளிப்பதுமான உங்களின் அழகான கருத்துக்களின் ரசிகன் நான்.

//எதிர்காலத்தில்,
விண்வெளியில் விண்வெளிநிலையத்திலிருந்து
சுதந்திரம் தேடும்போதும்,
வேற்றுக் கிரகத்தில் வெளியெற வழியின்றி
வேதனைப் படும்போதும்,
மனிதனுக்கு இந்த மீனின் நிலை விளங்கலாம்.//

நிச்சயமாக. ஆனால் அதைக் கூட உணரப் போவது எத்தனை பேரோ இந்த சுயநல உலகத்தில்?

வருகைக்கும் மிக அழகான கருத்துக்களுக்கும் நன்றி நண்பரே :-)

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர் இளசு,

உங்களது அழகான கருத்தினைக் கண்டேன். அழகான ரசனைகளை உங்கள் வரிகளில் காணமுடிகிறது. மிகவும் ரசித்தேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :-)

M.Rishan Shareef said...

அன்பின் அப்பணா,

//ஏம்பா ரிஷான்
இந்த கவித நல்லா இருக்கு
நான் பல பயிற்சிகள் முடிந்து
வீடு திரும்புகையில்
நான் தங்கி இருந்த இடங்களின் நினைவுகள்
மறக்க முடியாது.//

நிச்சயமாக நண்பரே. பல நினைவுகளை மறக்க முடியாது எப்பொழுதும்.

கருத்துக்கு நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் Sofi,

வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி தோழி :-)

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//உயிர்த் தாவரங்கள்
ஒளித்தொகுக்கும் வழியற்று
மூலைகளை அலங்கரித்திட

கண்ணாடிச் சுவர்களிடம்
தன் இருப்பை உணர்த்த
கொத்திக் கொத்தி நகர்ந்திற்று
செம்மஞ்சள் நிற தங்கமீனொன்று
அது நானாகவும் இருக்கக் கூடும்

இந்த கவிதை முழுமையும் ஏதோ ஒரு சூனியம் நிறைந்திருப்பதாக தோன்றுகிறது ரிஷான் ...//

ஆமாம் சகோதரி.
தொட்டி மீனினது வாழ்க்கை முழுவதுமே சூனியம் தானே? தான் நீந்திக் களித்த பெரும் பரப்பைத் தேடிச் சென்றே ஒவ்வொருமுறையும் அது கண்ணாடியைப் போய் முட்டுகிறது. பின்னர் ஏமாற்றத்தோடு திரும்பவும் சூனியத்துக்குத் திரும்புகிறது. :-(

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !