அப்பாரிய மலைகளைத் தாண்டிய வனாந்தரத்தின்
பெரு விருட்சமொன்றின் பரவிய கிளைகளில்
குச்சுக்களால் வேயப்பட்டு
எமக்கென்றொரு அழகிய கூடிருந்தது
இணைப்பறவைகள் சேர்த்துக் கட்டிய வீட்டில்
அழகாய்ப் பிறந்து கீச்சிட்டேனாம்
இரை திரட்டி வந்த அன்னைப் பட்சி
தொண்டைக்குள் வைத்தழுத்திய உணவு காயும் முன்
வேட்டைப் பறவையொன்றின்
வஞ்சகம் சூழ்ந்த விழிகளிலே விழுந்திட்டேன்
இறகுகள் இருக்கவில்லை
வில்லங்கங்கள் தெரியவில்லை
விசித்திர வாழ்க்கையிதன்
மறைவிடுக்குகள் அறியவில்லை
அன்னை அருகிலாப் பொழுதொன்றில்
சாத்தானியப் பட்சி காவிப்பறந்திற்று என்னை
கூரிய சொண்டுக்குள் என்
தோள் கவ்விப் பறக்கும் கணம்
மேகங்கள் மோதியோ
தாயின் கண்ணீர்ப் பிரார்த்தனையோ
எப்படியோ தவறிட்டேன்
கீழிருந்த இலைச் சருகுக்குள்
வீழ்ந்து பின் ஒளிந்திட்டேன்
அடை காத்தவளும் வரவில்லை - பின்னர்
காவிச் சென்றவனும் வரவில்லை
எப்படி வளர்ந்தேனென்று
எனக்கும் தெரியவில்லை
இறகுகள் பிறந்தன
தத்தித் தத்திப் பறக்கக் கற்றேன்
இன்று புராதன நினைவுகளைத் திரட்டியெடுத்து
வலிமையான குச்சிகள் கொண்டு
எனக்கொரு வீடு கட்டுகிறேன்
விஷப் பறவைகள் காவிப்பறக்க இயலா
உயரத்தில் உருவத்தில்
விசித்திரமான கூடொன்று கட்டுகிறேன்
கூரிய சொண்டுகளால் தோள் கவ்வும் வலி
என் குஞ்சுகளுக்கு வேண்டாம்
- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை.
நன்றி
# கலைமகள் - ஜனவரி, 2009 இதழ்
# உயிர்மை
# தமிழ் எழுத்தாளர்கள்
# வார்ப்பு
# ஓவியர் ஷ்யாம்
14 comments:
அருமை ரிஷான்.
கலைமகளில் வெளிவந்த போதே வாசித்து விட்டிருந்தேன்.
வாழ்த்துக்கள்.
அருமை ரிஷான்.
கலைமகளில் வெளிவந்த போதே வாசித்து விட்டிருந்தேன்.
வாழ்த்துக்கள்.
/வலிமையான குச்சிகள் கொண்டு
எனக்கொரு வீடு கட்டுகிறேன்
விஷப் பறவைகள் காவிப்பறக்க இயலா
உயரத்தில் உருவத்தில்
விசித்திரமான கூடொன்று கட்டுகிறேன்
கூரிய சொண்டுகளால் தோள் கவ்வும் வலி
என் குஞ்சுகளுக்கு வேண்டாம் /
அருமை
புலம் பெயர்தல்..Vs
புலம் பெயர்த்தல்...
வன்புலப் பெயர்த்தலின் வலிகள் வேறு..
வேரறுந்த மரம்
கூடழிந்த பறவை..
சிறகு முளைக்காத
தானே தேடி உண்ண முடியாத
பறவைக்குஞ்சின் வலி..
மனதின் வெடிப்பு..
அடுத்த தலைமுறையாவது
அவ்வலி அனுபவிக்காமல் காக்கும்
மனத்துடிப்பு..
அழகாய்ப் பதிந்தீர்கள் ரிஷான்.
வாழ்த்துகிறேன்..
//விசித்திரமான கூடொன்று கட்டுகிறேன்
கூரிய சொண்டுகளால் தோள் கவ்வும் வலி
என் குஞ்சுகளுக்கு வேண்டாம்//
அருமையான பாடம்..
அடை காத்தவளும் வரவில்லை - பின்னர்
காவிச் சென்றவனும் வரவில்லை
எப்படி வளர்ந்தேனென்று
எனக்கும் தெரியவில்லை
மனதை வருத்தும் நிஜம் சொல்லும் வரிகள் ரிஷான்
அன்பின் ராமலக்ஷ்மி,
//அருமை ரிஷான்.
கலைமகளில் வெளிவந்த போதே வாசித்து விட்டிருந்தேன்.
வாழ்த்துக்கள்.//
கலைமகளில் பார்த்த உடனேயே அதனை ஸ்கேன் செய்தும் அனுப்பியிருந்தீர்கள். மிகவும் மகிழ்வாக உணர்ந்தேன்.
அதற்கும் வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி சகோதரி :-)
அன்பின் திகழ்,
///வலிமையான குச்சிகள் கொண்டு
எனக்கொரு வீடு கட்டுகிறேன்
விஷப் பறவைகள் காவிப்பறக்க இயலா
உயரத்தில் உருவத்தில்
விசித்திரமான கூடொன்று கட்டுகிறேன்
கூரிய சொண்டுகளால் தோள் கவ்வும் வலி
என் குஞ்சுகளுக்கு வேண்டாம் /
அருமை//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !
அன்பின் இளசு,
//புலம் பெயர்தல்..Vs
புலம் பெயர்த்தல்...
வன்புலப் பெயர்த்தலின் வலிகள் வேறு..
வேரறுந்த மரம்
கூடழிந்த பறவை..
சிறகு முளைக்காத
தானே தேடி உண்ண முடியாத
பறவைக்குஞ்சின் வலி..
மனதின் வெடிப்பு..
அடுத்த தலைமுறையாவது
அவ்வலி அனுபவிக்காமல் காக்கும்
மனத்துடிப்பு..
அழகாய்ப் பதிந்தீர்கள் ரிஷான்.
வாழ்த்துகிறேன்.. //
அழகான, அருமையான கருத்து. மிகவும் ரசித்தேன்.
கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே !
அன்பின் சாந்தி,
கருத்துக்கு நன்றி சகோதரி !
அன்பின் பூங்குழலி,
//அடை காத்தவளும் வரவில்லை - பின்னர்
காவிச் சென்றவனும் வரவில்லை
எப்படி வளர்ந்தேனென்று
எனக்கும் தெரியவில்லை
மனதை வருத்தும் நிஜம் சொல்லும் வரிகள் ரிஷான்//
:-(
உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவென இடம்பெயர்ந்து சென்ற எத்தனையோ மக்களின் வலியிது. :-(
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி !
//உயரத்தில் உருவத்தில்
விசித்திரமான கூடொன்று கட்டுகிறேன்
கூரிய சொண்டுகளால் தோள் கவ்வும் வலி
என் குஞ்சுகளுக்கு வேண்டாம்...//
மனதைத் தொட்ட கவிதை!!! அருமை கவிஞர் ரிஷான்! வாழ்த்துக்கள்!
...................
...................
"இறகுகள் இருக்கவில்லை
வில்லங்கங்கள் தெரியவில்லை
விசித்திர வாழ்க்கையிதன்
மறைவிடுக்குகள் அறியவில்லை
அன்னை அருகிலாப் பொழுதொன்றில்
சாத்தானியப் பட்சி காவிப்பறந்திற்று என்னை
கூரிய சொண்டுக்குள் என்
தோள் கவ்விப் பறக்கும் கணம்
மேகங்கள் மோதியோ
தாயின் கண்ணீர்ப் பிரார்த்தனையோ
எப்படியோ தவறிட்டேன்
கீழிருந்த இலைச் சருகுக்குள்
வீழ்ந்து பின் ஒளிந்திட்டேன்"
பொருள் பொதிந்த வரிகள்.
...................
...................
"கூரிய சொண்டுகளால் தோள் கவ்வும் வலி
என் குஞ்சுகளுக்கு வேண்டாம்"
எமது தேசத்தில் பருந்துகளுக்கு இரையாகிப்போன பிள்ளைகளின் பெற்றோர் எஞ்சியிருக்கும் தம் பிள்ளைகளை நினைத்தும் இவ்வாறு எண்ணி வாழக்கூடும்.
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment