Wednesday, June 2, 2010

நள்ளிரவின் பாடல்


நடுத்தெருவில் விளையாடும்
பூனைக்குட்டிகளைப் பார்த்திருக்கும்
இரவொன்றின் பாடலை
நான் கேட்டேன்

மோதிச் செல்லக் கூடிய நகர்வன பற்றிய
எந்தப் பதற்றமுமின்றி
துள்ளுமவற்றைத் தாங்கிக்
கூட விளையாடுகிறது
சலனமற்ற தெரு

யாருமற்ற வீட்டின் கதவைத் தாளிட்டு
அந்த நள்ளிரவில் தெருவிலிறங்கி
நடக்கத் தொடங்குகையில்
திசைக்கொன்றாகத் தெறித்தோடி
எங்கெங்கோ பதுங்கிக் கொள்கின்றன
மூன்று குட்டிகளும்

நான் நடக்கிறேன்
தெரு சபிக்கிறது
நிசி தன் பாடலை
வெறுப்போடு நிறுத்துகிறது

இந்தத் தனிமையும்
இருளும் தெருவும்
வன்மம் தேக்கி வைத்து
எப்பொழுதேனுமென்னை
வீழ்த்திவிடக் கூடும்

- எம்.ரிஷான் ஷெரீப்,
இலங்கை


நன்றி
# வல்லினம் கலை இலக்கிய இதழ் - 15, மார்ச் - 2010
# உயிர்மை
# திண்ணை

11 comments:

Ashok D said...

நல்லாயிருக்குங்க

Anonymous said...

மிகவும் அரு8மை

பூங்குழலி said...

எந்தப் பதற்றமுமின்றி
துள்ளுமவற்றைத் தாங்கிக்
கூட விளையாடுகிறது
சலனமற்ற தெரு

நான் நடக்கிறேன்
தெரு சபிக்கிறது
நிசி தன் பாடலை
வெறுப்போடு நிறுத்துகிறது

மென்மையான கவிதை ரிஷான்

M.Rishan Shareef said...

அன்பின் D.R.Ashok,

//நல்லாயிருக்குங்க//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே :-)

M.Rishan Shareef said...

அன்பின் vkappan,

//மிகவும் அருமை//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே !

M.Rishan Shareef said...

அன்பின் பூங்குழலி,

//எந்தப் பதற்றமுமின்றி
துள்ளுமவற்றைத் தாங்கிக்
கூட விளையாடுகிறது
சலனமற்ற தெரு

நான் நடக்கிறேன்
தெரு சபிக்கிறது
நிசி தன் பாடலை
வெறுப்போடு நிறுத்துகிறது

மென்மையான கவிதை ரிஷான்//

:-)

தொடர்வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அன்புச் சகோதரி !

ஆதன் said...

நள்ளிரவு, பூனை, தெரு, தனிமை, நான்...

கவிதைக்கு திரும்ப திரும்ப பயன்படுத்தப்படிருக்கும் வார்த்தைகள் இவை..

இரவின் வெளி முழுக்க பரவிக் கிடக்கிற பூனைகளின் விளையாட்டு ஆனந்தம் நள்ளிரவின் பாடலாய் மாறி இருளில் வழிகிறது..

தெருவில் நகரும் எதை பற்றியும் அவை கவலை கொள்ளவில்லை என்பதை இரண்டாம் பத்தி சொல்கிறது.. பூனைகளோடு தெரு விளையாடுவதாய் குறிப்படும் வரிகள் தெருவில் சிறுவர்களே இல்லையோ என்று யோசிக்க வைக்கிறது...

ஆனால் யாருமற்ற வீட்டில் இருந்து வெளியேறும் நாயகனை பார்த்து பயந்தோடுகின்றன பூனைகள்..

இந்த இடம் தான் கவிதையின் உச்சமான இடம்.. அதாவது யாருமற்ற வீட்டோடு தனிமையை அடைத்து கதவை தாளிட்டு தெருவில் இருங்கி நடக்க தொடங்கும் நாயகன் தனிமையில் இருந்து தப்பி செல்வதாய் எடுத்துக் கொள்ளலாம்..

தனிமையின் கோரக்கரங்களில் இருந்து திமிறி வெளியேறிய நாயகனை பார்த்துப் பூனைகள் பயன் கொள்கின்றன, தனிமை அவனை அவ்வளவு சேதப்படுத்தி இருக்க வேண்டும்..

தெரு சபிக்கிறது நிசி தன் பாடலை வெறுபோடு நிறுத்துகிறது, இந்த வரி மூலம் பூனைகளின் விளையாட்டில் லயித்திருக்கும் தெருவிலும் இரவிலும் இது போன்ற இன்பமான சம்பவங்கள் இதுவரை நடந்ததே இல்லையோ என்று யோசிக்க தோன்றுகிறது..

இப்படி நற்சம்பவங்களே நிகழ்த்த இரவின் வன்மத்துக்கு நானும் ஆளாகலாம்..

இக்கவிதை ஒவ்வொரு வாசிப்பில் ஒவ்வொரு புரிதலை தருகிறது..

அர்த்தம் மாறிக் கொண்டே இருக்கிறது..

நான் கவிதையில் உள்ள பூனை, இரவு, தனிமை, தெரு, நான் எல்லாம் அப்படியே இருக்கிறோம்..

சரியா கவிதையை புரிந்து கொண்டேனா தெரியவில்லை ரிஷான் அண்ணா.. ஆனால் கவிதை ஒவ்வொரு வாசிப்பிலும் ஒவ்வொரு அர்த்தத்தை தருகிறது..

வாழ்த்துக்கள்...

சிவா.ஜி said...

ஆதனின் அலசலை வாசித்து...கவிதையை உள்வாங்கி ரசிக்க முடிகிறது. எப்போதும்போல..வார்த்தைகளின் வலிமையால்..கவிதையின் வளமைக் கூடி நிற்கிறது....மறை கருத்தால்....மனதுக்குள் தேங்கிவிடுகிறது.
நல்லதொரு கவிதை. பாராட்டுக்கள்...

ஒரேயொரு ஆதங்கம்.....

நன்றி
# வல்லினம் கலை இலக்கிய இதழ் - 15, மார்ச் - 2010
# உயிர்மை
# திண்ணை

இங்கு நீங்கள் குறிப்பிட்ட தளங்களுக்கு எழுதுவதைப்போல தமிழ்மன்றத்துக்கென..இங்கு பதிப்பதற்கென ஒரு கவிதையை எழுத மாட்டீர்களா என்பதுதான்....எப்போதும்...அசலை விடுத்துப் பிரதியைப் படிக்க நேர்கிறதே என்பதால் கேட்டேன்.

M.Rishan Shareef said...

அன்பின் ஆதன்,

நிறைவானதும் செறிவானதும் முழுமையானதுமான உங்கள் கருத்து மகிழச் செய்கிறது. கவிதையை எழுதும்போது என்ன உணர்வில் இருந்தேனோ, அதனை அப்படியே கருத்தாகக் கூறியிருக்கிறீர்கள் நண்பரே.

//இப்படி நற்சம்பவங்களே நிகழ்த்தாத இரவின் வன்மத்துக்கு தானும் ஆளாகலாம் என்று நாயகன் அஞ்சிக் கொண்டிருக்கிறானோ..//

நிச்சயமாக. அச்சம் விதைக்கும் நிலப்பகுதியல்லவா?
எனது தெருவில் இறங்கி நடக்கவும் அச்சம் கொள்ள வேண்டியிருக்கிறது.
இங்கு நள்ளிரவில் அச்சப்படாதவை தெருவும், பூனைகளும்தான். அவையும் மனித நிழல்களைக் கண்டு அஞ்சுகின்றன.

தெளிவான, விளக்கமான, கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்களுக்கும் நன்றி நண்பரே :-)

M.Rishan Shareef said...

அன்பின் சிவா.ஜி,

//இங்கு நீங்கள் குறிப்பிட்ட தளங்களுக்கு எழுதுவதைப்போல தமிழ்மன்றத்துக்கென..இங்கு பதிப்பதற்கென ஒரு கவிதையை எழுத மாட்டீர்களா என்பதுதான்....எப்போதும்...அசலை விடுத்துப் பிரதியைப் படிக்க நேர்கிறதே என்பதால் கேட்டேன். //

நிச்சயமாக எழுதுகிறேன் நண்பரே. உங்கள் வார்த்தைகள் ஊக்கமளிக்கின்றன.

//ஆதனின் அலசலை வாசித்து...கவிதையை உள்வாங்கி ரசிக்க முடிகிறது. எப்போதும்போல..வார்த்தைகளின் வலிமையால்..கவிதையின் வளமைக் கூடி நிற்கிறது....மறை கருத்தால்....மனதுக்குள் தேங்கிவிடுகிறது.
நல்லதொரு கவிதை. பாராட்டுக்கள்...//

கருத்துக்கும் அன்பான பாராட்டுக்களுக்கும் நன்றி நண்பரே.

M.Rishan Shareef said...

அன்பின் நண்பர்களுக்கு,

காலச்சுவடு பதிப்பகம் வெளியிடும் எனது 'வீழ்தலின் நிழல்' கவிதைத் தொகுதியின் வெளியீட்டுவிழா எதிர்வரும் சனிக்கிழமை (ஜூலை, 03) மாலை ஆறு மணிக்கு, சென்னை, எழும்பூர், இக்சா மையத்தில் நிகழவிருக்கிறது. அதற்கான அழைப்பிதழை இத்துடன் இணைத்திருக்கிறேன்.

உங்கள் வருகையையும் ஆசிகளையும் பெரிதும் எதிர்பார்க்கிறேன்.

என்றும் அன்புடன்,
எம்.ரிஷான் ஷெரீப்